Translate

11/06/2014

மீன்வாசல்

     மீன்வாசல் ஒரு சிறிய நாடு, ஊரை சுற்றி குன்றுகளும் ஒரு ஆறும் இருந்தது, ஆற்றின் துவக்கம் வேறு நாட்டின் எல்லைக்குள் இருந்தது. குறுநில மன்னர்கள் ஆண்டுவந்த காலம், மீன் வாசலுக்கு பரம்பரையாக குறுநில மன்னர்கள் ஆட்சி நடைபெற்று வந்தது. மீன்வாசல் என்ற நாட்டின் பெயருக்கும் அவ்வூர் மன்னர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது வாய்வழி கதைகளாக அவ்வூர் வாசிகள் சொல்வதுண்டு. அவ்வூர் மன்னனுக்கு வாரிசு பிறக்கவில்லை; அடுத்ததாக ஆட்சியில் அமர்த்த மன்னரின் சகோதரரின் பிள்ளைகளில் மூத்தவனுக்கு முடிசூட்டலாம் என்றால் அவ்வூரின் சட்டப்படி மன்னருக்கு உடலில் குறை ஒன்றும் இருக்க கூடாது; அதுமட்டுமின்றி வாள், வில், சண்டையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பதும் குதிரையேற்றம் போன்றவை அடிப்படை தகுதிகளாக இருந்தது; வேற்று நாட்டுக்காரர்களின் படை போருக்கு வந்தால் தனது படையுடன் சென்று போர்க்களத்தில் சண்டையிட வேண்டும். ஆனால் மன்னரின் சகோதரருக்கு  மகன் ஒருவன் மட்டுமே அவனுக்கோ நடக்க இயலாது என்பதால் முடிசூட்டும் அடிப்படை அந்தஸ்த்தை இழந்திருந்தான்.

     ஊரில் இருக்கும் அழகிய அறிவுடைய மற்றும் வில் வித்தை வாள் பயிற்ச்சிகளை கற்றறிந்த இளம் பெண்களில் யாரேனும் ஒருவரை மன்னனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து அவள் மூலம் பிறக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு பட்டம் சூட்டுவதென்று அரசவையில் முடிவெடுத்தனர். இந்நிலையில் மன்னரின் அரண்மனை கணக்குகளை நிர்வகித்து வந்த கணக்கனுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்; கணக்கனுக்கு தனது மூன்று மகள்களில் ஒருவரையும் மன்னனுக்கு திருமணம் செய்து வைக்கும் ஆர்வம் கிடையாது என்பதால் தனது மகள்களைப்பற்றி அரசவைக்கு தெரிவிக்காமல் இருந்துவிட்டான்; அதற்க்கு காரணம் மன்னன் எப்போதும் மதுவின் போதை தெளியாதவனும் களியாட்டங்களில் ஆர்வமுள்ளவனுமாக இருந்ததுடன் அவனது கஜானாவில் ஒன்றும் இல்லாதிருந்ததே காரணம், ஆனால் கணக்கனின் மூத்தமகள் வேறு ஒரு மனகணக்கை போட்டு அரசனை இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள். அரண்மனை கணக்கனின் மூத்த மகளை மன்னருக்கு வாரிசு பெற்று தருவதற்காக திருமணம் செய்வித்தனர்;

     மன்னனுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையையும் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றாள் கணக்கனின் மகள். மக்கள் அனைவரும் மனம் மகிழ்ந்தனர், ஆண் குழந்தை சிறுவனாக இருக்கும்போது அவனுக்கு வில்வித்தையும் வாள் பயிற்ச்சியும் கற்றுகொடுக்க திட்டமிட்டனர்; அவற்றை கற்றுகொள்வதில் ஆர்வமற்றவனாக சிறுவன் இருந்துவிடவே, அவனை வலியுறுத்த இயலாமல் மந்திரிகள் செய்வதறியாது விழித்தனர். அவன் வளர்ந்து வாலிபனாகியபோது மன்னன் இறந்துவிட பட்டம் சூட்டுவதற்கு இளவரசனை வலியுறுத்தினர் நாட்டு மக்கள். ஆனால் இளவரசனோ, தன் தந்தையை போலவே மதுவிலும், வேறு பல பொழுது போக்குகளிலும் ஆர்வமுடையவனாகி பட்டம் சூட்டிக்கொள்ளும் அந்தஸ்த்தை இழந்திருந்தான்; வேறு வழியறியாத மக்களும் மந்திரிகளும் இளவரசியை அதாவது அவனுக்கு அடுத்து பிறந்த பெண்ணை ராணியாக்க முடிவு செய்தனர்.

