Translate

7/31/2013

கவனம் வைப்பது அவசியம்.

மனிதனாக பிறந்த பின்னர் பசி தாகம் தூக்கம் போன்ற முக்கியமானவற்றை உடலின் உறுப்புகள் தானே தங்கள் இயக்கத்தால் செய்து விடுகிறது, வாயின் உள் சென்ற பொருள் மீண்டும் கழிவாக வெளியேறி கடமைகளை சரி செய்கிறது. இவற்றை இயற்க்கை என்று நாம் கூறுகிறோம் இவ்வித இயற்க்கை மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கு பறவை போன்ற உயிரினங்களுக்கும் பொதுவான நிகழ்வு. இவற்றை தாண்டி வேறு சில இயற்க்கை நிகழ்வுகளும் மனிதனுக்கு உண்டு. குழந்தையிலிருந்து பருவம் அடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் புணர்வு கொள்ளும் உணர்வு உண்டு; இவ்வுணர்வு கூட மிருகம் மற்றும் பறவை போன்ற எல்லா உயிரினங்களுக்கும் உண்டு; மனித உணர்வுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக மனிதனுக்கே உரிய உணர்வாக உள்ள சிரிப்பதும் அழுவதும் ஏனைய உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் அழவில்லை என்றால் அதன் நுரையீரல் இயங்க துவங்காது, அழுகையின் மூலம் மட்டுமே தனது உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் மனித குழந்தை வளர்கிறது. குழந்தைக்கு அழுகை மிகவும் அவசியமாகிறது. அதே குழந்தை மூச்சு நிற்காமல் தொடர் அழுகை வெளிப்படுத்தும் என்றால் அக்குழந்தை தனக்கு ஏற்ப்படுகின்ற உபாதைகளை வெளிப்படுத்த அவ்வழுகை பயன்படுகிறது. அவ்வாறு குழந்தை அழவில்லை என்றால் அதன் உணர்வுகளை அறிவது இயலாததாக இருக்கும்.

வயதும் பருவமும் மாறுவதற்கு ஏற்ப உணர்வுகள் மாற்றம் அடைகிறது. பலவித சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கும் சிறார்கள் அவ்வயதிர்கேற்ற செய்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு செயல்படுவதை இந்திய தேசத்தில் பெரும்பான்மையாக காணமுடிகிறது. விளையாட்டிலும், மற்ற சமயங்களிலும் சிரித்து மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டிய வயதில் உணவிற்காக அலைந்து திரிந்து, திருட்டு பழக்கம் ஆட்கொண்டு போதை பொருள்களின் அடிமையாகி அவ்வயதிற்கே உரிய உணர்வுகளை இழந்து, மறுவாழ்வு இல்லங்களில் வளர்ந்து வெளியேறும் இளைஞர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளாக மாறுகின்ற சூழலுக்கு தள்ளப்படுவதை காண முடிகிறது.

குடும்பங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் அவ்வயதிற்குறிய குணங்களுடன் வளர்கின்றனரா என்பதும் கேள்விதான். மருந்திற்கு கூட சிரிப்பென்ற ஒன்றை  இன்றைய இல்லங்களில் காண முடிவதில்லை. இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருப்பது நாம் அறிந்ததுதான். பலரின் வாழ்க்கையில் சிரிப்பும் அழுகையும் மறந்து பல வருடங்கள் ஆகி இருக்கும், மனிதர்கள் பணம் சம்பாதிக்கின்ற ஒரு சிந்தனையை தவிர அல்லது அன்றாட உணவிற்கு போராடுவதை தவிர வேறு எவ்வித சிந்தனைகளும் இன்றி செயல்படுதல் சாதாரண நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு செயல்படுவதல் உடலில் பலவித வியாதிகளை உருவாக்குகின்ற வழியாக அமைந்துவிடுகிறது. அழுகை என்பது எப்போது ஏற்ப்படுகிறது, ஏதேனும் சோகம் அல்லது தாங்க இயலாத உபாதை தங்களது உடலில் ஏற்ப்பட்டால் மட்டுமே,

