Translate

11/24/2014

செய்வன திருந்த செய்

     சமீபத்தில் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை வெளியிட விருப்பமில்லை என்றாலும் அவற்றில் தொடர்கதையாகி வரும் சில காட்சிகளை பற்றிய கருத்துக்களை மட்டும் இப்பதிவில் வலியுறுத்த விரும்புகிறேன், இனிமேலாவது அவற்றை மாற்றினால் நலம் என்பதுவே பதிவதின் நோக்கம். ஹாலிவுட்டில் எடுத்த திரைப்படங்களில் பெரும்பாலானவற்றை ஒரு உதாரணத்திற்கு இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது ஒரு கதையை எந்த நாட்டில் எந்த மொழி பேசுகின்ற, எவ்வித பழக்க வழக்கங்களை கொண்டுள்ள சமூகத்தைப்பற்றி திரைப்படத்தில் சித்தரிக்கின்றார்களோ அதை பதிவு செய்வதற்கு முன் அந்த குறிப்பிட்ட மக்கள் வசிக்கின்ற இடத்திற்கு சென்று அங்கு அவர்களது நடைமுறைகள், உடை, உணவு பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு அக்கதை எந்த கால கட்டத்தில் நடைபெறுவதாக சித்தரிக்க போகின்றார்களோ அதற்க்கு தேவையான முக்கிய விவரங்களை சேகரித்துகொண்ட பின்னர் அவ்வாறான உடை மற்றும் காட்சிகளை சரியாக பதிவு செய்கின்றனர். இதன் காரணமாகவே இத்தகைய திரைப்படங்கள் பெரும்பாலான நாடுகளை சேர்த்த திரைப்பட ரசிகர்களை கவர்கிறது. மிகத் தெளிவாக அறிந்துகொண்ட பின்னர் அதன் அடிப்படையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் அவற்றின் தரமும் உயர்கிறது .நல்ல வரவேற்ப்பும் அங்கீகாரமும் கிடைக்கபெருகிறது.

     கிறிஸ்த்துவர்களின் திருமண சடங்குகள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையாக உள்ளது. கிறிஸ்த்தவர்கள் எல்லோருமே வெள்ளைக்காரர்களை போல திருமணத்தன்று வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கையில் மோதிரத்தை மாற்றுவதும், பின்னர் கேக் வெட்டி ஊட்டிவிட்டு ஒயின் அருந்தி, ஜோடி ஜோடியாக கைகளை கோர்த்துக்கொண்டு இசைகேர்ப்ப நடனம் ஆடுவதும் கிடையாது. தமிழ் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற கிறிஸ்த்தவ திருமணங்கள் அனைத்துமே இந்த "வெள்ளைக்காரர்களின்" திருமண முறைகளை மட்டுமே காட்சியாக பதிவு செய்கின்றனர், ஆனால் கதைப்படி அவர்கள் தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் சர்ச்சில் திருமணம் நடப்பது போன்று காண்பிப்பார்கள்.

     சர்ச்சில் திருமணம் நடைபெறுவது போன்று காண்பிக்கும்போது கூட அங்கே நடக்கின்ற சம்பிரதாயங்கள் அனைத்துமே "வெள்ளைக்கார" பாணியில்தான் அமைந்திருக்கும், கிறிஸ்த்தவர்கள் என்றாலே மோதிரம் மாற்றிக்கொள்பவர்கள் மட்டும்தான் என்பதை இன்னும் எத்தனை காலங்கள்தான் காண்பித்துகொண்டிருக்க போகின்றீர்கள், எழுத்தாளர் சுஜாதா எப்போதும் சொல்லுவார், கதை எழுதும்போது கற்பனையில் ஒன்றை சித்தரிப்பதற்கு முன்னால் அச்சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை நாம் பார்த்திருக்க வேண்டும் என்று. அது எத்தனை உண்மை என்பதை அறிந்து அதன்படி பதிவு செய்கின்றபோதுதான் முரண்பாடுகளின்றி, காண்பவர்களின் கருத்தை கவரும். அதிலும் குறிப்பாக இத்தகைய சடங்குகளைப்பற்றி திரையில் பதிவு செய்கின்றவர்கள் அரைகுறையாக தாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற சிலவற்றை வைத்துக்கொண்டு காட்சி அமைப்பது என்பது அவரது திறமை எந்த அளவிற்கு உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காண்பிப்பதாகவே உள்ளது.

     இவ்வகையை சேர்ந்தவர்கள் எத்தனை திரைப்படம் எடுத்தாலும் அது நிறைவானதாகவே இருப்பதில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை. "நானும் ஒரு இயக்குனர்" என்று கூறிக்கொள்ள வேண்டும் என்கின்ற வெறி மட்டுமிருந்தால் போதாது. அதற்க்கான பலவித அனுபவங்களை கேட்டு அல்லது படித்து, பார்த்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதும் புகழ் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்ற அடிப்படையில் திரைப்படங்களை உருவாக்கினால் தரம் மிகுந்த திரைப்படங்கள் தமிழில் இல்லாமல் போய்விடும். [அதைப்பற்றி நமக்கென்ன கவலை என்பது இவர்களது கேள்வி]. சண்டை காட்சி, பாடல் காட்சிகள் என்று திரைப்படம் முழுக்க அளவிற்கதிகமான கற்பனைகள் திரைப்படத்தை பார்ப்பதற்கு திகட்டி விடுகிறது. அதில் உண்மைக்கு புறம்பான சம்பிரதாய காட்சிகள் வேறா?  சமீபத்திய திரைப்படத்தில் பேய் ஓட்டுவதற்கு கிறிஸ்த்தவ போதகரிடம் செல்வது போலவும் அவர் பொய்யாக பேய் ஓட்ட பணம் சம்பாதிப்பது போலவும் காட்சி. காட்சியினூடே கிறிஸ்த்தவரைப்பற்றிய கேலி கிண்டல். அந்த காட்சியை பார்க்கின்ற போதே நமக்கு ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது, குறிப்பிட்ட மதத்தை பற்றி தரக்குறைவாக காட்சி சேர்க்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. பொய் சொல்லி பணம் பறிக்கின்ற கூட்டம் எங்கேதான் இல்லை? அவ்வளவு எதற்கு, திரைப்படங்களே பொய்களை பதிவு செய்துதானே பணம் சம்பாதிக்கின்றன?இதன் ஊடே சொல்லப்படும் நய வஞ்சகமான வசனங்கள் அனைத்தும்   குறிப்பிட்ட மதத்தை தரக்குறைவாக பேசி தீர்ப்பதற்கென்றே இணைக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.  இதிலிருந்து தெரிந்துகொள்வது சமீப காலமாக மனிதனுக்கும்  "மதம் பிடிக்கிறது" அல்லது மதம் என்கின்ற கொடிய தொற்று நோயால் பலர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர் என்பது.

