Translate

1/17/2017

தமிழன் !! தமிழன்தான் !!     புதிய ஆண்டில் இதுவரையில் யாருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறவில்லை. கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி, பிறந்தநாள், என்று எந்த வாழ்த்தையும் எவருக்கும் கூறும் விருப்பம் இல்லை. ஏன் என்பது கேள்வி என்றால், பதில் -  எனது பதிலை தெரிவிப்பது எதையும் மாற்ற போவதில்லை . அதுமட்டுமின்றி  எதிர் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக  இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் நாம் வாழ்த்திக்கொண்டுதானே இருக்கிறோம் நாம் வாழ்த்துவது போல ஏதாவது அல்லது யாருக்காவது சந்தோசம் ஏற்பட்டிருக்குமென்றால், அதைவிட சந்தோசம் வேறு எதுவாக இருக்க முடியும். வாழ்த்துவதும் வணங்குவதும் வெறும் சொல்லாகி பல தசாப்தங்களாகி விட்டது. பிறரை வணங்கும்போதும், வாழ்த்தும்போதும் மனதிற்குள் எத்தனை குரூர எண்ணங்கள், எத்தனை பொறாமை, எத்தனை சாபங்கள். எதற்காக வாழ்த்த, வணங்கவேண்டும். எல்லோரும் சொல்கிறார்கள் நாமும் சொல்லிவிட்டு போகவேண்டியது தான், சொல்லாமல் விட்டுவிட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாகிவிடக்கூடாது, எவன் வாழ்ந்தால் என்ன செத்தால் நமக்கென்ன - இப்படியெல்லாம் வாழ்த்திடுவது தற்போதைய நடைமுறை.

ஒன்றுமே சொல்லாமல் விட்டுவிட்டால் " நடைமுறை அறியாத முட்டாள்" என்று சொல்லப்படுவதும், அகங்காரி, திமிர் இப்படி எதையாவது நினைத்துக்கொள்வது. அட விடுங்க யாராவது எதையாவது சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க இதையெல்லாம் பார்த்தல் வாழமுடியுமா.

            பல வருடங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் தினம் அன்று காலை, என் குழந்தை சிறியது, விடியற்காலை ஆராதனைக்கு செல்ல இயலவில்லை. பொழுது விடிந்த பின் காலை 7 மணி ஆராதனைக்கு சென்றுகொண்டிருக்கிறோம். வழி நெடுக கூட்டம் கூட்டமாக மனிதர்கள் நின்று கொண்டு அப்போதுதான் திறக்கப்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய கடைகளை அடித்து உடைக்கின்றனர். அதை பார்த்த அடுத்தடுத்துள்ள கடைகளை அவசரமாக மூடுகின்றனர். என்ன நடக்கறது என்றே தெரியவில்லை, வீதியில் போகும் ஒரு சில வாகனங்களுக்கு வழிவிடாமல் கூட்டங்கள், எங்களைப்போல ஒன்றும் விளங்காமல் வீதியில் பயத்துடன் ஒதுங்கி நின்ற பலரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து "என்ன" என்பது போன்ற பார்வைகள், எப்படியோ பாதி வழியிலேயே வீடு திரும்பினோம். காலில், கையில் சிராய்த்து கொண்டேன், நாங்கள் பயணித்த எங்கள் கால் தள்ளு வண்டி ( சைக்கிள் ) திடீரென்று நிறுத்தபட்டதால் பின்புறம் உட்கார்ந்திருந்த நான் விழுந்தேன், முன் இருக்கையில் உட்கார வைக்கப்பட்டிருந்த சிறு குழந்தையும் விழ, நானும் குழந்தையும் சிராய்ப்புடன் தப்பினோம்.

