Translate

5/21/2013

விளையாட்டு வினையானால் ....ஒரு பழமொழி உண்டு " விளையாட்டு வினையாகும்", பல சந்தர்ப்பங்களில் பல பேர் விளையாட்டாக துவங்கிய பல விஷயங்கள் வினையாக (பெரும் பிரச்சினையாக) மாறியது உண்டு. "இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை, விளையாட்டாகத்தான் செய்தேன்" என்று சொல்லி வருத்தப்படுபவர்கள் நாளடைவில் அதுவே பழக்கமாகி, பழக்கத்தை விடுவதற்கு இயலாமல் திருட்டுத்தனமாக சில பல காரியங்களை செய்து அவற்றில் சிலவற்றில் மாட்டிக்கொண்டது, தப்பித்தால் போதும் என்றாகி, எதோ ஒரு வழியில் தப்பித்து, மீண்டும் பழக்கதோஷத்தில் சிக்கிக் கொண்டு ..........

இப்படி பலரது வாழ்க்கை திண்டாட்டத்தில் சிக்கி விடுகிறது. விளையாட்டாக துவங்கும் பலவித பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்ப்படும் என்பதை துவக்கத்திலேயே அறிந்து அதை விட்டு விலகாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதுவே வினையாகி நமது வாழ்க்கை சீரழியும்.

தவறு செய்பவர்களுக்கு சூழ்நிலை, நண்பர்கள், பணம் மற்றும் பொருளாசை என்று பல காரணங்கள் இருந்தாலும் தான் செல்லும் பாதை தவறானது என்பதை அறிந்தும் தொடர்ந்து செய்து அதற்கான பலன் அல்லது முடிவு வந்து சேருவதை தவிர்க்க இயலாது போகிறது. சூதாட்டம் என்பதை உருவாக்க காரணம் விளையாட்டின் மீது ஏற்ப்படும் மோகமா அல்லது எதையும் பணமாக மாற்றும் கிரிமினல் புத்தியா என்பதை யாவரும் அறிந்திருந்தும், சட்டப்படி குற்றம் என்பது தெரிந்து, அதில் சிக்கி வெளியேறும் வழி தெரியாமல் அல்லது உணராமல் அதிலேயே அழிந்து விடுபவர்கள் ஏராளம். எந்த பழக்கம் மனிதனை நிதாதனத்துடனும் கவுரவத்துடனும் நடத்தி செல்லுகிறதோ அதை மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ விழைவதில்லை. மனிதனின் மனம் ஒரு குரங்கு என்று சொல்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சிறந்த அல்லது நல்ல பழக்கத்தை விளையாட்டாக கூட செய்வதற்கு மனிதர்கள் மனம் நாட்டம் கொள்வது இல்லை. "நன்மையானது" என்பதை அடையும் வழி மிகவும் குறுகியதாகவும் இடர் நிறைந்ததாகவும் உள்ளதும்  தீமை அல்லது சூது என்பது எங்கும் எதிலும் நிறைந்து எளிதாக அடைந்துவிடகூடிய வசீகரம் வாய்ந்ததாக உள்ளது என்பதால் அதை அடைவதில் ஆர்வம் காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், நன்மையை தேர்வு செய்ய யோசிக்கும் இன்றைய உலகில் தீமை அல்லது வினை என்பது எங்கும் எதிலும் நிறைந்து கிடப்பதில் ஆச்சர்யம் இல்லை. எதற்காக நீதி, நன்மை வேண்டும், அதை வைத்துக் கொண்டு "நாக்கு வழிப்பதா", அல்லது "வயிற்றில் ஈரதுணியை போட்டு கொண்டு படுத்து கிடப்பதா" என்று நக்கல் நையாண்டி செய்பவர்கள் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து செல்வதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஊடகங்கள் பெருகியதால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் இவற்றை இன்னும் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது, "வேண்டாம்" என்று கண்ணையும் காதையும் மூடிக்கொண்டாலும் வீட்டின் உள்ளே தொலைகாட்சிபெட்டியில் செய்திகள் மூலமாக நம்மை தேடி வந்துவிடுகிறது. "மானம் போன பின் வாழ்ந்து என்ன பயன்" என்று எண்ணிய காலம் மாறி "காசேதான் கடவுள்"  மூச்செல்லாம் பணமாக மாறிவிடக் கூடாதா என்று ஏங்கும் பெருமூச்சு எல்லாம் ஒன்று சேர்ந்து வானில் கூடுகின்ற கொஞ்சம் மழை மேகத்தை கூட துரத்தி சென்று வேறு நாடுகளில் பேய் மழை, சூராவளியாக உருமாறி அவ்வூரில் உள்ள வினை அல்லது சூதுக்கு ஊரை துவம்சம் செய்துவிடுகிறது. [மாமியாரிடம் கோபித்துக்கொண்டு கணவனை வெளுத்து வாங்கும் மனைவிகளைப்போல].

வரதட்சிணை கொடுமை, சாதிக்கொடுமை, கற்பழிப்பு, லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம், தீவிரவாதம் இன்னும் பல ஒன்று சேர்ந்து செய்திகளை உருவாக்கி அதில் இன்னொன்று தற்போது சூதாட்டம். பூமி தாங்குமா தெரியல.