Translate

1/31/2015

செய்திகள்......
என் பள்ளிப்பருவ காலத்தில் என்னை என் தகப்பனார் அல்லது தாயார் பள்ளி புத்தகங்களை படித்து தேர்வில் முதல் மாணவியாக வருவதற்கென்று வற்ப்புறுத்தியது கிடையாது அதனால் தானோ என்னவோ நான் எப்போதுமே தேர்ச்சி பெறுகின்ற அளவிற்கு மதிப்பெண் வாங்கினால் போதும் என்று படிப்பேன். வீணாக பள்ளிக்கு விடுப்பு எடுக்காதே என்றும் கூறியது கிடையாது. ஆனால் ஆங்கில தமிழ் செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள சொல்வதுண்டு, ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அவ்வாறு நான் படிப்பவை சத்தமாக அவர்கள் காதில் விழுவது போன்று படிக்க சொல்வார்கள் அதற்க்கு காரணம் சரியான உச்சரிப்பும் அர்த்தமும் எனக்கு தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்து அதை திருத்துவதற்க்காக. இன்னும் சில காலம் சென்றபின்னர் அதே செய்தித்தாள்களை படிக்க சொல்வார்கள் ஆனால் அது அன்றைய உலக மற்றும் உள்ளூர் செய்திகளை நான் அறிந்து கொள்வதற்காக, இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் அவற்றை நானே படிக்க நேர்ந்தது அது வேலை தேடுவதற்காக. இப்படி காலப்போக்கில் செய்தித்தாள் படிப்பதின் தேவைகளும் அர்த்தங்களும் வேறுபட்டுகொண்டிருந்தன. இப்போதெல்லாம் எந்த செய்தி   தாள்களையும் படிப்பதில் விருப்பமிருப்பதில்லை, தொலைக்காட்ச்சியில் தொடர்ந்து செய்திகளை அறிந்து கொள்வது பழகிவிட்டது. 

அன்றைய பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதில்லை எனவே வீட்டு வேலைகளை முடித்து விட்டு மதியம் உறங்குவார்கள் அல்லது நூலகத்தில் இருந்து எடுத்துவந்த கதை புத்தகங்கள் அல்லது மாத வார இதழ்களை படிப்பார்கள். இப்போதைய பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்வதால் நிலைமை சற்று மாற்றம் அடைந்துள்ளது, இதில் இன்னும் மீதமிருக்கும் ஒரு பங்கு வேலைக்கு செல்லாத பெண்கள் தொலைகாட்சி தொடர்கள் மற்றும் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு பொழுது போக்கும் திருப்தியை ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளனர்.

படித்த பெண்கள் அல்லது வீட்டிலிருக்கும் பெண்களில் எத்தனை சதவிகிதம் பெண்கள் செய்திகளை விரும்பி பார்க்கின்றனர் என்பதை கவனித்தால் நமது பெண்கள் முன்னேற்றம் பற்றிய கருத்து கணிப்பை எளிதாக கணக்கிட முடியும். நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அக்கறை இல்லாமல் சமயலறையும், பிள்ளை வளர்ப்பும், மாமியார், நாத்தனார் புராணங்களைப்பற்றிய சிந்தனையே தங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் என்கின்ற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது நாட்டில் நடக்கின்ற பல்வேறு விதமான கொலை கொள்ளை, அரசியல் மாற்றங்கள், பருவநிலை மாற்றங்கள் என்று மிகவும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்துகொள்கின்ற ஆர்வம் இல்லாவிட்டால் அவர்களால் எவ்வாறு ஒரு சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க இயலும்? "விழலுக்கு இறைத்த நீர்" என்பது போல நெல் விளைகிறதோ இல்லையோ புற்கள் விளைவது உறுதி.

