Translate

11/08/2014

வாழ்வின் அர்த்தம்     என்னிடம் ஒரு சகோதரி கேட்டாள்; பொய்யே சொல்லாமல் வாழ்வது நடக்கின்ற காரியமா; அப்படியே நடந்தாலும் அதனால் எனக்கு என்ன பயன்; வாழும் வரையில் நாம் விரும்பியபடியெல்லாம் வாழ்ந்துவிட்டு நிம்மதியாக சாகலாமே, எதற்க்காக மிகவும் கஷ்டப்பட்டு நேர்மை நீதி நியாயம் என்பதையெல்லாம் கடைபிடிக்கவேண்டும்?

     அவர்களிடம் பலவிதமாக விளக்கிச்சொன்னேன். அவர்களால் ஓரளவே ஏற்றுக்கொள்ள முடிந்தது. பல மாதங்கள் கடந்த பின்னர் மீண்டும் ஒருநாள் அவர்களை ஒரு கடையில் சந்தித்தேன். நான் சில பொருட்களை வாங்கிகொண்டிருந்த கடையின் அடுத்த கடையாக இருந்த அடகு கடையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். எதோ அவசரத்திற்காக தனது நகையை அடகு வைத்து பணம் பெற்று செல்வதாக கூறினார். அவர் முகமும் பொலிவிழந்து காணப்பட்டது. ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது எனக்கு தெரியும் என்பதால் வேலைக்கு செல்லவில்லையா என்று அவரிடம் கேட்டேன். இல்லை வேலையிலிருந்து நின்றுவிட்டேன் என்றார். ஏன் எதற்க்காக வேலையை விட்டுவிட்டீர்கள் என்று கேட்டேன், அவர் முகத்தில் ஒருவித சோகம், நேர்மையாய் நடக்க எண்ணியதால் நேர்ந்தது என்று சொன்னார். கவலைப்படாதீர்கள், நிச்சயம் வேறு வேலை கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொன்னேன். 

     மீண்டும் சில வருடம் கழித்து ஒருநாள் பேருந்தில் சந்தித்தேன் கூட்டம் அதிகம் இருந்ததால் பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு தெரியும் நான் எங்கு இறங்குவேன் என்பது, அவரும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டு என்னிடம் பேசுவதற்காக என்னை அணுகினார். எப்போதும் போன்று வேறு வேலை கிடைத்துவிட்டதா, இப்போது எப்படி இருக்கின்றீர்கள் என்றேன். அவர் சொன்னார், வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டது, இப்போது பிரச்சினை அலுவலகத்தில் இல்லை, எங்கள் வீட்டில்தான் என்றார். நான் என்ன பிரச்சினை என்பதை கேட்கவில்லை, அதற்க்கு பதிலாக நீதி, நியாயம், நேர்மை என்பதையெல்லாம் இன்னும் கடை பிடிக்கின்றீர்களா இல்லை அதனால்தான் பிரச்சினை ஏற்ப்படுகிறது என்பதால் விட்டுவிட்டீர்களா என்றேன். அவர் என்னிடம் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.

     நீதி, நேர்மை, நியாயம் என்பதை கடைபிடித்தால் வாழ்க்கையில் பிரச்சினை வருகிறது என்பது உண்மைதான், அவற்றை கடை பிடிக்காமலிருந்தால் வருகின்ற பிரச்சினையை விட மிகவும் மோசமானதல்ல, அத்துடன், என் மனத்திற்கும் என் குடும்பத்திற்கும் நான் எந்த அளவிற்கு நீதி நேர்மை, நியாயம் போன்றவற்றை கடை பிடிக்கிறேன் என்பது தெரியும் அதனால் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மரியாதை போன்றவற்றை இழக்க எனக்கு மனதில்லை என்றார். நீதி, நியாயம், நேர்மை போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கின்ற போதே சோதனை காலம் துவங்கிவிடுவது நிச்சயம். சோதனைகளை கண்டு, அவற்றை சமாளிக்கும் வழியறியாமல், மீண்டும் பழைய வாழ்க்கையே சரி என்று முடிவெடுக்கும் பலரது வாழ்க்கை படுகுழிக்குள் தள்ளப்படுவது என்பதை நாம் பலரது வாழ்க்கையின் அனுபவத்தை கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

     நல்ல பண்புகளை கைகொள்ளும் மனிதர்களின் வாழ்க்கை என்பது மிகவும் நெருக்கடியான சவால்களை கடந்தாகவேண்டியுள்ளது. வாழுகின்ற வாழ்நாளை எவ்வாறு வாழ்ந்து முடிக்கின்றோம் என்பதைக்கொண்டு அவரது ஆன்மா நித்திய பேரின்பத்தை அடைகின்ற சிறப்பை பெறுகிறது. உலகில் பெரும்பாலாக காணப்படுகின்ற சிற்றின்பங்களை ருசித்து வாழ்வதன் மூலம் ஆன்மாக்கள் நிம்மதியற்று காலமெல்லாம் வேதனையடைவதை தவிர்க்க இயலாது. ஆன்மாக்களுக்கு உடல் என்று ஒன்று கொடுக்கப்படுவதே அதற்காகத்தான்;  உடலுடன் இருந்த நாட்களில் அவ்வாத்துமாவின் பூரணத்துவத்தை அடைவதற்க்கான வழிகளைப்பற்றி அறியாது வாழ்ந்து வீணே இறப்போரின் எண்ணிக்கையே அதிகம்.