Translate

11/12/2013

கடமை - கண்ணியம்

கருத்து கணிப்பு :

தேர்தலுக்கு முன்னர் மக்கள் மனநிலை அறிய எடுக்கப்படும் கணக்கெடுப்பு, அதன் முடிவை வைத்து தேர்தல் முடிவில் எந்த அரசியல் கட்சியின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கூறுவது. இத்தகைய கணக்கெடுப்பில் சராசரியாக எத்தனை பேர் முன்னுக்கு வந்து தங்களது நிஜமான கருத்தை பதிவு செய்கின்றனர் என்பது மிகப்பெரிய கேள்வி. அதிலும் இந்த காலத்தில் உண்மையான தங்களது கருத்தை பதிவு செய்பவர் உண்டா என்பது சந்தேகம். ஓட்டு போடுவதற்கே முன்வராத மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க முன் வருகிறார்களா?

தொகுதி வாரியாக சென்று தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அவர் தொகுதிக்கு என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்ள முயற்ச்சித்தால் 991/2% தங்கள் தொகுதிக்கு என்று "எதையும் செய்வதே இல்லை" என்ற ஏகோபித்த கூப்பாடு மட்டுமே மிஞ்சும். அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்த சில காரியங்கள் பெரிதாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா?  நிலைமை  இவ்வாறு இருக்க, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற தேர்தலில்  தேர்ந்து எடுக்கப்படுகின்ற அரசியல் கட்சிகள் எவ்வாறு வெற்றி அல்லது தோல்வி அடைகிறது? இன்னும் கொஞ்சம் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டளிக்க வருகின்றனரா அல்லது தங்களது கடமையை செய்வோம் என்று ஓட்டளிக்கின்றனரா? தெரியவில்லை. 50 அல்லது 60% ஓட்டுகள் மட்டுமே ஆட்சியாளர்களை முடிவு செய்கிறது??? இந்நிலை நீடிக்குமா? "கடமை" என்று ஒட்டு போடும் நிலை கைவிடப்படுவதற்கு அதிக காலங்கள் தேவைபடாது; அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? வறுமையும் தெளிவும் ஒருங்கே இணைந்தால் மக்கள் புரட்சி எழும் என்பது சரித்திரம் கூறும் உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லையென்றால் அதை தெரிவிக்கவும் வழி செய்யப்போவதாக கூறப்படுகிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களின் பெரு வாரியான ஓட்டுக்கள் எவருக்கும் இல்லாமல் போகுமானால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

மங்கள்யான்:

வறுமை கோட்டிற்கு கீழே கோடி கோடியாக மக்கள் குவிந்து கிடக்க; போதிய ஊட்ட சத்தின்றி போராடி கொண்டிருக்கும் குழந்தைகள் லட்சக்கணக்கில் வாடி வதங்கி கொண்டிருக்கின்ற நிலையில் "வல்லரசாக வேண்டும்" என்ற கனவு காண்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் ஒருவன் அடுத்த வேளை உணவிற்கே வழியின்றி பசி மயக்கத்தில் கிடக்கின்ற நிலையில் அரண்மனை வாசம் வேண்டும் என்று கனவு வருமா? வயிறு நிறைய உணவு வேண்டும், விரும்பியவற்றையெல்லாம் சாப்பிட்டு திருப்தி அடைவதை போன்ற கனவு அல்லவா வரும்? வல்லரசாகி என்ன செய்ய போகிறோம்? வறுமையில் பிணமாகி போகும் மக்கள் கூட்டம் அதிகரித்தால்?

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் அறிவியல் புரட்சி. ஒருபுறம் பஞ்சம் வறுமை, பொருளாதார சரிவு, மற்றொரு புறத்தில் லஞ்சம், ஊழல், கருப்புப்பணம். இதுதான் வல்லரசு நாட்டின் அடையாளங்களா?

படித்தவர்கள் எல்லோரும் 'அரசியல் என்பது சாக்கடை', 'ரவுடிகளின் கூட்டம்', சொந்த ஆதாயத்திற்காக ரவுடிகள் அரசியல்வாதிகளாகின்றனர் என்று ஒதுக்கி விடுகிறார்கள். படித்தவர்கள் தங்களை யோக்கியமானவர்கள் என்று கூறிக்கொண்டு தங்கள் பதவியை கொண்டு துஷ்ப்ரயோகம் செய்கின்றனர் என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஒவ்வொரு அலுவலகத்திலும் நிர்வாகி முதல் உதவியாளர் வரையில் ஒவ்வொரு விதமான சுரண்டல். ஒருவர் மீது ஒருவர் விதவிதமான தாக்குதல்கள். ஆனால் இவர்கள் அரசியலை "சாக்கடை" என்பார்கள்.

இந்திய தேசம் வல்லரசாக மாற்றம் அடையபோகிறதோ இல்லையோ சோமாலியாவாக மாறும் முன் விழித்துகொள். கிடைப்பதை சுருட்டிக்கொள்ளும் சுயநலவாதிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் இல்லையென்றால் சுவிஸ் வங்கிக்கு செல்லும் பணமும் தங்கமும் தாயகம் திரும்பாமலேயே போய்விடக்கூடும். பாமரனாக வாழ்ந்து இறந்து போகும் மனிதன் மட்டுமே வாழுகின்ற வரையில் தனது கடமைகளை ஒழுங்காக நேர்மையுடன் பூர்த்தி செய்கிறான்.