Translate

11/05/2014

புரியாத புதிர்

     எத்தனை முறை யோசித்து பார்த்தாலும் விடை கிடைப்பதேயில்லை எத்தனையோ நபர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே பழக்கம் ஏற்ப்படுகிறது; எத்தனையோ நட்பு கிடைத்தாலும் அவர்களிடம் நமக்கு பிடித்தமான குணங்கள் இருந்தனவா என்று யோசித்து பார்த்தால் அப்படி ஒன்றுமே இருந்துவிடவில்லை என்பது தெரியும்; பின் எப்படி நட்ப்பு தொடர்ந்தது; தெரியவில்லை, சில நட்பு காரணம் இல்லாமலேயே சிதைந்தும் விடுகிறது; அதாவது எதற்க்காக, ஏன் என்கின்ற கேள்விகளுக்கு விடையே இல்லாமல் பல நட்பு நீடிக்கிறது. நட்பிற்கு எப்படி காரணம் விளங்கவில்லையோ அதைப்போல பிரிவிற்கும் காரணம் தெரியாமல் போவதுண்டு. அதைப்பற்றி பொதுவாக பலரும் ஆழ்ந்து யோசிப்பதே கிடையாது என்பதால் யாராவது அதைப்பற்றி கேட்கின்ற சமயங்களில் அவை பற்றிய விவரங்களை நமக்கு நாமே கேள்விகேட்க்கின்ற சந்தர்ப்பம் ஏற்ப்படுகிறது. 

     நட்பு வட்டம் மிகவும் பெரிதாக இருப்பதற்கும் ஒரு சிலரே நட்பாக இருப்பதற்கும் சந்தர்ப்பம்தான் காரணங்களா? அல்லது ஒருவருடைய சுபாவத்தை அடிப்படையாக கொண்டதா, என்றால் பெரும்பாலானவர்கள் சொல்வது சுபாவம் என்று. ஒருவருடைய குணத்தின் அடிப்படையில் நட்புவட்டம் பெருகவும் சிறுகவும் கூடுமானால் அவ்வாறு ஒரு கணக்கெடுப்பு செய்துபார்த்தால் உண்மை விளங்கும். பொதுவாக பெண்களுக்கு நட்புவட்டம் அதிகரித்தாலும் சில காலம் மட்டுமே நிலைத்திருந்துவிட்டு பின்னர் அறவே காணாமல் போகின்றன; காரணம் சூழல். நட்பு என்பது பள்ளிப்பருவங்களில் தோன்றி கல்லூரி பின்னர் திருமணம் என்று சூழல் மாறுகின்ற போது அவை இல்லாமல் வெறும் நினைவுகளாகி விடுகின்றது. அவை அப்படியே தொடருமானால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தால் நிச்சயம் மகிழ்ச்சி தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு தொடர இயலாமல் போகும் நிலை நிஜமாகிவிடுகிறது. 

     சில மாதங்களுக்கு முன் ஒரு பிரபல உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்த போது எனது அருகிலிருந்த நாற்காலிகளில் ஒன்றில் இரு இளைஞர்கள் ஒருவருக்கு 30 வயதிற்குள் இருக்கும் [இவர் பெயர் நமக்கு எப்படி தெரியும்!! அதனால் அ என்று குறிப்பிடலாம்} மற்றொருவருக்கு 30 வயதைவிட அதிகமாக இருக்கும் {இவர் ஆ},  கையில் ஒருவருக்கு மட்டுமே வாங்கப்பட்டிருந்த மிகக்குறைவான சிற்றுண்டியும் அரை காப்பியும். அந்த சிற்றுண்டியை சாப்பிடுவதற்காக வாங்கியிருப்பவர் அ, அவர் அதை மிகவும் வேகமாக சாப்பிடுகிறார்; எதிரே அமர்ந்திருக்கும் ஆ தனது கையை விட்டு அந்த தட்டிலிருந்த உணவை பிட்டு எடுத்து சாப்பிட முனைகிறார், ஆனால் அ மிகவும் வேகமாக சாப்பிடுவதால் தட்டில் இலகுவாக கை வைத்து எடுக்க இயலவில்லை; அப்படியும் சிறிய துண்டை எடுத்து சாப்பிடுகிறார்; அவர் செய்வதை மிகவும் கோபமாக முறைத்து பார்த்துக்கொண்டே [அ முகத்தை ஆ முதலிலிருந்து கடைசிவரையில் ஒருமுறையாவது பார்க்கவேயில்லை] மிச்சமிருப்பதை ஒரேவாயில் எடுத்து சாப்பிட்டுவிட்டுகாப்பியை குடித்துவிட்டு தம்ளரை மேசையின் மீது வைக்க இருக்கும்போது அவசரமாக அவர் கையிலிருந்த தம்ளரை வாங்கிக்கொண்டு எச்சில் தட்டையும் இன்னொரு கையில் எடுத்து பிடித்துகொண்டு நாற்காலியை விட்டு எழுந்து செல்கிறார் ஆ;  

                  எச்சில் தட்டையும் காலியான காப்பி தம்ளரையும் எடுத்து செல்பவர் அருகிலேயே சுத்தம் செய்பவர் காத்திருக்கிறார் என்பதைக்கூட கவனிக்காமல் மட மடவென்று எடுத்து செல்வதை பார்த்துவிட்டு நான், அ உட்பட அருகிலிருந்த சிலரும் மேசையை சுத்தம் செய்பவரும் விழித்தோம் விளங்காமல்.  ஒரு சிறிய கற்பனை: உணவகத்திற்கு வருவதற்கு முன்னால் இருவரும் எதோ ஒரு காரியத்தை குறித்து விவாதித்திருக்ககூடும், அதில் ஆ என்பவர் மீது தவறு இருந்திருக்கலாம், அ அங்கிருந்து புறப்படும்போது ஆ தானும் உடன்வந்து வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் இறங்கிகொள்வதாக சொல்லிவிட்டு இருசக்கரவாகனத்தில் அ வுடன் "அழையாத விருந்தாளி"யாக தொற்றிகொண்டிருக்கலாம்.நண்பர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, உடன் வேலைபார்ப்பவர்களாக இருக்ககூடும்; எப்போதும் "ஓசி" கூட்டணிக்கு முந்துகின்ற நபராக இருக்கலாம். நமது கற்பனைக்குள் அவர்களை எப்படி வேண்டுமானுள் சித்தரித்து கொள்வது நமது திறமை.