Translate

12/03/2014

எதிர்காலம்


குழந்தைப்பருவம் என்பதை தாண்டி முதல் முதலாக பள்ளிக்கு போகின்ற பருவம் துவங்கும் காலம் என்பது மிகவும் விசித்திரமானது. "இளமையில் கல்" என்ற வாக்கு எத்தனை நிஜமானது, அப்போதிலிருந்து கற்றுக்கொள்ள துவங்குவது என்றைக்குமே நிறைவடைவதில்லை. பள்ளி செல்லும் காலத்தை எவராலும் மறக்க இயலாது. வாரத்திற்கு ஒருமுறை நன்னெறி கதைகள் சொல்லிகொடுக்கின்ற வகுப்புகள் , அக்கதைகளை ஆசிரியர் கூறும்போது அப்படியே மனதில் பதிந்துவிடும். உடன் படிக்கின்ற மாணவர்களின் குறும்பு அதிக பட்சம் கிள்ளுவது அல்லது அடிப்பது. அது கூட எல்லோரும் எப்போதும் செய்வதில்லை. பள்ளியில் வெளியே இருக்கின்ற மிகவும் பெரிய புளியம் மரங்களில் இருந்து விழுகின்ற புளியம் பூக்கள் மற்றும் அதன் பிஞ்சுகளை எடுத்து சாப்பிடுவது, அருகே இருக்கும் சிறிய கடையில் தேன் மிட்டாய், கமர்கட்டு வாங்கி சாப்பிடுவது என கற்பனைக்கு அப்பாற்பட்ட நாட்கள்.

உடன் படிக்கின்ற மாணவர்களை பிரிந்து வேறு பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை ஏற்ப்படும்போதெல்லாம் மனம் தவியாய் தவிக்கும் பழகிய பள்ளியை விட்டு செல்வதென்பது மிகவும் வருத்தமான சம்பவம். உடன் படித்தவர்களை மறப்பதென்பது அத்தனை எளிதல்ல. என் பள்ளிப்பருவம் முதல் இறுதி வரை எல்லா தோழிகளும் இந்துக்கள்தான். அவர்கள் ஒருபோதும் என்னை வேற்று மதத்தை சேர்ந்தவராக கருதி ஒதுக்கியது கிடையாது. மதத்தையும் சாதியையும் காரணமாககொண்டு நட்ப்பை ஒதுங்கியவர்கள் பெரும்பாலும் பிராமண பெண்கள் மட்டும்தான். மற்ற எந்த வகுப்பை சேர்ந்தவர்களும் மதத்திற்காகவும் சாதிக்காகவும் நட்ப்பை ஒதுக்கியது கிடையாது. நட்பு என்று வந்துவிட்டால் சாதி மதங்கள் என்றும் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.
ராமாயணம் என்பது தமிழ் பாடத்திட்டத்தில் தவறாமல் இடம்பெரும் என்பதால் அதன் கதைகளை ஒவ்வொரு மாணவரும் படித்து இருப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்தது.
.
உமறு புலவரின் சீராபுராணம், வீரமா முனிவரின் தேம்பாவணி இவை கூறிய கருத்துக்களை அறிந்து கொண்டபோது மனதில் வேற்றுமை உருவானதில்லை, அவற்றில் கூறப்பட்ட கருத்துக்கள் எவர் மதத்தையும் ஜாதியையும் குறைத்து கூறியதாக நான் வாசிக்கவில்லை. வாசிக்கின்றவரின்  மனதில் எவ்வித உணர்வுகளை அவை ஏற்ப்படுத்தியது என்பது மட்டுமே கவனிக்கப்பட வேண்டியது. அவ்வித கதைகளை எடுத்துக்கூறி அதன் அடிப்படையில் வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும் என்கின்ற நன்னெறி பதிவு செய்யப்பட்டு வந்தது. பாரதியாரையும் பாரதிதாசனாரின் செய்யுள்களை படித்து அறிகின்ற போதும் "ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்" என்று கற்ப்பிக்கப்பட்டது, இன்றுவரையில் அவ்வாறே கற்ப்பிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் என்பது எந்த அளவிற்கு மாணவர்களின் மனதில் வேரூன்ற வாய்ப்பிருக்கிறது என்பது கேள்வி குறியே.

நன்னெறி கதைகளை குறித்த பேச்சுக்கே இடமிராத வகையில் இன்றைக்கு மாணவர்கள் படித்து அவற்றை அப்படியே மனதில் பதிய வைத்து தேர்வின்போது அவற்றை மாறாமல் எழுதிவிட்டு முழு மதிப்பெண்களை பெற்றுவிட வேண்டும் என்கின்ற நோக்கில் கல்வி இன்று விவேகமற்ற வகையில் மாணவர்களை உருவாக்கி வருகின்றது. ஒருவர் படித்தவராக இருப்பதினால் அவர் நன்னெறிகளை அறிந்திருப்பார் அதன் அடிப்படையில் அவரது செய்கைகளும் வாழ்க்கையும் உள்ளனவா என்பதை காணும்போது நமக்கு கிடைக்கின்ற எளிய விடை; அவர் படித்த படிப்பு என்பது வெறும் பொருளீட்டும் கருவியாக மட்டுமே உள்ளதை காண முடியும். ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை கேட்பவர்கள் எவரும் இருப்பதில்லை, மாறாக எந்த பட்டப்படிப்பை படித்துவிட்டு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதாகவே இருக்கிறது.

"காணி நிலம் வேண்டும்" என்றார் பாரதியார், ஒரு மனிதன் வாழ்க்கைக்கு அது போதும் என்பது அதன் பொருள் ஆனால் இன்றைக்கு நிலம் என்பது பொன்னையும் வைரத்தையும் விட அதிக விலை விற்கிறது. அதிகம் பணம் சம்பாதிப்பவர் பல கோடி காணி நிலங்களை தங்களுக்கென்று சேர்த்து வைக்கின்றனர். "போதும்" என்கின்ற நிறைவு உள்ளவர் எவரேனும் உள்ளனரா என்று தேடினால் காண்பது அரிதாகிவிட்டது. எதை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம், மனிதநேயமற்ற சமுதாயம், பிரிவினைகள் நிறைந்த எதிர்காலம், பாகுபாடுகளை ஊட்டிவிடும் சமுதாயம், மூர்க்கமும் அயோக்கியத்தனங்களும் நிறைந்த இளைஞர்கள் என்று எதிர்காலம் வன்முறை நிறைந்து நம்மை நாமே அழித்துக்கொள்ளும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோமா.