Translate

10/22/2013

செய்வன திருந்த செய்தமிழகத்திற்கு அத்தியாவசியமானவை எவை என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், வரிசையில் முதலில் எதை வைப்பது இரண்டாம் இடத்தில் எதை வைப்பது என்று யோசித்து முடிவெடுப்பதற்கு மட்டுமே ஒரு குழு ஏற்ப்படுத்த வேண்டியது இருக்கும்; அவ்வாறு ஒரு குழுவை ஏற்ப்படுத்தும்போது அதில் அங்கம் வகிப்பவர்கள் எந்த கட்சியையும் சாராதிருக்க வேண்டும் என்பதற்கும் எந்த மதம், ஜாதி மொழியை சார்ந்து இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு என்று இன்னொரு குழுவை ஆரம்பிக்க வேண்டும்.....!! நாட்டில் தேவைகள் எந்த அளவிற்கு அதிகமாகி இருக்கிறதோ அந்த அளவிற்கு ஜாதி மத மொழி பற்றிய முக்கியத்துவ "சர்ச்சைகள்" எங்கும் எதிலும் நிரம்பி வருகிறது. தமிழகத்தில் மழை காலத்தில் வீதிகள் ஆறுகள் , குளங்கள் போன்று நீர் வழிந்தோட வழியின்றி முக்கிய வீதிகள் உள்பட அனைத்து சிறிய வீதிகளில் தேங்கி நிற்ப்பது என்பது புதிய தகவல் இல்லை. 1982 க்கு முன்னர் வரையில் அம்பாசிடர், பியட் கார்களை கூட வீதிகளில் மிகவும் குறைவாகவே பார்க்க முடியும். கார் சொந்தமாக வைத்து கொள்ளவேண்டும் என்கின்ற ஆசை மத்தியதர வகுப்பை சேர்ந்த மக்களின் கனவாக கூட இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பிளாஸ்டிக் பணம் என்ற பெயரில் கடன் வீடு தேடி கிடைக்க ஆரம்பித்ததில், அதே சமயம் வெளிநாட்டு கார்களின் வரவும் அதிகரித்து தவணை முறையில் விற்கும் முறைகளை ஏற்ப்படுத்தி, கடனில் கார் வாங்கும் ஆசையை தூண்டி பலரும் தவணை முறையில் கார் வாங்கும் நிலை உருவானது. அது போன்றே இரு சக்கர வாகனங்களின் வருகையும் வருடத்திற்கொரு புதிய வகைகளில் விற்ப்பனைக்கு வந்து பலரை கடன் காரர்களாக்கியதுடன் வீதிகளையும் சுற்றுப்புற சூழலையும் ஒருமித்து மாசுப்படுத்தி வருகிறது.

வீதிகளில் மழை வெள்ளம் நிலைத்து நின்று போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்ப்படுத்துவதால் தினம் நடை பயிற்சிக்கு செல்ல இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இனி மழையே வேண்டாம் என்று ஒருவர் தனியார் தொலைகாட்சியில் ஒன்றில் கூறுவதை காணும்போது மக்கள் எந்த அளவிற்கு சுயநலக்காரர்களாக பொதுநல சிந்தனைகள் அற்றவர்களாக உள்ளனர் என்பது தெரிகிறது. குடிநீர் பிரச்சினை பற்றி அல்லது விவசாயத்திற்கு போதிய நீர் தேவை என்பதை பற்றிய சிந்தனை இவர்களுக்கு என்னவென்றே தெரியாது போலும், ஆனால் குடிநீர் கேட்டு போராட்டம் செய்வதற்கும், விவசாயம் பாதிக்க பட்டாலும் நடுவன் அரசு விலைவாசி ஏற்றிவிட்டது என்று குறை கூறுவதற்கும் சிறிதேனும் தயங்குவதே கிடையாது. எதையெல்லாம் அரசியலாக்குவது என்பதற்கு அளவே கிடையாது. சுதந்திரம் பேச்சுரிமையை கொடுத்துள்ளது என்பதற்காக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி திரிவது மிகவும் சகஜமாகிவிட்டது. பொருளாதாரம் சீர் குலைந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறினாலும் மத்திய அரசின் ஆட்சியை குறை சொல்லுவது ஒன்று மட்டுமே அதற்க்கு தீர்வு என்று முழக்கமிடுவது என்பது மக்களின் சுதந்திரம் எந்த அளவிற்கு மக்களை மழுங்க வைத்திருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு, அதை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் எந்த அளவில் உள்ளது என்பதை பார்த்தால்  ஆச்சரியமாக உள்ளது.