பணம் பதவி பங்களா கார் சொத்து என்று சகலத்தையும் ஏதேனும் ஒரு வழியில் அடைந்து விடுவதே வாழ்க்கையின் மிகவும் முக்கிய குறிக்கோள் என்று இடைவிடாமல் உழைத்து அல்லது அபகரித்து அல்லது யாரையேனும் ஏமாற்றி அடைந்து விட்ட பின்னர் ஒருவரது வாழ்க்கையில் சிரிப்பை ஏற்ப்படுத்த இயலுமா, குறிப்பிட்ட வயதை கடந்த பின்னர் அழுகையும் வராமல் சிரிக்கவும் இயலாமல் மனிதன் நடமாடுகின்ற விலங்கினமாக மாற்றமடைவதை காண முடிகிறதே தவிர தனது லட்சிய பாதையில் வெற்றிகரமாக வலம் வருகின்ற மாமனிதர்களாக காணமுடிவதில்லை? பிறப்பிலிருந்து இறப்பு வரையில் நினைவு தெரிந்து எத்தனை முறை மனம்விட்டு சிரித்தோம் என்பதும் எத்தனை முறை அழுதோம் என்பதும் யாரேனும் நினைத்து பார்ப்பதுண்டா?

அழுகை என்பது பலருக்கு சுயநல கருவியாக உருவாகின்ற சம்பவங்கள் நிறைய உண்டு. அடுத்தவரின் அவல நிலை கண்டு அடுத்தவரின் வேதனைக்காக நாம் துயர் அடைந்ததுண்டா? அவ்வாறு அழுததும் சிரித்ததும் எதற்க்காக என்று ஒரு சுய கணக்கெடுப்பு நமக்கு நாமே நடத்திக் கொண்டால் நாம் எப்படிபட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும். கொடுக்கபட்டிருக்கின்ற வாழ்நாளில் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் நோக்கமும் நமக்கு இருந்தால் இவ்வகையான சுய கணக்கெடுப்பு உதவிகரமாக இருக்கும். எத்தனை வருடம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதை நாம் நம்மை பற்றி அறிந்திருந்தால் மரணம் என்பது அச்சுறுத்தலாக இருக்காது. அழுவதும் சிரிப்பதும் நம் நலனுக்காக மட்டும் என்று இதுவரையில் வாழ்ந்திருந்தால் இனிமேல் அதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு செயல்பட்டுதான் பார்ப்போமே; அதில் கிடைக்கும் சுகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அல்லவா?

தினசரி வாழ்க்கையில் சிரிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்ப்படுவதே இல்லை என்பதால்தான் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை விரும்பி ரசிக்கப்பட்டு எக்காலத்திலும் மக்களால் வரவேற்ப்புக்குள்ளாகி இருந்து வருகிறது. சிரிப்பது என்பதில் பலவகை இருப்பதாக கூறப்படுகிறது. ஆணவச்சிரிப்பு, ஆனந்த சிரிப்பு, ஏளன சிரிப்பு, தற்காலத்தில் உடல்நலம் கருதி பலர் ஒன்று கூடி குறிப்பிட்ட நேரம் வரை சிரிக்கின்றனர் என்று செய்திகள் உண்டு, இவ்வாறு  பல வகை சிரிப்பு சொல்லப்படுகிறது. ஆனால் அழுவதற்கு அவ்வாறு யாரும் ஒன்று கூடி தினமும் அழுவதாக செய்தி இதுவரையில் கிடையாது. கிராமப்புறங்களில் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக அழுவதற்கென்று காசு கொடுத்து சிலரை கூட்டி வந்து "ஒப்பாரி" வைக்க சொல்லுவார்கள் என்று கேள்வி. அங்கே கூட இறந்தவருக்காக அழுவதற்கு ஒருவரும் இல்லை என்பது தெரிகிறது. 1960களில் வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றை பார்க்க எனக்கு பிடிப்பது கிடையாது. யாராவது என்னை துணையாக வற்புறுத்தினால் கூட நான் அவருடன் இணைந்து செல்வதே கிடையாது. காசு கொடுத்து திரையரங்குகளில் [அக்காலத்தில் தொலைக்காட்சி கிடையாது] மூன்று மணி நேரம் அழுதுவிட்டு பின்னர் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள் தலைவலி உயிர் போகும். அதுவரையில் தொடர்ந்து இருட்டில் இருந்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும் போது கூட்டத்தில் தெளிவாக நிதானமாக நடப்பதற்கே சிரமமாக இருக்கும், அப்படி ஒரு அழுகை அழுது தீர்த்தாகி இருக்கும். இது போன்று அழுத அழுகையை கணக்கில் எடுக்க வேண்டாம், ஏனெனில் திரைப்படம் என்பது புனையப்பட்ட கதைகளை கொண்டு நடித்து உருவாக்கப்பட்டது இதில் உண்மை என்பது எத்தனை விழுக்காடு இருக்கும் என்று நாம் அறியோம்.

