Translate

7/31/2013

கவனம் வைப்பது அவசியம்.

மனிதனாக பிறந்த பின்னர் பசி தாகம் தூக்கம் போன்ற முக்கியமானவற்றை உடலின் உறுப்புகள் தானே தங்கள் இயக்கத்தால் செய்து விடுகிறது, வாயின் உள் சென்ற பொருள் மீண்டும் கழிவாக வெளியேறி கடமைகளை சரி செய்கிறது. இவற்றை இயற்க்கை என்று நாம் கூறுகிறோம் இவ்வித இயற்க்கை மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கு பறவை போன்ற உயிரினங்களுக்கும் பொதுவான நிகழ்வு. இவற்றை தாண்டி வேறு சில இயற்க்கை நிகழ்வுகளும் மனிதனுக்கு உண்டு. குழந்தையிலிருந்து பருவம் அடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் புணர்வு கொள்ளும் உணர்வு உண்டு; இவ்வுணர்வு கூட மிருகம் மற்றும் பறவை போன்ற எல்லா உயிரினங்களுக்கும் உண்டு; மனித உணர்வுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக மனிதனுக்கே உரிய உணர்வாக உள்ள சிரிப்பதும் அழுவதும் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால் அதன் நுரையீரல் இயங்க துவங்காது, அழுகையின் மூலம் மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் மனித குழந்தை வளர்கிறது. குழந்தைக்கு அழுகை மிகவும் அவசியமாகிறது. அதே குழந்தை மூச்சு நிற்காமல் தொடர் அழுகை வெளிப்படுத்தும் என்றால் அக்குழந்தை தனக்கு ஏற்ப்படுகின்ற உபாதைகளை வெளிப்படுத்த அவ்வழுகை பயன்படுகிறது. அவ்வாறு குழந்தை அழவில்லை என்றால் அதன் உணர்வுகளை அறிவது இயலாததாக இருக்கும்.

வயதும் பருவமும் மாறுவதற்கு ஏற்ப உணர்வுகள் மாற்றம் அடைகிறது. பலவித சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கும் சிறார்கள் அவ்வயதிர்கேற்ற செய்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செயல்படுவதை இந்திய தேசத்தில் பெரும்பான்மையாக காணமுடிகிறது. விளையாட்டிலும், மற்ற சமயங்களிலும் சிரித்து மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டிய வயதில் உணவிற்காக அலைந்து திரிந்து, திருட்டு பழக்கம் ஆட்கொண்டு போதை பொருள்களின் அடிமையாகி அவ்வயதிற்கே உரிய உணர்வுகளை இழந்து, மறுவாழ்வு இல்லங்களில் வளர்ந்து வெளியேறும் இளைஞர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளாக மாறுகின்ற சூழலுக்கு தள்ளப்படுவதை காண முடிகிறது.

குடும்பங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் அவ்வயதிற்குறிய குணங்களுடன் வளர்கின்றனரா என்பதும் கேள்விதான். மருந்திற்கு கூட சிரிப்பென்ற ஒன்றை  இன்றைய இல்லங்களில் காண முடிவதில்லை. இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருப்பது நாம் அறிந்ததுதான். பலரின் வாழ்க்கையில் சிரிப்பும் அழுகையும் மறந்து பல வருடங்கள் ஆகி இருக்கும், மனிதர்கள் பணம் சம்பாதிக்கின்ற ஒரு சிந்தனையை தவிர அல்லது அன்றாட உணவிற்கு போராடுவதை தவிர வேறு எவ்வித சிந்தனைகளும் இன்றி செயல்படுதல் சாதாரண நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு செயல்படுவதல் உடலில் பலவித வியாதிகளை உருவாக்குகின்ற வழியாக அமைந்துவிடுகிறது. அழுகை என்பது எப்போது ஏற்ப்படுகிறது, ஏதேனும் சோகம் அல்லது தாங்க இயலாத உபாதை தங்களது உடலில் ஏற்ப்பட்டால் மட்டுமே,

பணம் பதவி பங்களா கார் சொத்து என்று சகலத்தையும் ஏதேனும் ஒரு வழியில் அடைந்து விடுவதே வாழ்க்கையின் மிகவும் முக்கிய குறிக்கோள் என்று இடைவிடாமல் உழைத்து அல்லது அபகரித்து அல்லது யாரையேனும் ஏமாற்றி அடைந்து விட்ட பின்னர் ஒருவரது வாழ்க்கையில் சிரிப்பை ஏற்ப்படுத்த இயலுமா, குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் அழுகையும் வராமல் சிரிக்கவும் இயலாமல் மனிதன் நடமாடுகின்ற விலங்கினமாக மாற்றமடைவதை காண முடிகிறதே தவிர தனது லட்சிய பாதையில் வெற்றிகரமாக வலம் வருகின்ற மாமனிதர்களாக காணமுடிவதில்லை? பிறப்பிலிருந்து இறப்பு வரையில் நினைவு தெரிந்து எத்தனை முறை மனம்விட்டு சிரித்தோம் என்பதும் எத்தனை முறை அழுதோம் என்பதும் யாரேனும் நினைத்து பார்ப்பதுண்டா?

