Translate

8/23/2013

தலைமுறை இடைவெளிஒருகாலத்தில் திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்று சொன்னார்கள், பிறகு கொஞ்சம் சுயநலத்துடன் இரு குடும்பங்களின் இணைப்பு என்றார்கள். இதற்க்கு கால மாற்றம் காரணமா அல்லது மனிதர்களின்  சுயநலம், பெருமை, பிடிவாதம் போன்ற அரக்க சிந்தனைகள் வேரூன்றி விட்டதன் விளைவா. குழந்தைகள் பெற்றோர் மூலம் பிறந்து விட்டதால் மட்டுமே பெற்றோருக்கு உரியவர்கள் கிடையாது என்கின்ற புதிய தத்துவம் இன்றைக்கு பரவலாக சொல்லப்படுகிறது. அடிக்கடி எனக்கு ஒரு சந்தேகம் ஏற்ப்படுகிறது, மனிதர்கள் மீண்டும் ஆதிகால மனிதனாக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்களா அல்லது சமுதாயத்தில் இனி வரப்போகின்ற புரட்சிகளுக்கு வித்திட்டு உரம் சேர்க்கப்படுகிறதா என்று, ஏனென்றால் எந்த சமுதாயத்தில் கட்டுபாடுகள் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. மீருதல்களினால் அத்தகைய சமுதாயம் ஒருபுறம் வீணாகிகொண்டிருக்கின்ற தகவல்களும் உண்டு.

திருமணம் என்பதை அல்லது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்த பல்வேறு தடைகள் வெவ்வேறு உரு கொண்டு தாக்குதலை ஏற்ப்படுத்துகின்ற நிலையில், அந்த தாக்குதல்களை எதிர்க்கும் மனிதகூட்டம் [எதிர்ப்பவர்கள்] உருவாக்கப்படுகிறது என்பதும் மனதில் கொள்ள வேண்டிய உண்மை. அவ்வாறு ஆங்காங்கே உருவாகின்ற மனிதர்கள் ஒன்று கூடி திருப்பி எதிர்ப்பு குரல் கொடுக்க முன்வரக் கூடும், அதற்க்கு எத்தனை ஆண்டு காலம் வேண்டும் என்பது அந்தந்த சமுதாய சிந்தனையாளர்களின் எண்ணிக்கையும் விவேகமும் தீர்மானிக்கிறது. வீட்டில் காவலுக்கு வளர்க்கின்ற நாயை கயிற்றால் கட்டி ஆட்களின் போக்குவரத்தை காண இயலாதவாறு கூண்டில் அடைத்து வைத்து தேவைப்படுகின்ற சமயங்களில் மட்டும் கூண்டிலிருந்து வெளியே விட்டால் அந்த நாய் சந்தேகப்படுகின்ற நபர்களை வேட்டையாடுவதும் கூண்டிலிருந்து வெளியேறியவுடன் சுற்றுபுறத்தில் ஓடியாடி தன் சந்தோஷத்தை போக்கிகொள்வதைப்போல கட்டுப்பாடுகள் என்கின்ற கூண்டில் அடைக்கப்படுகின்ற மனிதர்களும் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறான முறையில் உபயோகிக்க  முற்படுகிறார்கள் .

பெற்றோரின் கட்டுப்பாடுகளில் உறைந்து போகும் ஆண்களும் பெண்களும் வீட்டை விட்டு வெளியே போகின்ற இடங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் வழி வகைகளில் சிக்கி விடுவதே பெரும்பாலும் காணமுடிகிறது. மறைத்து வைக்கின்ற எப்பொருள் மீதும் மோகம் அதிகரிக்கும் என்பதை நாம் அறியமாட்டோமா. ஜாதி, மதம், அந்தஸ்த்து, பெற்றோர், உறவினர்கள் என்ற அத்தனை மீதும் வெறுப்பு ஏற்ப்படுவதற்க்கு அடிப்படை காரணம் அவர்களால் போடப்படுகின்ற கட்டளைகளும், கட்டுப்பாடுகளும் மட்டுமே. கட்டுப்பாடுகள் விதிக்கின்றவர் எவராக இருப்பினும் அதற்க்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளவரின் வெறுப்பை, எதிர்ப்பை அதிகரிக்கும் என்பது யாவரும் அறிந்தது.

கட்டுப்பாடுகளில் பல வகைகள் உண்டு, பெரும்பாலான பெற்றோர்கள் கூறும் காரணம் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குழந்தைகளிடம் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் என்பர்.  ஆனால் தங்கள் விதிக்கின்ற கட்டுப்பாடுகளை தங்களது பிள்ளைகள் எப்படி, எங்கே மீறுகின்றனர் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள இயலாது. அவ்வாறு அறிந்து கொண்ட பின்னர் அதைப்பற்றி பிள்ளைகளுடன் எவ்வாறு விவாதிக்கின்றனர் என்பது கேள்வி. ஏனென்றால் தங்களுக்கு பெற்ற பிள்ளைகளிடம் விசாரிக்கும் உரிமை உண்டு என்பதை மனதில் கொண்டு உரிமையுடன் பெற்றோர்கள் விவாதம் செய்வதை குழந்தைகள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பது மிகவும் முக்கியம். தங்களது எதிர்காலத்தை பற்றி முடிவெடுக்கும் உரிமையை பெற்றோர்கள் துஷ்ப்ரயோகம் செய்வதாக பிள்ளைகளும்; அவ்வுரிமை தங்களுடையது என்பதுமாக பெற்றோர்களும் உறவுகள் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக மாறிக்கொண்டு வருகிறது.

இவ்வாறான சவால்களுக்கு காரணமாக முன் வைக்கப்படுகின்ற ஜாதி மதம் அந்தஸ்த்து படிப்பு பொருளாதாரம் என்று இடத்திற்கேற்றார்போல இவற்றின் அடிப்படை மாறுபடுகிறது. இத்தகைய சூழல் பெருகி வருகின்றதால் காதல் நிராகரிக்கப்படுவது போன்ற மாயையான தோற்றம் தெரிகிறது. காதலுக்கு எதிரிகள் எவரும் இல்லை என்று சொல்வது உண்மையாக இருப்பினும் அதற்க்கான காரணங்கள் பெற்றோரும் பிள்ளைகளும் என்பது புலப்படுகிறது; காதல் எதிரி இல்லை என்றால் பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பது உண்மை என்றாகும் அல்லவா. இதில் எங்கே குழப்பம் உண்டாகிறது என்பதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். கட்டுப்பாடுகள் என்கின்ற பெயரில் பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் விதிக்கின்ற ஒவ்வொன்றும் விஸ்வரூபமெடுத்து பெற்றோர்கள் மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்ப்படுத்துகிறது. குழந்தை பருவம் தொடங்கி வயதுவந்த பிள்ளைகளாகும் வரையில் இவை சேமிக்கப்படுகிறது.

திருமணம் வரையில் வெளிபடுத்தாமல் அல்லது காட்டிக்கொள்ளாமல் சர்வ ஜாக்கிரதையாக, ரகசியங்களை வைத்துகொள்வது உண்டு. பலர் காதல், சம்பாத்தியம் என்று ஏற்ப்படுகின்ற சமயத்தில் அதுவரையில் சேமித்த வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். இதை சற்றும் எதிர்பாராத சில பெற்றோர் மற்றும் உறவினர் திகைப்பின் உச்சிக்கே சென்றுவிடுகின்ற நிலைமை உண்டாகிறது. இதற்க்கு சிலர் "தலைமுறை இடைவெளி"  GENERATION GAP என்று கூறுகின்றனர். இப்படி பெயர் வைத்தபோதே முந்தய தலைமுறையினரின் கட்டுப்பாடுகளை இளைய தலைமுறையினர் கடைபிடிக்க விரும்புவதில்லை என்பது விளங்குகிறது. சமுதாயத்தில் ஒவ்வொரு காலத்திலும் நடைமுறைகள் மாறுகின்ற போதெல்லாம் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெருகும்.