நாம் சந்தோஷமாக சிரித்த சம்பவங்களை நிச்சயம் நினைவு கூறுதல் அவசியம் அதைவிட அவசியம் அது எப்போது எதற்காக என்பதையும் நினைவில் கொள்வது, அடிக்கடி அவ்வாறு நினைவுபடுத்தி கொள்வதால் நாம் நமது உடல்நிலை தற்போது  எவ்வாறு உள்ளது என்பதை கணக்கீடு செய்து கொள்ள இயலும். எதற்கெடுத்தாலும் சிரிக்க தோன்றுகிறது என்றால் நமது மூளையில் ரசாயன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவ்உணர்வு மூலம் நமக்கு தெரிவிக்கிறது என்பதை அறிந்து உடனே மருத்துவரை அணுகுதல் அவசியப்படுகிறது.  நமது சூழலை அதற்கேற்றவாறு மாற்றியமைக்க இது உதவும். அதே போன்றதுதான் அழுகையும், தினம் தினம் அழுகை வருகிறது என்றால் அது உடலின் ரசாயன மாற்றம் வேறுபட்டிருக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். உணர்வுகளின் மாற்றத்தை வெளிப்படுத்துவது அழுகை கோபம் பசி சிரிப்பு உறக்கம் போன்ற உணர்வுகள் நமது உடல் நிலையை படம் பிடித்து காண்பிக்கும் இயற்க்கை நமக்கு அளித்திருக்கும் எளிய வழிகள். அதனால் அவற்றின் மீது கவனம் வைப்பது அவசியம்.7/12/2013

கொஞ்சநாள் வாழ்ந்தாலும் .....

தவறு செய்பவர் யாராக இருந்தாலும் சட்டப்படி தகுந்த தண்டனை அளிக்க இந்திய சட்டங்கள் போதுமான அளவு இருக்கின்ற போதும் அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிவகைகளும் ஏராளம் இருப்பதுதான் நமது நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு மிக முக்கிய காரணம். சட்டம் பற்றி படித்து பட்டம் வாங்கினாலும் குற்றத்திலிருந்து தப்பிகின்ற சட்டங்களைப்பற்றி படித்து அதில் சிறப்புடன் செயல்படுகின்ற வழக்குகள் ஏராளம். குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதற்கு முன்னர் நடத்தப்படுகின்ற விசாரணை முடிவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் கால அளவும் குற்றவாளிகளுக்கு பலவிதங்களில் தப்பிக்கவும் பயன்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்படுகின்ற வரையில் குற்றம் செய்யாதவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிச்சயம் மரண அவஸ்த்தை.

