Translate

11/24/2014

செய்வன திருந்த செய்

     சமீபத்தில் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை வெளியிட விருப்பமில்லை என்றாலும் அவற்றில் தொடர்கதையாகி வரும் சில காட்சிகளை பற்றிய கருத்துக்களை மட்டும் இப்பதிவில் வலியுறுத்த விரும்புகிறேன், இனிமேலாவது அவற்றை மாற்றினால் நலம் என்பதுவே பதிவதின் நோக்கம். ஹாலிவுட்டில் எடுத்த திரைப்படங்களில் பெரும்பாலானவற்றை ஒரு உதாரணத்திற்கு இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது ஒரு கதையை எந்த நாட்டில் எந்த மொழி பேசுகின்ற, எவ்வித பழக்க வழக்கங்களை கொண்டுள்ள சமூகத்தைப்பற்றி திரைப்படத்தில் சித்தரிக்கின்றார்களோ அதை பதிவு செய்வதற்கு முன் அந்த குறிப்பிட்ட மக்கள் வசிக்கின்ற இடத்திற்கு சென்று அங்கு அவர்களது நடைமுறைகள், உடை, உணவு பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு அக்கதை எந்த கால கட்டத்தில் நடைபெறுவதாக சித்தரிக்க போகின்றார்களோ அதற்க்கு தேவையான முக்கிய விவரங்களை சேகரித்துகொண்ட பின்னர் அவ்வாறான உடை மற்றும் காட்சிகளை சரியாக பதிவு செய்கின்றனர். இதன் காரணமாகவே இத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலான நாடுகளை சேர்த்த திரைப்பட ரசிகர்களை கவர்கிறது. மிகத் தெளிவாக அறிந்துகொண்ட பின்னர் அதன் அடிப்படையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் அவற்றின் தரமும் உயர்கிறது .நல்ல வரவேற்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கபெருகிறது.

     கிறிஸ்த்துவர்களின் திருமண சடங்குகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாக உள்ளது. கிறிஸ்த்தவர்கள் எல்லோருமே வெள்ளைக்காரர்களை போல திருமணத்தன்று வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கையில் மோதிரத்தை மாற்றுவதும், பின்னர் கேக் வெட்டி ஊட்டிவிட்டு ஒயின் அருந்தி, ஜோடி ஜோடியாக கைகளை கோர்த்துக்கொண்டு இசைகேர்ப்ப நடனம் ஆடுவதும் கிடையாது. தமிழ் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற கிறிஸ்த்தவ திருமணங்கள் அனைத்துமே இந்த "வெள்ளைக்காரர்களின்" திருமண முறைகளை மட்டுமே காட்சியாக பதிவு செய்கின்றனர், ஆனால் கதைப்படி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் சர்ச்சில் திருமணம் நடப்பது போன்று காண்பிப்பார்கள்.

     சர்ச்சில் திருமணம் நடைபெறுவது போன்று காண்பிக்கும்போது கூட அங்கே நடக்கின்ற சம்பிரதாயங்கள் அனைத்துமே "வெள்ளைக்கார" பாணியில்தான் அமைந்திருக்கும், கிறிஸ்த்தவர்கள் என்றாலே மோதிரம் மாற்றிக்கொள்பவர்கள் மட்டும்தான் என்பதை இன்னும் எத்தனை காலங்கள்தான் காண்பித்துகொண்டிருக்க போகின்றீர்கள், எழுத்தாளர் சுஜாதா எப்போதும் சொல்லுவார், கதை எழுதும்போது கற்பனையில் ஒன்றை சித்தரிப்பதற்கு முன்னால் அச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை நாம் பார்த்திருக்க வேண்டும் என்று. அது எத்தனை உண்மை என்பதை அறிந்து அதன்படி பதிவு செய்கின்றபோதுதான் முரண்பாடுகளின்றி, காண்பவர்களின் கருத்தை கவரும். அதிலும் குறிப்பாக இத்தகைய சடங்குகளைப்பற்றி திரையில் பதிவு செய்கின்றவர்கள் அரைகுறையாக தாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற சிலவற்றை வைத்துக்கொண்டு காட்சி அமைப்பது என்பது அவரது திறமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாகவே உள்ளது.

     இவ்வகையை சேர்ந்தவர்கள் எத்தனை திரைப்படம் எடுத்தாலும் அது நிறைவானதாகவே இருப்பதில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை. "நானும் ஒரு இயக்குனர்" என்று கூறிக்கொள்ள வேண்டும் என்கின்ற வெறி மட்டுமிருந்தால் போதாது. அதற்க்கான பலவித அனுபவங்களை கேட்டு அல்லது படித்து, பார்த்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதும் புகழ் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்ற அடிப்படையில் திரைப்படங்களை உருவாக்கினால் தரம் மிகுந்த திரைப்படங்கள் தமிழில் இல்லாமல் போய்விடும். [அதைப்பற்றி நமக்கென்ன கவலை என்பது இவர்களது கேள்வி]. சண்டை காட்சி, பாடல் காட்சிகள் என்று திரைப்படம் முழுக்க அளவிற்கதிகமான கற்பனைகள் திரைப்படத்தை பார்ப்பதற்கு திகட்டி விடுகிறது. அதில் உண்மைக்கு புறம்பான சம்பிரதாய காட்சிகள் வேறா?  சமீபத்திய திரைப்படத்தில் பேய் ஓட்டுவதற்கு கிறிஸ்த்தவ போதகரிடம் செல்வது போலவும் அவர் பொய்யாக பேய் ஓட்ட பணம் சம்பாதிப்பது போலவும் காட்சி. காட்சியினூடே கிறிஸ்த்தவரைப்பற்றிய கேலி கிண்டல். அந்த காட்சியை பார்க்கின்ற போதே நமக்கு ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது, குறிப்பிட்ட மதத்தை பற்றி தரக்குறைவாக காட்சி சேர்க்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. பொய் சொல்லி பணம் பறிக்கின்ற கூட்டம் எங்கேதான் இல்லை? அவ்வளவு எதற்கு, திரைப்படங்களே பொய்களை பதிவு செய்துதானே பணம் சம்பாதிக்கின்றன?இதன் ஊடே சொல்லப்படும் நய வஞ்சகமான வசனங்கள் அனைத்தும்   குறிப்பிட்ட மதத்தை தரக்குறைவாக பேசி தீர்ப்பதற்கென்றே இணைக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.  இதிலிருந்து தெரிந்துகொள்வது சமீப காலமாக மனிதனுக்கும்  "மதம் பிடிக்கிறது" அல்லது மதம் என்கின்ற கொடிய தொற்று நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்பது.

       நேற்று கூட ஒரு திரைப்படத்தில் கிறிஸ்த்தவ போதகர் ஒருவர் வீதியில் மற்றொருவரின் தலை மீது கைவைத்து "ஸ்தோத்திரம்" என்று சொல்லி ஜெபம் செய்வது போலவும் அதை கிண்டலாக "தோத்துருவோம்" என்று கிண்டலாக பேசுவது போன்று காட்சி பதிவு செய்துள்ளனர். கிண்டல் செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை போலதெரிகிறது. அதற்க்கு மேல் எதையும் யோசிக்குமளவிற்க்கு அறிவு பற்றாக்குறை. திரைப்படங்களில் இத்தகைய தேவையற்ற காட்சிகள் எதற்க்காக? சொந்த விருப்பு வெறுப்புகளை திரைப்படத்தில் பதிவுசெய்வதென்பதுதான்  புதுமையா?