Translate

5/30/2013

இரவல்

சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு செல்வதற்காக அடுத்த வீட்டுக்கார பெண்ணிடம் ஆறு பவுன் இரட்டைவட சங்கிலியை வாங்கி கழுத்தில் அணிந்து சென்ற ஒரு அம்மா, அன்றிரவு திருமண வீட்டில் தங்கி விட்டு மறுதினம் வீடு திரும்பிய பின்னரும் இரட்டைவடம் சங்கிலியை அதன் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை, எப்படி கேட்பது என்று தயங்கிய அடுத்த வீட்டு அம்மா அதை மெதுவாக தனது கணவனிடம் தெரிவிக்க கணவனுக்கு வந்ததே கோபம், தன்னை கேட்காமல் கொடுத்ததால் அந்த பிரச்சினை பற்றி தன்னிடம் எதையும் சொல்லவேண்டாம் என்றார். ஒருவழியாக நான்காவது நாள் நகையை கேட்க அடுத்த வீட்டுக்கு சென்றால் கதவு பூட்டி கிடந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணம் எங்கு செல்வதென்றாலும் தன்னிடம் தெரிவிக்காமல் அடுத்தவீட்டு அம்மா செல்வதில்லை என்பதால். எங்கே சென்றுவிட முடியும் அந்த ஊரும் வீடும் அவர்களது பூர்வீகம் தானே என்ற தைரியத்தில் நகை கொடுத்தவர் காத்திருந்தார். நாட்கள் மாதங்களாகியும் வீட்டை திறப்பதற்கு யாரும் வரவில்லை.

நகையை வாங்கி சென்ற அம்மா சென்னையில் வசித்துக்கொண்டிருந்த தனது மூத்த மகளிடத்திற்கு வந்து தங்கிவிட்டார். மூத்த மகளை திருமணம் செய்து இருப்பது அவருடைய இரண்டாவது தம்பி என்பதால் அங்கு வந்து தங்கிய இரண்டாவது வாரத்தில் தான் அடுத்த வீட்டுகார அம்மாவிடம் நகையை வாங்கிகொண்டு திருமணத்திற்கு சென்று அங்கேயே இரவு தங்கி விட்டு மறுநாள் வீடு திரும்பிய பிறகுதான் இரட்டைவட சங்கிலி தனது கழுத்தில் காணவில்லை என்று தான் அறிந்ததாக தனது தம்பியிடமும் மகளிடமும் தெரிவிக்கிறார். கணவனை சிறுவயதிலேயே பறி கொடுத்துவிட்டு தனியாக நின்று குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த தனது மூத்த சகோதரிக்கு உபகாரம் செய்ய நினைத்த அவரது தாயும் தம்பியும் எவ்வித சீரும் இல்லாமலேயே அவரது ஒரே மகளை திருமணம் செய்தத்துடன் இரண்டாவதாக வளர்ந்திருந்த மகனையும் தனது தொழிலுக்கு உதவியாக தன்னுடனேயே வைத்து கொண்டிருப்பதுடன் தற்போது அடுத்த வீட்டுக்காரரின் நகை பிரச்சினையை எடுத்து வந்திருக்கும் தமக்கை மீது கோபம் கொப்பளித்தது தம்பிக்கு.

உண்மையாகவே சங்கிலி தொலைந்து விட்டதா அல்லது ஏதாவது ஏடாகோடம் [கோல்மால்] செய்துவிட்டு பொய் சொல்கிறாளா என்பது பற்றி விவரம் அறிந்த எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. வேறு வழி தெரியாத தம்பி ஊர் சென்று ஆறு பவுன் இரட்டைவட சங்கிலி வாங்கி அடுத்த வீட்டுகார அம்மாவிடம் கொடுத்துவிட்டு வருவதற்காக சென்றபோது அவர்கள் வீடு போர்களம் போல கிடப்பதை கண்டு சற்றே தயங்கி, அவர்களை அழைத்தபோது வீட்டுகார அம்மாவின் கணவர் வெளியே வந்தார், அவரிடம் தவறுதலுக்கு மன்னிக்க சொல்லி, உத்திரவாதத்திற்கு ஊர் பெரியவர்களை அழைத்து சங்கிலியை திரும்ப கொடுத்தார். அதற்குள் அந்த வீட்டுகார அம்மா அதாவது தங்க சங்கிலியின் சொந்தக்காரர் கணவனுக்கு தெரியாமல் தான் சங்கிலி கொடுத்ததால் வீட்டில் ஏற்ப்பட்ட சண்டையில் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

அடுத்தவீட்டுக்காரரிடம் தங்க சங்கிலி இரவல் வாங்கி அணிந்துகொண்டு திருமணத்திற்கு போனால்தான் தன்னை அங்கு வந்திருக்கும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைத்த பெண் என்ன ஆனார், மகள் வீட்டில் இருந்த அவர் ஒருநாள் மொட்டை மாடியில் வடம் உலர்த்த சென்றவர் தவறி விழுந்து இரண்டு கால்களும் மண்டையும் உடைந்தது. உயிர் போகவில்லை பலமான அடி பல ஆயிரம் செலவு செய்தும் திரும்பவும் இயல்புநிலைக்கு திரும்பாத உடல்நிலையுடன் பலகால போராட்டம்.


