Translate

11/02/2014

நினைவு தினம்


உலகில் பிறப்பும் இறப்பும் இயற்கைதான்; பிறக்கும் போது பிறக்கின்ற குழந்தையும் தாயும் அழுது கொண்டு இருந்தாலும் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவதும்; அதே மனிதன் இறக்கும்போது ஒருவித நிம்மதியுடன் நிரந்தரமாக உறக்கத்தில் ஆழ்கின்றபோது துற்றியுள்ளவர்கள் அழுதுகொண்டிருப்பதும் ஆராய்ந்து அறிந்து கொள்ள இயலாத ஏதோ ஓர் உண்மையை நமக்கு விளக்கிவருவதும் உண்மை. ஒரு பழமொழி உண்டு "திருமண வீட்டிற்கு செல்வதை விட சாவு வீட்டிற்கு செல்வது மூலம் வாழ்வின் உண்மையை நாம் உணர முடியும்"என்று. நாளை இரண்டாம் தேதி "சகல ஆத்துமாக்களின் திருநாள்" கொண்டாடுவது உலகெங்குமுள்ள கிறிஸ்த்தவர்களின் வழக்கம். என் தகப்பனாரின் 15வது வருடம். கிறிஸ்த்தவர்களின் மரணத்தில் ஒரு சிறப்பான அம்சம் உண்டு அவர் இறந்த பதினைத்தாம் நாள் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாவரும் ஒன்று கூடி அவரைப்பற்றிய நினைவுகளை பலவிதங்களில் பகிர்ந்து கொள்வது உண்டு, அந்த வகையில் என் தப்பனாரின் பதினைந்தாம் வருடத்தில் அவரைப்பற்றி பகிர்ந்து கொள்வதில் நான் ஒரு விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். 


என் தகப்பனார் தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்; அதற்க்கு மிகவும் முக்கிய காரணம் அவரது தந்தையின் சொந்த ஊர் தஞ்சை, தாய் நாகை அதுமட்டுமின்றி பல தமிழ் பண்டிதர்களை உள்ளடக்கிய குடும்ப வரலாறு என்பது. என் தகப்பனாரின் உடன் பிறந்த நான்கு சகோதரர்களும் சென்னையில் (மதராஸ்) புரசைவாக்கத்தில் பிறந்தவர்கள், ஆனால் என் தகப்பனார் மட்டும் தற்செயலாக நாகையில் உள்ள காடம்பாடியில் அவரது அம்மாவின் தாய் வீட்டில் பிறந்தவர் என்பது ஒரு சிறப்பு. வீட்டில் இருந்த அனைவரும் ஆங்கிலத்தில் படிக்க என் தகப்பனாருக்கோ தமிழ் இலக்கிய இலக்கணத்தில் தீராத பற்று. ஒரு குறிப்பிட்ட காலத்தில் புரசையில் அப்போது வாழ்ந்த பல கர்னாடக இசை வல்லுனர்களின் பாடலை தினமும் கோவில்களில் சென்று கேட்டு கேட்டு சங்கீதத்திலும் பாட கற்றுகொண்டவர், அச்சமயம் அவரது தகப்பனார் சர்ச்சில் பாடல் குழுவில் பாடகராக இருந்ததால் தன் மகன் கோவிலுக்கு சென்று தவறாமல் சங்கீதம் கேட்பதை விரும்புவதில்லை. அத்தோடு நிறுத்தி கொள்ளாமல் அத்தனை பாடல்களையும் வீட்டில் அப்பியாசம் செய்வது அவருடைய தகப்பனாருக்கு மிகவும் கோபத்தை ஏற்ப்படுத்தியதாக கூறுவார். 

