Translate

6/28/2013

அதிமேதாவிகள்

உலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது மனிதர்களின் "உயர்ந்த" நோக்கமாக இருப்பதை நம்மால் எங்கும் எதிலும் வெளிப்படையாகவே காண முடிகிறது. மனிதனின் சுயநலம் எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம். மண்ணில் கிடைக்கின்ற அத்தனை பொருளுக்கும் {பொன், நிலக்கரி, கனிமங்கள், டீசல், மரங்கள், கனிகள் தானியங்கள் இன்னும் நிறைய} உரிமையை தானே தங்களுக்கென்று எடுத்துக்கொண்டு அதற்க்கு விலை நிர்ணயம் செய்து அதில் கிடைக்கின்ற லாபத்தை தனக்கே சொந்தமாக்கி ஏகபோக வாழ்க்கை வாழும் நாடுகளையும் தனிமனிதர்களையும் சுமக்கின்ற பூமி எத்தனை காலத்திற்கு  விட்டு கொடுத்து பொருமையாக காத்து கிடக்கும்?

இயற்க்கை கொடுக்கின்ற அடிநீர், மழை, காற்று, அனைத்தும் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமையாக்கி  மனிதர்கள் செய்து கொண்டிருக்கும் அநியாயம் அக்கிரமங்களின் உச்சத்தின் மீது நின்று நடமாடி கொண்டிருக்கும் மனிதர்களை எத்தனை காலம் பூமி தன் மீது சுமந்து கொண்டு நிற்கும்? உலகத்தில் விளைகின்ற அனைத்தையும் அனுபவிக்க மற்றும் உண்பதற்கு, குடிப்பதற்கு, சுதந்திரமாக வாழ்வதற்கு, உறங்குவதற்கு நிபந்தனை விதிக்க, தனது உடமையாக்கிகொள்ள மனிதனுக்கு உரிமை யார் கொடுத்தது. உலகமும் அதில் உள்ள அனைத்தும் மனிதனுக்காக மட்டும் உற்பத்தியாகவில்லை என்பதை 20ம் நூற்றாண்டில் வாழும் மனிதர்கள் என்று கூறப்படும் சுயநல ஜந்துக்கள் உணரப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்ட இயற்க்கை இனி பொறுமை காக்கப்போவதில்லை.

சமுத்திரமும் அதில் கிடைக்கும் அனைத்தையும் தங்களுக்கென்று சுரண்டிக்கொண்டு பற்றாக்குறைக்கு  எல்லை  போராட்டம் செய்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டிருக்கும் சுயநலம் மிகுந்த மனித ஜென்மங்களுக்கு இறக்கம் காட்டியது போதும் என்று சலித்து விட்டது. இனி கடல் அமைதி காக்கப்போவதில்லை.

நீர், காற்று நெருப்பு மூன்று இயற்கையையும் ஒரு காலத்தில் மனிதன் கடவுளாக நினைத்து வணங்கி வந்தது அவை கோபமடைந்தால் மனிதர்களை துவம்சம் செய்யும் மாபெரும் சக்திகள் என்பதை கண்டும் கேட்டும் அறிந்திருந்த காரணமும் ஒன்று. ஆனால் தற்காலத்தில் வாழும் மனிதர்களுக்கு இவற்றைப்பற்றிய அக்கறை இல்லை, ஏனெனில் அறிவியல் வளர்ச்சி மூலம் பலவித கருவிகளை கண்டுபிடித்துவிட்டோம் என்று பேருஉவகை கொண்டு இருமாந்திருக்கின்றனர். கருவிகளைக்கொண்டு இயற்க்கை சீற்றங்களை ஓரளவிற்கு மட்டும் முன்னறிய இயலுமே தவிர அவற்றிலிருந்து தப்பிக்க இயலுமா என்பதையும் நினைவில் கொள்வதன் அவசியத்தை மறந்து விட்டனர். 

அவர்களுக்கு நினைவுபடுத்தவே சுனாமி, பூமியதிர்ச்சி, நிலச்சரிவு, பெருவெள்ளம், காட்டுத்தீ எல்லாம் ஆங்காங்கே அடிக்கடி ஏற்ப்படுகிறது. ஆனால் "அறிவியலை தெய்வமாக கொண்டிருக்கும் அறிவுஜீவிகள்" என்ன சொல்வார்கள் என்றால் இவைகள் எல்லாம் இயற்கையாக உருவாகின்றவைகள்தான், இதற்கும் மனித சுயநலத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பர். என்றைக்கு மனிதன் தன்னை "அதிமேதாவிகள்" என்று நம்ப ஆரம்பித்தார்களோ அன்றைக்கு துவங்கியது "சுயநலம்". அதன் முடிவு அழிவு ஒன்றே.