இன்றைக்கு வாகனங்களின் நெரிசல் என்பது வீதிகளில் பாதசாரிகளை மன உளைச்சல் உண்டாக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. வேகத்தடை உள்ள வீதிகளில் அவ்வாறு ஒன்று உள்ளது என்பதைப்பற்றிய நினைவின்றி தான் மட்டுமே விரைவாக செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன் வண்டிகளை ஓட்டி செல்லும் பயங்கரவாதிகளை காண்பவர் குலைநடுங்க வைக்கிறது. மக்களின் பெருக்கத்திற்கேற்ற வகையில், வாகன நெரிசல்களுக்கு ஏற்ற வகையில் வீதிகள் உள்ளனவா என்றால் வெளிநாட்டுடன் இணைந்து வெளிவருகின்ற வாகனங்கள் மட்டும்தான் காண முடிகிறது வீதிகள் மட்டும் வெள்ளையன் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் இருந்த மாதிரியே, குதிரைகள் மற்றும் மாட்டு வண்டிகள் கடந்து போகின்ற நிலையில் தான் இருந்து வருகிறது. எங்கள் ஊரில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வீதிகளை "ஏதோ போனால் போகிறது" என்று "சும்மா" பெயருக்காவது போட்டு வைத்தாலும் அடுத்த நாளே யார் யாரோ குழி தோண்டி கேட்பதற்கு ஆளில்லாத நிலையில் போட்டுவிட்டு போவார்கள். யாரென்று கேட்டால் ஒருவன் சொல்வான் EB யில் இருந்து வருகிறோம் என்பான், இன்னொருவன் CABLETV என்பான்; அடுத்தவன் தொலைபேசி நிறுவனம் என்கிறான். இப்படி ஏதோ ஒரு பெயரை சொல்லி வீதிகளை எல்லாம் குழியாக்கி விட்டு பின்னர் அதை செப்பனிடுவதற்கு மட்டும் அப்பகுதியின் MLA அல்லது WARD மெம்பெர் மீது குறை சொல்லி கொண்டிருப்பதால் யாருக்கு என்ன பயன்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான், நாட்டின் நிலை மட்டும் எப்போதுமே ஒன்றுதான். வீதிகளில் குழி எடுப்பதற்கு முன்னர் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திலோ கார்பொரேஷேன் அலுவலகத்திலோ உத்தரவு வாங்குதல் அவசியம் என்கின்ற விதியை எவரும் செயல்படுத்துவதில்லை. அவசியமான சட்டங்கள் நிறைய உண்டு  அதை மதிப்பவர் அல்லது செயல்படுத்துபவர் தனது பணியை முறையாக நிறைவேற்றாமல் அசட்டை செய்வதால் அல்லது எங்கும் எதிலும் ஊழல் நிரம்பி கிடப்பதால் பாதிப்புகள் பெருகி ஒட்டு மொத்த பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டிகொண்டிருப்பதால் யாருக்கும் பலன் இல்லை. தனிமனித ஒழுக்கம், மற்றும் பொதுநல சிந்தனைகள் பொதுமக்களிடம் அறவே இல்லை என்பதையும் மக்கள் முதலில் நன்கு உணரவேண்டும்.

