Translate

8/23/2013

தலைமுறை இடைவெளிஒருகாலத்தில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்று சொன்னார்கள், பிறகு கொஞ்சம் சுயநலத்துடன் இரு குடும்பங்களின் இணைப்பு என்றார்கள். இதற்க்கு கால மாற்றம் காரணமா அல்லது மனிதர்களின்  சுயநலம், பெருமை, பிடிவாதம் போன்ற அரக்க சிந்தனைகள் வேரூன்றி விட்டதன் விளைவா. குழந்தைகள் பெற்றோர் மூலம் பிறந்து விட்டதால் மட்டுமே பெற்றோருக்கு உரியவர்கள் கிடையாது என்கின்ற புதிய தத்துவம் இன்றைக்கு பரவலாக சொல்லப்படுகிறது. அடிக்கடி எனக்கு ஒரு சந்தேகம் ஏற்ப்படுகிறது, மனிதர்கள் மீண்டும் ஆதிகால மனிதனாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்களா அல்லது சமுதாயத்தில் இனி வரப்போகின்ற புரட்சிகளுக்கு வித்திட்டு உரம் சேர்க்கப்படுகிறதா என்று, ஏனென்றால் எந்த சமுதாயத்தில் கட்டுபாடுகள் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. மீருதல்களினால் அத்தகைய சமுதாயம் ஒருபுறம் வீணாகிகொண்டிருக்கின்ற தகவல்களும் உண்டு.

திருமணம் என்பதை அல்லது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்த பல்வேறு தடைகள் வெவ்வேறு உரு கொண்டு தாக்குதலை ஏற்ப்படுத்துகின்ற நிலையில், அந்த தாக்குதல்களை எதிர்க்கும் மனிதகூட்டம் [எதிர்ப்பவர்கள்] உருவாக்கப்படுகிறது என்பதும் மனதில் கொள்ள வேண்டிய உண்மை. அவ்வாறு ஆங்காங்கே உருவாகின்ற மனிதர்கள் ஒன்று கூடி திருப்பி எதிர்ப்பு குரல் கொடுக்க முன்வரக் கூடும், அதற்க்கு எத்தனை ஆண்டு காலம் வேண்டும் என்பது அந்தந்த சமுதாய சிந்தனையாளர்களின் எண்ணிக்கையும் விவேகமும் தீர்மானிக்கிறது. வீட்டில் காவலுக்கு வளர்க்கின்ற நாயை கயிற்றால் கட்டி ஆட்களின் போக்குவரத்தை காண இயலாதவாறு கூண்டில் அடைத்து வைத்து தேவைப்படுகின்ற சமயங்களில் மட்டும் கூண்டிலிருந்து வெளியே விட்டால் அந்த நாய் சந்தேகப்படுகின்ற நபர்களை வேட்டையாடுவதும் கூண்டிலிருந்து வெளியேறியவுடன் சுற்றுபுறத்தில் ஓடியாடி தன் சந்தோஷத்தை போக்கிகொள்வதைப்போல கட்டுப்பாடுகள் என்கின்ற கூண்டில் அடைக்கப்படுகின்ற மனிதர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறான முறையில் உபயோகிக்க  முற்படுகிறார்கள் .

பெற்றோரின் கட்டுப்பாடுகளில் உறைந்து போகும் ஆண்களும் பெண்களும் வீட்டை விட்டு வெளியே போகின்ற இடங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் வழி வகைகளில் சிக்கி விடுவதே பெரும்பாலும் காணமுடிகிறது. மறைத்து வைக்கின்ற எப்பொருள் மீதும் மோகம் அதிகரிக்கும் என்பதை நாம் அறியமாட்டோமா. ஜாதி, மதம், அந்தஸ்த்து, பெற்றோர், உறவினர்கள் என்ற அத்தனை மீதும் வெறுப்பு ஏற்ப்படுவதற்க்கு அடிப்படை காரணம் அவர்களால் போடப்படுகின்ற கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் மட்டுமே. கட்டுப்பாடுகள் விதிக்கின்றவர் எவராக இருப்பினும் அதற்க்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவரின் வெறுப்பை, எதிர்ப்பை அதிகரிக்கும் என்பது யாவரும் அறிந்தது.

