Translate

1/31/2015

செய்திகள்......
என் பள்ளிப்பருவ காலத்தில் என்னை என் தகப்பனார் அல்லது தாயார் பள்ளி புத்தகங்களை படித்து தேர்வில் முதல் மாணவியாக வருவதற்கென்று வற்ப்புறுத்தியது கிடையாது அதனால் தானோ என்னவோ நான் எப்போதுமே தேர்ச்சி பெறுகின்ற அளவிற்கு மதிப்பெண் வாங்கினால் போதும் என்று படிப்பேன். வீணாக பள்ளிக்கு விடுப்பு எடுக்காதே என்றும் கூறியது கிடையாது. ஆனால் ஆங்கில தமிழ் செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள சொல்வதுண்டு, ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அவ்வாறு நான் படிப்பவை சத்தமாக அவர்கள் காதில் விழுவது போன்று படிக்க சொல்வார்கள் அதற்க்கு காரணம் சரியான உச்சரிப்பும் அர்த்தமும் எனக்கு தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்து அதை திருத்துவதற்க்காக. இன்னும் சில காலம் சென்றபின்னர் அதே செய்தித்தாள்களை படிக்க சொல்வார்கள் ஆனால் அது அன்றைய உலக மற்றும் உள்ளூர் செய்திகளை நான் அறிந்து கொள்வதற்காக, இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் அவற்றை நானே படிக்க நேர்ந்தது அது வேலை தேடுவதற்காக. இப்படி காலப்போக்கில் செய்தித்தாள் படிப்பதின் தேவைகளும் அர்த்தங்களும் வேறுபட்டுகொண்டிருந்தன. இப்போதெல்லாம் எந்த செய்தி   தாள்களையும் படிப்பதில் விருப்பமிருப்பதில்லை, தொலைக்காட்ச்சியில் தொடர்ந்து செய்திகளை அறிந்து கொள்வது பழகிவிட்டது. 

அன்றைய பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதில்லை எனவே வீட்டு வேலைகளை முடித்து விட்டு மதியம் உறங்குவார்கள் அல்லது நூலகத்தில் இருந்து எடுத்துவந்த கதை புத்தகங்கள் அல்லது மாத வார இதழ்களை படிப்பார்கள். இப்போதைய பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்வதால் நிலைமை சற்று மாற்றம் அடைந்துள்ளது, இதில் இன்னும் மீதமிருக்கும் ஒரு பங்கு வேலைக்கு செல்லாத பெண்கள் தொலைகாட்சி தொடர்கள் மற்றும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பொழுது போக்கும் திருப்தியை ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளனர்.

படித்த பெண்கள் அல்லது வீட்டிலிருக்கும் பெண்களில் எத்தனை சதவிகிதம் பெண்கள் செய்திகளை விரும்பி பார்க்கின்றனர் என்பதை கவனித்தால் நமது பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்து கணிப்பை எளிதாக கணக்கிட முடியும். நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை இல்லாமல் சமயலறையும், பிள்ளை வளர்ப்பும், மாமியார், நாத்தனார் புராணங்களைப்பற்றிய சிந்தனையே தங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்கின்ற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது நாட்டில் நடக்கின்ற பல்வேறு விதமான கொலை கொள்ளை, அரசியல் மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் என்று மிகவும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்துகொள்கின்ற ஆர்வம் இல்லாவிட்டால் அவர்களால் எவ்வாறு ஒரு சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க இயலும்? "விழலுக்கு இறைத்த நீர்" என்பது போல நெல் விளைகிறதோ இல்லையோ புற்கள் விளைவது உறுதி.