5/29/2013

காஞ்ஜிவரத்தம்மா

நெற்றியில் ஒரு ரூபாய் நாணயத்தை விட பெரிய குங்குமப்பொட்டு, தலையில் கொண்டய் மீது நிறைய பூ, உயர்ந்த உருவம், அடுத்த வீட்டு ஆண்கள் கூட நிமிர்த்து பார்க்க யோசிக்க வைக்கும் தைரியம், அவரது பெயர் என்னவென்று அங்குள்ள ஒருவருக்கும் தெரியாது ஆனால் அப்பகுதியில் 'காஞ்ஜிவரத்தம்மா' என்ற பெயர் பிரபலம். குடிசைகள் நிறைந்த அப்பகுதி நகரத்தை விட்டு குறைந்தது 35 அல்லது 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. 1960களில் "மதமாற்று தடைச்சட்டம்" இல்லாத காலம், வெள்ளை உடை அணிந்துகொண்டு பைபிள் [விவிலியம்] பற்றி செய்திகளை தெருக்களில் சத்தம் போட்டு சொல்லி வந்த காலகட்டம். அப்பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையினர் படிப்பறிவு அற்ற சமுதாயம் என்பதால் துண்டு பிரசுரங்களை கொடுத்து அல்லது இலவச பைபிள் கொடுத்து படிக்க சொல்ல இயலாது, வீதி வீதியாகவும் வீடு வீடாக சென்றும் உபதேசங்கள் வழங்கப்பட்டது. அவ்வாறு வீடு வீடாக சென்று பைபிளில் உள்ள சில முக்கிய விஷயங்களை எளிய முறையில் எடுத்து சொல்லியவற்றுள் காஞ்ஜிவரத்தம்மாளுக்கு ஏதோ ஒன்று மூளைக்குள் புகுந்துவிட்டு அவரை கனவிலும் நிஜத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. வெள்ளை உடையணிந்து உபதேசம் சொல்பவர்களை வருந்தி அழைத்து இன்னும் பலவற்றை கேட்டு அறிந்தார்.

நாளடைவில் காஞ்ஜிவரத்தம்மாவும் அவர்களைப்போலவே வெள்ளை உடைக்கு மாறியதுடன் தவறாமல் உபதேசங்களை கேட்க்கும் ஆர்வத்தில்  அவர்கள் கோவிலுக்கு சென்று வந்தார். அவரது குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்தலைவியின் வழியே சிறந்ததாக கருதி பின்தொடர்ந்தனர். அதுவரையில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பார்த்து வந்த சுற்றுபுரத்தாருக்கு அந்த அம்மாவின் இத்தகைய மாற்றம் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது, அவரது உடை மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த நடத்தையும் முற்றிலுமாக மாற்றப்பட்டதுதான் அவர்களது ஆச்சரியத்திற்கு மிகவும் முக்கிய காரணம். பைபிள் வாசித்து இன்னும் அறிந்துகொள்ள தனக்கு படிப்பு இல்லையே என்பது அந்த அம்மாவின் மிகப்பெரிய வருத்தம்.

அந்த அம்மாவின் மூத்த மகனுக்கு திருமணம் நடந்தது. மருமகள் வேற்று சாதி [உயர்சாதி] பெண், அவரும் இவரைப் போன்று சூழ்நிலையால் மதம் மாறியவர்கள் என்பதால் சாதியை பற்றி பெரிதுபடுத்தாதவர்கள். திருமணமாகிய பின்னர் மருமகளுக்கு முதல் பிரசவம், வீட்டில் பிரசவமான ஒரு வாரத்தில் மருமகளுக்கு கர்ப்பை புண்ணாகி உடல்நிலை மிகவும் மோசமாகியது.  அடுத்த வீட்டில் வசித்துவந்தவர் அந்த பெண்ணின் நிலையை அறிந்து உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லுமாறு வற்புறுத்தினார். அவரது மகன் தனது மனைவியை மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோது மருத்துவர் அந்த மோசமான நிலைக்கு வருவரைக்கும் வீட்டில் மருமகளை வைத்திருந்ததற்காக திட்டினார். எனினும் அவர் மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.

