Translate

6/19/2013

ரத்தம் உரிஞ்சும் அட்டைகள்

பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு, விளம்பரம் செய்யப்படுகின்ற பொருட்கள் தரமற்றவை என்று, பல தரம் மிக்க பொருட்கள் விளம்பரம் இல்லாமல் வீணாவதும் உண்டு. இதற்க்கு காரணம் விளம்பரம் செய்கின்றவர்கள் வியாபார நோக்கத்தில் மட்டுமே செய்கின்றனர். தர கட்டுப்பாடு என்பது பெயரளவில் இருப்பதும் எவ்விதத்திலும் மக்களுக்கு உபயோகம் இருந்ததாக இதுவரையில் தெரியவில்லை. உணவு பொருட்கள் முதல் ஏனைய வீட்டு உபயோக பொருட்கள், மின் இயந்திரங்கள் என்று எல்லாவற்றிலும் அவற்றின் தரம் என்ன என்பது கேள்வி. தரமற்ற பொருள் குறைவான விலையில் கிடைக்கும் என்று நினைத்தால் அது சீனாவில் உருவாக்கப்பட்டவை என்பது வெளிப்படையான உண்மை. அதற்கடுத்த நிலையில் ஆனால் எப்போதும் நிரந்தர முதலிடத்தில் இருக்கும் தரமற்ற பொருட்களை உருவாக்கி விற்பனை செய்வதில் முதலிடம் டெல்லி மற்றும் மும்பையில் உருவாக்கப்படும் பொருட்கள்.

மும்பையில் கிடைக்கும் பல பொருட்களில் Made in USA என்று இருக்கும். 'அட பரவாயில்லையே அமெரிக்காவில் செய்யப்பட்ட பொருள் இந்தியாவிலேயே கிடைக்கின்றதே' என்று ஏமாந்து வாங்கி செல்லும் விடயம் அறியாத புதியவர்கள் நிறைய உண்டு. அதைவிட அதிரடியான செய்தி மும்பையில் திருடிய பொருட்களை விற்க  தனியாக ஒரு அங்காடி தெரு உண்டு. இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம் என்று நினைப்பவர்களுக்கு இன்னுமொரு செய்தி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் 'நம்ம ஊர் கில்லாடிகள்' ஒன்றிணைந்து செல்லுமிடமெல்லாம் சிறப்பு செய்வதை துபாய், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளிலும் 'திருட்டு அங்காடி தெரு'க்களை உருவாக்கியுள்ளதை சொல்லி பெருமை அடைவதற்கு பதிவுலகம் கூட சரியான இடம் என்று தோன்றுகிறது.

சென்னையில் பழைய மூர் மார்கெட் என்று ஒன்று இருந்தது அங்கே திருட்டு பொருட்கள் மட்டுமல்லாது வறுமையில் வேறு வழியின்றி யாருக்கும் தெரியாமல் அவசரத்திற்கு விற்று விட்ட பலவித பொருட்களை விற்ப்பனைக்கு வைத்திருப்பதை பார்க்க முடிந்தது. இப்போது அந்த மூர் மார்கெட் சுத்தமாக இல்லாமல் போனது அங்கே தற்போது தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டு காட்சிகள் முற்றிலுமாக மாறி விட்டது. அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருட்கள் அத்தனையும் வாங்கிய விலைக்கு நிகரானதா என்பது அவற்றை உபயோகிக்கும் காலத்தில் மட்டுமே தெரிந்து கொள்ளமுடிகிறது. போலிகள் எங்கும் எதிலும் நிறைந்து  அதற்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தரம் மிக்கவை தென்படுவதை காணுகின்ற வாய்ப்பு மட்டுமே பெருகிவருகிறது.

அதிக பிரயாசப்பட்டு குறைவான ஆதாயம் கிடைத்தால் போதும் என்று திருப்தியடைந்த காலம் மாறி; ஒரு கைபேசியை விலை கொடுத்து வாங்கியாக வேண்டும் என்பதற்காக தான் பெற்ற குழந்தையை ரூபாய் 1,500 க்கு விற்கும் பெண்கள் தமிழகத்தில் உள்ள செய்தியை காணுகின்றபோது இன்றைக்கு மக்களுக்கு பொருட்களின் மீதான மோகம் எந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறது என்பது புரிகிறது. இதில் விளம்பரத்தை நம்பி எத்தனை பொருட்கள் வாங்கப்படுகிறது என்பது பற்றிய கணக்கெடுப்பு விவரம் அறிய முடியவில்லை. மேலை நாடுகளைப்போல நமது நாட்டிலும் உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் மீதான தரக் கட்டுப்பாடுகள் நிர்ணயம் செய்த பின்னர் அவற்றை வாங்கும் தனிமனிதன் அவற்றைப்பற்றி அறியும் வழி செய்தல் மிகவும் அவசியம் என்று நான் நினைக்கின்றேன்.

தரமற்ற பொருட்களை விற்கும் அல்லது தயாரிக்கும் நிறுவனங்களை அரசு முடக்க வேண்டும். விளம்பரங்களுக்கு கூட தரம் மிக்க பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மது அருந்தும் கீழ் தட்டு மக்கள் விளம்பரங்களில் காண்பிக்கப்படும் எச்சரிக்கைகளை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம். உடல் நலத்தை பாதிக்கும் மது வகைகளை விற்ப்பனைக்கு அனுமதிப்பதை முழுவதுமாக கட்டுபடுத்துவது மட்டுமே திருடு, சங்கிலி பறிப்பது, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் குறைக்க வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் அதிகரித்து அதனால் ஏற்ப்படும் சாலை விபத்துகள் ஏராளம். தினமும சாலை விபத்துக்களில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனிதனை விட மனிதனால் உருவாக்கப்படுகின்ற ஏனைய பொருட்களின் மதிப்பு அதிகரித்து வருவது என்பது தாம் உட்கார்ந்திருக்கும் மரத்தின் கிளையை நாமே வெட்டிகொண்டிருப்பது போன்றது என்பதை அறியாமல் செய்கிறோமா தெரிந்தே செய்கிறோமா என்பது விளங்கவில்லை.