இயற்கையோடு மனிதனால் போராடி வெற்றிகொள்ள இயலுமா? பாவத்தை போக்கிக்கொள்ள நதியில் நீராடுவர், தீயில் யாகம் வளர்ப்பார், மண்மீது பூஜைகள் நடத்துவார். பாவம் என்கின்ற மனித தவறுகளை களைவதற்கு மண், நீர், தீ தேவை. காற்று இவற்றின் சூட்சும தேவன். மனிதனைவிட மிகப்பெரியது இயற்க்கை என்பதை அறிந்திருந்தும் "ஆசை" என்னும் வினோத நோயினால் வெந்துபோகிறது அவனது சிலகால வாழ்க்கை. சிலர் நூறாண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் அளவற்ற உடமைகளை சேமிப்பதை காணும் இயற்க்கை அவனை கண்டு தன்னுள் பரிதாபம்கொள்கிறது. எத்தனை தலைமுறைகளுக்கு உடமைகளை சேமித்தாலும் அத்தனை தலைமுறையினரும் அவற்றை அனுபவித்தனரா என்றறிய சேமித்தவர் உயிருடன் திரும்பி வந்து காணப்போவதில்லை.

சேமித்து வைக்கும் உடமைகளால் தனது தலைமுறையினருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்ப்பட்டது என்பதும் அவரறிய போவதில்லை. ஒருவன் தான் நட்டு சென்ற மரங்கள் வாழுகின்ற நீடித்த ஆயுசு நாட்களை கூட அவனால் வாழய இயலவில்லை. மனிதனுக்கு மனிதனாக பிறந்ததின் சிறப்பு என்ன (தானறிதல்) அதன் நோக்கம் அறிய முயலும் முயற்சி வென்றதா என்றால் இல்லை. அல்லது வாழுகின்ற நாளுக்கு போதுமான உணவு உடை இருப்பிடம் மட்டும் போதுமென்று வாழதல் தவறென்ற எண்ணம் எப்படி தோன்றுகிறது. உடமைகளை அதிகரிக்க விரும்பினால் அதற்கு களவும், சதிசெயல்களும் முதலீடு இல்லாமல் நேர்மையாக சத்தியமாக கோடிகளை உடைமையாக்கும் வழி உண்டா என்று ஆராய்ந்து எது சரி எது தவறு என்பதை உணர்ந்த பின்னரும் "ஆசை" விடாமல் ஆட்கொள்வது எதனால்?.

இவைகளை பூமியில் வாழுகின்ற வேறு எந்த உயிரினமும் செய்வதில்லையே, இயற்க்கைக்கு முரணாக செயல்படுபவன் 20ஆம் நூற்றாண்டில், அறிவியல் முன்னேற்றத்தில் வாழும் மனிதர்கள் என்று கூறிக்கொள்ளும் இனம் மட்டுமே செய்வது எதனால்? அறியாமையினாலா? கற்றறிந்த பேரறிவு கொண்ட மனிதர்கள் நிறைந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகின்ற இன்றைய உலகில் "அறியாமை" என்பது இன்னும் முற்றிலும் களையப்படவில்லையா? உடமைகளை அளவிற்கு அதிகமாக சேமிப்பவர்கள் அனைவரும் கற்றறியாத பேதைகளா? அல்லது அளவற்ற ஆசைகளுக்கு அடிமையானவர்களா? அவரவர் நெஞ்சை தொட்டு சோதிக்க தோன்றுவது இல்லையென்றால், அவனை எப்படி "கற்றறிந்த மனிதன்" என்று கூறிக்கொள்ள இயலும்?

இல்லை என்பது பதில் என்றால் எப்போது மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழப்போகின்றனர்? காடுகளை அழித்து அடுக்குமாடிகளை கட்டிக்கொண்டு, விலங்குகள் வாழும் காடுகளுக்குள் வாகனங்களை ஓட்டிச்சென்று, மரங்களை வெட்டி சாய்க்கும் ஒலி உயர்ந்த  உபகரணங்களுடன் நுழையும் மனிதர்களை "தாங்கள் வாழுகின்ற பகுதிகளுக்குள் நுழைந்து தங்களது வாழ்வை சீர்குலைக்காதீர்கள்" என்று விலங்குகள் யாரிடம் சென்று முறையிடும்? மனிதர்கள் வாழும் பகுதிக்குள் விலங்குகள் நுழைந்துவிட்டால் அவற்றை தாக்கி கொல்லும் மனித கூட்டத்தை யார் தட்டி கேட்பது? அவர்களை  யார் தண்டிக்கப்போவது? பூமி என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார்?