பொது கழிப்பிடங்களை நாடு முழுவதும் காட்டித்தருவது நல்ல முயற்சி; அதற்க்கு முன்பாக அவற்றை பராமரிக்க நாட்டு மக்களுக்கு கற்று தர வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எல்லாவித பொருள்களையும் பொதுமக்கள் வாங்கி செல்ல நவீனமாக கட்டப்பட்டிருக்கின்ற வணிக வளாகம் சென்னையில் நவீனமான கழிப்பிடங்களையும் அமைத்துள்ளது, அதில் பணியாற்ற அளவிற்கு அதிகமான துப்புரவு தொழிலாளர்களையும் பணிக்கு வைத்துள்ளது. ஆனால் அதன் உள்ளே சென்று பார்த்தால் நாற்றம், அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது, அந்த அசுத்தங்களின் ஓரமாக துப்புரவு தொழிலார்கள் ஒருங்கிணைந்த சிறிய மகாநாடு எப்போதும் நடந்துகொண்டிருப்பதை கழிவறைக்கு செல்லும் ஒவ்வொருவரும் காண முடியும். வாங்குகின்ற சம்பளத்திற்காக வேலை செய்வதை அல்லது தான் செய்யும் பணியை மதிக்காத எந்த நாடும் முன்னிலைக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. கழிவறைகளை பயன்படுத்தும் மக்களாகட்டும் அதை துப்புரவு செய்கின்ற தொழிலாளர்களாகட்டும் பொருப்பின்றி இருப்பது திருத்தப்படாமல் எத்தனை கழிப்பிடங்களை கட்டினாலும் பயனில்லை. கடைநிலை மனிதன் வரையில் தனி மனித ஒழுக்கம் வேண்டும் அதற்க்கு வெறும் படிப்பு மட்டுமிருத்தல் போதாது, ஒவ்வொரு கிராமம் ஒவ்வொரு தெருவாக சென்று சுத்தம் என்பது என்ன அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும், அல்லது கட்டும் கழிப்பிடங்கள் அனைத்தும் உபயோகிக்க இயலாமல் கிடக்கின்ற ஏனைய கழிவறைகளைபோலத்தான் துப்புரவற்றிருக்கும். 

பொது சொத்துக்களை தங்களது சொத்தாக பாவிக்கும் ஒழுக்கமில்லாத நாடு முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரத்தில் இல்லை. தொலைகாட்சியில் விளம்பரம் வருகின்ற சமயத்தில்தான் நமது கழிப்பிடத்திற்க்கோ அல்லது சமயலறைகுள்ளேயோ சென்றுவிடுவோம் அவ்வாறு போகவில்லை எனில் வேறு அலைவரிசைகளில் என்ன ஒளிபரப்பாகிறது என்பதை அறிந்துகொள்ள அலைவரிசைகளை மாற்றிகொண்டிருப்போம், அமீர்கான் அல்லது வேறு எந்த நடிகர்கள் திரையில் தோன்றி சுத்தம் மற்றும் ஏனைய ஒழுக்கத்தை பற்றி விளம்பரம் அளித்தாலும் அவைகளை ஒருவருவரும் கவனித்திருக்கவே முடியாது. கொள்ளைகாரனோ கொலைகாரனோ நம் வீட்டை நோட்டமிடுவதை கூட நாம் அறியமாட்டோம், அத்தனை சுயசிந்தனை.

Transistor பொருத்தப்பட்ட வானொலி பெட்டிகள் முதல் கைபேசிகள் வரையில் டெல்லியில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்தால் அதை ஒருநாள் கூட உபயோகிக்கும் நிலையில் இராது,  Pant, Shirt, Sarees, சூடிதார் போன்றவற்றை வியாபாரம் செய்வதற்கு ஹிந்தி பேசுகின்ற வியாபாரிகள் வீடு வீடாக வருவதுண்டு அவற்றை நம்பி வாங்கியவர்கள், அவற்றை கொண்டு குழந்தைகளுக்கு பான்ட், ஷர்ட், தைத்து போட்ட விபரம்தான் கிடைத்துள்ளது. அவர்கள் பேசும் தந்திரம் அடுத்தவர்களை நம்ப வைத்துவிடும், "கள்ள வியாபாரிகள்". பேசியே மக்களை ஏமாற்ற திட்டமிடும் கள்வர், வடமாநிலத்தவர்களுக்கு கைவந்த கலை.

தனிமனிதன் திருந்தினால் மட்டுமே நாடும் வீடும் திருந்தும், திருத்தம் ஒன்றுமட்டுமே நாட்டையும் வீட்டையும் உயர் நிலைக்கு எடுத்து செல்ல முடியும்.

1/28/2015

விவாத மேடைகள்

2015 ஆண்டு துவங்கி 28 நாட்கள் கடந்த நிலையில் இன்றைக்குத்தான் இவ்வாண்டின் முதல் பதிவினை பதிக்கவேண்டியிருக்கிறது. முகநூலில் status போடுகின்ற பழக்கம் கிடையாது ஆனால் மனதை நெருடும் சில பிரச்சினைகளை பதிவில் எழுத்தின் உருவம் கொடுக்கக்கூட இப்போதெல்லாம் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. அரசர்களின் கொடுங்கோலாட்சியில் அடிமைகள் பயப்படுவது போல. பல சமயங்களில் நாம் நிச்சயமாகவே இந்தியாவில்தான் வாழுகிறோமா அல்லது சவூதி அரேபியா போன்ற மன்னர் ஆட்ச்சியில் வாழ்கின்றோமா என்று ஒரு முறைக்கு பலமுறை சிந்திக்கவும், அஞ்சவும் வைக்கிறது. இத்தனை எதற்கு, சத்தம் போட்டு கைபேசியில் நமது சொந்த கதைகளை விலாவரியாக பேசக்கூட அச்சமாக இருக்கிறது; [பலரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கூறப்படுகிறது] அது மட்டுமா,  திருட்டுப்பயல்கள் கூட தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு பணம் மற்றும் பொருள்களை திருடிசெல்வதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறதே. தனிமனித சுதந்திரம் என்பது காணாமல் போனது நிஜம்தானே?.