       நேற்று கூட ஒரு திரைப்படத்தில் கிறிஸ்த்தவ போதகர் ஒருவர் வீதியில் மற்றொருவரின் தலை மீது கைவைத்து "ஸ்தோத்திரம்" என்று சொல்லி ஜெபம் செய்வது போலவும் அதை கிண்டலாக "தோத்துருவோம்" என்று கிண்டலாக பேசுவது போன்று காட்சி பதிவு செய்துள்ளனர். கிண்டல் செய்வதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை போலதெரிகிறது. அதற்க்கு மேல் எதையும் யோசிக்குமளவிற்க்கு அறிவு பற்றாக்குறை. திரைப்படங்களில் இத்தகைய தேவையற்ற காட்சிகள் எதற்க்காக? சொந்த விருப்பு வெறுப்புகளை திரைப்படத்தில் பதிவுசெய்வதென்பதுதான்  புதுமையா?
11/11/2014

சிறுகதையின் தொடர்ச்சி


     கழிப்பிடம் தேடியபோது வள்ளியின் காதில் ஒரு பெண்ணின் அழுகைக்குரல் சற்று தொலைவிலிருந்து மெல்லியதாக கேட்டது, இந்த காட்டிற்குள் ஒரு பெண்ணின் அழுகுரலா என்ற ஆச்சரியத்தோடு அடக்கமுடியாமல் வந்த கழிவை வெளியேற்றிவிட்டு, பெண்ணின் குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள், அங்கு ஒரு அடர்த்தியான புதர், யாரும் புழங்காத இடம், அந்த புதரிலிருந்து அப்பெண்ணின் அழுகுரல் கேட்டது, குரல் மட்டுமே கேட்க்க எந்த உருவத்தையும் காண இயலவில்லை, குரல் மட்டும் விசும்பலுடன் மிகவும் துல்லியமாக அவளருகே கேட்டது. இதைதான் பேய் என்று சொல்லுவார்களோ என்று நினைத்தாள்;  மறுபடியும் அதுவரையில் தான் நடந்து வந்த திசையை நோக்கி திரும்பி நடக்கமுற்பட்டாள்,   அப்பெண்குரல், " இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒன்றும் கேட்காமலேயே திரும்பி போகிறாயே" என்று கேட்டது. அதிர்ச்சியில் உறைந்து போனாள். அப்பெண்ணின் குரலில் சோகம் நிறைந்திருந்தது, உருவமற்ற குரலை கேட்டதும் ஏற்ப்பட்ட அதிர்ச்சி மாறாத நிலையில் அவளிடம் அக்குரல் பேசியபோது தொண்டையில் அதுவரை இருந்த ஈரம் வற்றி தனது தொண்ட்டை அடைத்துக்கொள்ள இருதயம் கீழே வந்து விழுந்துவிடும் போன்று வேகமாக துடிக்க அப்படியே அசையாது நின்றுவிட்டாள்.

     அப்பெண்ணின் வேதனைகளைஎல்லாம் சொல்லி முடித்துவிட்ட பின் அக்குரல் வந்த இடத்தில் அசைய இயலாமல் நின்றிருந்த தன்னை தானே இழுத்துக்கொண்டு மெல்ல நடந்தாள், மாட்டு வண்டியைவிட்டு இறங்கியபோது இருந்த வள்ளி தற்போது பேயறைந்த நிலைக்கு மாறிவிட்டாள். வீடு வந்து சேர்ந்த பின்னரும் அவளின் நிலை மாறவில்லை. எத்தனை மாதங்கள் கடந்திருக்கும் என்பது அவளுக்கு நினைவில்லை; இதற்கிடையே பேய் ஓட்டும் சடங்கு, மருத்துவரின் மருந்து, குறி சொல்பவர் என்று எத்தனையோ காட்சி மாற்றங்கள், ஒன்றிலும் மாறாத மாற்றமாய் அவள் நிலை ஒரே மாதிரியாக இருந்தது.  அவளை அவளது பிறந்த வீட்டிற்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்தது, மனநிலை தவறிய பெண்ணுடன் குடும்பம் நடத்த இயலாது என்று கூறி அவளை அவளது பெற்றோரிடம் கொண்டு வந்து சேர்த்தனர். சில வருடங்கள் கழித்து வள்ளியின் மீது சாமி இருப்பதாக கூறி பலர் வந்து குறிகேட்டு சென்றனர். அவள் முன் போல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவதும், விவசாய வேலைக்கு செல்வதும் கிடையாது.

     இந்நிலையில் நகரத்தில் வாழ்ந்து வந்த அவளது மூத்த சகோதரன் தனக்கு தெரிந்த ஒருவர் தகுந்த வைத்தியரிடம் கொண்டு சென்றால் தங்கை பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று கூற, நகரத்திற்கு வந்து சேர்ந்தாள் வள்ளி. மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டதில் மாற்றங்கள் ஏற்ப்பட துவங்கியது. சில வருடங்களுக்குப்பின்னர் தானே தனது சொந்த காலில் நிற்க வேலைக்கு சென்று தன்னை தானே பராமரிக்கவும் கற்றுக்கொண்டாள். "எவராவது பேயை பார்த்ததுண்டா" என்று எழுகின்ற வாக்குவாதங்களை எங்கு கேட்டாலும் அவள் தன்னுள்ளே சொல்லிக்கொள்வது  "நான் பார்தத்தில்லை" என்பதுதான். ஏன் அப்படியொரு பொய்யை அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள், அப்படியென்றால் அவள் அங்கு எதை பார்த்ததுவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்? .

     சில நாட்களாக காய்ச்சலில் கிடந்த அவள் அக்காள் அம்மாவாசையின் முதல் மனைவிக்கு அவ்வூரிலிருந்த மருத்துவர் கொடுத்த வைத்தியம் சுகமாக்கவில்லை. மாறாக அவ்வைத்தியரே பட்டணத்திலிருக்கும் மருத்துவரிடம் காண்பிக்க சொல்லியிருந்தும்  அவ்வாறு செய்யாமல் மாறாக அவளை தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அவளது பெற்றோரிடமே கொண்டுவந்து சேர்க்க புறப்பட்டான்.  வழியில் அம்மாவாசைக்கு ஒரு எண்ணம் தோன்றியது; நெடுநாளாக அவன் மனதில் ஏற்ப்பட்டிருந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது சரியான நேரம் வாய்த்திருப்பதாக நினைத்தான். மாட்டுவண்டியில் படுத்திருந்த அவன் மனைவியை தூக்கி எடுத்துக்கொண்டு அக்காட்டினுள் அடர்ந்த மரம் செடிகளுக்கிடையே இருந்த ஒரு புதரினுள் கிடத்தி அவள் மார்பின் மீது ஏறிநின்றான். அவள் உயிர் பிரியாமல் அரை பிணமாக கிடந்தாள், அங்கிருந்த பெரிய கற்பாறையை எடுத்து மார்பின் மீது வீசினான், அவள் உயிர் அங்கேயே பிரிந்துவிட்டது. மீண்டும் அவள் உடலை எடுத்துக்கொண்டு ஊரிலிருந்த தனது வீட்டிற்கு கொண்டுவந்து  கிடத்திவிட்டு, அவளது தாய்வீட்டிற்கு போகும் வழியிலேயே அவள் இறந்துவிட்டதாக எல்லோரிடமும் நாடகமாடினான்.

     அதை உண்மையென்று நம்பிய அனைவரும் அவளுடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரித்து விட்டனர். அதே ஆண்டில் வேறொரு மாதத்தில் வள்ளியை தனக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க அம்மாவாசை கேட்டபோது அனைவரும் அவன் விரும்பியபடியே இறந்தவளின் ஆன்மா திருப்தியடையும் என்று சொல்லி திருமணம் செய்து வைத்திருந்தனர்.

