Translate

7/09/2013

வெளிப்படையாக பேசுகிறேன்.......

"வெளிப்படையாக பேசுகிறேன்", "நான் ஒரு திறந்த புத்தகம்", சகஜமாக பழகும் குணம் என்று கூறும் பலர் அவற்றால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளைப் பற்றி யோசிப்பது இல்லை. வெளிப்படையாக வாழ்வது என்பது மிகவும் அரிதான செயல் ஆனால் அது சில சமயங்களில் ஒரு துப்பாக்கியால் ஒன்றை குறி பார்த்து சுடுகின்ற போது அதன் உள்ளிருந்து வெளியேறும் குண்டுகள் நாம் குறி வைக்கின்ற இடத்தை நோக்கி மட்டும் சுடாமல் நமது மண்டை அல்லது மார்பை துளைக்கின்ற வகையில் உண்டாக்கப்படும் துப்பாக்கிக்கு சமமானது. திருமணத்திற்கு முன்னர் தனது பெற்றோருடன் மிகவும் அன்பாக வெளிப்படையாக வாழுகின்ற பழக்கத்தை உடையவர்கள் அப்பழக்கத்தை தான் நெருங்கி பழகுகின்ற அனைவரிடமும் தொடர்வது என்பது பல சமயங்களில் ஆபத்தான அல்லது இக்கட்டான சூழல்களை உருவாக்கி பின்னர் பிரச்சினைக்குள் சிக்கிவிட்டு அதிலிருந்து வெளியே வருவதற்கு வழி அறியாமல் தற்கொலை, வீட்டை விட்டு வெளியேறுதல் போன்ற அதிகபட்ச பிரச்சினைகளை வருவித்துக் கொள்ளும் நிலை ஏற்ப்படும்.

குழந்தை பருவத்தில் இருந்தே சிலருக்கு எதையும் எல்லாரிடமும் பேசி செயல்படுதல் என்பது மிகவும் சிரமமான செயலாக இருக்கும், அவ்வாறான குணம் கொண்டவர் பிரச்சினைகள் அற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ இயலும் என்று கூறுவது கடினம். அவரது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எங்கே யாரிடம் சென்று பேசி அறிவது என்கின்ற குழப்பம் அதிகமாக காணப்படும், சமாளிக்க தெரியாமல் பல சமயங்களில் மனச்சோர்வு அடைந்து சமூக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி விடுவார்கள். தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் மிகவும் சிறிய பிரச்சினைகளுக்கு கூட முடிவெடுக்க இயலாமல் தடுமாறி தயக்கம் காட்டுவர். நாளடைவில் ஒருவித இனம் தெரியாத பயம் அவருக்குள் குடியமர்த்தப்படும். யார் மீதும் நம்பிக்கை இல்லாத நிலையில் தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வுக்குள் அடிக்கடி சென்றுவிடுவார்கள்.

சிலர் கோடைவிடுமுறைக்கு அல்லது உறவினரின் திருமணம் என்று தாங்கள் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல இருப்பதை குறித்த மகிழ்ச்சியில் மிகவும் சத்தமாக தொலைபேசி, கைபேசி, கடைவீதி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிறுத்தம், என்று எங்கெயெல்லாம் ஆட்களை சந்திக்கின்றார்களோ அங்கே தங்களை மறந்து அவற்றை விவரித்து பேசுவார்கள். "பேஷ் பேஷ் ..இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்" என்று அதற்காகவே காத்து சுற்றிக்கொண்டிருக்கும் "வல்லூருகள்" எரிவாயு சிலிண்டருடன் [நமக்கு மாதம் ஒரு எரிவாயு சிலிண்டெர் வாங்குவதற்கே திண்டாட்டம் இவர்களுக்கு BLOCKல எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுத்து வாங்கிவிடுவார்களோ அல்லது அதையும் திருடுவார்களோ ] ஆட்கள் இல்லாத வீட்டிற்கு விருந்தாளியாக வந்திறங்கி தக்க சமயம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து சேமித்து வைத்த பணம் நகை எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு செல்லும்.