8/12/2013

எங்கும் எதிலும் சுயநலம்

தற்கொலைகள் கொலைகள் விபத்துக்கள், இவை மூன்றும் மனிதர்களை மத இன மொழி வேறுபாடின்றி அள்ளிக்கொண்டு சென்று விடுகிறது. இவற்றிக்கு காரணம் எதுவாக இருப்பினும் இதற்க்கு பின்னர் அந்நிகழ்வால் எவ்வித பாதிப்பு ஏற்ப்படப்போகிறது என்பதை பற்றிய உணர்வு அல்லது சிந்தனை ஏதுமின்றி மொத்த சுயநலத்துடன் நிகழ்வுகள் அன்றாடம் நடந்தேறுகிறது. குடித்துவிட்டு வீதியில் மயங்கி கிடக்கின்ற நபராகட்டும் கொள்ளை அடிப்பதற்காக கொலை செய்பவராயினும் அனைத்திலும் சுயநலம் மட்டுமே மிகுந்து காணப்படுகிறது. காதலிப்பவர்கள் காதல் தோல்வி காரணத்தை சொல்லி தற்கொலை செய்கின்ற போதும் அமிலத்தை பெண்கள் முகத்தில் வீசி அடுத்த நபரை சேதப்படுத்துவதிலும் சுயநலம் மட்டுமே அடிப்படையாக உள்ளது. சகிப்புத்தன்மை, பொறுமை என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு உயிரை உண்டாக்க இயலாத தன்னால் எப்படி ஒரு உயிரை அழிக்க முடியும் என்று சிந்திப்பதில்லை. ஒரு உயிரை மீண்டும் உருவாக்கும் யோகியதை மனிதர்களுக்கு உண்டா ?இல்லை என்றால் அதை அழிக்கும் உயிரிமையும் மனிதனுக்கு கிடையாது. எப்படி பிறந்ததோ அப்படியே இறக்கவும் போகிறது.

அரசியல், காதல், வியாபாரம், வேலை, சாதி, மதம், படிப்பு, என்று எங்கும் எதிலும் சுயநலம் மலிந்து கிடக்கிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பணம் இன்றைக்கு உயிரினும் மேலானதாக கருதப்படுகிறது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள் மனிதனுக்கு ஒருபுறம் உதவிகரமாக இருக்கின்ற அதே சமயத்தில் உயிரை பறிக்கின்ற காரணிகளாக உள்ளது. மனிதனால் கண்டு பிடிக்கப்படுகின்ற அனைத்தும் மனிதனின் அழிவிற்கும் உடைந்தையான உபகரணங்களாகி வருகின்றன. அறிவியல் ஒருபுறம் வளர்ச்சி அடைந்து அதன் பலன் வியப்பை அளித்தாலும் மற்றொரு புறம் அதன் பலன் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றதாகவும் உள்ளது. பலன் மிகுதியா தீங்கு மிகுதியா என்பதை பற்றி யோசித்து முடிவெடுத்து புழங்கும்  நிலையில் இன்றைய அவசர உலகில் பல உபகரணங்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