                                                               @@@@

11/09/2014

சிறுகதை


     த்ரௌபதி அந்த பெண்ணின் பெயர்; அவருக்கு வயது சுமார் 25 இருக்கும், அவருடைய தகப்பனார் கூத்து பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது இவர் பிறந்த காரணத்தால் அன்றைக்கு பார்த்த கூத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் வைத்தாராம். கிராமத்து பெண்மணி; விவசாய வேலைகள் செய்வதிலும் வீட்டு பராமரிப்பை மட்டுமே அறிந்தவர். அவரது அக்காள் திருமணம் செய்துகொண்டபோது வயது 15, இரண்டு வருடத்தில் தீராத காய்ச்சலில் இறந்துபோக அக்காள் கணவனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைபட்டாள். அப்போது அவளுக்கு வயது14. உறவினர்கள்   முன்னிலையில் இரண்டாவது திருமணம் முக்கிய சில சடங்குகளுடன் நடைபெற்று முடிந்தது. பெண்ணின் பெயர் சொல்லி வசதியாக கூப்பிட இயலவில்லை என்றுசொல்லி "வள்ளி" என்று அழைக்க ஆரம்பித்தான் மாப்பிள்ளை அம்மாவாசை. அவன் அம்மாவாசையன்று பிறந்தவன் என்பதால் அவ்வாறு பெயரிட்டதாக அவன் பெற்றோர் கூறுவதுண்டு.  ஆனால் தன் மாமனுக்கு "ஜெய்சங்கர்" என்று  பெயர் இருக்கவேண்டும் என்பது வள்ளிக்கு விருப்பமாக இருந்தது.

     அக்கிராமத்தின் கடைகோடியில் இருந்த சினிமா கொட்டகையில் அடிக்கடி திரைக்கு வருகின்ற சினிமாக்கள் அத்தனையும் "ஜெய்சங்கர்" நடித்ததாகவே இருந்தது. அதற்க்கு காரணம் சினிமா கொட்டகையின் சொந்தக்காரர், அவ்வூர் தலைவர் மண்ணாங்கட்டியின் மனைவிக்கு "ஜெய்சங்கர்" நடித்த திரைப்படங்கள் என்றால் தினமும் ஒருமுறையாவது கொட்டகையில் வந்து பார்த்துவிட்டு போவார் அந்த காலகட்டத்தில் திரைப்படங்களை பார்க்க எந்த மின்னணு கருவிகளும் கிடையாது. ஜெய்சங்கரின் தீவிர ரசிகை அவர். திருமணம் முடிந்த அன்றே மாப்பிள்ளையும் பெண்ணும் அம்மாவாசையின் ஊருக்கு புறப்படுவதாக இருந்தது, ஜாதகப்படி அன்றே தாய் வீட்டைவிட்டு கிளம்புவது சிறந்தது இல்லையென்றால் அம்மாவாசை முடிந்த பின்னரே பயணம் செல்வது சரியானது என்று கூறப்பட்டிருந்தது. அதுவரையில் வெயிலடித்துக் கொண்டிருந்த வானிலை இவர்கள் புறப்படும் நேரத்தில் சரியாக மழை பிடித்துகொண்டு கொட்டு கொட்டு என்று கொட்டி தீர்த்தது.

     அவ்வூரின் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருந்த காட்டாற்றில் வெள்ளம் ஓடியது, இரட்டை மாட்டு வண்டியில் ஆற்று பாலத்தை கடந்து செல்ல வேண்டியிருந்ததால் காட்டுவெள்ளம் ஒரே நிதானமாக இராது என்ற காரணத்தை முன் வைத்து அன்றைய அவர்களது பயணம் நிறுத்தப்பட்டது. அம்மாவாசைக்கு சரியாக ஒருவாரம் இருந்தநிலையில் பெண் வீட்டிலேயே தங்கிசெல்லும் சூழல் ஏற்ப்பட திருமணத்திற்கு வந்திருந்த அம்மாவாசையின் உறவினர்களும் வேற்று பாதை வழியாக பேருந்தில் பயணித்து பல ஊர்களை சுற்றிக்கொன்று சென்று சேர்வதாக கூறிவிட்டு புறப்பட்டனர். சாந்திமுகூர்த்தம் நடத்தியாக வேண்டும், அதை பெண் வீட்டிலேயே செய்துவிடுவது என்ற முடிடுத்திருந்ததால் அன்றிரவு அந்த சிறிய குடிசையின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     ஒருவாரம் கழித்து மாப்பிள்ளையும் பெண்ணும் இரட்டை மாட்டு வண்டியில் ஏறி புறப்பட்டனர், மாட்டு வண்டியை மாப்பிள்ளை அம்மாவாசை ஓட்ட பின்னால் குதூகலத்தோடு அமர்ந்து வந்தாள் வள்ளி; ஆற்றை கடந்து மரங்கள் சூழ்ந்திருந்த காட்டுப்பகுதிக்குள் செல்லும்போது வள்ளிக்கு வயிற்றை எதோ செய்ய, காட்டுபகுதியை விட்டால் சரியான இடம் கிடைக்காது என்று எண்ணி, அம்மாவாசையிடம் அங்கு வண்டியை நிறுத்த சொல்லி இறங்கிக்கொண்டாள். செடிகளின் இடையே சிறிய பாதையொன்று தெரிய அதின் ஊடே சென்றவள் நேரம் ஆகியும் திரும்பவில்லை. வண்டியின் அருகே காத்திருந்த அம்மாவாசை "வள்ளி" என்று சத்தமாக பல முறை கூப்பிட்டும் பதிலில்லை. செடிகளுக்கிடையே தெரிந்த சிறிய பாதை போன்ற இடைவெளியில் சென்று வள்ளியை தேடியும் அவளை எங்கும் காணவில்லை, இவள் எங்கே போனாள் என்று விளங்காமல் காத்திருந்தவனுக்கு பதிலாக சில மணி நேரங்கழித்து வண்டியின் அருகே வந்தாள் வள்ளி. "எங்கே போனே இவ்வளவு நேரம் தேடியும் உன்னை கண்டு பிடிக்க முடியவில்லையே" என்றான் அம்மாவாசை. பதிலேதும் பேசாமல் மவுனமாக வண்டியின் பின்னால் உட்கார்திருந்தாள்.

     இருவரும் ஊர் வந்து சேர்ந்தனர். வள்ளியின் போக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒருவாரம் அவளது பிறந்த வீட்டில் அவள் அவனை கட்டியணைத்துக்கொள்வதும் குறும்பு செய்வதுமாக கழிந்ததை நினைத்தபோது அவளது அமைதிக்கான காரணம் விளங்காமல் திகைத்தான் அம்மாவாசை, அவனருகே கூட வருவது கிடையாது, எதோ ஒரு மாற்றம் அவளை வியாபித்திருந்தது அம்மாவாசைக்கு வியப்பை ஏற்ப்படுத்தியது. அவனுடன் அவள் படுக்கையில் ஒன்றாக படுக்க விரும்புவதில்லை, அவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்த்து ஏதேனும் ஒரு காரணம் சொல்லி தட்டிகழித்தாள்.