தண்டனையுடன் கூடிய அபராதம் என்பது பொருளாதார நெருக்கடியில் வாழுகின்ற ஒருவருக்கு நிச்சயம் வேதனை. பொருளாதாரம் நிரம்பியவர்களுக்கு அதுவே மிகப்பெரிய வரப்பிரசாதம், பணத்தை வைத்து எதையும் செய்ய இயலும் என்கின்ற நிலை இன்றைக்கு குற்ற செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு பெருந்துணையாக செயல்படுகிறது. வழிப்பறி, தங்க சங்கிலி பறிப்பு, ரூபாய் நோட்டுகள் அச்சிடுபவர்கள், கொள்ளை அடிப்பவர்கள் எந்த வயதுடையவர்கள் என்றாலும் தண்டனை என்பது இலகுவாக இல்லாமல் கடினமாகவும் தப்பிக்க இயலாததாகவும் இருக்கவேண்டும். குற்றவாளிகள் மாணவர் என்ற பட்சத்தில் தண்டனை தளர்த்தப்படுவது மேலும் குற்றவாளிகளை உருவாக்கும் செயல்.

சமீபகாலமாக இளைஞர்கள் அதிக குற்றங்களை செய்வதால் குற்றங்களின் எண்ணிக்கை பெருகுவதை காணமுடிகிறது. தண்டனை என்பது குறைக்கப்படுவதுடன் தப்பிக்கும் முறைகள் எளிதாக்கப்படுவதும்தான் திருடு மற்றும் கொள்ளை அதிகரிப்பிற்கு காரணம். பிடிபடுகின்ற நபர்களை பொதுமக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் காண்பித்து அதன் பிறகு அதிகபட்ச தண்டனை கொடுத்தால் அதன் மூலம் ஏற்ப்படுகின்ற அவமானத்தை தாங்கி கொள்ள இயலாமல் புதிய குற்றவாளிகள் பெருகும் நிலை ஓரளவிற்கு குறையலாம். வாழவேண்டிய வயசு, காலமும் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது  குற்றங்கள் பெருகுவதற்கு எளிய வழியாக உள்ளது. மும்பை போன்ற நகரங்களில் கழுத்தில் தங்கம் அணிந்து வெளியில் நடமாடுகின்ற முறை ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பே முற்றிலுமாக கைவிடப்பட்டது.

மும்பை மற்றுமின்றி வடஇந்திய நகரங்களில் தங்க ஆபரணம் அணிந்துகொள்வதை வழக்கத்திலிருந்து நிறுத்தியதற்கு அடிப்படையான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் திருடர்களின் ஆபத்தையும் கருத்தில் கொண்டே அவ்வாறு நடைமுறையில் இருந்து வருகிறது. வட இந்திய திருடர்களின் பார்வை தற்போது தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளது, உள்ளூர் திருடர்கள், வெளியூர் திருடர்கள் எல்லோரும் தமிழகத்தை குறி வைத்திருப்பது  துர்பாக்கியம். லஞ்சம் வாங்கிய பணத்தில் சேமித்த தங்க ஆபரணங்களும் ரொக்கமும் பறிபோனால் போலீசில் புகார் கொடுக்க யோசிப்பவர்கள் உண்டு. நேர்மையாக உழைத்து சேமித்த பணத்தில் சிறுக சிறுக சேமித்த தங்க ஆபரணம் மற்றும் ரொக்கம் பறிபோனால் எந்த அளவிற்கு பாதிக்கபடுவார்கள் என்பதை சொல்லி அறிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை.