     இளவரசி பட்டத்து ராணியாகி நாட்டை நிர்வகித்து வருகின்றபோது அவளின் தாய், கணக்கனின் மூத்த மகள் தங்களது கஜானா ஒன்றுமில்லாமல் இருப்பதை கூறி, நாட்டில் கிடைக்கின்ற வளங்களை அண்டை நாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கின்ற வரவை தனது சொந்தமாக சேமித்து வைக்க திட்டம் கூறினாள்; தனது தாயின் அறிவுரையின்படியே செய்தாள் ராணி. அதுவரையில் அண்டை நாடுகளுடன் பண்டமாற்று முறையில் கிடைத்த தானியங்களும் வேறு சில பொருட்களும் அறவே நிறுத்தப்பட்டு மக்கள் பற்றாகுறையால் அவதியுற்றனர். சேமிப்பில் இருந்த தானியம் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு பத்து மடங்கு விலையேற்றி அதன் மூலம் மக்களிடமிருந்த செல்வத்தை பிடுங்க திட்டமிட்டாள் கணக்கனின் மகள், தனது தாயின் அறிவுரைப்படியே செய்தாள் பட்டத்து ராணி. ஆற்று நீர் வரவும் நிறுத்தப்பட்டுவிட்டது, ஆற்று நீருக்கு பதிலாக தங்களது நாட்டில் விளையும் சிலவற்றை அண்டை நாட்டிற்கு கொடுத்துவந்தது நிறுத்தப்பட்டதால் நீர் வரத்து நின்று போனது; நீர் வரத்தும் நின்றுவிடவே பெருவாரியான விவசாயம் முற்றிலுமாக முடங்கிப்போனது.

     மக்கள் அவதியுற்று அரண்மனை முன் நின்று குரல் கொடுத்தனர், குரல் கொடுத்த மக்களை அரண்மனை காவலர்களை விட்டு அடித்து நொறுக்க செய்தார் பட்டத்து ராணி. பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். நாடெங்கும் இரத்த வெள்ளம் ஓடியது. எஞ்சிய மக்கள் அடுத்த நாட்டை நோக்கி இரவோடிரவாக பயணித்தனர். அண்டை நாடுகள் மீன்வாசலிலிருந்து குடிபெயர்ந்த மக்களின் வருகையை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்ப விரட்டியடித்தது. அதற்க்கு காரணம் அந்நாட்டுகளிலிருந்து மீன் வாசலுக்கு அதுவரையில் அனுப்பப்பட்ட சரக்குகளுக்கு பதிலாக பண்டமாற்றுமுறையில் கிடைக்கவேண்டிய பொருள்களை அந்நாட்டிற்கு அனுப்பவில்லை; மீன்வாசலின் மக்கள் பசி பட்டினியால் இறந்து போயினர்; இந்நிலையில் அரண்மனையிலிருந்த ராஜாங்க ரிஷி தங்கள் நாட்டின் தெய்வத்திற்கு பூஜை செய்து அது கூற்று என்னவென்றறிய முற்பட்டார்.

   அவ்வாறு நடத்திய பூஜையில் அந்நாட்டு பட்டத்து அரசியை நாடுகடத்திவிட்டு வேறு ஒருவரை பட்டத்து ராணியாக்க வேண்டும் என்று பதில் கிடைத்தது; ராணியை எப்படி நாடு கடத்துவது என்றறியாமல் விழித்தார் ராஜா ரிஷி; சில மாதங்களுக்கு பின்னர் பட்டத்து ராணிக்கும் அவரது தாய் கணக்கனின் மகளுக்கும் உணவில் மயக்க மருந்து கலந்து வைத்து இருவரும் உறங்கிய பிறகு அன்று இரவே அவர்களது கண், கை கால்கள் கட்டப்பட்டு பல குறுநில மன்னர்களின் நாட்டை தாண்டி சென்று மிகவும் பெரிய பாலைவனத்தின் நடுவில் விட்டு வருவதற்கு திட்டம் தீட்டினார். அவ்வாறே அவர் வளர்த்துவந்த பல கருடன்களில் இரண்டை கொண்டு இருவரையும் மிகவும் பெரிய பாலைவனத்தில் விட்டு வரசெய்தார். அக்காலத்தில் ஆகாய விமானம் இல்லாதிருந்ததால் கருடன் வளர்த்து அதன் மூலம் சில வேலைகளை அரசர்கள் செய்தது வந்தனர். கருடன் ராணியையும் அவரது தாயையும் பாலையில் விட்டுவிட்டு திரும்புவதற்கு பலநாட்கள் ஆகிவிட்டது.

     மீண்டும் நாட்டை ஆள்வதற்கு சிறந்த அரசனை தேடிக்கொண்டிருந்தனர் மீன்வாயிலை சேர்ந்த மீதமிருந்த மக்களும் அமைச்சர்களும்.