Translate

3/10/2015

சோக நாடகம்

விஞ்ஞானம் தினம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அதனால் உலகத்தில் அறிவு பெருகி வருவதாக பெருமிதம் அடைகின்றனர். கல்வி அறிவு அதிகரித்து வருவதாக புளங்காகிதம் அடைபவர்கள் உண்டு. உலகின் மொத்த மக்கள் தொகையில் எத்தனை விழுக்காடு மக்கள் இவற்றின் பயனை பெறுகின்றனர் என்பதை குறித்து தெளிவான கணக்கு கிடையாது. கல்வியும் விஞ்ஞானமும் எந்த அளவிற்கு ஒருபுறம் முன்னேறி வருகிறதோ அதே அளவிற்கு மறுபக்கத்தில் மனிதனை கண்டு மனிதன் அஞ்சும் நிலைமை உலகமெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதர்கள் உணவு, உடை இருப்பிடம் என்பதை அடைய போராட்டம் செய்த நிலை மாறி பாதுகாப்பிற்க்கான வழி வகைகளை தேடும் சூழல் அதிகரிக்கிறது. ஒரு புறம் புற்று நோய், காச நோய்க்கு போராடும் மக்கள் மறுபுறம், மருத்துவத்தினால் ஏற்ப்படும் மனித இறப்புகளுக்காக அஞ்சும் நிலை சகஜமாகி வருகிறது.

ஒருகாலத்தில் ஆபரணங்கள், பணம் போன்றவற்றை திருடிய கூட்டம் இன்றைக்கு மணல், கிரானைட், தாது மணல், மண்ணுளி பாம்பு, கடல் குதிரை, கடல் ஆமை, கடல் அட்டை என்று வினோத திருட்டுக்கள் செய்திகளை அலங்கரிக்க, திகைப்பிற்கு மேல் திகைப்பு.  பெண்கள் தினம் கொண்டாடப்படுவது உண்மைதானா? பெண் சுதந்திரம் என்பது இந்திய தேசத்தில் என்ன பாடுபடுகிறது. வேலைக்கு போகும் பெண்களும் பட்டபடிப்பு படிக்கும் பெண்களும் சுதந்திரமாக இருப்பதாக  நினைப்பீர்களானால், நாட்டு நடப்பை இன்னும் நன்கு அறிந்து கொள்ளவேண்டும். திருமணத்தை நினைத்தாலே "அது ஒன்று அவசியம்தானா" என்று பெண்கள் அஞ்சும் அளவிற்கு இன்றைய பெண் சுதந்திரம் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண் சொல்கிறாள் "என் கணவன் என்னை சரியான சமயம் பார்த்து கொன்றுவிட காத்திருக்கிறான், இதை அறிந்தும் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து வாழ வைக்க வேறு வழி இல்லாமல் தினம் தினம் பயந்து செத்து செத்து, வாழ்வதாக நடித்து கொண்டிருக்கிறேன், என் பிள்ளைகளுக்கு கூட இதை பற்றி நான் கூறியது கிடையாது, சொன்னால் என்னை பயித்தியக்காரி என்று சொல்கிறார்கள், அந்த அளவிற்கு பக்குவமாக "அவர்கள்" படத்தில் வருகின்ற ரஜினியை போல என் கணவரும் சளைக்காமல் நடித்து கொண்டிருக்கின்றார்" என்கின்றார்.

இது போன்ற வேதனைகள் எத்தனை வீடுகளில் தினம் தினம் அரங்கேறும் சோக நாடகமாக பெண்களின் வாழ்க்கை இருந்து வருகிறது, இந்நிலையில் பெண்கள் தினம் கொண்டாடப்படுவதை கேள்வி படும்போது மனதில் வெறுமையே நிறைகிறது.