குடித்து கும்மாளம் அடிப்பதற்கு அடுத்தவரின் உடமைகளை கொள்ளையடித்து செல்லும் இளைஞர்கள் அதிக நாட்கள் நிம்மதியாக வாழ்ந்தனரா என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பொதுவான கருத்து: கொள்ளையடித்தவர் அதை வைத்து அதிக நாள் நிம்மதியுடன் வாழ இயலாது என்பது. ஒருமுறை திருடி அல்லது கொள்ளையடித்து அதை வைத்து சுகித்துவிட்டால் அப்பழக்கம் தொடரும் வாய்ப்பும் வந்துவிடுகிறது. பணம் எப்போதும் போதும் என்கின்ற மனநிலையை கொடுப்பதே இல்லை. அதிலும் உழைக்காமல் கிடைக்கின்ற பணத்தை செலவு செய்கின்ற வழிகளும் மிகவும் தரம் அற்றதாகவே இருக்கின்ற காரணத்தால் அதை கொண்டு வாழும் மனிதரின் தரமும் அவ்வாறே இருக்கும். அதன் முடிவு மட்டும் எப்படி தரமுடையதாக இருக்க முடியும். இன்றைய இளைஞர்களின் மனோபாவம் "கொஞ்சநாள் வாழ்ந்தாலும் சந்தோஷமா{குடியும் பெண்ணும்} இருந்து விட்டு சாகணும்" என்கின்ற மிகவும் "உயர்ந்த லட்சியம்" கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதற்கேற்ற வாழ்க்கை வாழ்வதற்கு கொலை கொள்ளை எதுவும் செய்யலாம் என்ற நம்பிக்கையூட்டும் திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடபட்டுகொண்டு வருகிறது .......திரைப்படங்களை பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்காதீர்கள், முதல் பாதியில் எல்லாவித தீய செயலிலும் ஈடுபடும் ஒருவர் கடைசி சில காட்சிகளில் முற்றிலும் முரணான தீர்வுடன் முற்றுபெறும் திரைப்படங்கள் போதிக்கின்ற நல்ல செய்தியை எடுத்துக்கொண்டவர் காண்பவர்களில் எத்தனை பேராக இருக்கபோகிறது.

7/09/2013

வெளிப்படையாக பேசுகிறேன்.......

"வெளிப்படையாக பேசுகிறேன்", "நான் ஒரு திறந்த புத்தகம்", சகஜமாக பழகும் குணம் என்று கூறும் பலர் அவற்றால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளைப் பற்றி யோசிப்பது இல்லை. வெளிப்படையாக வாழ்வது என்பது மிகவும் அரிதான செயல் ஆனால் அது சில சமயங்களில் ஒரு துப்பாக்கியால் ஒன்றை குறி பார்த்து சுடுகின்ற போது அதன் உள்ளிருந்து வெளியேறும் குண்டுகள் நாம் குறி வைக்கின்ற இடத்தை நோக்கி மட்டும் சுடாமல் நமது மண்டை அல்லது மார்பை துளைக்கின்ற வகையில் உண்டாக்கப்படும் துப்பாக்கிக்கு சமமானது. திருமணத்திற்கு முன்னர் தனது பெற்றோருடன் மிகவும் அன்பாக வெளிப்படையாக வாழுகின்ற பழக்கத்தை உடையவர்கள் அப்பழக்கத்தை தான் நெருங்கி பழகுகின்ற அனைவரிடமும் தொடர்வது என்பது பல சமயங்களில் ஆபத்தான அல்லது இக்கட்டான சூழல்களை உருவாக்கி பின்னர் பிரச்சினைக்குள் சிக்கிவிட்டு அதிலிருந்து வெளியே வருவதற்கு வழி அறியாமல் தற்கொலை, வீட்டை விட்டு வெளியேறுதல் போன்ற அதிகபட்ச பிரச்சினைகளை வருவித்துக் கொள்ளும் நிலை ஏற்ப்படும்.