தொடரும்...........     

11/08/2014

வாழ்வின் அர்த்தம்     என்னிடம் ஒரு சகோதரி கேட்டாள்; பொய்யே சொல்லாமல் வாழ்வது நடக்கின்ற காரியமா; அப்படியே நடந்தாலும் அதனால் எனக்கு என்ன பயன்; வாழும் வரையில் நாம் விரும்பியபடியெல்லாம் வாழ்ந்துவிட்டு நிம்மதியாக சாகலாமே, எதற்க்காக மிகவும் கஷ்டப்பட்டு நேர்மை நீதி நியாயம் என்பதையெல்லாம் கடைபிடிக்கவேண்டும்?

     அவர்களிடம் பலவிதமாக விளக்கிச்சொன்னேன். அவர்களால் ஓரளவே ஏற்றுக்கொள்ள முடிந்தது. பல மாதங்கள் கடந்த பின்னர் மீண்டும் ஒருநாள் அவர்களை ஒரு கடையில் சந்தித்தேன். நான் சில பொருட்களை வாங்கிகொண்டிருந்த கடையின் அடுத்த கடையாக இருந்த அடகு கடையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். எதோ அவசரத்திற்காக தனது நகையை அடகு வைத்து பணம் பெற்று செல்வதாக கூறினார். அவர் முகமும் பொலிவிழந்து காணப்பட்டது. ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது எனக்கு தெரியும் என்பதால் வேலைக்கு செல்லவில்லையா என்று அவரிடம் கேட்டேன். இல்லை வேலையிலிருந்து நின்றுவிட்டேன் என்றார். ஏன் எதற்க்காக வேலையை விட்டுவிட்டீர்கள் என்று கேட்டேன், அவர் முகத்தில் ஒருவித சோகம், நேர்மையாய் நடக்க எண்ணியதால் நேர்ந்தது என்று சொன்னார். கவலைப்படாதீர்கள், நிச்சயம் வேறு வேலை கிடைத்துவிடும் என்று ஆறுதல் சொன்னேன். 

     மீண்டும் சில வருடம் கழித்து ஒருநாள் பேருந்தில் சந்தித்தேன் கூட்டம் அதிகம் இருந்ததால் பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு தெரியும் நான் எங்கு இறங்குவேன் என்பது, அவரும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டு என்னிடம் பேசுவதற்காக என்னை அணுகினார். எப்போதும் போன்று வேறு வேலை கிடைத்துவிட்டதா, இப்போது எப்படி இருக்கின்றீர்கள் என்றேன். அவர் சொன்னார், வேறு அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டது, இப்போது பிரச்சினை அலுவலகத்தில் இல்லை, எங்கள் வீட்டில்தான் என்றார். நான் என்ன பிரச்சினை என்பதை கேட்கவில்லை, அதற்க்கு பதிலாக நீதி, நியாயம், நேர்மை என்பதையெல்லாம் இன்னும் கடை பிடிக்கின்றீர்களா இல்லை அதனால்தான் பிரச்சினை ஏற்ப்படுகிறது என்பதால் விட்டுவிட்டீர்களா என்றேன். அவர் என்னிடம் சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.

     நீதி, நேர்மை, நியாயம் என்பதை கடைபிடித்தால் வாழ்க்கையில் பிரச்சினை வருகிறது என்பது உண்மைதான், அவற்றை கடை பிடிக்காமலிருந்தால் வருகின்ற பிரச்சினையை விட மிகவும் மோசமானதல்ல, அத்துடன், என் மனத்திற்கும் என் குடும்பத்திற்கும் நான் எந்த அளவிற்கு நீதி நேர்மை, நியாயம் போன்றவற்றை கடை பிடிக்கிறேன் என்பது தெரியும் அதனால் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மரியாதை போன்றவற்றை இழக்க எனக்கு மனதில்லை என்றார். நீதி, நியாயம், நேர்மை போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கின்ற போதே சோதனை காலம் துவங்கிவிடுவது நிச்சயம். சோதனைகளை கண்டு, அவற்றை சமாளிக்கும் வழியறியாமல், மீண்டும் பழைய வாழ்க்கையே சரி என்று முடிவெடுக்கும் பலரது வாழ்க்கை படுகுழிக்குள் தள்ளப்படுவது என்பதை நாம் பலரது வாழ்க்கையின் அனுபவத்தை கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

     நல்ல பண்புகளை கைகொள்ளும் மனிதர்களின் வாழ்க்கை என்பது மிகவும் நெருக்கடியான சவால்களை கடந்தாகவேண்டியுள்ளது. வாழுகின்ற வாழ்நாளை எவ்வாறு வாழ்ந்து முடிக்கின்றோம் என்பதைக்கொண்டு அவரது ஆன்மா நித்திய பேரின்பத்தை அடைகின்ற சிறப்பை பெறுகிறது. உலகில் பெரும்பாலாக காணப்படுகின்ற சிற்றின்பங்களை ருசித்து வாழ்வதன் மூலம் ஆன்மாக்கள் நிம்மதியற்று காலமெல்லாம் வேதனையடைவதை தவிர்க்க இயலாது. ஆன்மாக்களுக்கு உடல் என்று ஒன்று கொடுக்கப்படுவதே அதற்காகத்தான்;  உடலுடன் இருந்த நாட்களில் அவ்வாத்துமாவின் பூரணத்துவத்தை அடைவதற்க்கான வழிகளைப்பற்றி அறியாது வாழ்ந்து வீணே இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். 


11/06/2014

மீன்வாசல்

     மீன்வாசல் ஒரு சிறிய நாடு, ஊரை சுற்றி குன்றுகளும் ஒரு ஆறும் இருந்தது, ஆற்றின் துவக்கம் வேறு நாட்டின் எல்லைக்குள் இருந்தது. குறுநில மன்னர்கள் ஆண்டுவந்த காலம், மீன் வாசலுக்கு பரம்பரையாக குறுநில மன்னர்கள் ஆட்சி நடைபெற்று வந்தது. மீன்வாசல் என்ற நாட்டின் பெயருக்கும் அவ்வூர் மன்னர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது வாய்வழி கதைகளாக அவ்வூர் வாசிகள் சொல்வதுண்டு. அவ்வூர் மன்னனுக்கு வாரிசு பிறக்கவில்லை; அடுத்ததாக ஆட்சியில் அமர்த்த மன்னரின் சகோதரரின் பிள்ளைகளில் மூத்தவனுக்கு முடிசூட்டலாம் என்றால் அவ்வூரின் சட்டப்படி மன்னருக்கு உடலில் குறை ஒன்றும் இருக்க கூடாது; அதுமட்டுமின்றி வாள், வில், சண்டையில் தேர்ச்சி பெற்றவராக இருப்பதும் குதிரையேற்றம் போன்றவை அடிப்படை தகுதிகளாக இருந்தது; வேற்று நாட்டுக்காரர்களின் படை போருக்கு வந்தால் தனது படையுடன் சென்று போர்க்களத்தில் சண்டையிட வேண்டும். ஆனால் மன்னரின் சகோதரருக்கு  மகன் ஒருவன் மட்டுமே அவனுக்கோ நடக்க இயலாது என்பதால் முடிசூட்டும் அடிப்படை அந்தஸ்த்தை இழந்திருந்தான்.

