Translate

8/13/2015

நெஞ்சு பொறுக்குதில்லையே.....

மொத்த இடுகைகளின் எண்ணிக்கை கூடவேண்டும் என்பதற்காக எதையோ எழுதி நிரப்புவதற்கு தோன்றுவதில்லை, நமது எழுத்து அதை படிப்பவரிடம் எவ்வித தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகளும் இல்லை ஆனால் இங்கு எழுத துவங்கிய நாள் முதல் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயம் ஏற்ப்படுவதுண்டு, அது என் எழுத்துக்குள் இருக்கின்ற கருத்து அல்லது நியாயம் எனக்குள் தீவிர பாதிப்பை ஏற்ப்படுத்தியது என்பது மட்டும் உறுதி. என்ன பீடிகை கொஞ்சம் அதிகமாக உள்ளதே என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கு தெரிகிறது.

இன்றைய தின செய்திகளை அபகரித்து வருகின்ற மது விலக்கு, லஞ்ச ஒழிப்பு, சாதி மத ஒழிப்பு (இன்னும் பல) குடிநீர் கேட்டு சாலை மறியல், கர்னாடக அணையிலிருந்து நீர் திறக்க கோரிக்கைகள், எரி, குளங்கள் தூர் வாரப்படாமல் இருப்பதும் பல எரி குளங்கள் இன்றையை குடியிருப்பு பகுதிகளாகி போனது, இவற்றில் எதை குறித்து மக்கள் இன்றைக்கு அதிகம் விவாதிக்கின்றனர், எந்த தேவையை 1, 2, 3......... என்று வரிசை படுத்துவது? அல்லது கும்பலோடு சேர்ந்துகொண்டு எதையாவது வெட்டி பேச்சாக பேசிவிட்டு செல்வதா?

சில இடங்களில் திருடர்களை கண்டு பிடித்து விட்டால் மக்கள் ஒன்று திரண்டு அவனை துரத்தி பிடிக்க ஓடுவார்கள், அந்த கூட்டத்தில் இணைந்து கொண்ட எஞ்சிய திருடர்களும் ஓடுவார்கள், கூட்டத்திற்கு முன்னே ஓடி கொண்டிருப்பவன் திருடனா அல்லது மக்கள் கூட்டத்துடன் இணைந்து சந்தேகம் ஏற்பாடா வண்ணம் ஓடுபவன் திருடனா? யாரும் யோசிப்பதே இல்லை இன்றைய போராட்டங்கள் பலவற்றில் இப்படிப்பட்ட திருடர்களும் இணைந்து கொள்கின்றனர் என்பது யாவரும் அறிந்ததே.

லஞ்ச ஒழிப்பு போராட்டம் இன்னும் நாட்டில் துவங்கவில்லை, ஒருசமயம் அன்னா அசாரே அல்லது கெஜ்ரிவால் அதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் துறக்க காத்துக்கொண்டிருக்கின்றார்களோ மக்கள்? அப்பொழுதாவது லஞ்ச ஒழிப்பு என்பதை குறித்தான வெகு ஜன போராட்டம் ஏற்படுமா அல்லது அதுவும் எளிதில் மறக்கப்படுமா என்பதே என் தற்போதைய சிந்தனை.

