Translate

7/12/2013

கொஞ்சநாள் வாழ்ந்தாலும் .....

தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டப்படி தகுந்த தண்டனை அளிக்க இந்திய சட்டங்கள் போதுமான அளவு இருக்கின்ற போதும் அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிவகைகளும் ஏராளம் இருப்பதுதான் நமது நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம். சட்டம் பற்றி படித்து பட்டம் வாங்கினாலும் குற்றத்திலிருந்து தப்பிகின்ற சட்டங்களைப்பற்றி படித்து அதில் சிறப்புடன் செயல்படுகின்ற வழக்குகள் ஏராளம். குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதற்கு முன்னர் நடத்தப்படுகின்ற விசாரணை முடிவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் கால அளவும் குற்றவாளிகளுக்கு பலவிதங்களில் தப்பிக்கவும் பயன்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுகின்ற வரையில் குற்றம் செய்யாதவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிச்சயம் மரண அவஸ்த்தை.

தண்டனையுடன் கூடிய அபராதம் என்பது பொருளாதார நெருக்கடியில் வாழுகின்ற ஒருவருக்கு நிச்சயம் வேதனை. பொருளாதாரம் நிரம்பியவர்களுக்கு அதுவே மிகப்பெரிய வரப்பிரசாதம், பணத்தை வைத்து எதையும் செய்ய இயலும் என்கின்ற நிலை இன்றைக்கு குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு பெருந்துணையாக செயல்படுகிறது. வழிப்பறி, தங்க சங்கிலி பறிப்பு, ரூபாய் நோட்டுகள் அச்சிடுபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் எந்த வயதுடையவர்கள் என்றாலும் தண்டனை என்பது இலகுவாக இல்லாமல் கடினமாகவும் தப்பிக்க இயலாததாகவும் இருக்கவேண்டும். குற்றவாளிகள் மாணவர் என்ற பட்சத்தில் தண்டனை தளர்த்தப்படுவது மேலும் குற்றவாளிகளை உருவாக்கும் செயல்.

சமீபகாலமாக இளைஞர்கள் அதிக குற்றங்களை செய்வதால் குற்றங்களின் எண்ணிக்கை பெருகுவதை காணமுடிகிறது. தண்டனை என்பது குறைக்கப்படுவதுடன் தப்பிக்கும் முறைகள் எளிதாக்கப்படுவதும்தான் திருடு மற்றும் கொள்ளை அதிகரிப்பிற்கு காரணம். பிடிபடுகின்ற நபர்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் காண்பித்து அதன் பிறகு அதிகபட்ச தண்டனை கொடுத்தால் அதன் மூலம் ஏற்ப்படுகின்ற அவமானத்தை தாங்கி கொள்ள இயலாமல் புதிய குற்றவாளிகள் பெருகும் நிலை ஓரளவிற்கு குறையலாம். வாழவேண்டிய வயசு, காலமும் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது  குற்றங்கள் பெருகுவதற்கு எளிய வழியாக உள்ளது. மும்பை போன்ற நகரங்களில் கழுத்தில் தங்கம் அணிந்து வெளியில் நடமாடுகின்ற முறை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலுமாக கைவிடப்பட்டது.

மும்பை மற்றுமின்றி வடஇந்திய நகரங்களில் தங்க ஆபரணம் அணிந்துகொள்வதை வழக்கத்திலிருந்து நிறுத்தியதற்கு அடிப்படையான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் திருடர்களின் ஆபத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு நடைமுறையில் இருந்து வருகிறது. வட இந்திய திருடர்களின் பார்வை தற்போது தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளது, உள்ளூர் திருடர்கள், வெளியூர் திருடர்கள் எல்லோரும் தமிழகத்தை குறி வைத்திருப்பது  துர்பாக்கியம். லஞ்சம் வாங்கிய பணத்தில் சேமித்த தங்க ஆபரணங்களும் ரொக்கமும் பறிபோனால் போலீசில் புகார் கொடுக்க யோசிப்பவர்கள் உண்டு. நேர்மையாக உழைத்து சேமித்த பணத்தில் சிறுக சிறுக சேமித்த தங்க ஆபரணம் மற்றும் ரொக்கம் பறிபோனால் எந்த அளவிற்கு பாதிக்கபடுவார்கள் என்பதை சொல்லி அறிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை.

குடித்து கும்மாளம் அடிப்பதற்கு அடுத்தவரின் உடமைகளை கொள்ளையடித்து செல்லும் இளைஞர்கள் அதிக நாட்கள் நிம்மதியாக வாழ்ந்தனரா என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பொதுவான கருத்து: கொள்ளையடித்தவர் அதை வைத்து அதிக நாள் நிம்மதியுடன் வாழ இயலாது என்பது. ஒருமுறை திருடி அல்லது கொள்ளையடித்து அதை வைத்து சுகித்துவிட்டால் அப்பழக்கம் தொடரும் வாய்ப்பும் வந்துவிடுகிறது. பணம் எப்போதும் போதும் என்கின்ற மனநிலையை கொடுப்பதே இல்லை. அதிலும் உழைக்காமல் கிடைக்கின்ற பணத்தை செலவு செய்கின்ற வழிகளும் மிகவும் தரம் அற்றதாகவே இருக்கின்ற காரணத்தால் அதை கொண்டு வாழும் மனிதரின் தரமும் அவ்வாறே இருக்கும். அதன் முடிவு மட்டும் எப்படி தரமுடையதாக இருக்க முடியும். இன்றைய இளைஞர்களின் மனோபாவம் "கொஞ்சநாள் வாழ்ந்தாலும் சந்தோஷமா{குடியும் பெண்ணும்} இருந்து விட்டு சாகணும்" என்கின்ற மிகவும் "உயர்ந்த லட்சியம்" கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதற்கேற்ற வாழ்க்கை வாழ்வதற்கு கொலை கொள்ளை எதுவும் செய்யலாம் என்ற நம்பிக்கையூட்டும் திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடபட்டுகொண்டு வருகிறது .......திரைப்படங்களை பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்காதீர்கள், முதல் பாதியில் எல்லாவித தீய செயலிலும் ஈடுபடும் ஒருவர் கடைசி சில காட்சிகளில் முற்றிலும் முரணான தீர்வுடன் முற்றுபெறும் திரைப்படங்கள் போதிக்கின்ற நல்ல செய்தியை எடுத்துக்கொண்டவர் காண்பவர்களில் எத்தனை பேராக இருக்கபோகிறது.