     ஊரில் இருக்கும் அழகிய அறிவுடைய மற்றும் வில் வித்தை வாள் பயிற்ச்சிகளை கற்றறிந்த இளம் பெண்களில் யாரேனும் ஒருவரை மன்னனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்து அவள் மூலம் பிறக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு பட்டம் சூட்டுவதென்று அரசவையில் முடிவெடுத்தனர். இந்நிலையில் மன்னரின் அரண்மனை கணக்குகளை நிர்வகித்து வந்த கணக்கனுக்கு மூன்று மகள்கள் இருந்தனர்; கணக்கனுக்கு தனது மூன்று மகள்களில் ஒருவரையும் மன்னனுக்கு திருமணம் செய்து வைக்கும் ஆர்வம் கிடையாது என்பதால் தனது மகள்களைப்பற்றி அரசவைக்கு தெரிவிக்காமல் இருந்துவிட்டான்; அதற்க்கு காரணம் மன்னன் எப்போதும் மதுவின் போதை தெளியாதவனும் களியாட்டங்களில் ஆர்வமுள்ளவனுமாக இருந்ததுடன் அவனது கஜானாவில் ஒன்றும் இல்லாதிருந்ததே காரணம், ஆனால் கணக்கனின் மூத்தமகள் வேறு ஒரு மனகணக்கை போட்டு அரசனை இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள். அரண்மனை கணக்கனின் மூத்த மகளை மன்னருக்கு வாரிசு பெற்று தருவதற்காக திருமணம் செய்வித்தனர்;

     மன்னனுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையையும் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றாள் கணக்கனின் மகள். மக்கள் அனைவரும் மனம் மகிழ்ந்தனர், ஆண் குழந்தை சிறுவனாக இருக்கும்போது அவனுக்கு வில்வித்தையும் வாள் பயிற்ச்சியும் கற்றுகொடுக்க திட்டமிட்டனர்; அவற்றை கற்றுகொள்வதில் ஆர்வமற்றவனாக சிறுவன் இருந்துவிடவே, அவனை வலியுறுத்த இயலாமல் மந்திரிகள் செய்வதறியாது விழித்தனர். அவன் வளர்ந்து வாலிபனாகியபோது மன்னன் இறந்துவிட பட்டம் சூட்டுவதற்கு இளவரசனை வலியுறுத்தினர் நாட்டு மக்கள். ஆனால் இளவரசனோ, தன் தந்தையை போலவே மதுவிலும், வேறு பல பொழுது போக்குகளிலும் ஆர்வமுடையவனாகி பட்டம் சூட்டிக்கொள்ளும் அந்தஸ்த்தை இழந்திருந்தான்; வேறு வழியறியாத மக்களும் மந்திரிகளும் இளவரசியை அதாவது அவனுக்கு அடுத்து பிறந்த பெண்ணை ராணியாக்க முடிவு செய்தனர்.

     இளவரசி பட்டத்து ராணியாகி நாட்டை நிர்வகித்து வருகின்றபோது அவளின் தாய், கணக்கனின் மூத்த மகள் தங்களது கஜானா ஒன்றுமில்லாமல் இருப்பதை கூறி, நாட்டில் கிடைக்கின்ற வளங்களை அண்டை நாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கின்ற வரவை தனது சொந்தமாக சேமித்து வைக்க திட்டம் கூறினாள்; தனது தாயின் அறிவுரையின்படியே செய்தாள் ராணி. அதுவரையில் அண்டை நாடுகளுடன் பண்டமாற்று முறையில் கிடைத்த தானியங்களும் வேறு சில பொருட்களும் அறவே நிறுத்தப்பட்டு மக்கள் பற்றாகுறையால் அவதியுற்றனர். சேமிப்பில் இருந்த தானியம் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு பத்து மடங்கு விலையேற்றி அதன் மூலம் மக்களிடமிருந்த செல்வத்தை பிடுங்க திட்டமிட்டாள் கணக்கனின் மகள், தனது தாயின் அறிவுரைப்படியே செய்தாள் பட்டத்து ராணி. ஆற்று நீர் வரவும் நிறுத்தப்பட்டுவிட்டது, ஆற்று நீருக்கு பதிலாக தங்களது நாட்டில் விளையும் சிலவற்றை அண்டை நாட்டிற்கு கொடுத்துவந்தது நிறுத்தப்பட்டதால் நீர் வரத்து நின்று போனது; நீர் வரத்தும் நின்றுவிடவே பெருவாரியான விவசாயம் முற்றிலுமாக முடங்கிப்போனது.

     மக்கள் அவதியுற்று அரண்மனை முன் நின்று குரல் கொடுத்தனர், குரல் கொடுத்த மக்களை அரண்மனை காவலர்களை விட்டு அடித்து நொறுக்க செய்தார் பட்டத்து ராணி. பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். நாடெங்கும் இரத்த வெள்ளம் ஓடியது. எஞ்சிய மக்கள் அடுத்த நாட்டை நோக்கி இரவோடிரவாக பயணித்தனர். அண்டை நாடுகள் மீன்வாசலிலிருந்து குடிபெயர்ந்த மக்களின் வருகையை ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்ப விரட்டியடித்தது. அதற்க்கு காரணம் அந்நாட்டுகளிலிருந்து மீன் வாசலுக்கு அதுவரையில் அனுப்பப்பட்ட சரக்குகளுக்கு பதிலாக பண்டமாற்றுமுறையில் கிடைக்கவேண்டிய பொருள்களை அந்நாட்டிற்கு அனுப்பவில்லை; மீன்வாசலின் மக்கள் பசி பட்டினியால் இறந்து போயினர்; இந்நிலையில் அரண்மனையிலிருந்த ராஜாங்க ரிஷி தங்கள் நாட்டின் தெய்வத்திற்கு பூஜை செய்து அது கூற்று என்னவென்றறிய முற்பட்டார்.

   அவ்வாறு நடத்திய பூஜையில் அந்நாட்டு பட்டத்து அரசியை நாடுகடத்திவிட்டு வேறு ஒருவரை பட்டத்து ராணியாக்க வேண்டும் என்று பதில் கிடைத்தது; ராணியை எப்படி நாடு கடத்துவது என்றறியாமல் விழித்தார் ராஜா ரிஷி; சில மாதங்களுக்கு பின்னர் பட்டத்து ராணிக்கும் அவரது தாய் கணக்கனின் மகளுக்கும் உணவில் மயக்க மருந்து கலந்து வைத்து இருவரும் உறங்கிய பிறகு அன்று இரவே அவர்களது கண், கை கால்கள் கட்டப்பட்டு பல குறுநில மன்னர்களின் நாட்டை தாண்டி சென்று மிகவும் பெரிய பாலைவனத்தின் நடுவில் விட்டு வருவதற்கு திட்டம் தீட்டினார். அவ்வாறே அவர் வளர்த்துவந்த பல கருடன்களில் இரண்டை கொண்டு இருவரையும் மிகவும் பெரிய பாலைவனத்தில் விட்டு வரசெய்தார். அக்காலத்தில் ஆகாய விமானம் இல்லாதிருந்ததால் கருடன் வளர்த்து அதன் மூலம் சில வேலைகளை அரசர்கள் செய்தது வந்தனர். கருடன் ராணியையும் அவரது தாயையும் பாலையில் விட்டுவிட்டு திரும்புவதற்கு பலநாட்கள் ஆகிவிட்டது.