முன்பெல்லாம் ஒரு வீட்டில் திருடு அல்லது கொலை சம்பவம் என்றால் முதலில் அவ்வீட்டின் வேலைக்காரர்களை அடுத்தது காரோட்டியை சந்தேகப்பட்டு கைது செய்வார்கள், தற்போது கொள்ளையர்களை பிடிக்க இயலாமல் அடுத்தடுத்து அச்செயல்கள் தொடர்கதையாகி வருகிறது இதற்க்கு காரணம் எங்கே யாரிடம் எவ்வளவு நகை மற்றும் ரொக்கம் கையிருப்பு இருக்கிறது என்பதை திட்டமிட்டு அறிந்து கொள்ளை அடிக்கின்றனர். அதே போன்று சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதும் அதிகரித்து வருகின்ற இன்னொரு ஆபத்து, சிறுவர்கள் மட்டும் என்றில்லாமல் பெண்களும் கல்லூரியில் பள்ளியில் படிக்கின்ற வயதுவந்தவர்களும் இத்தகைய கொடுமைக்கு ஆளாக காரணம் எங்கே யாரிடம் இத்தகைய வன்முறை செயலுக்கான ஆபத்து காத்திருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலாததும், அதிக அளவில் பெண்கள் குழந்தைகள் பள்ளி கல்லூரி வேலை என்று வெளியே செல்லுகின்ற சூழல் அதிகரித்திருப்பதும்தான். பாலியல் வன்கொடுமை செய்பவர் பெரும்பாலும் குடிப்பழக்கம் உடையவர்களாக இருப்பதும் இன்னொரு காரணம்.

வெளிப்படையாக பேசி பழகுவதில் தனக்கும் பிறருக்கும் எவ்விதத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு கொடுக்காமல் கவனம் செலுத்துவது முக்கியமானது. வெளிப்படையாக பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு பிறரை புண்படுத்தும் வார்த்தைகளால் விமரிசிப்பது கேலி கிண்டல் செய்வது என்பது தவறு என்று அறிந்தும் செய்வது ஒருநாள் ஆபத்தை உருவாக்கும். கணவனிடம் மனைவியும் மனைவியிடம் கணவனும் மிகவும் வெளிப்படை என்பதை உணர்த்துவதற்காக சொல்லும் பல உண்மைகள் அல்லது பொய்கள் வாழ்க்கையில் நிச்சயம் பிரச்சினைகளை உருவாக்கும். மனைவிக்கு உண்மையானவனாக இருக்கிறேன் பேர்வழி என்று பலர் திருமணத்திற்க்கு பின்னர் தங்கள் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் நண்பர்களுடன் வைத்திருந்த அன்னியோன்னியத்தை விட்டுவிடுவார்கள், அது மிகவும் கொடுமையானது. உண்மையாகவே சில மனைவிகள் அவ்வாறு கணவனை தடுத்தாள்வதும் உண்டு. பல கணவர்கள் மனைவியை சாக்காக வைத்து ஏனையோரிடமிருந்து விலகிவிடுவதும் உண்டு. அவ்வாறு விலகுவதால் பழியை சுமப்பது மனைவிகளாக இருப்பதுண்டு.

ஏதேனும் பிரச்சினை என்று வந்துவிட்டால் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ நண்பர்களிடமோ தனது மனைவியை தூது அனுப்பி அதன் மூலம் உதவி பெற்றுவிட முயற்சி செய்யும் கணவர்கள் உண்டு. இப்படிப்பட்ட கணவர்களிடம் மனைவியாக வாழும் பெண்கள் புத்திசாலிகளாக இருப்பார்களேயானால் கணவர் அதிஷ்டகாரர்தான். இல்லையென்றால் பிரச்சினை தீர்கின்ற வழி அறியாமல் தற்கொலை முயற்சி செய்யும் நபர்களும் உண்டு. வாழ்க்கை என்பது பிரச்சினைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பல சமயங்களில் நாமே நமது பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்ற நிலை ஏற்ப்படுகிறது, அது பரிதாபத்திற்குரியது. எங்கே எப்படி பிரச்சினை உருவாகிறது என்பதை நிதானிக்க தவறிவிடுகின்ற காரணத்தினால் சிறிய பிரச்சினையாக இருந்தால் கூட அதை சமாளிக்க வழி கிடைக்காமல் போவதுண்டு. தானத்தில் மிக சிறந்தது நிதானம் மட்டுமே. சிலருக்கு பிரச்சினைகள் அவர்களை தேடிக்கொண்டு வரும், சிலர் பிரச்சினைகளை தேடிக்கொண்டு போவார்கள்.

தவிர்ப்பது அல்லது சமாளிப்பதற்கு புத்திசாலியாக, சாமர்த்தியமாக, விவரமானவராக இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்படுவதை விட; பிரச்சினைகளை கண்டு பயந்து நடுங்காமல், கோழையாக இல்லாமல் வருவதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பழக்கப்படுத்தி கொள்வது சிறந்த முறை என நான் கருதுகிறேன்.