Translate

11/03/2014

காலம் ரொம்ப கெட்டுகிடக்குது


ஒவ்வொரு விடியலின் போதும் இன்றைக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கிவிட்டு; அதை அப்படியே அன்றைய குறிப்பாக பதிவு செய்து வைத்துக்கொள்வது, குறிப்பில் இடம் பெறாத சம்பவங்கள் நடைபெறுமாயின் அதை தனியே குறிப்பெடுத்துக்கொண்டு, செயல்பட துவங்கினால் நேரமின்மையால் தவற விடுகின்ற முக்கிய வேலைகளை செய்து முடிப்பதற்கு போதுமான நேரம் எல்லோர்க்கும் கிடைக்கும். அதில் இன்னும் கொஞ்சம் மேலேசென்று, எவற்றையெல்லாம் செய்து முடித்தோம் என்பதை சரிபார்த்து கொண்டால், ஓய்வு எடுக்க சமயம் கிடைக்கும், அந்த ஓய்வின் போது அன்று முழுவதும் எத்தனை சந்தர்ப்பங்களில் எத்தனை பொய்களை சொன்னோம் என்பதையும் அப்பொய்களை தேவையற்ற சூழ்நிலையில் கூறிவிட்டோமா அல்லது வேண்டுமென்றே சொன்னோமா, என்பதையும் கணக்கு வைத்துகொண்டு அதையும் சரிபார்க்கும்போது எந்த அளவிற்கு நாம் ஒழுக்கத்திற்கு அல்லது நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும், 

இவற்றை தெரிந்துகொண்டு என்ன பயன் என்று நினைப்பவராக இருந்தால் அல்லது நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன் என்று முடிவுடன் இருந்தால் அதனால் நமக்கு என்னவாகிவிடப்போகிறது என்ற எண்ணம் உள்ளவராக இருப்பின்; உங்கள் மனது உங்களிடம் "நீ தப்பு பண்ணுகிறாய் " என்று எப்போதும் உங்களைபார்த்து கூறுவதுபோல் தோன்றுகிறதா; அப்படியென்றால் நீங்கள் உங்கள் அன்றாட செய்கை பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டியவர். ஏனெனில் அவ்வித தீய செய்கையால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தை குறித்து உங்கள் மனம் உங்களுக்கு முன்னறிவிக்கிறது என்று அர்த்தம். அந்த அறிவிப்பை மீறி நீங்கள் செயல்படுவதால் நிச்சயம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகும், அப்போது வேதனையடைவதில் பலன் ஒன்றும் இல்லை. 

பல சந்தர்ப்பங்களில் பலர் சொல்வதுண்டு எனக்கு நான் செய்வது ஒன்றும் தவறு என்ற எதிர்மறையான எண்ணம் தோன்றியதே கிடையாது என்று. ஆம், பலருக்கு அவர் மனம் அவரிடம் அபாய எச்சரிக்கை செய்வது கிடையாது, அதற்க்கு காரணங்கள் இருந்தாலும், அவரை சுற்றியுள்ள பெற்றோர், நண்பர்கள் என்று யார் வழியாகவோ அந்த அபாய எச்சரிக்கை நிச்சயம் அவருக்கு கிடைக்கும், அவற்றை தட்டிக்கழித்துவிட்டு தான் செய்வதை மாற்றிக்கொள்ளும் முயற்சி எதையும் எடுக்காமல் தொடருகின்றவர்கள் நிச்சயம் பிரச்சினைகளை சந்தித்து அதனால் ஏற்ப்படும் விளைவுகளை சந்திக்கின்றனர். நம்மை நாமே ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றால், ஒழுக்கம் நம் மீது நடவடிக்கை எடுத்துவிடுவதை தவிர்க்க இயலாது. இதைதான் பலர் கடவுள் என்று நம்புகின்றனர். ஏனெனில் இதற்க்கு தப்பிப்போர் ஒருவரும் இல்லை என்பதே இயற்கையின் விதி.

இயற்கையின் விதி என்று நாம் கூறும் அதைதான் "கடவுள்" என்ற நம்பிக்கையில் பலர் வழிபடுகின்றனர். "வழிபடுதல்" என்பதன் மிக முக்கிய விதி நல்லொழுக்கம், அதனால் அவ்விதிக்கு "எல்லோரும் சமம்" சாதி மத அடிப்படை என்பதோ பணக்காரன் ஏழை என்பதோ இருக்க வழியில்லை. எல்லோர்க்குள்ளும் "மனது" என்கின்ற ஒன்று உண்டு, அது எப்போதும் சரியான மற்றும் தீமையான காரியங்களை பாகுபடுத்தி நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கும். சிலர் "உன் மனசாட்சியை தொட்டு சொல்" என்று கேட்பார், அதற்கு அர்த்தம் என்ன,  கடவுள் மீது மற்றும் நல்லொழுக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமலிருக்கலாம், ஆனால் தனது மனது தன்னை எச்சரித்ததற்கு சாட்சி வேறு ஒருவராக இருக்க முடியாதல்லவா. இவற்றை சீர்தூக்கி பார்க்க ஒவ்வொரு தனிமனிதனும் சுயநினைவுடன் வாழ்வதால் மட்டுமே இயலும், தினமும் மது அருந்தி மனசாட்சியை மழுங்க அடித்துக்கொண்டே இருப்பவர் சீர்தூக்கி பார்க்க சந்தர்ப்பம் ஏது. 

தன்னை தானே அழித்துகொள்ளும் செயலில் அதிக ஆர்வம் காட்டும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படை காரணம் பல இருந்தாலும் மனிதர்கள் மண், பொன், பெண் மீது அளவற்ற ஆசையை வளர்த்துக் கொள்வதுதான். எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிட்டு பின்னர் அதை அடைவதற்காக போராடும் போராட்டத்தில் நல்லொழுக்கம் என்கின்ற மனசாட்சி அழிக்கப்பட்டு, இறுதியில் தான் அடைந்த மண், பெண், பொன் எதையும் முழுமையாக அனுபவிக்கும் ஆயுசும் உடல்நலமும் இல்லாமல் போவது உறுதியாகிவிடுகிறது. சிந்திக்க தவறினால் வாழ்க்கை அற்பத்தில் அழிக்கப்பட்டுவிடுகிறது.