லஞ்ச ஒழிப்பு என்றால் கோடிகளை திருடியவர்களின் பட்டியலை (பட்டியலை வந்தடையாத பெரிய கூட்டம் ஒன்று உண்டு) வைத்துக்கொண்டு விவாத மேடைகள் வழக்குகள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அரசு மருத்துவமனை ஒன்றில் வேலைபார்க்கும் காவற்காரர் ஒருவரை கவனித்தேன்,  இதே தனியார் நிறுவனங்களில், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் , சிறிய மற்றும் பெரிய அங்காடிகளில் வெயலில் நின்று கொண்டிருக்கும் காவற்காரர்களுடன் ஒப்பிட்டால் பரிதாபத்திற்குரியவர்கள் தனியார் நிறுவன காவற்காரர்கள் என்றே சொல்ல வேண்டும், அந்த அரசு மருத்துவமனையில் போக்குவரத்து மிக மிக சொற்பம் நல்ல குளிர்ந்த அறையில் உட்காரும் வசதி, மாதாமாதம் அரசு சம்பளம், பின் வயதாகிய பின்னரும் பென்ஷன். என்று சகல வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, எப்போதாவது காரில் வருகின்றவர்களிடம் தாங்கள்தான் மொத்த உதவியையும் செய்து அவர்களை வழியனுப்பும் வரையில் உழைத்தது போன்று அவர் கையை எப்போதும் கவனித்து கொண்டு நிற்கின்ற அரசு ஊழியர்களை "லஞ்சம்" வாங்கும் பட்டியலில் நாம் சேர்த்து கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் லஞ்ச ஒழிப்பிற்காக ஒரு கூட்டம் எதிர்த்து குரல் கொடுக்கும்போது இவர்களும் அதில் இணைந்து குரல் கொடுப்பார்களா அல்லது "நான் என்ன அஞ்சு பத்து தானே எதிர்பார்க்கிறேன் அவனவன் கோடிகணக்கில் முடக்கிகொண்டவன் தான் லஞ்சம் வாங்கி நாட்டை எழையாக்கியவன்" என்று சட்டை காலரை தூக்கிவிட்டு இறுமாப்பாய் தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு விடுவானா?

இன்னொரு கூட்டமுண்டு "சார், இன்னைக்கு நாட்டுல எவன் சார் குடிக்கல, எவன் லஞ்சம் வாங்கல சொல்லுங்க பாக்கலாம் "என்று வசனம் பேசும் நீதிக்கு சொந்தக்காரர்களும் ஏராளம் உண்டு, இதற்கிடையே இன்னொரு பெரிய பகல் கனவும் உண்டு அதுதான் என்னை உறங்க விடாமல் செய்யும் கூட்டம், "இந்தியாவை வல்லரசாக்குவோம்" ஏனென்றால் நாங்கள் எல்லா துறையிலும் வளர்ந்த நாடுகளுக்கு எவ்வகையிலும் குறைவில்லாம் வளர்ந்து விட்டோம், எங்கள் நாட்டிலிருந்து சென்றவர்கள் தான் அங்கேயெல்லாம் மிக முக்கிய பதவிகளை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர் என்று முழக்கமிட்டு கொண்டு வீண் பெருமை கொண்டு விதண்டாவாதம் செய்ய காத்துகொண்டிக்கின்ற கூட்டம்.

இந்தியாவில் ஊட்ட சத்து குறைவினால் இறந்து போகின்ற குழந்தைகள் எத்தனை விழுக்காடு என்பதை அதே செய்தியில்தான் காண்கின்றோம், எத்தனை விழுக்காடு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர், எத்தனை விழுக்காடு கிராமங்கள் இன்னும் அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது என்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசுகின்ற ஒவ்வொருவரும் அறிந்த செய்திதான். அதையெல்லாம் சீர்படுத்தபடுவது யார் எப்போது என்பதே விடையில்லா கேள்வியாய் நின்றுகொண்டிருக்க "வல்லரசாவது" குறித்து மேன்மை பாராட்டுவதில் யாருக்கு லாபம்?