குழந்தை பருவத்தில் இருந்தே சிலருக்கு எதையும் எல்லாரிடமும் பேசி செயல்படுதல் என்பது மிகவும் சிரமமான செயலாக இருக்கும், அவ்வாறான குணம் கொண்டவர் பிரச்சினைகள் அற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ இயலும் என்று கூறுவது கடினம். அவரது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எங்கே யாரிடம் சென்று பேசி அறிவது என்கின்ற குழப்பம் அதிகமாக காணப்படும், சமாளிக்க தெரியாமல் பல சமயங்களில் மனச்சோர்வு அடைந்து சமூக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி விடுவார்கள். தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்வதால் பல சந்தர்ப்பங்களில் மிகவும் சிறிய பிரச்சினைகளுக்கு கூட முடிவெடுக்க இயலாமல் தடுமாறி தயக்கம் காட்டுவர். நாளடைவில் ஒருவித இனம் தெரியாத பயம் அவருக்குள் குடியமர்த்தப்படும். யார் மீதும் நம்பிக்கை இல்லாத நிலையில் தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வுக்குள் அடிக்கடி சென்றுவிடுவார்கள்.

சிலர் கோடைவிடுமுறைக்கு அல்லது உறவினரின் திருமணம் என்று தாங்கள் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல இருப்பதை குறித்த மகிழ்ச்சியில் மிகவும் சத்தமாக தொலைபேசி, கைபேசி, கடைவீதி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிறுத்தம், என்று எங்கெயெல்லாம் ஆட்களை சந்திக்கின்றார்களோ அங்கே தங்களை மறந்து அவற்றை விவரித்து பேசுவார்கள். "பேஷ் பேஷ் ..இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்" என்று அதற்காகவே காத்து சுற்றிக்கொண்டிருக்கும் "வல்லூருகள்" எரிவாயு சிலிண்டருடன் [நமக்கு மாதம் ஒரு எரிவாயு சிலிண்டெர் வாங்குவதற்கே திண்டாட்டம் இவர்களுக்கு BLOCKல எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுத்து வாங்கிவிடுவார்களோ அல்லது அதையும் திருடுவார்களோ ] ஆட்கள் இல்லாத வீட்டிற்கு விருந்தாளியாக வந்திறங்கி தக்க சமயம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து சேமித்து வைத்த பணம் நகை எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு செல்லும்.

முன்பெல்லாம் ஒரு வீட்டில் திருடு அல்லது கொலை சம்பவம் என்றால் முதலில் அவ்வீட்டின் வேலைக்காரர்களை அடுத்தது காரோட்டியை சந்தேகப்பட்டு கைது செய்வார்கள், தற்போது கொள்ளையர்களை பிடிக்க இயலாமல் அடுத்தடுத்து அச்செயல்கள் தொடர்கதையாகி வருகிறது இதற்க்கு காரணம் எங்கே யாரிடம் எவ்வளவு நகை மற்றும் ரொக்கம் கையிருப்பு இருக்கிறது என்பதை திட்டமிட்டு அறிந்து கொள்ளை அடிக்கின்றனர். அதே போன்று சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதும் அதிகரித்து வருகின்ற இன்னொரு ஆபத்து, சிறுவர்கள் மட்டும் என்றில்லாமல் பெண்களும் கல்லூரியில் பள்ளியில் படிக்கின்ற வயதுவந்தவர்களும் இத்தகைய கொடுமைக்கு ஆளாக காரணம் எங்கே யாரிடம் இத்தகைய வன்முறை செயலுக்கான ஆபத்து காத்திருக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள இயலாததும், அதிக அளவில் பெண்கள் குழந்தைகள் பள்ளி கல்லூரி வேலை என்று வெளியே செல்லுகின்ற சூழல் அதிகரித்திருப்பதும்தான். பாலியல் வன்கொடுமை செய்பவர் பெரும்பாலும் குடிப்பழக்கம் உடையவர்களாக இருப்பதும் இன்னொரு காரணம்.

