Translate

9/01/2013

எப்போது விடிய போகுதுவன்முறை சம்பவங்கள்:

பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்ற செய்திகள் வெளியாகியவுடன் ஊடகங்களில் அடுத்ததாக விவாதத்தில் முன் வைக்கப்படுகின்ற காரணங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது உடை பற்றிய விமர்சனங்கள். உடை பற்றி பேசுகின்ற எவரும் அல்லது எந்த அரசியல் கட்சியினரும் மது விற்ப்பனையை பற்றியோ அதை அருந்திவிட்டு மனைவிகளிடமும் மற்றவர்களிடமும் வீணே வம்பிழுக்கின்ற இளைஞன் முதல் கிழவன் பற்றியோ பேசுவதே கிடையாது. பெண்கள் அணிகின்ற ஆடை என்பது அடுத்தவரின் கண்களுக்கு வசீகரமாக இருக்க கூடாது என்று கூறுகின்ற சமுதாயத்தில் கங்கை யமுனை காவிரி வைகை என்று நாட்டில் ஓடிக்கொண்டிருக்கின்ற முக்கிய நதிகளைப்போல பெண்கள் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவ்வாறு பெயர் வைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. போதாதற்கு கடவுள் கூட பெண் "ஷக்தி", "துர்கா", போன்றவற்றை வணங்கும் மக்கள் நிரம்பிய இந்திய சமுதாயத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்ற நிலையினை பார்த்தால் பெண் என்பவள் பலவித கட்டுபாடுகளுடன் அதனால் ஏற்ப்படுகின்ற அவலங்களை பொறுத்துக்கொண்டு அடிமைகளாக, வேலைகாரியாக வாழ்க்கை நடத்துவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் என்று எழுதாத சட்டம் இன்றுவரையில் நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது."ரக்க்ஷா பந்தன்":

தாய் நாடு, தாய் மொழி என்று கூப்பாடு போடுகின்ற கூட்டம் நிறைந்திருக்கின்ற இந்திய தேசத்தில், "அமாரா தேஷ்" என்று மார் தட்டிக்கொண்டு வீதியில் போகின்ற ஆண்களின் கைகளில் "ராக்கி" அணிவித்து தங்கள் கற்ப்பை காக்க சகோதர பாசத்துடன் கோரிக்கை வைப்பது என்னும் "ரக்க்ஷா பந்தன்" என்று நாடு முழுவதும் கொண்டாடுகின்ற பாரம்பரிய பழக்கம் கொண்டுள்ளனர். இவ்வாறு கொண்டாடுவதற்கு அடிப்படை காரணம் பெண்களின் கற்புக்கு ஆண்கள் காவலர்கள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியுள்ளனர் என்றால் பெண்களும் ஆண்களும் சகோதர உறவுடன் மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்காக, ஆனால் இன்றைக்கு "ராக்கி" அணிவதற்கு காரணம் என்னவென்பதை அறிந்துதான் அவ்வாறு கட்டப்படுகிறதா என்பதே கேள்விதான். பெண்களின் உடை என்பது அவரவரின் விருப்பம் என்றாலும் உடலின் அளவுகளை காண்போர் கவரும் வகையில் அணிந்து பொது இடங்களில் நடமாடுகின்ற அதிகபட்ச மக்கள் மும்பை மற்றும் பெங்களுரு, டெல்லி போன்ற நகர் புறங்களில் பெரும்பாலும் இளவயது பெண்கள் அரைகுறை ஆடை அணிவதாக தெரிகிறது. அத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சென்னையை பிறப்பிடமாக கொண்ட இளம் பெண்கள் அணிகின்ற ஆடை விமரிசிக்கின்ற வகையிலோ அல்லது ஆண்களை கவருகின்ற வகையிலோ இல்லை என்பது உறுதி.நீதித்துறைதுறை:

வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற பெண்கள் எவரும் அரைகுறை ஆடையுடன் பொது இடங்களில் நடமாடியவர்கள் இல்லை என்று சமுதாய ஆர்வலர்கள் மீண்டும் மீண்டும் ஊடகங்களில் கூறி வந்தாலும் இத்தகைய காரணம் ஒன்றை மட்டுமே பெண்கள் மீது குற்றசாட்டாக வைக்கப்பட்டு எப்போதும் அதை பற்றி மட்டுமே விவாதம் நடந்து வருகிறது. பிடிபட்ட ஆண்களை சட்டம் எவ்வாறு தண்டிக்கிறது என்பதை பற்றி யாரும் பேசுவதோ அல்லது அதற்க்கு காரணமான மது மற்றும் ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கின்ற ஊர் பெயர் தெரியாத கும்பல்களை பற்றியோ எவரும் பேசுவதே இல்லை. தவறு செய்கின்ற சோம்பேறிகளையும் அவ்வாறாக பாதிக்கப்பட்டவர் கொடுக்கின்ற முதல் தகவல் அறிக்கையின் மீதான விசாரணை மற்றும் பெண்ணின் தரப்பை எவ்வித பாகுபாடுமின்றி விரைவாக விசாரித்து சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும், இதுபோன்று நீதிமன்றத்திற்கு வருகின்ற வழக்கை பெண்ணின் தரப்பில் உண்மை இருப்பதாக அறிந்த பின்னரும் வழக்கறிஞர் ஒருவரும் அவ்வழக்கை வாதிட ஏற்க்ககூடாது, இத்தகைய ஒருமித்த உறுதிகொண்டு நேர்மையுடனும் நீதியுடனும் ஒன்றுபட்டு ஒடுக்கினால் மட்டுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் வாய்ப்பு உண்டு.


அபராதத்தொகையை செலுத்திவிட்டு ஓரிரு மாதம் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுதலையாகி வெளியே வருகின்றவர்கள் மீண்டும் இன்னும் மோசமான சமூக சீர்கேடுகளுக்கு துணை போகாமல் திருந்தி வாழுகின்றவர்களின் குற்றவாளிகளின் எண்ணிக்கை எத்தனை என்று ஏதேனும் புள்ளிவிவரங்கள் உள்ளதா. அப்படி இருந்தால் அவர்களை கொண்டு சிறையினுள் பயிற்சி வகுப்புகள்ஏதேனும் நடத்துகின்றார்களா அல்லது வெளியேறுகின்ற குற்றவாளிகளுக்கு காவலில் இருந்தபோது மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னர் வெளியே வருகின்றனரா? மாறாக அவர்களுடன் பழகுகின்ற பழம் பெரும் குற்றவாளிகளின் ஆலோசனைகள், பீடி, கஞ்சா போன்ற "நல்லவை" மட்டுமே கிடைத் தால் சமூகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை என்று நாளுக்கு நாள் அதிகரித்து வராமல் வேத உபதேசம் பெருகுமா என்ன?
மகாத்மா காந்தி கண்ட இந்திய தேசம் என்றைக்கு உருவாகப்போகிறது என்பதை தேசத்தை உருவாக்க நினைக்கும் மக்களும் மற்றும் சட்டம் ஒழுங்கு துறையை சார்ந்தவர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம். இந்த அவலநிலை தொடர்கதையானால் நீதித்துறை தனது அதிகாரத்தை இழந்து கிடப்பதாகவே அர்த்தம், நீதித்துறை அதிகாரம் இழந்தால் இந்தியா குடியரசு நாடு என்று சொல்லிக்கொள்ள இயலுமா.