அழுகை என்பது பலருக்கு சுயநல கருவியாக உருவாகின்ற சம்பவங்கள் நிறைய உண்டு. அடுத்தவரின் அவல நிலை கண்டு அடுத்தவரின் வேதனைக்காக நாம் துயர் அடைந்ததுண்டா? அவ்வாறு அழுததும் சிரித்ததும் எதற்க்காக என்று ஒரு சுய கணக்கெடுப்பு நமக்கு நாமே நடத்திக் கொண்டால் நாம் எப்படிபட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும். கொடுக்கபட்டிருக்கின்ற வாழ்நாளில் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் நமக்கு இருந்தால் இவ்வகையான சுய கணக்கெடுப்பு உதவிகரமாக இருக்கும். எத்தனை வருடம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதை நாம் நம்மை பற்றி அறிந்திருந்தால் மரணம் என்பது அச்சுறுத்தலாக இருக்காது. அழுவதும் சிரிப்பதும் நம் நலனுக்காக மட்டும் என்று இதுவரையில் வாழ்ந்திருந்தால் இனிமேல் அதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு செயல்பட்டுதான் பார்ப்போமே; அதில் கிடைக்கும் சுகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அல்லவா?

தினசரி வாழ்க்கையில் சிரிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்ப்படுவதே இல்லை என்பதால்தான் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை விரும்பி ரசிக்கப்பட்டு எக்காலத்திலும் மக்களால் வரவேற்ப்புக்குள்ளாகி இருந்து வருகிறது. சிரிப்பது என்பதில் பலவகை இருப்பதாக கூறப்படுகிறது. ஆணவச்சிரிப்பு, ஆனந்த சிரிப்பு, ஏளன சிரிப்பு, தற்காலத்தில் உடல்நலம் கருதி பலர் ஒன்று கூடி குறிப்பிட்ட நேரம் வரை சிரிக்கின்றனர் என்று செய்திகள் உண்டு, இவ்வாறு  பல வகை சிரிப்பு சொல்லப்படுகிறது. ஆனால் அழுவதற்கு அவ்வாறு யாரும் ஒன்று கூடி தினமும் அழுவதாக செய்தி இதுவரையில் கிடையாது. கிராமப்புறங்களில் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக அழுவதற்கென்று காசு கொடுத்து சிலரை கூட்டி வந்து "ஒப்பாரி" வைக்க சொல்லுவார்கள் என்று கேள்வி. அங்கே கூட இறந்தவருக்காக அழுவதற்கு ஒருவரும் இல்லை என்பது தெரிகிறது. 1960களில் வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றை பார்க்க எனக்கு பிடிப்பது கிடையாது. யாராவது என்னை துணையாக வற்புறுத்தினால் கூட நான் அவருடன் இணைந்து செல்வதே கிடையாது. காசு கொடுத்து திரையரங்குகளில் [அக்காலத்தில் தொலைக்காட்சி கிடையாது] மூன்று மணி நேரம் அழுதுவிட்டு பின்னர் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள் தலைவலி உயிர் போகும். அதுவரையில் தொடர்ந்து இருட்டில் இருந்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும் போது கூட்டத்தில் தெளிவாக நிதானமாக நடப்பதற்கே சிரமமாக இருக்கும், அப்படி ஒரு அழுகை அழுது தீர்த்தாகி இருக்கும். இது போன்று அழுத அழுகையை கணக்கில் எடுக்க வேண்டாம், ஏனெனில் திரைப்படம் என்பது புனையப்பட்ட கதைகளை கொண்டு நடித்து உருவாக்கப்பட்டது இதில் உண்மை என்பது எத்தனை விழுக்காடு இருக்கும் என்று நாம் அறியோம்.

நாம் சந்தோஷமாக சிரித்த சம்பவங்களை நிச்சயம் நினைவு கூறுதல் அவசியம் அதைவிட அவசியம் அது எப்போது எதற்காக என்பதையும் நினைவில் கொள்வது, அடிக்கடி அவ்வாறு நினைவுபடுத்தி கொள்வதால் நாம் நமது உடல்நிலை தற்போது  எவ்வாறு உள்ளது என்பதை கணக்கீடு செய்து கொள்ள இயலும். எதற்கெடுத்தாலும் சிரிக்க தோன்றுகிறது என்றால் நமது மூளையில் ரசாயன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவ்உணர்வு மூலம் நமக்கு தெரிவிக்கிறது என்பதை அறிந்து உடனே மருத்துவரை அணுகுதல் அவசியப்படுகிறது.  நமது சூழலை அதற்கேற்றவாறு மாற்றியமைக்க இது உதவும். அதே போன்றதுதான் அழுகையும், தினம் தினம் அழுகை வருகிறது என்றால் அது உடலின் ரசாயன மாற்றம் வேறுபட்டிருக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். உணர்வுகளின் மாற்றத்தை வெளிப்படுத்துவது அழுகை கோபம் பசி சிரிப்பு உறக்கம் போன்ற உணர்வுகள் நமது உடல் நிலையை படம் பிடித்து காண்பிக்கும் இயற்க்கை நமக்கு அளித்திருக்கும் எளிய வழிகள். அதனால் அவற்றின் மீது கவனம் வைப்பது அவசியம்.