காதல் துவங்கும் பருவம் உலக அனுபவமற்ற வயது என்பதால் அதனால் உண்டாகும் பிரச்சினைகளைப்பற்றிய முன்னறிவு இருப்பதில்லை, அளவற்ற எல்லைகளற்ற பரஸ்பர அன்பை பரிமாற்றிகொள்ளுதல் என்பது மட்டுமே காதல் என்று நிச்சயித்து கொண்டு தாங்களே தங்களுக்கு விலங்குகளை பூட்டிக் கொண்டு பின்னர் அந்த காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிக்கப்பட்டு அல்லது பிரிகின்ற நிலைக்கு வந்துவிட்டால் அதற்க்கு தீர்வு தற்கொலை என்கின்ற முடிவிற்கு செல்லுகின்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர். மரணம் என்ற ஒன்று மட்டுமே ஏமாற்றத்திலிருந்து விடுவிக்கின்ற வழி என்று முடிவு செய்து விடுகின்றனர். அங்கே உயிரை விட ஏமாற்றம் பெரிதாக எண்ணப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டு இறந்த பின்னர் அவர்களுக்கு மன அமைதி கிடைத்ததா என்பதைபற்றி அறிந்து கொள்ளும் வழி இங்கு இன்னும் உயிருடன் வாழ்பவர்கள் அறிய இயலுவதில்லை. அவ்வாறு வழி இருப்பின் உடலை விட்டு பிரிக்கப்படுகின்ற உயிர் எவ்வித வேதனைகளை துன்பங்களை அனுபவிக்கின்றது என்பது தெரியவரும்.

அவ்வாறு அறிகின்ற வாய்ப்பு உயிர் வாழ்கின்றவர்களுக்கு இயலாத ஒன்றாக இருப்பதனால் தற்கொலை, கொலை, விபத்து என்று மரணம் என்பது தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கின்ற வழியாக தொடர்கிறது. மனித உயிரைவிட காதல், பணம், தங்கம், மதிப்பெண், குடிபோதை போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மானுடம் எதை ஞானம், அறிவு, முக்கியத்துவம் என்று எவற்றை எண்ணுகிறது?


8/01/2013

"தண்ணி" படுத்தும்பாடு !!

காவேரி நீர் பங்கீடு பிரச்சினை, முல்லை பெரியார் நீர் தேக்கம் பற்றிய பிரச்சினை போன்ற நீர் பிரச்சினைகள் மாநிலத்திற்கு மாநிலம் சிலரை விரோதியாக பாவிக்கின்ற மனநிலையை உருவாக்கி வந்துள்ளது. அம்மாநிலங்களில் மழை பெய்து நீர் தேக்கங்களில் நிரம்பிய பின்னர் அணைகளை திறந்து விடுவதை அவர்களால் ஏன் நிறுத்த இயலவில்லை, அளவிற்கு அதிகமான மழை நீர் தேக்கி வைத்தால் தேக்கம் உடைந்து அருகில் இருக்கும் ஊர் அழிவை சந்திக்கும் என்பதால் தேக்கத்தில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு அணை நிரம்பிய பின்னர் திறந்து விடுகின்ற உபரி நீர் தமிழகத்திற்குள் வருகின்ற அதே சமயத்தில் தமிழகத்திலும் நல்ல மழை பெய்து பெருக்கெடுக்கும் நீர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பயிர் நிலங்களை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீடு மற்றும் உடமைகளை இழந்து உயிர் சேதமும் ஏற்ப்படும். அவ்வாறு சேதம் ஏற்ப்படுவதை தவிர்க்க உபரி நீரை திறக்க கூடாது என்று சேதம் ஏற்ப்படுகின்ற மாநிலம் கோரிக்கை மற்றும் வழக்கு தொடருமானால் கர்னாடக மாநிலமும் கேரளா மற்றும் ஆந்திர மாநிலமும் என்ன செய்யும்?

தேவையற்ற அல்லது தேக்கி  வைக்க இயலாத நிலையில் திறந்து விடப்படுகின்ற அதிகபட்ச நீர் வரத்து தமிழகத்திற்கு தற்போது போதுமான மழை இல்லை என்பதாலும் நீர் தேவை அதிகரித்து உபரி நீரை வாங்கிக்கொள்ளும் அவசியம் இருக்கிறது. தமிழகத்திற்கு போதுமான அளவு நீர் தேக்கங்களும் மழை நீரை சேமிக்க குளம், எரி, போன்ற நீர் சேமிப்பு பகுதிகள் அதிகரித்து மழை நீர் சேமிப்பு செய்தால் போதுமான அளவிற்கு நீர் நிலைகளில் ஊற்றுகள் வருடம் முழுவதற்கும் போதுமான குடிநீர் மற்றும் பாசன தேவைகள் சமாளிக்க முடியும். ஏரி குளம் போன்ற நீர் தேங்கும் பகுதிகள் தற்காலத்தில் மூடப்பட்டு அதன் மீது கட்டிடங்கள் அதிகரித்து வருவதால் நீர் ஊற்று இல்லாமல் அடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது பல இடங்களில் இல்லாமலும் போகிறது.