இந்த வேதனைகள் என்னை உறங்க விடுவதே இல்லை என்று சொன்னால் நீங்கள் எத்தனை பேர் நம்பபோகின்றீர்கள் என்பது குறிந்து நான் கவலைப்படவில்லை. அவ்வாறு கவலை பட்டு கொண்டிருந்த போது ஒருநாள் திடீரென்று மேகங்கள் கருத்து வீடு முழுவதும் இருண்டுவிட்டது, அட என்ன இது இப்போது தானே சமயலறையில் மதிய உணவு சமைத்து விட்டு வந்து சற்று இளைப்பாற கண்களை மூடினேன் என்று கண்களை திறந்த போது மணி மதியம் 3 ஆகிவிட்டிருந்தது, மின் விளக்குகளை போட்டுவிட்டு ஜன்னல் வழியே வானத்தை பார்த்தேன் கருமையான மேகங்கள் எங்கும் மூடிக்கொண்டிருந்தது காற்று வீச தொடங்கியது, எங்கள் பகுதியில் அப்படி ஒரு சின்ன சிக்னல் கிடைத்துவிட்டால் போதும் மின்வாரியம் உடனே மின்சாரத்தை துண்டித்து விடுவார்கள், (எதோ ஒருவித அக்கறை போலும்!! எவரும் அவர்களை கேள்வி கேட்கபோவதில்லை !!) மழை பெய்யாமல் விரைந்தோடுகின்ற மேக கூட்டத்தை உற்று பார்த்து கொண்டே இருந்த நான் மிகவும் லேசான குரலில் ஆனால் கடுமையான கோபத்துடன் "ம்ம்ம்ம் வந்துடகிந்துட போறே" என்றேன், மழையை பார்த்து.கடுமையான உஷ்ண காற்றில் வெந்து கிடந்த உடல் சற்று குளிர்ந்த இயற்க்கை காற்றை உணர துடிப்பதில் தவறில்லையே. என்னதான் குளிர்பதன அறைக்குள் இருந்தாலும் இயற்கை குளிர்ச்சியில் உடல் மனம் இரண்டும் அடையும் ஆனந்தமே தனி தானே. திடீரென்று என் காதருகில் வந்த இடிசத்தம் எனக்கு பதில் சொல்வது போன்றிருந்தது, "என்னை பார்த்து கேட்டால் நான் என்ன சொல்வது, உங்க மண்ணுல விழுகவே கொஞ்சமும் பிடிக்கல, எல்லாத்துக்கும் நீங்கதானே காரணம், அதனாலதான் நாங்க காடு மலைய தேடி வேகமா ஓடுறோம்" என்றது.

"எனக்கு புரியவில்லை கொஞ்சமாவது விளங்கும்படி சொல்லிவிட்டு போயேன்" என்றேன் நான் அதே மெல்லிய குரலில்.

அதற்குள் பூமி என்னை பார்த்து நகைத்தது, அட என்ன இது அதிசயமா இருக்கே மழை தரும் மேகம் என்று நினைத்து பேசினால் பூமி கூட சிரிக்கிறதே என்று ஜன்னல் வழியே கீழே பார்த்தேன், புல், பூண்டுகள் காய்ந்து, அம்மணமாக நின்றிருந்த பூமி என்னிடம் "என் மீது சுமத்தப்படும் அடுக்குகளைப்பார் (அடுக்கு மாடி கட்டிடங்கள்), ஆங்காங்கே நின்றிருந்த எரி குளங்களை காணவில்லை மாறாக மனிதர்களின் ரத்தம் எங்கு பார்த்தாலும் கொட்டிக்கிடக்கிறது, விபசாரம் செய்வதற்கு என் மிது படுக்கின்றான், அதில் சொந்த மகள், அப்பாவி குழந்தைகள் அபலை பெண்களும் அலறும் ஒலி காற்றில் இணைந்து ஒலித்துகொண்டே இருக்கிறது, அவரின் இரத்தம் என் மீது தேங்கி நிற்கிறது, ஆணோடு ஆண் பெண்ணோடு பெண் சேர்ந்து அவலம் செய்கின்றனர், என் மீது நின்று நடந்து கொண்டிருக்கின்ற ஒருவராவது நீதி நியாயம் மனிதாபிமானம் நேர்மை என்பதை அறிவாரா, இவரையெல்லாம் நான் சுமந்து நிற்க்கின்றேனே என் துக்கம் யார் அறிவார் என் துயர் யார் அறிவார், அடக்க முடியாமல் திகைத்து எரிமலையாய் எரிந்தும் நடுக்கமாய் நடுங்கியும் அவதியுற்று நிற்கிறேன், இதை கண்ட வான் மேகம் இவள் மீது நான் பொழிந்து ஏனைய அக்கிரமங்களை அள்ளிக்கொண்டு கடலில் கலக்க கூடாதென முடிவு செய்தது" என்றது.