Translate

8/01/2013

"தண்ணி" படுத்தும்பாடு !!

காவேரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லை பெரியார் நீர் தேக்கம் பற்றிய பிரச்சினை போன்ற நீர் பிரச்சினைகள் மாநிலத்திற்கு மாநிலம் சிலரை விரோதியாக பாவிக்கின்ற மனநிலையை உருவாக்கி வந்துள்ளது. அம்மாநிலங்களில் மழை பெய்து நீர் தேக்கங்களில் நிரம்பிய பின்னர் அணைகளை திறந்து விடுவதை அவர்களால் ஏன் நிறுத்த இயலவில்லை, அளவிற்கு அதிகமான மழை நீர் தேக்கி வைத்தால் தேக்கம் உடைந்து அருகில் இருக்கும் ஊர் அழிவை சந்திக்கும் என்பதால் தேக்கத்தில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு அணை நிரம்பிய பின்னர் திறந்து விடுகின்ற உபரி நீர் தமிழகத்திற்குள் வருகின்ற அதே சமயத்தில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்து பெருக்கெடுக்கும் நீர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயிர் நிலங்களை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடு மற்றும் உடமைகளை இழந்து உயிர் சேதமும் ஏற்ப்படும். அவ்வாறு சேதம் ஏற்ப்படுவதை தவிர்க்க உபரி நீரை திறக்க கூடாது என்று சேதம் ஏற்ப்படுகின்ற மாநிலம் கோரிக்கை மற்றும் வழக்கு தொடருமானால் கர்னாடக மாநிலமும் கேரளா மற்றும் ஆந்திர மாநிலமும் என்ன செய்யும்?

தேவையற்ற அல்லது தேக்கி  வைக்க இயலாத நிலையில் திறந்து விடப்படுகின்ற அதிகபட்ச நீர் வரத்து தமிழகத்திற்கு தற்போது போதுமான மழை இல்லை என்பதாலும் நீர் தேவை அதிகரித்து உபரி நீரை வாங்கிக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. தமிழகத்திற்கு போதுமான அளவு நீர் தேக்கங்களும் மழை நீரை சேமிக்க குளம், எரி, போன்ற நீர் சேமிப்பு பகுதிகள் அதிகரித்து மழை நீர் சேமிப்பு செய்தால் போதுமான அளவிற்கு நீர் நிலைகளில் ஊற்றுகள் வருடம் முழுவதற்கும் போதுமான குடிநீர் மற்றும் பாசன தேவைகள் சமாளிக்க முடியும். ஏரி குளம் போன்ற நீர் தேங்கும் பகுதிகள் தற்காலத்தில் மூடப்பட்டு அதன் மீது கட்டிடங்கள் அதிகரித்து வருவதால் நீர் ஊற்று இல்லாமல் அடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது பல இடங்களில் இல்லாமலும் போகிறது.

பெரும்பாலும் தமிழகத்தில் பெய்கின்ற மழை நீர் முழுவதும் வேகமாக ஓடிச்சென்று கடலில் கலந்து விடுகிறது. குறைவாக மழை பெய்தாலும் பெய்கின்ற மழை நீர் நிலத்தின் மேற்பரப்பை மட்டும் நனைத்துவிட்டு ஓடிவிடுவதால் ஈரப்பதம் அற்ற நிலமாக இருப்பதால் மரங்கள் செடி கொடிகள் வளரவும் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டம் இல்லாமல் குடிநீர் பஞ்சம் ஏற்ப்படுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் நிற்க வேண்டிய மழை நீர் மக்கள் வசிக்கின்ற பெரும் சாலைகளிலும் தொடர்வண்டி பாதைகளிலும் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்ப்படுத்துவது என்பது இந்தியாவில் எந்த அளவிற்கு தேச பரிபாலனம் சிறப்புடன் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. நகரத்தில் வசிக்கும் பலர் மழையை விரும்புவதே இல்லை. மழைக்கு பின்னர் சாலைகள் குண்டும் குழியுமாய் மனித உயிர்களை பறிக்கின்ற நீர் தேக்கங்களாக மாறிவிடுவதுதான் இதற்க்கு காரணம்.

நகரை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் சீர் செய்யப்படாத சாலைகள் மழை சிறிது பெய்தால் கூட நரகமாகி விடுவதால் மழையை வெறுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி வருகிறது. ஒருபுறம் மழை இல்லாமல் நீர் பற்றாக்குறை மக்களுக்கு வேதனையை அளித்து வருகிறது என்றால் மறுபுறம் மழை பெய்தால் சாலைகளில் ஏற்ப்படுகின்ற நீர் தேக்கமும் அதனால் ஏற்ப்படுகின்ற விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் இதைவிட இன்னும் மோசமான பாதிப்பு கழிவுநீரும் குடிநீரும் ஒன்று கலந்து மக்களை பாடுபடுத்தும், தேங்கி நிற்கின்ற மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி பெருகி புதிய நோய்களை உருவாக்கும்; கொசுக்களை அழிக்க எதோ புகை என்ற பெயரில் என்றைகாவது ஒருநாள் ஒரு பகுதியில் அடிக்கப்படும்.

இவ்வாறு மழை பெய்வதால் ஏற்ப்படுகின்ற பிரச்சினை பெரும் பிரச்சினை ஒருபுறம் என்றால் மறுபுறம் மழையின்மையால் குடிநீர் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும், அப்படியே காசு கொடுத்து வாங்கினால் கூட அந்த குடிநீர் எந்த அளவிற்கு சுகாதாரமானது என்பதற்கு உத்திரவாதம் ஒன்றும் கிடையாது. விவசாயிகளின் வேதனைகள். மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பொதுமக்களின் பாடுகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இதனால்தானோ என்னவோ நம்ம ஊர் குழந்தைகள் "ரெயின் ரெயின் கோ அவே, கம் அகென் கிரான்மாஸ் வாஷிங் டே" என்று மனப்பாடம் செய்ய பழக்குவிக்கிரார்களோ? "தண்ணி" என்பது தமிழகத்தை எல்லா வகையிலும் பாடு படுத்துவதை யாரும் மறுக்க இயலாது.