      வீட்டிற்கு வந்த பின்னர் தெரியவந்தது எம்.ஜி. ஆர் இறந்துவிட்டார், அவர் இறந்தது 24, அடுத்தநாள் காலை செய்தி வெளியாகியதும் அதை தொடர்ந்த போராட்டங்களும் காலை முதல் ஆரம்பித்தது. இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், உடல்நிலை சரியாகாமல் மருத்துவமனையில் எம் ஜி ஆர் இருந்துவந்ததை எல்லோரும் அறிந்திருந்தனர், அவர் வயது 70 . அவரை விரும்பி ரசித்திருக்கலாம், இறந்தது எந்த வயதானாலும் வருத்தத்திற்குரியதுதான். அதற்காக வீதியில் அவரவர் பிழைப்பை உதாசீனப்படுத்தி கடைகளை அடித்து உடைத்து கட்டாயப்படுத்தி மூட வைப்பது, வீதியில் போவோர் வருவோரை நடக்க விடாமல் செய்வது எந்த விதத்தில் இறந்தவருக்கு சிறப்பை கொடுத்துவிடப்போகிறது. எந்த தலைவனும் எந்த நடிகரும் இப்படிப்பட்ட செயலை விரும்ப மாட்டார்கள் ( இதில் ஒரு சிலர் விதிவிலக்கு ). மருத்துவமனைக்கு செல்வோர், அன்றாட வயிற்று பிழைப்பிற்கு செல்வோர், அன்றன்றைக்கு அரிசி பருப்பு வாங்கி சமைத்து சாப்பிடும் ஏழைகள் என்று பல தரப்பட்ட மக்களை கொண்ட நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் ஒட்டுமொத்த நாட்டையே முடக்கிவிட தூண்டுவது எது. நியாயம் கேட்பவரை இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் இன்றைக்கு வெளிப்படையாகி விட்டது.

       இன்றைக்கு எம் ஜி ஆரின் பிறந்த நாளாம், இத்தனை சத்தம் போட்டு ஊரை தொல்லை கொடுத்தால்தான் அவர் ஆன்மா சாந்தியடையுமென்று அவர் உயில் எழுதி வைத்துவிட்டு போனாரா என்ன, அட பாவிங்களா, செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்ற தலைவிதி தமிழகத்துக்கே உரித்தாகிவிட்ட கொடுமையை என்ன சொல்ல. எம் ஜி ஆராவது நடிகர், மறைந்த முதலமைச்சர், காலம் பூரா குடித்தே செத்து போறவனைக்கூட இவனுங்க சும்மா போக விடறது இல்ல, ஒரு நாள் பூரா செத்த எருமை தோலில் செய்த மேளம் மூணு பேர் குடித்துவிட்டு அடிச்சு [ பாவம் செத்த எருமை !! உயிருடன் வாழ்ந்தபோதும் அடித்தே சாகடித்திருப்பானுங்க ] ஒரு நாள் முழுவதும் நம்ம காதில் இருக்கிற ஜவ்வ கிழிச்சிடுவானுங்க, அன்னைக்கே அந்த சாவை தூக்கிட்டானுங்கன்னா தப்பிச்சோம், இல்லன்னா இரவெல்லாம் "கானா" என்று ஒரு ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு இரவெல்லாம் தூங்கவிடாம ( பிணத்தை வச்சுக்கிட்டு அவனுங்க தூங்க கூடாதாம் )  ஊரையே பாடுபடுத்தறானுங்க. தல நரம்பெல்லாம் கழட்டிகிட்டு வெளிய வந்துட துடிக்கிற துடிப்புல அனாசின், க்ரோசின் காப்பி, டீ எதுவும் வேலை செய்யாது. சுதந்திரம் கொடுத்துட்டு போனவன் பார்த்தா சொல்லுவான், "சாவுங்கடா".

      நம்ம தமிழர்களை வேறு மாநிலம் ஏதும் மிஞ்ச முடியாது, உணர்ச்சிவசப்படுவதில் ( உபயோகமில்லாதவற்றிக்கு ) தமிழர்க்கு நிகர் தமிழன் தான். இப்படி சொல்வதற்கு வெட்கக்கேடாக உள்ளது ஏனென்றால் நானும் பத்தரை மாத்து தமிழச்சிதான்.