Translate

1/28/2015

விவாத மேடைகள்

2015 ஆண்டு துவங்கி 28 நாட்கள் கடந்த நிலையில் இன்றைக்குத்தான் இவ்வாண்டின் முதல் பதிவினை பதிக்கவேண்டியிருக்கிறது. முகநூலில் status போடுகின்ற பழக்கம் கிடையாது ஆனால் மனதை நெருடும் சில பிரச்சினைகளை பதிவில் எழுத்தின் உருவம் கொடுக்கக்கூட இப்போதெல்லாம் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அரசர்களின் கொடுங்கோலாட்சியில் அடிமைகள் பயப்படுவது போல. பல சமயங்களில் நாம் நிச்சயமாகவே இந்தியாவில்தான் வாழுகிறோமா அல்லது சவூதி அரேபியா போன்ற மன்னர் ஆட்ச்சியில் வாழ்கின்றோமா என்று ஒரு முறைக்கு பலமுறை சிந்திக்கவும், அஞ்சவும் வைக்கிறது. இத்தனை எதற்கு, சத்தம் போட்டு கைபேசியில் நமது சொந்த கதைகளை விலாவரியாக பேசக்கூட அச்சமாக இருக்கிறது; [பலரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கூறப்படுகிறது] அது மட்டுமா,  திருட்டுப்பயல்கள் கூட தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு பணம் மற்றும் பொருள்களை திருடிசெல்வதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறதே. தனிமனித சுதந்திரம் என்பது காணாமல் போனது நிஜம்தானே?.

சில நாட்களில் தந்தி தொலைகாட்ச்சியின் ஆயுத எழுத்து உரையாடல்களை கேட்பதுண்டு. இதில் ஒரு பெரிய "ஜோக்" என்னவென்றால் விவாதத்திற்கு வருகின்றவர்களை எப்படி தேர்வு செய்கின்றனர் என்பதுதான். சம புலமை அல்லது சம அனுபவம் மிக்கவர்கள் பேசினால் விவாதம் என்பது ஒரளவிற்கு கேட்பவர்களுக்கும் நியாமானதாக இருக்கும், பெரும்பாலான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்கள் விவாதிப்பது அலைவரிசையை உடனே மாற்றி வைக்கத்தூண்டும். இன்றும் அப்படித்தான் இருந்தது. அவர்கள் கொடுக்கும் தலைப்பு என்னவோ காரசாரமாக தோன்றினாலும் விவாதம் உப்பு சப்பு இல்லாமல் சலித்துப்போகும்.

இன்றைக்கு விவாதத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற I.A.S. அதிகாரி தேவசகாயம் ஒரு "ஜோக்கரை" போலவே தோன்றியதுடன் பேசவும் செய்தார் அதன் ஒரு பகுதியில் அவர் கூறுகிறார் "நான் ஒரு கிறிஸ்த்தவன், என்று சொல்லிக்கொள்ளும் இவர், மேலும் கூறுகிறார் ஆனால் சென்னைக்கு வந்த இயேசு கிரிஸ்த்துவின் சீடர்களில் ஒருவரான தோமா என்பவர் கிறிஸ்த்துவை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை" என்கின்றார். [எனக்கு தெரிந்தவரையில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்தான் கிறிஸ்த்தவர்கள், ஒரு சமயம் தேவசகாயத்திற்கு கிறிஸ்த்தவர்கள் என்பதற்கு வேறே ஏதேனும் "விவரம்" தெரியுமோ என்னவோ!! அப்படியானால் இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ? !!] இவர்தான் திறமை வாய்ந்த அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அதிகாரியாம்!!; அடுத்ததாக "ரோமன் கத்தோலிக்கர்களும் CSI சபையை சேர்ந்தவர்களும் உபதேசிப்பத்தின் மூலம் தங்கள் சபைக்கு பிற மதத்தினரை சேர்த்து கொள்வதில்லை"என்கின்றார். அங்கே இவர்கள் பேச வந்த தலைப்பு என்பதற்கும் இவர் கூறுகின்ற முரண்பட்ட கருத்துக்களுக்கும் விவாத மேடை தேவையா, ஆனால் அடுத்தவர் பேசுகின்றபோது தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார் நான் விவாதத்தின் பாதியிலேயே வெளியேறுகிறேன் என்கின்றார்.....என்ன கொடுமை சார் இது?அத்துடன் நில்லாது அடுத்தவர் பேசுகின்ற சமயத்தில் தனது கைகடியாரத்தை ஒருமுறைக்கு பலமுறை பார்த்துகொள்கிறார், அத்தனை அவசர அலுவல்களுக்கு இடையே விவாதமேடைக்கு இவர் எதற்க்காக வந்திருக்கவேண்டும், discipline பற்றி பேசும் இவருக்கு அடுத்தவர்கள் விவாதிக்கின்றபோது அவர்கள் வேறு வேலையில்லாமல் வெட்டியாக நேரத்தை வீணடிப்பது போலவும் இவர் மட்டுமே சரியான விவாதம் செய்வது போலவும் பாவனை செய்வது எந்த விதத்தில் ஒழுக்கத்தில் சேர்த்துகொள்வது என்பது புரியவில்லை.

இதையெல்லாம் போதாதென்று இறுதியில் ஒரு கணக்கெடுப்பு வேறு;  நிகழ்ச்சியை காண்பவர்களை முட்டாள்களாக கருதும் இது போன்ற விவாத மேடைகள் தான் பத்திரிகை சுதந்திரமா என்பது கேள்வி.