Translate

6/20/2014

ஓநாய் கூட்டம்

"கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கேயும் கொடுமை    கூத்தாடி கொண்டு முன்னே வந்து நின்றதாம்". இந்த பழமொழியை எதற்க்காக சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை; இன்றைக்கும் நூறு சதவிகிதம் அப்படியே நடப்பில் காண முடிகிறது. மனசாட்ச்சிக்கு பயந்து சில குற்றங்களை செய்வதற்கு அஞ்சிய காலம் ஒன்று இருந்தது; மது அருந்த செல்பவர்கள் தங்கள் முகத்தை துண்டால் மறைத்துக்கொண்டு குடித்துவிட்டு சந்தடியில்லாமல் வீட்டிற்கு வந்து படுத்து உறங்கியவர்களை அதிகமாக எனது பள்ளிப்பருவத்தில் பார்த்திருக்கிறேன். நெற்றியில் பட்டை அடித்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்ததைப்போல பிரசாதத்திற்கு பதிலாக மது அருந்திவிட்டு பின்னரே அன்றைய அலுவல்களில் ஈடுபடுகின்ற "நல்லவர்"களையும் நாடு கண்டுள்ளது; அவரையே "தலைவா" என்றழைக்க காத்திருப்பவரின் கூட்டத்திற்கு பஞ்சமே இருந்ததில்லை. கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி வைத்துவிட்டு தனது பணிகளை முடித்த பின்னர் மறுபடியும் அணிந்து கொண்டு வாழும் பெண்களை அயோக்கியர்கள் என்று அழைக்கும் ஒரு பெரிய மக்கள் கூட்டம் நமது நாட்டில் உண்டு. அதே தாலியை தனது சுகபோகத்திற்காக பறித்து கொண்டு இயலவில்லை எனில் அணிந்து கொண்டிருக்கும் பெண்ணை கொலை செய்துவிட்டு திருடி வாழும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதை (தமிழகத்தில்) தற்போது செய்திகளில் காண முடிகிறது.

வீட்டில் தனியே இருக்கும் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு நகை பணம் எடுத்துக்கொண்டு தப்பிக்கும் கூட்டம் பெருகி வருகின்ற சூழலில் தற்காப்பிற்காக பெண்கள் அணிகலன்கள் அணிந்து கொள்வதை தவிர்க்கலாம்; தாலி என்பது திருமணமான பெண்ணின் அடையாள சின்னம் என்பதை மட்டுமே அடுத்த ஆணின் பார்வைக்கு தெரிவிக்கிறது, நூற்றாண்டுகளுக்கு முன்னர் புழக்கத்திற்குள் புகுத்தப்பட்டது, அச்சூழல் தற்போது கிடையாது; திருமணம் ஆனவராக இருப்பினும் அடுத்த ஆணின் அசுத்த பார்வை கட்டுபடுத்தப்படுவதில்லை. பெண் என்றால் அவர் எவராக இருப்பினும் தகாத பார்வை என்பது ஆணை பொறுத்த அளவில் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. சடங்கு சம்பிரதாயம் என்பதை கருத்தில் கொள்ளும் சமூகம் ஆண்களின் அளவிற்கு மிஞ்சிய முறைகேடுகளை தவிர்க்க ஒருவித தடையையும் இதுவரையில் புழக்கத்திற்கு கொண்டுவரவில்லை என்பது வெட்க்ககேடு. மாறாக பெண்களின் உடையிலும் பழக்க வழக்கங்களிலும் ஏகப்பட்ட கட்டுப்படுகளை வைத்திருக்கிறது. பெண்களை கட்டுப்படுத்துவது என்பது காண்பதற்கு அரிதான ஒன்றை காண வேண்டும் என்கின்ற வேட்க்கையை அதிகரிக்குமே தவிர கட்டுபாடான சமூகம் உண்டாகின்ற வாய்ப்பு என்பது கனவு மட்டுமே.

ஒரு பெண்ணின் உயிரை விட சாஸ்த்திரம் சம்பிரதாயம் பெரிதாகி போகுமானால் சமூக முன்னேற்றம் என்பது கேலி கூத்துதான். எனக்கு திருமணமாகி ஒரு வருடம் கழித்து மும்பை சென்றிருந்தேன் அங்கே சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டிய வேலைகள் இருந்தது, பேருந்து பயணத்தின்போது  ஒருநாள் தமிழ் பெண்மணி ஒருவர் தனது டீன் ஏஜ் பெண்ணுடன் என்னுடன் பயணித்தார். அவர் என்னை தமிழ் பெண் என்று கண்டு கொண்டது எனது கழுத்தில் நான் அணிந்திருந்த தாலியை பார்த்துதான். அப்போது அவர் என்னிடம் "தங்க சங்கிலியில் இணைக்கப்பட்டுள்ள தாலிக்கொடியை இனி மும்பையில் அணிந்து கொண்டு எங்கும் செல்ல வேண்டாம், மும்பையை பொருத்தமட்டில் நாம் அணிந்திருக்கும் தங்க ஆபரணம் என்பது கள்வர்களுக்கு மிகவும் எளிதான வருமானம், அதனால் அதே மாநிலத்தவர்கள் கூட  தாலிக்கு பதிலாக  தெருவில் விற்கும் தாலியை போன்ற சாதாரண கருப்பு மணி ஒன்றையே அணிந்து செல்வர், பெரும்பாலானோர் எதையும் கழுத்தில் அணிந்து செல்வதே கிடையாது" என்றார். தங்க ஆபரணம் அணிந்து கொள்ளும் பழக்கம் அங்கு அறவே இல்லை என்றே சொல்லலாம், இதற்க்கு முக்கியமான காரணம் அவற்றை அணிந்துகொள்வதால் ஏற்ப்படுகின்ற இழப்புக்கள், கொலை போன்ற ஆபத்துக்கள் தான். 50 வருடங்களுக்கு முன்னரே மும்பையில் இம்மாதிரியான புழக்கத்தை ஏற்ப்படுத்தி கொண்டுள்ளனர்.

தமிழகத்திலும் அவ்வாறான மாற்றம் ஏற்ப்படுமாயின் ஆபரணங்களுக்காக கொலை செய்யப்படுகின்ற அப்பாவி பெண்கள் இல்லாமல் போவர். இதற்க்கு அடிப்படையான இன்னொரு காரணம் மக்களுக்கு தினமும் நடக்கின்ற செய்திகளை கவனிக்கின்ற பழக்கம் இருப்பதில்லை; அவ்வாறு செய்திகளை பார்ப்பவராக இருப்பினும் கொலை மற்றும் கொள்ளை "எங்கோ யாருக்கோ நடந்தது அதனால் நமக்கு என்ன" என்ற மனப்பாங்கு உடையவர்களும் அதிகம். இன்றைய உலகில் சற்றே கவனம் குறைந்தாலும் நம்மை கொத்தி செல்ல பருந்துகளும் கழுகுகளும் ஏராளமாக காத்து கிடக்கின்றது; எந்த ரூபத்தில் எப்போது இந்த கழுகுகள் உயிருடன் நம்மை கொண்டு செல்லும் என்பது எவராலும் அறிந்திருக்க முடியாது. கழுகுகளும் பருந்துகளும் இறந்து கிடக்கின்ற பிண்டங்களை மட்டுமே தூக்கிச்செல்லும் இந்த மனித கழுகுகள் உயிருடன் கொத்திச்செல்லும் என்பதை இன்னும் பலர் அறியாதிருக்கின்றனர். அவ்வாறு அறியாதிருப்பவர்களை அறிந்து கொண்டு செயல்படும் ஓநாய் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.


@