அத்தோடு நில்லாமல் அவரது பதினாறாவது வயதில் ஒரு சாதுவுடன் பழக்கம் ஏற்ப்படுத்திக்கொண்டு பல அப்பியாசங்களும் பல வாய்வழி கதைகளையும் கற்றுகொண்டார், சிலம்பாட்டம் உள்பட. அவர் பல அருமையான கதைகளை எழுதினர் என்பதும் மிகவும் அழகான ஓவியங்களை வரையும் திறமை படைத்தவர் என்பதையும் அவரை சார்ந்த அனைவரும் அறிந்தது. திரைக்கதை வசனம் எழுதி அதை மிகவும் பாதுகாப்பாக வைத்து இருந்தார்; அவரது நெருங்கிய பால்ய நண்பர் மறைந்த திரு.கிருஷ்ணன்(பஞ்சு)விடம் கொடுத்துவிட்டு காலம் முழுவதையும் முயர்ச்சியிலேயே கழித்தார்; அவரது முயற்ச்சிகளை எல்லாம் வீழ்த்தும் ஒரு பெரிய கூட்டம் திரு.கிருஷ்ணன் அவர்களை சுற்றி இருந்தது. ஒருவரை வீழ்த்தித்தான் மற்றொருவர் பிழைக்கவேண்டும் என்பதில் அவர்கள் அரும்பாடுபட்டு வெற்றிகொடியும் ஏற்றினார்கள், ஆனால் வெற்றி கொடியேற்றிய அவர்கள் அதிக வருடம் சுகத்தில் வாழ்ந்து மறைந்ததாக தெரியவில்லை. திரைக்கதை வசனம் யாரிடம் சிக்கி சின்னா பின்னமாகியதென்ற தகவல் தெரியவில்லை, மொத்தமாக திருடினால் தெரிந்துவிடும் என்றறிந்த கள்வர் கூட்டம் சிங்கத்தின் வாயில் கிடைத்த இறைபோல துண்டு துண்டாக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டது. 

மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்த என் தகப்பனாரின் தாய் பல நல்ல பணிகளை வாங்கி கொடுத்தும் ஒன்றிலும் நிரந்தரமாக நிற்க இயலாமல் கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் திரைப்படம் தயாராகும்போதெல்லாம் திரு கிருஷ்ணன்(பஞ்சு) கூப்பிட்டு ஆள் அனுப்புகின்ற போது தட்டி கழிக்கும் வழியறியாமல் பேதையாய் என் தகப்பனார் அவருடன் இணைந்து வேலை செய்ய போய் விடுவதால் நிரந்தர வேலைகளை இழந்துபோகும் நிலை உருவாகியது. [இதில் யார் பேதை என்பது சொல்லாமலேயே அறியக்கூடிய ஒன்றுதானே]. என் குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் என் தகப்பனாரின் வேறு நண்பர்களும் சொல்லி தீர்த்த ஒன்றுதான் "எத்தனை நாளைக்குதான் கிருஷ்ணன், கிருஷ்ணன் என்று உயிரை விடப்போகிறாய், உன் வாழ்க்கை என்னவாகப்போகிறதென்று எப்போது சிந்திக்கப்போகிறாய்" என்றே வருந்தியதுதான் மிச்சம். என் தகப்பனார் ஒருவரைப்பற்ற்யும் குறைகூறி நான் கேட்டது கிடையாது. தனது சகோதரர்கள் அனைவரும் மத்திய அரசு பணிகளில் இருக்க இறுதிவரை வறுமைக்குள் சிக்கிகொண்டவர், தனது சகோதரர்கள் அனைவரும் முழுகால்சட்டை அணிவதையே வழக்கமாக்கி கொள்ள இவர் மட்டும் இறுதிவரையில் வெள்ளை வேட்டியை மட்டுமே அணிந்து கொள்வார். காந்திய கொள்கைகளில் ஈர்ப்புடையதால் கால்களில் காலணி அணிவதை தவிர்த்துவிட்டார். இயற்க்கை மரணம் எய்திய அவரது நினைவுகள் என்றும் என்னை விட்டு நீங்குவதில்லை.

 2/11/1999 அன்று இயற்க்கை எய்திய அவரைப்பற்றி நினைவு கூற எண்ணி அவரது புகைப்படம் ஒன்றை இன்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் எழுதிய ஒரு கடிதம் என் கைக்கு கிடைத்தது அவரது நினைவாக அதையும் இணைக்கலாம் என்று தோன்றியது, அவர் எழுதிய கதைகள் திரையில்தான் வருவதற்கு இயலாமல் போனது இதையாவது இத்துடன் இணைக்கலாம் என்று தோன்றியது. என்றும் என்னுள் வாழும் என் அருமை தப்பனாரின் நினைவாக இதோ அந்த கடிதம்