சில நாட்களில் தந்தி தொலைகாட்ச்சியின் ஆயுத எழுத்து உரையாடல்களை கேட்பதுண்டு. இதில் ஒரு பெரிய "ஜோக்" என்னவென்றால் விவாதத்திற்கு வருகின்றவர்களை எப்படி தேர்வு செய்கின்றனர் என்பதுதான். சம புலமை அல்லது சம அனுபவம் மிக்கவர்கள் பேசினால் விவாதம் என்பது ஒரளவிற்கு கேட்பவர்களுக்கும் நியாமானதாக இருக்கும், பெரும்பாலான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்கள் விவாதிப்பது அலைவரிசையை உடனே மாற்றி வைக்கத்தூண்டும். இன்றும் அப்படித்தான் இருந்தது. அவர்கள் கொடுக்கும் தலைப்பு என்னவோ காரசாரமாக தோன்றினாலும் விவாதம் உப்பு சப்பு இல்லாமல் சலித்துப்போகும்.

இன்றைக்கு விவாதத்தில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற I.A.S. அதிகாரி தேவசகாயம் ஒரு "ஜோக்கரை" போலவே தோன்றியதுடன் பேசவும் செய்தார் அதன் ஒரு பகுதியில் அவர் கூறுகிறார் "நான் ஒரு கிறிஸ்த்தவன், என்று சொல்லிக்கொள்ளும் இவர், மேலும் கூறுகிறார் ஆனால் சென்னைக்கு வந்த இயேசு கிரிஸ்த்துவின் சீடர்களில் ஒருவரான தோமா என்பவர் கிறிஸ்த்துவை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லை" என்கின்றார். [எனக்கு தெரிந்தவரையில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்தான் கிறிஸ்த்தவர்கள், ஒரு சமயம் தேவசகாயத்திற்கு கிறிஸ்த்தவர்கள் என்பதற்கு வேறே ஏதேனும் "விவரம்" தெரியுமோ என்னவோ!! அப்படியானால் இவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ? !!] இவர்தான் திறமை வாய்ந்த அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அதிகாரியாம்!!; அடுத்ததாக "ரோமன் கத்தோலிக்கர்களும் CSI சபையை சேர்ந்தவர்களும் உபதேசிப்பத்தின் மூலம் தங்கள் சபைக்கு பிற மதத்தினரை சேர்த்து கொள்வதில்லை"என்கின்றார். அங்கே இவர்கள் பேச வந்த தலைப்பு என்பதற்கும் இவர் கூறுகின்ற முரண்பட்ட கருத்துக்களுக்கும் விவாத மேடை தேவையா, ஆனால் அடுத்தவர் பேசுகின்றபோது தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார் நான் விவாதத்தின் பாதியிலேயே வெளியேறுகிறேன் என்கின்றார்.....என்ன கொடுமை சார் இது?அத்துடன் நில்லாது அடுத்தவர் பேசுகின்ற சமயத்தில் தனது கைகடியாரத்தை ஒருமுறைக்கு பலமுறை பார்த்துகொள்கிறார், அத்தனை அவசர அலுவல்களுக்கு இடையே விவாதமேடைக்கு இவர் எதற்க்காக வந்திருக்கவேண்டும், discipline பற்றி பேசும் இவருக்கு அடுத்தவர்கள் விவாதிக்கின்றபோது அவர்கள் வேறு வேலையில்லாமல் வெட்டியாக நேரத்தை வீணடிப்பது போலவும் இவர் மட்டுமே சரியான விவாதம் செய்வது போலவும் பாவனை செய்வது எந்த விதத்தில் ஒழுக்கத்தில் சேர்த்துகொள்வது என்பது புரியவில்லை.