பொது கழிப்பிடங்களை நாடு முழுவதும் காட்டித்தருவது நல்ல முயற்சி; அதற்க்கு முன்பாக அவற்றை பராமரிக்க நாட்டு மக்களுக்கு கற்று தர வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எல்லாவித பொருள்களையும் பொதுமக்கள் வாங்கி செல்ல நவீனமாக கட்டப்பட்டிருக்கின்ற வணிக வளாகம் சென்னையில் நவீனமான கழிப்பிடங்களையும் அமைத்துள்ளது, அதில் பணியாற்ற அளவிற்கு அதிகமான துப்புரவு தொழிலாளர்களையும் பணிக்கு வைத்துள்ளது. ஆனால் அதன் உள்ளே சென்று பார்த்தால் நாற்றம், அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது, அந்த அசுத்தங்களின் ஓரமாக துப்புரவு தொழிலார்கள் ஒருங்கிணைந்த சிறிய மகாநாடு எப்போதும் நடந்துகொண்டிருப்பதை கழிவறைக்கு செல்லும் ஒவ்வொருவரும் காண முடியும். வாங்குகின்ற சம்பளத்திற்காக வேலை செய்வதை அல்லது தான் செய்யும் பணியை மதிக்காத எந்த நாடும் முன்னிலைக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. கழிவறைகளை பயன்படுத்தும் மக்களாகட்டும் அதை துப்புரவு செய்கின்ற தொழிலாளர்களாகட்டும் பொருப்பின்றி இருப்பது திருத்தப்படாமல் எத்தனை கழிப்பிடங்களை கட்டினாலும் பயனில்லை. கடைநிலை மனிதன் வரையில் தனி மனித ஒழுக்கம் வேண்டும் அதற்க்கு வெறும் படிப்பு மட்டுமிருத்தல் போதாது, ஒவ்வொரு கிராமம் ஒவ்வொரு தெருவாக சென்று சுத்தம் என்பது என்ன அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும், அல்லது கட்டும் கழிப்பிடங்கள் அனைத்தும் உபயோகிக்க இயலாமல் கிடக்கின்ற ஏனைய கழிவறைகளைபோலத்தான் துப்புரவற்றிருக்கும். 

பொது சொத்துக்களை தங்களது சொத்தாக பாவிக்கும் ஒழுக்கமில்லாத நாடு முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரத்தில் இல்லை. தொலைகாட்சியில் விளம்பரம் வருகின்ற சமயத்தில்தான் நமது கழிப்பிடத்திற்க்கோ அல்லது சமயலறைகுள்ளேயோ சென்றுவிடுவோம் அவ்வாறு போகவில்லை எனில் வேறு அலைவரிசைகளில் என்ன ஒளிபரப்பாகிறது என்பதை அறிந்துகொள்ள அலைவரிசைகளை மாற்றிகொண்டிருப்போம், அமீர்கான் அல்லது வேறு எந்த நடிகர்கள் திரையில் தோன்றி சுத்தம் மற்றும் ஏனைய ஒழுக்கத்தை பற்றி விளம்பரம் அளித்தாலும் அவைகளை ஒருவருவரும் கவனித்திருக்கவே முடியாது. கொள்ளைகாரனோ கொலைகாரனோ நம் வீட்டை நோட்டமிடுவதை கூட நாம் அறியமாட்டோம், அத்தனை சுயசிந்தனை.

Transistor பொருத்தப்பட்ட வானொலி பெட்டிகள் முதல் கைபேசிகள் வரையில் டெல்லியில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்தால் அதை ஒருநாள் கூட உபயோகிக்கும் நிலையில் இராது,  Pant, Shirt, Sarees, சூடிதார் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்கு ஹிந்தி பேசுகின்ற வியாபாரிகள் வீடு வீடாக வருவதுண்டு அவற்றை நம்பி வாங்கியவர்கள், அவற்றை கொண்டு குழந்தைகளுக்கு பான்ட், ஷர்ட், தைத்து போட்ட விபரம்தான் கிடைத்துள்ளது. அவர்கள் பேசும் தந்திரம் அடுத்தவர்களை நம்ப வைத்துவிடும், "கள்ள வியாபாரிகள்". பேசியே மக்களை ஏமாற்ற திட்டமிடும் கள்வர், வடமாநிலத்தவர்களுக்கு கைவந்த கலை.

தனிமனிதன் திருந்தினால் மட்டுமே நாடும் வீடும் திருந்தும், திருத்தம் ஒன்றுமட்டுமே நாட்டையும் வீட்டையும் உயர் நிலைக்கு எடுத்து செல்ல முடியும்.