பெரும்பாலும் தமிழகத்தில் பெய்கின்ற மழை நீர் முழுவதும் வேகமாக ஓடிச்சென்று கடலில் கலந்து விடுகிறது. குறைவாக மழை பெய்தாலும் பெய்கின்ற மழை நீர் நிலத்தின் மேற்பரப்பை மட்டும் நனைத்துவிட்டு ஓடிவிடுவதால் ஈரப்பதம் அற்ற நிலமாக இருப்பதால் மரங்கள் செடி கொடிகள் வளரவும் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டம் இல்லாமல் குடிநீர் பஞ்சம் ஏற்ப்படுகிறது. ஏரிகளிலும் குளங்களிலும் நிற்க வேண்டிய மழை நீர் மக்கள் வசிக்கின்ற பெரும் சாலைகளிலும் தொடர்வண்டி பாதைகளிலும் தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பை ஏற்ப்படுத்துவது என்பது இந்தியாவில் எந்த அளவிற்கு தேச பரிபாலனம் சிறப்புடன் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. நகரத்தில் வசிக்கும் பலர் மழையை விரும்புவதே இல்லை. மழைக்கு பின்னர் சாலைகள் குண்டும் குழியுமாய் மனித உயிர்களை பறிக்கின்ற நீர் தேக்கங்களாக மாறிவிடுவதுதான் இதற்க்கு காரணம்.

நகரை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் சீர் செய்யப்படாத சாலைகள் மழை சிறிது பெய்தால் கூட நரகமாகி விடுவதால் மழையை வெறுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடி வருகிறது. ஒருபுறம் மழை இல்லாமல் நீர் பற்றாக்குறை மக்களுக்கு வேதனையை அளித்து வருகிறது என்றால் மறுபுறம் மழை பெய்தால் சாலைகளில் ஏற்ப்படுகின்ற நீர் தேக்கமும் அதனால் ஏற்ப்படுகின்ற விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் இதைவிட இன்னும் மோசமான பாதிப்பு கழிவுநீரும் குடிநீரும் ஒன்று கலந்து மக்களை பாடுபடுத்தும், தேங்கி நிற்கின்ற மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி பெருகி புதிய நோய்களை உருவாக்கும்; கொசுக்களை அழிக்க எதோ புகை என்ற பெயரில் என்றைகாவது ஒருநாள் ஒரு பகுதியில் அடிக்கப்படும்.

இவ்வாறு மழை பெய்வதால் ஏற்ப்படுகின்ற பிரச்சினை பெரும் பிரச்சினை ஒருபுறம் என்றால் மறுபுறம் மழையின்மையால் குடிநீர் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும், அப்படியே காசு கொடுத்து வாங்கினால் கூட அந்த குடிநீர் எந்த அளவிற்கு சுகாதாரமானது என்பதற்கு உத்திரவாதம் ஒன்றும் கிடையாது. விவசாயிகளின் வேதனைகள். மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பொதுமக்களின் பாடுகளை வார்த்தைகளில் சொல்லி மாளாது. இதனால்தானோ என்னவோ நம்ம ஊர் குழந்தைகள் "ரெயின் ரெயின் கோ அவே, கம் அகென் கிரான்மாஸ் வாஷிங் டே" என்று மனப்பாடம் செய்ய பழக்குவிக்கிரார்களோ? "தண்ணி" என்பது தமிழகத்தை எல்லா வகையிலும் பாடு படுத்துவதை யாரும் மறுக்க இயலாது.