வெளிப்படையாக பேசி பழகுவதில் தனக்கும் பிறருக்கும் எவ்விதத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு கொடுக்காமல் கவனம் செலுத்துவது முக்கியமானது. வெளிப்படையாக பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு பிறரை புண்படுத்தும் வார்த்தைகளால் விமரிசிப்பது கேலி கிண்டல் செய்வது என்பது தவறு என்று அறிந்தும் செய்வது ஒருநாள் ஆபத்தை உருவாக்கும். கணவனிடம் மனைவியும் மனைவியிடம் கணவனும் மிகவும் வெளிப்படை என்பதை உணர்த்துவதற்காக சொல்லும் பல உண்மைகள் அல்லது பொய்கள் வாழ்க்கையில் நிச்சயம் பிரச்சினைகளை உருவாக்கும். மனைவிக்கு உண்மையானவனாக இருக்கிறேன் பேர்வழி என்று பலர் திருமணத்திற்க்கு பின்னர் தங்கள் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் நண்பர்களுடன் வைத்திருந்த அன்னியோன்னியத்தை விட்டுவிடுவார்கள், அது மிகவும் கொடுமையானது. உண்மையாகவே சில மனைவிகள் அவ்வாறு கணவனை தடுத்தாள்வதும் உண்டு. பல கணவர்கள் மனைவியை சாக்காக வைத்து ஏனையோரிடமிருந்து விலகிவிடுவதும் உண்டு. அவ்வாறு விலகுவதால் பழியை சுமப்பது மனைவிகளாக இருப்பதுண்டு.

ஏதேனும் பிரச்சினை என்று வந்துவிட்டால் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ நண்பர்களிடமோ தனது மனைவியை தூது அனுப்பி அதன் மூலம் உதவி பெற்றுவிட முயற்சி செய்யும் கணவர்கள் உண்டு. இப்படிப்பட்ட கணவர்களிடம் மனைவியாக வாழும் பெண்கள் புத்திசாலிகளாக இருப்பார்களேயானால் கணவர் அதிஷ்டகாரர்தான். இல்லையென்றால் பிரச்சினை தீர்கின்ற வழி அறியாமல் தற்கொலை முயற்சி செய்யும் நபர்களும் உண்டு. வாழ்க்கை என்பது பிரச்சினைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பல சமயங்களில் நாமே நமது பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்ற நிலை ஏற்ப்படுகிறது, அது பரிதாபத்திற்குரியது. எங்கே எப்படி பிரச்சினை உருவாகிறது என்பதை நிதானிக்க தவறிவிடுகின்ற காரணத்தினால் சிறிய பிரச்சினையாக இருந்தால் கூட அதை சமாளிக்க வழி கிடைக்காமல் போவதுண்டு. தானத்தில் மிக சிறந்தது நிதானம் மட்டுமே. சிலருக்கு பிரச்சினைகள் அவர்களை தேடிக்கொண்டு வரும், சிலர் பிரச்சினைகளை தேடிக்கொண்டு போவார்கள்.

தவிர்ப்பது அல்லது சமாளிப்பதற்கு புத்திசாலியாக, சாமர்த்தியமாக, விவரமானவராக இருக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்படுவதை விட; பிரச்சினைகளை கண்டு பயந்து நடுங்காமல், கோழையாக இல்லாமல் வருவதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பழக்கப்படுத்தி கொள்வது சிறந்த முறை என நான் கருதுகிறேன்.

7/06/2013

சமுதாய முன்னேற்றம்

இரண்டும் கெட்ட நிலை:

 இந்நிலையில் ஒரு தனிமனிதனோ, சமுதாயமோ, நாடோ எதுவானாலும் இடையூறுகளை இழப்புகளை மற்றும் குழப்பமான முடிவுகளை கொண்ட நடைமுறையில் இயங்கும் நிலை. தற்போது இந்திய நாட்டின் பொருளாதாரம், நாகரீகம் போன்ற மிக முக்கியமான துறைகள் இரண்டும் கெட்ட நிலையில்  உள்ளது, சமுதாயத்தில் முன்னேற்றம் என்ற பெயரில் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவு வருடாவருடம் மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்து கொண்டிருப்பினும் அதன் ஒட்டு மொத்த அடிப்படை நோக்கம் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே சார்ந்திருக்கிறது. நாகரீகம், சமுதாய முன்னேற்றம் என்பது பொருளாதாரத்தை உயர்த்தி கொள்வது   மட்டுமே என்ற உறுதியுடன், உணர்வுடன் கல்வி கற்க ஆர்வம் காட்டும் மக்கள் கொண்ட சமுதாயமாக இன்றைய நிலை காணப்படுகிறது. கல்வி கற்ப்பது சமுதாயத்தில் எந்த மாற்றங்களை ஏற்ப்படுத்தி இருக்கிறது என்று கணக்கெடுப்பு செய்யினும் நடை, உடை, பொருளாதார மாற்றங்கள் என்று மட்டுமே காண முடிகிறது.