மழைநீரை போதிய அளவு சேமித்து வைக்க புதிய அணைகள் கட்டுவது மிகவும் அவசியம், நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு கட்டப்பட்ட அணைகள் எத்தனை என்பதை கணக்கெடுப்பு செய்வதால் தற்போதைய மக்கள் பெருக்கத்திற்கும் விவசாயத்திற்கும் தேவையான நீரின் அளவு மற்றும் அதிகரித்திருக்கும் நீர் தேவையும் புதிய அணைகளில்  மழைநீரை தேக்கி வைக்க வேண்டிய அவசியமும் தெளிவாக தெரிய வரும். மழை நீரை வீணாக்கி விட்டு அடுத்த மாநிலத்திடம் கையேந்துவதை தவிர்க்க புதிய அணைகள் அவசியம். காடுகளில் நீர் தேக்கி வைக்க குளங்களை உருவாக்குதலும் அவசியமானது, இதனால் யானை, மான், கரடி சிறுத்தை போன்ற விலங்குகள் நீரை தேடி அலைந்து மக்கள் வாழும் பகுதிக்குள்  நுழையாமல் தவிர்க்க இத்தகைய முயற்ச்சிகள் மிகவும் அவசியமானது. காடுகள் அழிக்கப்பட்டு வருவதை தடுக்க எடுக்கின்ற நடவடிக்கைள் முற்றிலும் செயல்படுத்தபடுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.  காட்டு விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவற்றின் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும் அவசியம்.

விலங்குகள் இயற்கையாக வாழ்வதற்கான வசதிகளை அழிப்பவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும், விலங்குகளும் காடும் மனிதர்களுக்கு மிகவும் அவசியமான இயற்கை கொடுத்த விலைமதிப்பற்ற சொத்துக்கள். இப்படி எத்தனை அவசியங்கள் குவிந்து கிடக்கிறது? இதை பற்றிய உணர்வின்றி அரசு பணிதானே வேலையை ஒழுங்காக செய்தாலும் இல்லை என்றாலும் மாதமானால் சம்பளம் கையில் வந்து சேரும் என்ற எண்ணத்தில் வேலை செய்கின்ற அரசு பணியாளர்களை உடனே பணியை விட்டு நீக்க வேண்டும். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாய் தனது பணியை செய்கின்ற அரசு பணியாட்கள் இந்திய நாட்டில் மிகவும் குறைவு, அப்படிப்பட்ட மாற்றங்களால் மட்டுமே நாடு சுபீட்சம் காண முடியும்.


10/18/2013

திரு(ந்த)த்தப்பட வேண்டியவர்கள்


எங்கு பார்த்தாலும் காதலர்களை பற்றிய விதவிதமான செய்திகள் தினமும் நம்மை வந்தடைகிறது. ஊடகங்களின் பெருக்கமும் இதற்க்கு முக்கிய காரணம். டெல்லி மாணவி கொடூர கொலையை பற்றி உலகமே அறிந்து வியந்ததற்க்கும் கூட ஊடகங்கள் மட்டுமே முக்கிய காரணம். அவ்விதத்தில் காதலர்களை பற்றியும் காதலை பற்றியும் ஓயாமல் செய்திகள் கிடைக்கப்பெருவதும் இவ்வூடகத்தின் செயல்பாடுதான். காதல் காலத்திற்கேற்ப தனது அடிப்படை கொள்கைகளையும் மாற்றிக்கொண்டு வருகிறது என்பதற்கு தற்காலத்தில் "காதல்" என்று கூறப்படுகின்ற எதோ ஒரு வித உணர்வு சான்று. ஒட்டு மொத்தமாக காதலின் அடிப்படைகள் காலத்தால் மாற்றப்பட்டு விட்டாலும் சமுதாயத்தில் "நல்லொழுக்கம்" என்கின்ற பெயரில் நடத்தப்படும் ஆக்ரோஷங்கள் காலத்திற்க்கேற்ப அதன் வீரியத்தை அதிகரித்து கொண்டு வருகின்ற காரணத்தால் இரண்டு வித முரண்பாடுகளுக்கும் இடையே போர் முனை தாக்குதல்கள் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் அழிக்கப்படுகின்ற எண்ணற்ற உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதும் அதில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே செய்திதாள்களில் இடம் பிடிக்கின்றன என்கின்ற வேதனையான மிகவும் கசப்பான 20 நூற்றாண்டில் அறிவியலின் முன்னேற்றத்தில் வாழும் ஈன மனிதர்களாகிய நாம் கண்டும் கேட்டும் அதற்க்கு சிறு வருத்தம் கொண்டோமானால் கூட போதும் நாமும் மனிதர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கு.