இதையெல்லாம் போதாதென்று இறுதியில் ஒரு கணக்கெடுப்பு வேறு;  நிகழ்ச்சியை காண்பவர்களை முட்டாள்களாக கருதும் இது போன்ற விவாத மேடைகள் தான் பத்திரிகை சுதந்திரமா என்பது கேள்வி.1/13/2015

வாழும் வரை போராடு

"வாழும் வரை போராடு" என்பது வாழ்வின் அடிப்படை; போராட்டம் என்பது பிறந்த குழந்தை முதல் அடுத்த நிமிடம் இறந்து போகும் மனிதன் வரையில் தவிர்க்க இயலாத ஒன்று. ஒவ்வொரு போராட்டமும் வெவ்வேறான பாடங்களை புகட்டும்.  வித்தியாசமான அனுபவங்களை கொடுத்துவிட்டு செல்லும் போராட்டங்கள் இல்லையென்றால் வாழ்க்கை என்பதற்கு பொருள் இல்லாமல் போகும். பொருள் அல்லது அனுபவமற்ற வாழ்க்கை வீண், ஒவ்வொரு அனுபவத்தின் மூலம் கற்ப்பிக்கப்படுகின்ற அறிவுரைக்கு பின்னர் அவற்றைப்பற்றிய தெளிவு என்பது வரவழைக்கப்படும். இவை அனைத்தையுமே உதாசீனப்படுத்தும் பலரது வாழ்க்கை மீண்டும் மீண்டும் சிக்கல்களை அதிகரித்து கொள்ள வழி செய்துவிடுகிறது.

எதையும் மிகவும் எளிதாக அடைந்துவிட வேண்டும் என்கின்ற நோக்கம் எங்கும் நிறைந்து காணப்படுகின்ற மிகவும் சாதாரணமான நோக்கமாக உள்ளது. அவ்வாறு அடைவதற்கான வழிகளில் எதிர்படுகின்ற எதுவாக இருப்பினும் அவற்றை அழிப்பதில் நிறைவுகாண்பதாக எண்ணிக்கொள்ளும் மடமை. அவ்வாறு அடைந்த பின்னர் அவற்றை கொண்டு நினைத்தபடி சுகமாக, எவ்வித குறைவுமின்றி வாழ்ந்து முடிக்க இயன்றதா? இவையனைத்தும் நடந்து முடிய எத்தனை வருடம் தேவைப்பட்டது? அதன் பின்னர் தற்போதிருக்கும் வாழ்க்கை எவ்வாறு உள்ளது? இக்கேள்விகளுக்கு பதில் என்னவாக இருக்க முடியும்?!!. பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும்  வாழ்வின் இலக்கு என்பது அவரவர் கையில் இருப்பதில்லை. அது ஏற்க்கனவே நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வழியில் செல்லாமல் வேறு வேறு வழிகளை தேர்ந்தெடுக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளும் மனிதன் தோல்விகளை அல்லது நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான்.

தன்னை போல பூமியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உயிரும் பல்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்வது அவசியம். அதன் மூலம் ஒவ்வொரு ஜீவனையும் மதிக்கும் மனநிலை உருவாகும். எதையும் அழிக்கவோ அதிகாரம் செலுத்தவோ நமக்கு அதிகாரம் கிடையாது என்பதை அறிந்துகொள்ள முடியும். மரம் முதன் மண் வரையில் எதையும் அழிக்கும் அதிகாரம் ஒருவருக்கும் கொடுக்கப்படவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து முடிக்க "பணம்" என்கின்ற மனிதனால் உண்டாக்கப்பட்ட சொர்கத்தை மட்டுமே இலக்காக வைத்து தொடரும் வாழ்க்கை எவ்வாறு நிறைவான வாழ்க்கையாக இருக்க முடியும். நிறைவு என்பது உலகத்திற்கு சொந்தமான பணம், பொருள், இன்பம் என்பனவற்றில் இருக்க வாய்ப்பு இல்லை, ஏனெனில், அவ்வாறான சுகத்தை தேடி அடைந்து நிறைவடைந்தவர் வாழ்ந்த சரித்திரம் கிடையாது.

பின்னர் எதற்க்காக அவற்றை தேடி அலைய வேண்டும்? அதற்காக ஏன் வாழ்க்கை முழுவதையும் வீணாக்கவேண்டும். பணம், பொருள், இன்பம் என்பதை இலக்காக வைத்து அடைந்தவர் ஒருவரேனும் "போதும்" என்கின்ற திருப்தி அடைந்ததுண்டா? தனது மரணத்தில் நிறைவான மனதை உடையவராக இருந்தார் என்பதற்கு ஏதேனும் சாட்சி உண்டா. அப்படியானால் அவ்வாறான அர்த்தமற்ற வாழ்கையை வாழ்வதற்கு எதற்க்காக பிரயாசப்படுகிறோம். எதை இலக்காக வைத்து வாழ வேண்டும் என்பதை யோசிப்பதற்கே இடம் கொடுக்காத வாழ்க்கை வீண் அல்லவா.