Translate

10/18/2013

திரு(ந்த)த்தப்பட வேண்டியவர்கள்


எங்கு பார்த்தாலும் காதலர்களை பற்றிய விதவிதமான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகிறது. ஊடகங்களின் பெருக்கமும் இதற்க்கு முக்கிய காரணம். டெல்லி மாணவி கொடூர கொலையை பற்றி உலகமே அறிந்து வியந்ததற்க்கும் கூட ஊடகங்கள் மட்டுமே முக்கிய காரணம். அவ்விதத்தில் காதலர்களை பற்றியும் காதலை பற்றியும் ஓயாமல் செய்திகள் கிடைக்கப்பெருவதும் இவ்வூடகத்தின் செயல்பாடுதான். காதல் காலத்திற்கேற்ப தனது அடிப்படை கொள்கைகளையும் மாற்றிக்கொண்டு வருகிறது என்பதற்கு தற்காலத்தில் "காதல்" என்று கூறப்படுகின்ற எதோ ஒரு வித உணர்வு சான்று. ஒட்டு மொத்தமாக காதலின் அடிப்படைகள் காலத்தால் மாற்றப்பட்டு விட்டாலும் சமுதாயத்தில் "நல்லொழுக்கம்" என்கின்ற பெயரில் நடத்தப்படும் ஆக்ரோஷங்கள் காலத்திற்க்கேற்ப அதன் வீரியத்தை அதிகரித்து கொண்டு வருகின்ற காரணத்தால் இரண்டு வித முரண்பாடுகளுக்கும் இடையே போர் முனை தாக்குதல்கள் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் அழிக்கப்படுகின்ற எண்ணற்ற உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதும் அதில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே செய்திதாள்களில் இடம் பிடிக்கின்றன என்கின்ற வேதனையான மிகவும் கசப்பான 20 நூற்றாண்டில் அறிவியலின் முன்னேற்றத்தில் வாழும் ஈன மனிதர்களாகிய நாம் கண்டும் கேட்டும் அதற்க்கு சிறு வருத்தம் கொண்டோமானால் கூட போதும் நாமும் மனிதர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கு.

கள்ளகாதலர்கள் அதிகரிக்க காரணம் என்ன, வயிற்றிற்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும் உணர்வுகளுக்கு தீனி போட்டு ஆகவேண்டிய அற்ப நிலை இயற்க்கை கொடுத்த செல்வம் (சாபம்) அல்லவா? தாலி கட்டிய கணவன் தினமும் குடித்துவிட்டு வயிற்றிக்கு சோறு போடவில்லை என்றால் ஏதேனும் கூலி வேலை செய்து வாயிற்று பசியை போக்கிக்கொள்ள வழியுண்டு உணர்வுகள் கணவனுக்காக மட்டுமே காத்திருக்க வேண்டும் என்பது இயற்க்கை எழுதாத விதி (இயற்க்கைக்கு மாறான விதி). கண்ணதாசனின் பாடல் வரிகளில் இவ்வாறு கேட்டிருக்கிறோம் "கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்" என்று. காமனை மட்டுமல்ல காமுகர்களை வெல்வதற்கும் கணவனின் துணை வேண்டும் அல்லவா. பத்தினி பெண்களாக வாழ எவருக்காவது கசக்குமா? தாலி கட்டிய ஒரே காரணத்திற்க்காக பத்தினிகளாய் வாழும் பெண்களும் உண்டு. அவ்வாறு வாழுகின்ற பெண்களின் மனநிலை சீராக இருக்கிறதா என்பதை அறிவோமா? "அதைபற்றியெல்லாம் அவசியமில்லை பெண் என்பவள் எக்காரணத்தை கொண்டும் தாலி கட்டிய கணவனை தவிர வேறு ஒருவரிடம் உடல் உறவு வைத்துக்கொள்ள கூடாது" என்று வற்ப்புதுத்தும் சமுதாயம் அவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும் பெண்ணின் கணவனை சீர்திருத்தும் நடவடிக்கை ஏதேனும் எடுக்கிறதா?

தாயின் கடமை பெண் பூப்பபடைவதற்க்கு முன்பே , அவள் எவ்வாறு ஆண்களிடம் பழக வேண்டும் என்பதை குறிப்பாக அவளிடம் எடுத்து கூறுவது அவசியம், திருமணம் என்கின்ற புதிய பந்தத்தில் இணைக்கப்படுவதற்கு முன்பும் பெண்ணின் முழு சம்மதம் பெற்று திருமணம் செய்து வைக்க வேண்டும். பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் கட்டாய திருமணங்கள் அவர்களது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் அவசர முடிவுகள் எடுக்கின்ற பலரது வாழ்க்கை விவாகரத்தை நோக்கியே பயணிக்கிறது. விவாகரத்து பெற்றுக்கொண்ட ஆணிற்க்கோ பெண்ணுக்கோ அடுத்த நிலை என்ன...ஒரு ஆணின் மனநிலை என்பது பெண்ணின் மனநிலைக்கு முற்றிலும் எதிரானது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்ற நிலையில் அதை எதிர்கொள்வதில் பெண் ஆண் இருவருக்கும் வெவ்வேறான சிக்கல்கள் காத்து கிடக்கிறது. அதை எதிர்கொள்வதில் ஆணைவிட பெண்ணிற்கே குழப்பங்களும் சிக்கல்களும் அதிகம். அதற்க்கு மிகவும் முக்கிய காரணம் சமுதாயத்தின் எழுதப்படாத பல சட்டங்கள்.

திருத்தப்பட வேண்டியவர்கள் கள்ள காதலர்களா, ஏனைய (கள்ளமற்ற) காதலர்களா அல்லது சமுதாய முரண்பாடுகளா, வெற்று கவுரவமா. இவற்றையெல்லாம் மிஞ்சி நிற்கும் எழுதப்படாத சமுதாய சட்டங்களா காதலர்கள் மீதும் கள்ள காதலர்கள் மீதும் மொத்த பழியையும் சுமத்தி விட்டு தாங்கள் மட்டுமே உத்தமர்கள் என்று கும்பலோடு கோவிந்தா போடும் பச்சோந்திகளான "மகா" மேன்மை தாங்கிய மனிதர்களா என்பதை காலம் வெகுவிரைவில் நிச்சயம் நிர்ணயம் செய்யும்.