கட்டுப்பாடுகளில் பல வகைகள் உண்டு, பெரும்பாலான பெற்றோர்கள் கூறும் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குழந்தைகளிடம் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் என்பர்.  ஆனால் தங்கள் விதிக்கின்ற கட்டுப்பாடுகளை தங்களது பிள்ளைகள் எப்படி, எங்கே மீறுகின்றனர் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. அவ்வாறு அறிந்து கொண்ட பின்னர் அதைப்பற்றி பிள்ளைகளுடன் எவ்வாறு விவாதிக்கின்றனர் என்பது கேள்வி. ஏனென்றால் தங்களுக்கு பெற்ற பிள்ளைகளிடம் விசாரிக்கும் உரிமை உண்டு என்பதை மனதில் கொண்டு உரிமையுடன் பெற்றோர்கள் விவாதம் செய்வதை குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பது மிகவும் முக்கியம். தங்களது எதிர்காலத்தை பற்றி முடிவெடுக்கும் உரிமையை பெற்றோர்கள் துஷ்ப்ரயோகம் செய்வதாக பிள்ளைகளும்; அவ்வுரிமை தங்களுடையது என்பதுமாக பெற்றோர்களும் உறவுகள் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக மாறிக்கொண்டு வருகிறது.

இவ்வாறான சவால்களுக்கு காரணமாக முன் வைக்கப்படுகின்ற ஜாதி மதம் அந்தஸ்த்து படிப்பு பொருளாதாரம் என்று இடத்திற்கேற்றார்போல இவற்றின் அடிப்படை மாறுபடுகிறது. இத்தகைய சூழல் பெருகி வருகின்றதால் காதல் நிராகரிக்கப்படுவது போன்ற மாயையான தோற்றம் தெரிகிறது. காதலுக்கு எதிரிகள் எவரும் இல்லை என்று சொல்வது உண்மையாக இருப்பினும் அதற்க்கான காரணங்கள் பெற்றோரும் பிள்ளைகளும் என்பது புலப்படுகிறது; காதல் எதிரி இல்லை என்றால் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பது உண்மை என்றாகும் அல்லவா. இதில் எங்கே குழப்பம் உண்டாகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். கட்டுப்பாடுகள் என்கின்ற பெயரில் பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் விதிக்கின்ற ஒவ்வொன்றும் விஸ்வரூபமெடுத்து பெற்றோர்கள் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்ப்படுத்துகிறது. குழந்தை பருவம் தொடங்கி வயதுவந்த பிள்ளைகளாகும் வரையில் இவை சேமிக்கப்படுகிறது.

திருமணம் வரையில் வெளிபடுத்தாமல் அல்லது காட்டிக்கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாக, ரகசியங்களை வைத்துகொள்வது உண்டு. பலர் காதல், சம்பாத்தியம் என்று ஏற்ப்படுகின்ற சமயத்தில் அதுவரையில் சேமித்த வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். இதை சற்றும் எதிர்பாராத சில பெற்றோர் மற்றும் உறவினர் திகைப்பின் உச்சிக்கே சென்றுவிடுகின்ற நிலைமை உண்டாகிறது. இதற்க்கு சிலர் "தலைமுறை இடைவெளி"  GENERATION GAP என்று கூறுகின்றனர். இப்படி பெயர் வைத்தபோதே முந்தய தலைமுறையினரின் கட்டுப்பாடுகளை இளைய தலைமுறையினர் கடைபிடிக்க விரும்புவதில்லை என்பது விளங்குகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு காலத்திலும் நடைமுறைகள் மாறுகின்ற போதெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெருகும்.