     மீண்டும் நாட்டை ஆள்வதற்கு சிறந்த அரசனை தேடிக்கொண்டிருந்தனர் மீன்வாயிலை சேர்ந்த மீதமிருந்த மக்களும் அமைச்சர்களும்.
     

11/05/2014

புரியாத புதிர்

     எத்தனை முறை யோசித்து பார்த்தாலும் விடை கிடைப்பதேயில்லை எத்தனையோ நபர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே பழக்கம் ஏற்ப்படுகிறது; எத்தனையோ நட்பு கிடைத்தாலும் அவர்களிடம் நமக்கு பிடித்தமான குணங்கள் இருந்தனவா என்று யோசித்து பார்த்தால் அப்படி ஒன்றுமே இருந்துவிடவில்லை என்பது தெரியும்; பின் எப்படி நட்ப்பு தொடர்ந்தது; தெரியவில்லை, சில நட்பு காரணம் இல்லாமலேயே சிதைந்தும் விடுகிறது; அதாவது எதற்க்காக, ஏன் என்கின்ற கேள்விகளுக்கு விடையே இல்லாமல் பல நட்பு நீடிக்கிறது. நட்பிற்கு எப்படி காரணம் விளங்கவில்லையோ அதைப்போல பிரிவிற்கும் காரணம் தெரியாமல் போவதுண்டு. அதைப்பற்றி பொதுவாக பலரும் ஆழ்ந்து யோசிப்பதே கிடையாது என்பதால் யாராவது அதைப்பற்றி கேட்கின்ற சமயங்களில் அவை பற்றிய விவரங்களை நமக்கு நாமே கேள்விகேட்க்கின்ற சந்தர்ப்பம் ஏற்ப்படுகிறது. 

     நட்பு வட்டம் மிகவும் பெரிதாக இருப்பதற்கும் ஒரு சிலரே நட்பாக இருப்பதற்கும் சந்தர்ப்பம்தான் காரணங்களா? அல்லது ஒருவருடைய சுபாவத்தை அடிப்படையாக கொண்டதா, என்றால் பெரும்பாலானவர்கள் சொல்வது சுபாவம் என்று. ஒருவருடைய குணத்தின் அடிப்படையில் நட்புவட்டம் பெருகவும் சிறுகவும் கூடுமானால் அவ்வாறு ஒரு கணக்கெடுப்பு செய்துபார்த்தால் உண்மை விளங்கும். பொதுவாக பெண்களுக்கு நட்புவட்டம் அதிகரித்தாலும் சில காலம் மட்டுமே நிலைத்திருந்துவிட்டு பின்னர் அறவே காணாமல் போகின்றன; காரணம் சூழல். நட்பு என்பது பள்ளிப்பருவங்களில் தோன்றி கல்லூரி பின்னர் திருமணம் என்று சூழல் மாறுகின்ற போது அவை இல்லாமல் வெறும் நினைவுகளாகி விடுகின்றது. அவை அப்படியே தொடருமானால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தால் நிச்சயம் மகிழ்ச்சி தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு தொடர இயலாமல் போகும் நிலை நிஜமாகிவிடுகிறது. 

     சில மாதங்களுக்கு முன் ஒரு பிரபல உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்த போது எனது அருகிலிருந்த நாற்காலிகளில் ஒன்றில் இரு இளைஞர்கள் ஒருவருக்கு 30 வயதிற்குள் இருக்கும் [இவர் பெயர் நமக்கு எப்படி தெரியும்!! அதனால் அ என்று குறிப்பிடலாம்} மற்றொருவருக்கு 30 வயதைவிட அதிகமாக இருக்கும் {இவர் ஆ},  கையில் ஒருவருக்கு மட்டுமே வாங்கப்பட்டிருந்த மிகக்குறைவான சிற்றுண்டியும் அரை காப்பியும். அந்த சிற்றுண்டியை சாப்பிடுவதற்காக வாங்கியிருப்பவர் அ, அவர் அதை மிகவும் வேகமாக சாப்பிடுகிறார்; எதிரே அமர்ந்திருக்கும் ஆ தனது கையை விட்டு அந்த தட்டிலிருந்த உணவை பிட்டு எடுத்து சாப்பிட முனைகிறார், ஆனால் அ மிகவும் வேகமாக சாப்பிடுவதால் தட்டில் இலகுவாக கை வைத்து எடுக்க இயலவில்லை; அப்படியும் சிறிய துண்டை எடுத்து சாப்பிடுகிறார்; அவர் செய்வதை மிகவும் கோபமாக முறைத்து பார்த்துக்கொண்டே [அ முகத்தை ஆ முதலிலிருந்து கடைசிவரையில் ஒருமுறையாவது பார்க்கவேயில்லை] மிச்சமிருப்பதை ஒரேவாயில் எடுத்து சாப்பிட்டுவிட்டுகாப்பியை குடித்துவிட்டு தம்ளரை மேசையின் மீது வைக்க இருக்கும்போது அவசரமாக அவர் கையிலிருந்த தம்ளரை வாங்கிக்கொண்டு எச்சில் தட்டையும் இன்னொரு கையில் எடுத்து பிடித்துகொண்டு நாற்காலியை விட்டு எழுந்து செல்கிறார் ஆ;  

                  எச்சில் தட்டையும் காலியான காப்பி தம்ளரையும் எடுத்து செல்பவர் அருகிலேயே சுத்தம் செய்பவர் காத்திருக்கிறார் என்பதைக்கூட கவனிக்காமல் மட மடவென்று எடுத்து செல்வதை பார்த்துவிட்டு நான், அ உட்பட அருகிலிருந்த சிலரும் மேசையை சுத்தம் செய்பவரும் விழித்தோம் விளங்காமல்.  ஒரு சிறிய கற்பனை: உணவகத்திற்கு வருவதற்கு முன்னால் இருவரும் எதோ ஒரு காரியத்தை குறித்து விவாதித்திருக்ககூடும், அதில் ஆ என்பவர் மீது தவறு இருந்திருக்கலாம், அ அங்கிருந்து புறப்படும்போது ஆ தானும் உடன்வந்து வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் இறங்கிகொள்வதாக சொல்லிவிட்டு இருசக்கரவாகனத்தில் அ வுடன் "அழையாத விருந்தாளி"யாக தொற்றிகொண்டிருக்கலாம்.நண்பர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, உடன் வேலைபார்ப்பவர்களாக இருக்ககூடும்; எப்போதும் "ஓசி" கூட்டணிக்கு முந்துகின்ற நபராக இருக்கலாம். நமது கற்பனைக்குள் அவர்களை எப்படி வேண்டுமானுள் சித்தரித்து கொள்வது நமது திறமை.    


