Translate

12/03/2013

பேய் என்பது உண்மை

சில கேள்விகளுக்கு எந்த காலத்திலும் பதில் கிடைப்பதே இல்லை; உண்மை என்றாலும் அதனை நிரூபிக்க இயலாவிட்டால் பலரால் அவை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதற்க்கு பல உதாரணங்கள் இருப்பினும் கடவுள் மற்றும் பேய் இவை இரண்டிற்கும் இன்றுவரை பலவித தர்க்கங்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. முதலில் நல்லதைபற்றி பேசலாமே, என் அனுபவமும் என்னைபோன்ற பலரின் அனுபவம் கடவுள் நம்பிக்கை. "அனுபவம்" என்பது இவை இரண்டிற்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ளவர் அனைவரும் கடவுளை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே பார்த்திருந்தாலும் அவர்தான் கடவுள் என்று அறியாமல் இருந்திருக்கும் வாய்ப்பும் உண்டு. கடவுளின் உருவம் இன்னதென்று உறுதியாக எவருக்கும் தெரியாததால் கடவுள் நம் எதிரிலேயே நடமாடினாலும் நமக்கு தெரியபோவதில்லை. நாம் வடிவமைத்திருக்கும் உருவத்தில் தான் கடவுள் அல்லது பேய் வரவேண்டும் என்று காத்திருப்பதால்தான் அத்தகைய குழப்பம் என்று நான் நம்புகிறேன்.

பேய் என்பது இருக்கிறது என்பதற்கு சான்று இருக்கிறதா என்றால் நிறைய இருக்கிறது என்பதே எனது பதில். என் பெற்றோர் அவர்களின் பேய் பற்றிய  பல அனுபவங்களை சொல்ல கேட்டிருக்கிறேன். இரண்டுவித பேய்கள் உண்டு; இறந்தவர்களின் ஆவி என்பது ஒன்று மற்றது பேய். பேயை சிலரால் மட்டுமே பார்ப்பதற்கு முடியும், அதற்க்கு ஜாதகத்தில் நான்கு வகையான கணமாக மனிதர்களின் பிறந்த நேரத்தை கணக்கிட்டு பிரிப்பார்கள். அவ்வாறான  "கணம்" என்கின்ற நான்கு வகையில் ஒரு கணத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பேயை கண்களால் காண முடியும். பேய்கள் என்பது நாம் யாவரும் அறிந்தபடி எங்கே "அசுத்தம்" நிறைந்து காணப்படுகிறதோ அங்கே வந்து தங்கிவிடுகிறது. அசுத்தம் என்பது பாழடைந்த அல்லது உபயோகமற்ற நிலையில் இருக்கும் இடங்கள். அதுமட்டுமில்லாமல் அவை இருளில் நடமாடுவதை இயல்பாக கொண்டுள்ளது. அவ்வாறு இருளில் நடமாடுவதற்கு அவைகளுக்கு சாபம் காரணமாக உள்ளது.

மனிதர்களின் ஆன்மாக்கள் என்பது பேய்கள் அல்ல, அதனதன் தன்மையை பொறுத்து அலைந்து திரிகிறது. சில ஆன்மாக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் செயலற்றுவிடுகிறது. எல்லா காலங்களும் ஆன்மாக்கள் வாழும் தன்மை கொண்டிருந்தாலும் மனிதர்களுடன் இணைந்திருப்பதற்க்கு இயலாது. அவ்வாறு இருப்பின் அவை தெய்வ அனுகிரகம் பெற்று சில காலம் தங்கி இருக்கும். ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் இந்த காலத்தில் பேய் இருக்கிறதா என்று விவாதம் நடந்தது. எந்த காலமானாலும் கடவுள் உண்டு. சில காலம் பேய்களும் இருக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலத்து பேய்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் தீமை அனைத்தும் "பேய்" தான். எங்கே வெற்றிடமும் தீமையும் நிறைந்து காணப்படுகிறதோ அங்கே "பேய்" நிரந்தரமாக குடிஎற்றப்படுகிறது.

காதல் அல்லது அன்பு என்பது தெய்வ குணம், எங்கே அன்பும் காதலும் நிறைந்து காணப்படுகிறதோ அங்கே மீறுதல்கள், வன்முறைகள், அக்கிரமம், அநியாயம், கொலை, கொள்ளை, பணத்தாசை, பொருளாசை, இச்சை, விபசாரம், வேசித்தனம், திருடு போன்ற "தீமை"களுக்கு இடமிராது. காதல் தோல்வி என்றால் பெண்ணின் மீது அமிலம் வீச வேண்டும் என்ற அரக்க எண்ணம் ஏற்ப்படாது. அன்பு என்கின்ற காதல் மனைவியின் மீதும் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நிறைந்திருந்தால் வன்கொடுமை இராது. புறம் கூறுதல், பொறாமை, கோள்சொல்லுதல், பொய் பேசுவது, கேலி செய்வது போன்ற அத்தனை தீமைகளும் "பேய்" பிடித்திருப்பதற்கு சான்றுகள். இந்த காலத்தில் பேய் இருக்கிறது என்பதற்கு இவை அனைத்துமே சாட்சிகள்தான். ஏனெனில் கடவுள் என்பவர் இவை அனைத்திற்கும் எதிர்மாறானவர்.

கடவுளை தன்னுள் வைத்திருக்கும் ஒருவரையும் பேய் அண்டுவதில்லை. எங்கே தீமைகள் நிறைந்திருக்கிறதோ அங்கே கடவுள் தங்குவதற்கு இயலாது. தூய்மையான மனம், குற்றமற்ற எண்ணம், அன்பு இவை மட்டுமே கடவுளின் இருப்பிடம் ஆனால் இன்றைக்கு எங்கும் எதிலும் தீமையை மட்டுமே காண முடிகிறது மனிதர்களின் மனம் முழுவதும் பேய் தங்கி கிடக்கின்ற இருட்டறையாக இருக்கிறது, இவை அனைத்தும் பேய் பிடித்திருப்பதற்க்கான நிதர்சனமான உண்மை. பேய் என்பது எங்கோ மரத்தின் மீது அமர்ந்து கொண்டு போவோரை எல்லாம் பிடித்துகொள்வது என்பதுதான் கட்டுக்கதை. இன்றைய சமுதாயத்தில்தான் பேய் தனது பிடிக்குள் பலரையும் ஒன்று திரட்டி கொண்டு வருவதற்கான சாட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.

..