Translate

11/11/2014

சிறுகதையின் தொடர்ச்சி


     கழிப்பிடம் தேடியபோது வள்ளியின் காதில் ஒரு பெண்ணின் அழுகைக்குரல் சற்று தொலைவிலிருந்து மெல்லியதாக கேட்டது, இந்த காட்டிற்குள் ஒரு பெண்ணின் அழுகுரலா என்ற ஆச்சரியத்தோடு அடக்கமுடியாமல் வந்த கழிவை வெளியேற்றிவிட்டு, பெண்ணின் குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள், அங்கு ஒரு அடர்த்தியான புதர், யாரும் புழங்காத இடம், அந்த புதரிலிருந்து அப்பெண்ணின் அழுகுரல் கேட்டது, குரல் மட்டுமே கேட்க்க எந்த உருவத்தையும் காண இயலவில்லை, குரல் மட்டும் விசும்பலுடன் மிகவும் துல்லியமாக அவளருகே கேட்டது. இதைதான் பேய் என்று சொல்லுவார்களோ என்று நினைத்தாள்;  மறுபடியும் அதுவரையில் தான் நடந்து வந்த திசையை நோக்கி திரும்பி நடக்கமுற்பட்டாள்,   அப்பெண்குரல், " இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒன்றும் கேட்காமலேயே திரும்பி போகிறாயே" என்று கேட்டது. அதிர்ச்சியில் உறைந்து போனாள். அப்பெண்ணின் குரலில் சோகம் நிறைந்திருந்தது, உருவமற்ற குரலை கேட்டதும் ஏற்ப்பட்ட அதிர்ச்சி மாறாத நிலையில் அவளிடம் அக்குரல் பேசியபோது தொண்டையில் அதுவரை இருந்த ஈரம் வற்றி தனது தொண்ட்டை அடைத்துக்கொள்ள இருதயம் கீழே வந்து விழுந்துவிடும் போன்று வேகமாக துடிக்க அப்படியே அசையாது நின்றுவிட்டாள்.

     அப்பெண்ணின் வேதனைகளைஎல்லாம் சொல்லி முடித்துவிட்ட பின் அக்குரல் வந்த இடத்தில் அசைய இயலாமல் நின்றிருந்த தன்னை தானே இழுத்துக்கொண்டு மெல்ல நடந்தாள், மாட்டு வண்டியைவிட்டு இறங்கியபோது இருந்த வள்ளி தற்போது பேயறைந்த நிலைக்கு மாறிவிட்டாள். வீடு வந்து சேர்ந்த பின்னரும் அவளின் நிலை மாறவில்லை. எத்தனை மாதங்கள் கடந்திருக்கும் என்பது அவளுக்கு நினைவில்லை; இதற்கிடையே பேய் ஓட்டும் சடங்கு, மருத்துவரின் மருந்து, குறி சொல்பவர் என்று எத்தனையோ காட்சி மாற்றங்கள், ஒன்றிலும் மாறாத மாற்றமாய் அவள் நிலை ஒரே மாதிரியாக இருந்தது.  அவளை அவளது பிறந்த வீட்டிற்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்தது, மனநிலை தவறிய பெண்ணுடன் குடும்பம் நடத்த இயலாது என்று கூறி அவளை அவளது பெற்றோரிடம் கொண்டு வந்து சேர்த்தனர். சில வருடங்கள் கழித்து வள்ளியின் மீது சாமி இருப்பதாக கூறி பலர் வந்து குறிகேட்டு சென்றனர். அவள் முன் போல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதும், விவசாய வேலைக்கு செல்வதும் கிடையாது.

     இந்நிலையில் நகரத்தில் வாழ்ந்து வந்த அவளது மூத்த சகோதரன் தனக்கு தெரிந்த ஒருவர் தகுந்த வைத்தியரிடம் கொண்டு சென்றால் தங்கை பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று கூற, நகரத்திற்கு வந்து சேர்ந்தாள் வள்ளி. மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டதில் மாற்றங்கள் ஏற்ப்பட துவங்கியது. சில வருடங்களுக்குப்பின்னர் தானே தனது சொந்த காலில் நிற்க வேலைக்கு சென்று தன்னை தானே பராமரிக்கவும் கற்றுக்கொண்டாள். "எவராவது பேயை பார்த்ததுண்டா" என்று எழுகின்ற வாக்குவாதங்களை எங்கு கேட்டாலும் அவள் தன்னுள்ளே சொல்லிக்கொள்வது  "நான் பார்தத்தில்லை" என்பதுதான். ஏன் அப்படியொரு பொய்யை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள், அப்படியென்றால் அவள் அங்கு எதை பார்த்ததுவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்? .

     சில நாட்களாக காய்ச்சலில் கிடந்த அவள் அக்காள் அம்மாவாசையின் முதல் மனைவிக்கு அவ்வூரிலிருந்த மருத்துவர் கொடுத்த வைத்தியம் சுகமாக்கவில்லை. மாறாக அவ்வைத்தியரே பட்டணத்திலிருக்கும் மருத்துவரிடம் காண்பிக்க சொல்லியிருந்தும்  அவ்வாறு செய்யாமல் மாறாக அவளை தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அவளது பெற்றோரிடமே கொண்டுவந்து சேர்க்க புறப்பட்டான்.  வழியில் அம்மாவாசைக்கு ஒரு எண்ணம் தோன்றியது; நெடுநாளாக அவன் மனதில் ஏற்ப்பட்டிருந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது சரியான நேரம் வாய்த்திருப்பதாக நினைத்தான். மாட்டுவண்டியில் படுத்திருந்த அவன் மனைவியை தூக்கி எடுத்துக்கொண்டு அக்காட்டினுள் அடர்ந்த மரம் செடிகளுக்கிடையே இருந்த ஒரு புதரினுள் கிடத்தி அவள் மார்பின் மீது ஏறிநின்றான். அவள் உயிர் பிரியாமல் அரை பிணமாக கிடந்தாள், அங்கிருந்த பெரிய கற்பாறையை எடுத்து மார்பின் மீது வீசினான், அவள் உயிர் அங்கேயே பிரிந்துவிட்டது. மீண்டும் அவள் உடலை எடுத்துக்கொண்டு ஊரிலிருந்த தனது வீட்டிற்கு கொண்டுவந்து  கிடத்திவிட்டு, அவளது தாய்வீட்டிற்கு போகும் வழியிலேயே அவள் இறந்துவிட்டதாக எல்லோரிடமும் நாடகமாடினான்.

     அதை உண்மையென்று நம்பிய அனைவரும் அவளுடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரித்து விட்டனர். அதே ஆண்டில் வேறொரு மாதத்தில் வள்ளியை தனக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க அம்மாவாசை கேட்டபோது அனைவரும் அவன் விரும்பியபடியே இறந்தவளின் ஆன்மா திருப்தியடையும் என்று சொல்லி திருமணம் செய்து வைத்திருந்தனர்.

                                                               @@@@