11/03/2014

காலம் ரொம்ப கெட்டுகிடக்குது


ஒவ்வொரு விடியலின் போதும் இன்றைக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கிவிட்டு; அதை அப்படியே அன்றைய குறிப்பாக பதிவு செய்து வைத்துக்கொள்வது, குறிப்பில் இடம் பெறாத சம்பவங்கள் நடைபெறுமாயின் அதை தனியே குறிப்பெடுத்துக்கொண்டு, செயல்பட துவங்கினால் நேரமின்மையால் தவற விடுகின்ற முக்கிய வேலைகளை செய்து முடிப்பதற்கு போதுமான நேரம் எல்லோர்க்கும் கிடைக்கும். அதில் இன்னும் கொஞ்சம் மேலேசென்று, எவற்றையெல்லாம் செய்து முடித்தோம் என்பதை சரிபார்த்து கொண்டால், ஓய்வு எடுக்க சமயம் கிடைக்கும், அந்த ஓய்வின் போது அன்று முழுவதும் எத்தனை சந்தர்ப்பங்களில் எத்தனை பொய்களை சொன்னோம் என்பதையும் அப்பொய்களை தேவையற்ற சூழ்நிலையில் கூறிவிட்டோமா அல்லது வேண்டுமென்றே சொன்னோமா, என்பதையும் கணக்கு வைத்துகொண்டு அதையும் சரிபார்க்கும்போது எந்த அளவிற்கு நாம் ஒழுக்கத்திற்கு அல்லது நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும், 

இவற்றை தெரிந்துகொண்டு என்ன பயன் என்று நினைப்பவராக இருந்தால் அல்லது நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன் என்று முடிவுடன் இருந்தால் அதனால் நமக்கு என்னவாகிவிடப்போகிறது என்ற எண்ணம் உள்ளவராக இருப்பின்; உங்கள் மனது உங்களிடம் "நீ தப்பு பண்ணுகிறாய் " என்று எப்போதும் உங்களைபார்த்து கூறுவதுபோல் தோன்றுகிறதா; அப்படியென்றால் நீங்கள் உங்கள் அன்றாட செய்கை பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டியவர். ஏனெனில் அவ்வித தீய செய்கையால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தை குறித்து உங்கள் மனம் உங்களுக்கு முன்னறிவிக்கிறது என்று அர்த்தம். அந்த அறிவிப்பை மீறி நீங்கள் செயல்படுவதால் நிச்சயம் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகும், அப்போது வேதனையடைவதில் பலன் ஒன்றும் இல்லை. 

பல சந்தர்ப்பங்களில் பலர் சொல்வதுண்டு எனக்கு நான் செய்வது ஒன்றும் தவறு என்ற எதிர்மறையான எண்ணம் தோன்றியதே கிடையாது என்று. ஆம், பலருக்கு அவர் மனம் அவரிடம் அபாய எச்சரிக்கை செய்வது கிடையாது, அதற்க்கு காரணங்கள் இருந்தாலும், அவரை சுற்றியுள்ள பெற்றோர், நண்பர்கள் என்று யார் வழியாகவோ அந்த அபாய எச்சரிக்கை நிச்சயம் அவருக்கு கிடைக்கும், அவற்றை தட்டிக்கழித்துவிட்டு தான் செய்வதை மாற்றிக்கொள்ளும் முயற்சி எதையும் எடுக்காமல் தொடருகின்றவர்கள் நிச்சயம் பிரச்சினைகளை சந்தித்து அதனால் ஏற்ப்படும் விளைவுகளை சந்திக்கின்றனர். நம்மை நாமே ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்றால், ஒழுக்கம் நம் மீது நடவடிக்கை எடுத்துவிடுவதை தவிர்க்க இயலாது. இதைதான் பலர் கடவுள் என்று நம்புகின்றனர். ஏனெனில் இதற்க்கு தப்பிப்போர் ஒருவரும் இல்லை என்பதே இயற்கையின் விதி.

இயற்கையின் விதி என்று நாம் கூறும் அதைதான் "கடவுள்" என்ற நம்பிக்கையில் பலர் வழிபடுகின்றனர். "வழிபடுதல்" என்பதன் மிக முக்கிய விதி நல்லொழுக்கம், அதனால் அவ்விதிக்கு "எல்லோரும் சமம்" சாதி மத அடிப்படை என்பதோ பணக்காரன் ஏழை என்பதோ இருக்க வழியில்லை. எல்லோர்க்குள்ளும் "மனது" என்கின்ற ஒன்று உண்டு, அது எப்போதும் சரியான மற்றும் தீமையான காரியங்களை பாகுபடுத்தி நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கும். சிலர் "உன் மனசாட்சியை தொட்டு சொல்" என்று கேட்பார், அதற்கு அர்த்தம் என்ன,  கடவுள் மீது மற்றும் நல்லொழுக்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமலிருக்கலாம், ஆனால் தனது மனது தன்னை எச்சரித்ததற்கு சாட்சி வேறு ஒருவராக இருக்க முடியாதல்லவா. இவற்றை சீர்தூக்கி பார்க்க ஒவ்வொரு தனிமனிதனும் சுயநினைவுடன் வாழ்வதால் மட்டுமே இயலும், தினமும் மது அருந்தி மனசாட்சியை மழுங்க அடித்துக்கொண்டே இருப்பவர் சீர்தூக்கி பார்க்க சந்தர்ப்பம் ஏது. 

தன்னை தானே அழித்துகொள்ளும் செயலில் அதிக ஆர்வம் காட்டும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படை காரணம் பல இருந்தாலும் மனிதர்கள் மண், பொன், பெண் மீது அளவற்ற ஆசையை வளர்த்துக் கொள்வதுதான். எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை வளரவிட்டு பின்னர் அதை அடைவதற்காக போராடும் போராட்டத்தில் நல்லொழுக்கம் என்கின்ற மனசாட்சி அழிக்கப்பட்டு, இறுதியில் தான் அடைந்த மண், பெண், பொன் எதையும் முழுமையாக அனுபவிக்கும் ஆயுசும் உடல்நலமும் இல்லாமல் போவது உறுதியாகிவிடுகிறது. சிந்திக்க தவறினால் வாழ்க்கை அற்பத்தில் அழிக்கப்பட்டுவிடுகிறது.  

11/02/2014

நினைவு தினம்


உலகில் பிறப்பும் இறப்பும் இயற்கைதான்; பிறக்கும் போது பிறக்கின்ற குழந்தையும் தாயும் அழுது கொண்டு இருந்தாலும் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவதும்; அதே மனிதன் இறக்கும்போது ஒருவித நிம்மதியுடன் நிரந்தரமாக உறக்கத்தில் ஆழ்கின்றபோது துற்றியுள்ளவர்கள் அழுதுகொண்டிருப்பதும் ஆராய்ந்து அறிந்து கொள்ள இயலாத ஏதோ ஓர் உண்மையை நமக்கு விளக்கிவருவதும் உண்மை. ஒரு பழமொழி உண்டு "திருமண வீட்டிற்கு செல்வதை விட சாவு வீட்டிற்கு செல்வது மூலம் வாழ்வின் உண்மையை நாம் உணர முடியும்"என்று. நாளை இரண்டாம் தேதி "சகல ஆத்துமாக்களின் திருநாள்" கொண்டாடுவது உலகெங்குமுள்ள கிறிஸ்த்தவர்களின் வழக்கம். என் தகப்பனாரின் 15வது வருடம். கிறிஸ்த்தவர்களின் மரணத்தில் ஒரு சிறப்பான அம்சம் உண்டு அவர் இறந்த பதினைத்தாம் நாள் இறந்தவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாவரும் ஒன்று கூடி அவரைப்பற்றிய நினைவுகளை பலவிதங்களில் பகிர்ந்து கொள்வது உண்டு, அந்த வகையில் என் தப்பனாரின் பதினைந்தாம் வருடத்தில் அவரைப்பற்றி பகிர்ந்து கொள்வதில் நான் ஒரு விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். 


