Translate

1/17/2017

முதலீடு, லாபம் - வியாபாரம்
நம்ம பசங்களுக்கு எப்போதிலிருந்து பாரம்பரியம் பற்றிய அக்கறை வந்தது !! வந்ததே நல்லதுதான், இதே ஒன்றுபடுதல் வேறு எதிலும் காட்டப்படுவதில்லையே  ???
நாலு பேர் சொன்னா அப்படியே கேட்டு செய்வானுங்க நம்ம பசங்க  _ அப்படின்னு ஒன்னும் சொல்ல முடியாதே, வகுப்பாசிரியர் சொன்னால் கேட்பதில்லை, பெற்றோர் சொன்னா கேட்பது கிடையாது. யார் எதை குறித்து சொன்னாலும் அதனை கேட்டு அப்படியே செய்து முடிக்கும் சிறந்த குணமுடைய இளைஞர்களா இன்றைய இளைஞர்கள்.......ம்ம் என்ன நடக்குதுன்னே தெரியலையே, எங்கேயோ உள்குத்து இருக்கிறார் போல் தெரிகிறது. தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு என்ன விளங்கபோகிறது.

ஒருவர் என்னிடம் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார், மொத்தம் 140 வகை காளைமாடுகள் தமிழகத்தில் இருந்தன, இன்றைக்கு இருக்கும் 40 இனங்களை காப்பாற்றுவதற்கு ஜல்லிக்கட்டு அவசியம், ஏனென்றால் காளைகளை யாரும் வளர்க்க முன்வருவதில்லை பால் கொடுக்கும் மாடுகளை மட்டுமே வளர்க்க முன்வருவார்கள் அதனால் காளைகள் அழிந்துவிடுகின்றன. ரொம்பவும் நியாயமாக இருக்கிறது அவருடைய பேச்சு. நான் அவரை கேட்டேன், அப்படியென்றால் காளைகளை வளர்ப்பதால் லாபம் கிடைக்கிறது என்பதற்காக காளைகளை வளர்க்கிறார்கள், அதாவது அதிக செலவு செய்து வளர்க்கப்படும் காளைகள் மூலம் போட்ட முதலுக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதற்காக ஜல்லிக்கட்டு தேவை என்று கூறுகிறீர்களா என்றேன். அதற்க்கு அவர் அத்தனை பணத்தை செலவு செய்து காளைகளை வளர்ப்பதால் வளர்ப்பவர்களுக்கு என்ன லாபம் என்றார்.

அப்படியென்றால் பாரம்பரியம் என்றெல்லாம் கூறுகிறார்களே என்றேன், அதற்க்கு அவர், பாரம்பரியம் தான் ஜல்லிக்கட்டு, காளைகளை வளர்த்து அதற்காக செலவிடப்படும் பணத்தை இரட்டிப்பாக்குவதுதானே பாரம்பரியம் என்று விளக்கம் தருகிறார். அத்துடன் நில்லாமல், காளைகளுக்கு ஒரு குறைவும் இல்லாமல் தங்கள் பிள்ளையைப்போல வளர்ப்பார்கள் என்கின்றார். அப்படியென்றால் தனது பிள்ளைகளை பாதுகாத்து வளர்ப்பதும் பின்னர் அவர்களுக்கு செலவிட்ட பணத்தை முதலீடு என்று சொல்லி அந்த மகனிடமோ மகளிடமோ இரட்டிப்பு பணத்தை சம்பாதிக்க ஜல்லிக்கட்டுக்கு பதில் வேலை, வியாபாரம் என்று எதிலாவது விட்டு அதன் மூலம் லாபத்தை கணக்கிடுவார்களா, இதுவும் பாரம்பரியமா என்று கேட்டேன்.

அவரிடமிருந்து  நான் எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் பிள்ளைகளைக்கூட பணத்தை கொட்டி வளர்த்து படிக்கவைத்து பின்னர் அதன் மூலம் இரட்டிப்பான வருமானம் பெறுவதும் கூட இன்றைக்கு காணப்படும் வியாபாரங்களில், முதலீடுகளில் ஒன்றாக இருப்பது உண்மைதானே, அதை மறுப்பவர்கள் காரணங்கள் பலவற்றை கூறினாலும் லாபகரமான தொழிலை மக்கள் தேடிக்கொண்டே இருப்பதும் அதுமட்டுமே "பாரம்பரியமாக" கருதப்படுவதும் தானே உண்மை.

PETA அமைப்பிடம் கோரிக்கை ஒன்றை இப்படியும் வைக்கலாமே - எங்கள் மாடுகளை நாங்கள் நன்றாக வளர்க்கிறோம் நீங்கள் அதற்கான மான்ய தொகையோ அல்லது காளைகள் வளர்ப்பதற்கென்று ஒரு அமைப்பை, ENDANGERED SPECIES அழிந்துவரும் பறவைகள், விலங்குகளை எப்படி பாதுகாக்கிறார்களோ அது போன்ற ஒரு அமைப்பை காளை மாடுகளுக்கும்  ஏற்படுத்திகொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தலாமே. உங்களுடைய தேவை அரிய வகை காளைகள் இனம் அழிக்கப்படாதிருக்க வேண்டுமா அல்லது அதனை வளர்த்து ஜல்லிக்கட்டு மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா, ஜல்லிக்கட்டு வியாபாரமாகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஒரு மாட்டை ஐந்து மனிதர்கள் சுற்றி நின்று அடக்க பார்ப்பதே அசிங்கமாக இருக்கிறது, ஒருகாளையை ஆயிரக்கணக்கானோர் விரட்டிக்கொண்டு ஓடுவதும் முதுகின் மீது உட்கார முயற்சிப்பதும் எனக்கு எதை நினைவுபடுத்துகிறது என்றால் சில சினிமாக்களில் வசனம் இப்படி சொல்வார்கள் " நீ தைரியமான ஆம்பிளைங்களா இருந்தா ஒருத்தர்  ஒருத்தரா வாங்கடா என்கிட்டே பார்ப்போம்" "ஒத்தைக்கு ஒத்தைன்னு" சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இப்படி இந்த காளைகளும் நிச்சயம் கேட்கும், அதன் குரல் இவனுங்க போடற சத்தத்துல எங்க கேட்க போகுது.

 போயும் போயும் மாடுகிட்ட ஒரே நேரத்துல எத்தனைப்பேர் அதன் மீது விழுவதும், எத்தனைபேர் துரத்திக்கொண்டு ஓடுவதும் வீரவிளையாட்டு என்று சொல்ல முடியுமா. என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியமாட்டேங்குது.