சமுதாய சீர்திருத்தம் என்பது கல்வி கற்றதால் ஏற்பட்டதா என்றால் இல்லை என்பதே விடை. சுகாதாரம், பொது இடங்கள் மற்றும் கழிவறைகளை பயன்படுத்தும் முறைகள், தனி மனித ஒழுக்கம் கல்வியறிவினால் மேம்பாடு அடைந்துவிட்டதா என்றால் இல்லை. கல்வி என்பது இந்தியாவை பொருத்தமட்டில் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் கருவி என்பது யாவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாக மட்டும் உள்ளது. ஆதிகாலத்தில் ஏற்ப்படுத்தபட்ட சாதி குறிப்பிட்ட தொழில் சார்ந்ததாக உண்டாக்கப்பட்ட  வரலாற்றை கல்வி நமக்கு விளக்கி கூறினாலும், படித்தவர்கள் தங்களது சுய லாபத்திற்காக, வேறு பலர் சுய கவுரவத்திற்காக ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடையே வீணான கலவரங்களை உண்டாக்கி தேவையற்ற கிளர்ச்சி செய்வதன் மூலம் மக்களை திசை திருப்புகின்றனர். படித்தவர், கல்வியறிவை உடையவர் செய்கின்ற செயல்கள் இவை என்றால் கல்வி கற்பதன் பொருள் என்ன? படித்து பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் கல்வியை உபயோகப்படுத்தி கொள்ளும் சமுதாயம் முன்னேறிய அல்லது முன்னேறுகின்ற சமுதாயமாக எப்படி இருக்க முடியும்?

இப்படிப்பட்ட சமுதாயம் நாகரீகம் அடைந்ததாக கருத முடியுமா? ஒருபுறம் கல்வி என்றால் என்னவென்று அறியாத பாமர மக்கள், மற்றொருபுறம் படித்து பட்டம் வாங்கிய பாமர கூட்டம். இவர்களை உள்ளடக்கிய நாடு இரண்டும் கெட்டான்கள் நிறைந்த நாடு. இங்கு சுரண்டல், கொலைகாரர், கொள்ளையர், சாதி மத வெறியர்கள் நிறைந்து கிடக்கும் பூமியில் செழிப்பு, சமாதானம், அமைதி, முன்னேற்றம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுவது முட்டாள்தனம். இப்போதைய இந்தியாவில் மலிவாக எங்கும் எதிலும் காண முடிவது அக்கிரமம், அயோக்கியத்தனம். யாரையும் எதையும் நம்பி ஏமாந்துவிடாமல் பாதுகாத்து கொள்வதற்கு என்று தனி திறமையை வளர்த்து கொள்ள வேண்டிய நிர்பந்ததில் வாழுகின்ற சூழல். முற்காலத்தில் ஒரு வழக்கச்சொல் இருந்தது "அவன்(ர்) (ள்) படிச்சவர்; நாலும் அறிந்த நல்லவர்" என்பது. ஆனால் அந்த வழக்கச்சொல் தற்காலத்தில் "நாலும் அறிந்த அயோக்கியன்" என்று முற்றிலும் தலைகீழான மாற்றமடைந்து நாட்டை முன்னேற்றம், நாகரீகம் என்ற பாதையில் வீர நடை போட செய்து வருகிறது.