கள்ளகாதலர்கள் அதிகரிக்க காரணம் என்ன, வயிற்றிற்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும் உணர்வுகளுக்கு தீனி போட்டு ஆகவேண்டிய அற்ப நிலை இயற்க்கை கொடுத்த செல்வம் (சாபம்) அல்லவா? தாலி கட்டிய கணவன் தினமும் குடித்துவிட்டு வயிற்றிக்கு சோறு போடவில்லை என்றால் ஏதேனும் கூலி வேலை செய்து வாயிற்று பசியை போக்கிக்கொள்ள வழியுண்டு உணர்வுகள் கணவனுக்காக மட்டுமே காத்திருக்க வேண்டும் என்பது இயற்க்கை எழுதாத விதி (இயற்க்கைக்கு மாறான விதி). கண்ணதாசனின் பாடல் வரிகளில் இவ்வாறு கேட்டிருக்கிறோம் "கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்" என்று. காமனை மட்டுமல்ல காமுகர்களை வெல்வதற்கும் கணவனின் துணை வேண்டும் அல்லவா. பத்தினி பெண்களாக வாழ எவருக்காவது கசக்குமா? தாலி கட்டிய ஒரே காரணத்திற்க்காக பத்தினிகளாய் வாழும் பெண்களும் உண்டு. அவ்வாறு வாழுகின்ற பெண்களின் மனநிலை சீராக இருக்கிறதா என்பதை அறிவோமா? "அதைபற்றியெல்லாம் அவசியமில்லை பெண் என்பவள் எக்காரணத்தை கொண்டும் தாலி கட்டிய கணவனை தவிர வேறு ஒருவரிடம் உடல் உறவு வைத்துக்கொள்ள கூடாது" என்று வற்ப்புதுத்தும் சமுதாயம் அவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும் பெண்ணின் கணவனை சீர்திருத்தும் நடவடிக்கை ஏதேனும் எடுக்கிறதா?

தாயின் கடமை பெண் பூப்பபடைவதற்க்கு முன்பே , அவள் எவ்வாறு ஆண்களிடம் பழக வேண்டும் என்பதை குறிப்பாக அவளிடம் எடுத்து கூறுவது அவசியம், திருமணம் என்கின்ற புதிய பந்தத்தில் இணைக்கப்படுவதற்கு முன்பும் பெண்ணின் முழு சம்மதம் பெற்று திருமணம் செய்து வைக்க வேண்டும். பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் கட்டாய திருமணங்கள் அவர்களது வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் அவசர முடிவுகள் எடுக்கின்ற பலரது வாழ்க்கை விவாகரத்தை நோக்கியே பயணிக்கிறது. விவாகரத்து பெற்றுக்கொண்ட ஆணிற்க்கோ பெண்ணுக்கோ அடுத்த நிலை என்ன...ஒரு ஆணின் மனநிலை என்பது பெண்ணின் மனநிலைக்கு முற்றிலும் எதிரானது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்ப்படுகின்ற நிலையில் அதை எதிர்கொள்வதில் பெண் ஆண் இருவருக்கும் வெவ்வேறான சிக்கல்கள் காத்து கிடக்கிறது. அதை எதிர்கொள்வதில் ஆணைவிட பெண்ணிற்கே குழப்பங்களும் சிக்கல்களும் அதிகம். அதற்க்கு மிகவும் முக்கிய காரணம் சமுதாயத்தின் எழுதப்படாத பல சட்டங்கள்.

திருத்தப்பட வேண்டியவர்கள் கள்ள காதலர்களா, ஏனைய (கள்ளமற்ற) காதலர்களா அல்லது சமுதாய முரண்பாடுகளா, வெற்று கவுரவமா. இவற்றையெல்லாம் மிஞ்சி நிற்கும் எழுதப்படாத சமுதாய சட்டங்களா காதலர்கள் மீதும் கள்ள காதலர்கள் மீதும் மொத்த பழியையும் சுமத்தி விட்டு தாங்கள் மட்டுமே உத்தமர்கள் என்று கும்பலோடு கோவிந்தா போடும் பச்சோந்திகளான "மகா" மேன்மை தாங்கிய மனிதர்களா என்பதை காலம் வெகுவிரைவில் நிச்சயம் நிர்ணயம் செய்யும்.