Translate

6/18/2013

எல்லோரும் கொண்டாடுவோம்

அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் என்று முக்கிய உறவுகளுக்கான தினத்தைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதி இருக்கிறேன், தாத்தாக்கள் தினம் பாட்டி தினம் என்றோ அல்லது மைத்துனி தினம் மாமனார் தினம் என்கின்ற ஒரு தினம் இதுவரையில் இல்லை என்பதிலிருந்து அம்மாவும் அப்பாவும் உறவுகளில் மிகவும் முக்கியஸ்த்தர்கள் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட "தின" அனுசரிப்பு என்பது மேலை நாடுகளுக்கு அவசியமானது என்பதால் அவர்கள் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட தினங்களை உறவுகளுக்கென்று ஒதுக்கி கொண்டாடி வருவது என்பது சாதாரணமான விடயம். அதிலும் கூட எத்தனை பேருக்கு தங்கள் அப்பாக்களை யார் என்பது தெரிந்திருக்க முடியும் என்பதும், அவர்களது அம்மாக்கள் தற்போது எந்த அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் என்பதை அறிந்திருக்கின்றனரா என்பதும் கூட கேள்விக்குரியது. அங்குள்ள வாழ்க்கை முறையில் அவ்வாறு வாழ்வது என்பது யதார்த்தம். அதனால் அவர்கள் குறிப்பிட்ட நாளை அப்பா அம்மாவிற்கென்று ஒதுக்கி அவர்களுடன் அந்நாளை கொண்டாடுவதில் வியப்பில்லை.

இந்தியாவின் சமுதாய முறைகளில் ஒரு குறிப்பிட்ட தினத்தை ஒதுக்கி பெற்றோரை மகிழ்விக்க அல்லது வாழ்த்து கூற வேண்டிய நிலை அவசியம் இல்லை, இந்தியாவிலும் நிலை மாறிக்கொண்டிருக்கிறது, முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்களுக்கு 'கடனே' என்று மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திவிட்டு 'கெழம் எப்போ மண்டைய போடப்போகுதோ' என்று அலுத்துக்கொள்ளும் பிள்ளைகளுக்கு நிச்சயம் பெற்றோரை கொண்டாதுவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட தினம் அவசியம்தான். முதிர் வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு தண்டனை கொடுக்கின்ற சட்டம் அவசியப்படுகின்ற காலம் இது. என்றிருக்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்து சொல்ல, ஒரு குறிப்பிட்ட தினத்திலாவது அவர்களை மகிழ்விக்க விரும்பும் நல் உள்ளங்கள் இருப்பின் முப்போகம் விளையும் பூமியும், "பெய்" என்றால் உடனே பெய்யும் மழையும் நமக்கு கிடைத்திருக்குமே.

'யார் இவர்களை பெற்றுக்கொள்ள சொன்னது' என்றும், 'இவர்கள் என்ன என்னை ஓ ஹோ என்றா வளர்த்தார்கள் நான் இவர்களை வைத்து பராமரிப்பதற்கு', என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பெற்றோரை ஏசுகின்ற பிள்ளைகளும் 'இவனை பெற்றதற்கு கல்லையோ மண்ணையோ பெற்றிருக்கலாமே' என்று வேதனை செந்நீர் விடுகின்ற பெற்றோரை அல்லவா பெரும்பாலும் காண முடிகிறது. அப்படியே நல்மனம் கொண்ட பிள்ளைகளை பெற்று வளர்த்துவிட்டாலும் திருமணம் என்கின்ற பெயரில் விலை போகும் பிள்ளைகள், மனைவியின் நிரந்தர அடிமைகளாகி கைகளுக்கும் வாய்க்கும் விலங்கு பூட்டப்பட்டு கைதிகளாய் கிடக்கின்ற குடும்பங்களில் அப்பாக்கள் தினம் அம்மாக்கள் தினம் என்று ஒன்று இருக்கின்ற செய்தி காற்று வழியாக கூட உள்ளே நுழைகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வியல்லவா.

பெற்றோரை கொண்டாட வேண்டும் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமல்ல, நாம் வாழுகின்ற ஒவ்வொரு நிமிடமும், கடவுளுக்கு கொடுக்கின்ற மரியாதையில் ஒரு பகுதியாவது பெற்றோருக்கு செலுத்துவதற்கு முயற்சிக்க வேண்டாமா, பெற்றோர் கண் கண்ட தெய்வங்கள் என்று வேதங்களும் நூல்களும் கூறுகிறதல்லவா. யார் யாருக்கோ, ஊர் மெச்சிக்கொள்ள உபகாரம் செய்வதை விட, விதவிதமான தான தருமங்கள் செய்வதிலும் அன்னை தந்தையை உபசரிப்பது மட்டுமே உயர்ந்த உபகாரம். 'பெற்றோர் எனக்கு என்ன செய்துவிட்டார்கள்' என்று எண்ணி அதற்க்கு பதில் செய்வது மூடத்தனம், அவர்களால் எனக்கு செய்ய இயலாமல் போனவற்றை அல்லது எனக்கு இயன்ற உபகாரத்தை லாப நட்ட கணக்கு பாராமல் அவர்களுக்கு செய்வதில் அன்றோ புண்ணியம் கிடைக்கின்றது. ஆயிரம் கோவிலுக்கு சென்று காணிக்கை கொடுத்து பூஜைகள் செய்தாலும் கிடைக்காத ஆசீர் கிடைப்பது அருகில் இருக்கும் தாய்க்கும் தந்தைக்கும் செய்யும் உபசாரத்தால் மட்டுமே.

பல நீதி நூல்கள் இவற்றை விலாவரியாக நமக்கு கொடுத்திருப்பினும் அவற்றையும் குப்பையாக எண்ணுகின்ற மனிதன்  நிம்மதியுடன் சகல பாக்கியங்களுடன் தனது வாழ்நாளின் இறுதி வரையில் வாழ்வது அரிது. எத்தனை சாதித்தாலும் அவரது வாழ்க்கை வீழ்ச்சியுறுவது நிச்சயம்.