என் தகப்பனார் தமிழ் மீது தீராத பற்று கொண்டவர்; அதற்க்கு மிகவும் முக்கிய காரணம் அவரது தந்தையின் சொந்த ஊர் தஞ்சை, தாய் நாகை அதுமட்டுமின்றி பல தமிழ் பண்டிதர்களை உள்ளடக்கிய குடும்ப வரலாறு என்பது. என் தகப்பனாரின் உடன் பிறந்த நான்கு சகோதரர்களும் சென்னையில் (மதராஸ்) புரசைவாக்கத்தில் பிறந்தவர்கள், ஆனால் என் தகப்பனார் மட்டும் தற்செயலாக நாகையில் உள்ள காடம்பாடியில் அவரது அம்மாவின் தாய் வீட்டில் பிறந்தவர் என்பது ஒரு சிறப்பு. வீட்டில் இருந்த அனைவரும் ஆங்கிலத்தில் படிக்க என் தகப்பனாருக்கோ தமிழ் இலக்கிய இலக்கணத்தில் தீராத பற்று. ஒரு குறிப்பிட்ட காலத்தில் புரசையில் அப்போது வாழ்ந்த பல கர்னாடக இசை வல்லுனர்களின் பாடலை தினமும் கோவில்களில் சென்று கேட்டு கேட்டு சங்கீதத்திலும் பாட கற்றுகொண்டவர், அச்சமயம் அவரது தகப்பனார் சர்ச்சில் பாடல் குழுவில் பாடகராக இருந்ததால் தன் மகன் கோவிலுக்கு சென்று தவறாமல் சங்கீதம் கேட்பதை விரும்புவதில்லை. அத்தோடு நிறுத்தி கொள்ளாமல் அத்தனை பாடல்களையும் வீட்டில் அப்பியாசம் செய்வது அவருடைய தகப்பனாருக்கு மிகவும் கோபத்தை ஏற்ப்படுத்தியதாக கூறுவார். 

அத்தோடு நில்லாமல் அவரது பதினாறாவது வயதில் ஒரு சாதுவுடன் பழக்கம் ஏற்ப்படுத்திக்கொண்டு பல அப்பியாசங்களும் பல வாய்வழி கதைகளையும் கற்றுகொண்டார், சிலம்பாட்டம் உள்பட. அவர் பல அருமையான கதைகளை எழுதினர் என்பதும் மிகவும் அழகான ஓவியங்களை வரையும் திறமை படைத்தவர் என்பதையும் அவரை சார்ந்த அனைவரும் அறிந்தது. திரைக்கதை வசனம் எழுதி அதை மிகவும் பாதுகாப்பாக வைத்து இருந்தார்; அவரது நெருங்கிய பால்ய நண்பர் மறைந்த திரு.கிருஷ்ணன்(பஞ்சு)விடம் கொடுத்துவிட்டு காலம் முழுவதையும் முயர்ச்சியிலேயே கழித்தார்; அவரது முயற்ச்சிகளை எல்லாம் வீழ்த்தும் ஒரு பெரிய கூட்டம் திரு.கிருஷ்ணன் அவர்களை சுற்றி இருந்தது. ஒருவரை வீழ்த்தித்தான் மற்றொருவர் பிழைக்கவேண்டும் என்பதில் அவர்கள் அரும்பாடுபட்டு வெற்றிகொடியும் ஏற்றினார்கள், ஆனால் வெற்றி கொடியேற்றிய அவர்கள் அதிக வருடம் சுகத்தில் வாழ்ந்து மறைந்ததாக தெரியவில்லை. திரைக்கதை வசனம் யாரிடம் சிக்கி சின்னா பின்னமாகியதென்ற தகவல் தெரியவில்லை, மொத்தமாக திருடினால் தெரிந்துவிடும் என்றறிந்த கள்வர் கூட்டம் சிங்கத்தின் வாயில் கிடைத்த இறைபோல துண்டு துண்டாக்கப்பட்டு திருடப்பட்டுவிட்டது. 

மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்த என் தகப்பனாரின் தாய் பல நல்ல பணிகளை வாங்கி கொடுத்தும் ஒன்றிலும் நிரந்தரமாக நிற்க இயலாமல் கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் திரைப்படம் தயாராகும்போதெல்லாம் திரு கிருஷ்ணன்(பஞ்சு) கூப்பிட்டு ஆள் அனுப்புகின்ற போது தட்டி கழிக்கும் வழியறியாமல் பேதையாய் என் தகப்பனார் அவருடன் இணைந்து வேலை செய்ய போய் விடுவதால் நிரந்தர வேலைகளை இழந்துபோகும் நிலை உருவாகியது. [இதில் யார் பேதை என்பது சொல்லாமலேயே அறியக்கூடிய ஒன்றுதானே]. என் குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் என் தகப்பனாரின் வேறு நண்பர்களும் சொல்லி தீர்த்த ஒன்றுதான் "எத்தனை நாளைக்குதான் கிருஷ்ணன், கிருஷ்ணன் என்று உயிரை விடப்போகிறாய், உன் வாழ்க்கை என்னவாகப்போகிறதென்று எப்போது சிந்திக்கப்போகிறாய்" என்றே வருந்தியதுதான் மிச்சம். என் தகப்பனார் ஒருவரைப்பற்ற்யும் குறைகூறி நான் கேட்டது கிடையாது. தனது சகோதரர்கள் அனைவரும் மத்திய அரசு பணிகளில் இருக்க இறுதிவரை வறுமைக்குள் சிக்கிகொண்டவர், தனது சகோதரர்கள் அனைவரும் முழுகால்சட்டை அணிவதையே வழக்கமாக்கி கொள்ள இவர் மட்டும் இறுதிவரையில் வெள்ளை வேட்டியை மட்டுமே அணிந்து கொள்வார். காந்திய கொள்கைகளில் ஈர்ப்புடையதால் கால்களில் காலணி அணிவதை தவிர்த்துவிட்டார். இயற்க்கை மரணம் எய்திய அவரது நினைவுகள் என்றும் என்னை விட்டு நீங்குவதில்லை.

 2/11/1999 அன்று இயற்க்கை எய்திய அவரைப்பற்றி நினைவு கூற எண்ணி அவரது புகைப்படம் ஒன்றை இன்று தேடிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் எழுதிய ஒரு கடிதம் என் கைக்கு கிடைத்தது அவரது நினைவாக அதையும் இணைக்கலாம் என்று தோன்றியது, அவர் எழுதிய கதைகள் திரையில்தான் வருவதற்கு இயலாமல் போனது இதையாவது இத்துடன் இணைக்கலாம் என்று தோன்றியது. என்றும் என்னுள் வாழும் என் அருமை தப்பனாரின் நினைவாக இதோ அந்த கடிதம்