காஞ்ஜிவரத்தம்மாவிடம் இதைப்பற்றி விசாரித்தபோது, அவர் கூறியது வியப்பை மட்டுமல்லாது படிப்பறிவு எந்த அளவிற்கு மனிதர்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தியது. அவர் கூறிய பதில் " நாங்கள் எந்த நோய் வந்தாலும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டோம், தானாகவே குணமாகிவிடும்" என்றார்கள். உடல் நலமில்லாமல் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, அதற்காக ஜெபம் மட்டும் செய்வோம் என்றார். மருந்து சாப்பிடகூடாது மருத்துவரிடம் எடுத்து செல்லக் கூடாது என்று உங்களுக்கு யார் கூறியது என்று கேட்டால், அப்படித்தான் அவர்கள் கோவிலில் உள்ளவர்கள் செய்வது வழக்கம் என்றார்.

அவர் கூறிய இந்த கருத்தின் அடிப்படை என்பது "கடவுளின் மீது அப்பாரத்தை வைப்பது" என்பதை குறிக்கிறது என்றாலும் அதற்க்கான வழி அல்லது முறையில்தான் தவறு உள்ளது என்பது விளங்கியது. நோயாளி குணமாகவில்லை என்றால் அது அவரது விதி என்று சொல்ல முடியாது, மாறாக "கடவுள் மீது நம்பிக்கை" வைக்கின்ற நபர்கள் அதன் அடிப்படை விதிகளையும் கடைபிடிப்பது அவசியம். அடிப்படை விதிகளை [கடவுள் நம்பிக்கை] நோயாளியும் நோயாளிக்காக வேண்டுதல் செய்யும் நபர்களும் முற்றிலுமாக முழுமனதுடன் ஏற்றுகொள்வதும் நம்புவதும் அவசியம். நோய்வாய் இருக்கின்ற காலத்தில் தினமும் நோய் தீரும் வரையிலாவது விடாமல் தினமும் ஜெபம் செய்தல் அவசியம், குடும்பத்தார் மட்டும் இதை கடை பிடிக்காமல், அதற்கான முக்கிய நபரை அழைத்து ஜெபம் செய்வது என்பதும் மிகவும் அவசியம்.

வெறும் மருத்துவமும் சிகிச்சையும் கூட பலரின் வாழ்வை காப்பாற்ற இயலாத சூழல் பெரும்பான்மையாக காண முடிகிறது. கடவுள் நம்பிக்கையுடனான மருத்துவம் எப்போதுமே முழு பலனை அளிக்கும். பலர் "கடவுள் நம்பிக்கை" என்பதை அவசியத்திற்கு மட்டும் உபயோகப்படுத்துவதை பார்க்கலாம். "கடவுள்" நம்பிக்கை என்பது திருடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் தீய வழிகளில் நடப்பவர்களுக்கும் எதிர்மாறானது. கொள்ளையடித்த மற்றும் லஞ்சம் வாங்கிய தொகையை கொண்டு கோவில் கட்டுவதோ, கடவுள் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்வதோ கடவுளுக்கு எப்படி ஏற்ப்புடையதாகும். பணத்தால் எதையும் செய்துவிட முடியும் என்ற நினைப்பில் வாழ்க்கை முழுதும் வாழ்ந்துவிட்டு, பணத்தால் நடக்காது என்று தெரிந்த பின்னர் "கடவுளை" பற்றிகொள்வதற்கு முன்பு பாவ பணத்தை தூக்கி எரிந்துவிடுதல் ஓரளவு "கடவுள் நம்பிக்கைக்கு" அஸ்திபாரம் போடுவதாக இருக்கும். அப்படி யாரேனும் தவறான முறையில் சேர்த்து வைத்த சொத்துக்களை வேண்டாம் என்ற முழு மனதுடன் செயல்படுவாரா என்பது கேள்வி.

இங்கு நான் சொல்ல நினைத்தது, "கடவுள் நம்பிக்கையை தொடர்புடைய காரியங்களை செய்யும்போது அது முழுப் பலனை கொடுக்கவில்லை என்றால் அதற்க்கு காரணம் மதம் அல்லது கடவுள் அல்ல, உபதேசத்தை கேட்டு அதன்படி நடந்தவர் அதை முறையாக கைகொள்வதில்லை என்பதே". ஒருசமயம் காஞ்ஜிவரத்தம்மா படிப்பறிவு உடையவராக இருந்திருந்தால் விவேகியாக இருந்திருக்க கூடும், கடிதம் படித்து சொல்வதற்கு படிக்க தெரிந்த யாரை வேண்டுமானாலும் அணுகலாம் ஆனால் உயில் எழுதுவதற்கும் எழுதிய உயிலை படித்தறியவும் அதற்க்கான பயிற்சி பெற்ற வக்கீலை அணுகவேண்டும் என்பதுதானே முறை. அதைபோன்றுதான் மதமும் அதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்து தேர்ந்தவரிடம் கற்றுகொள்வதும் அதன் பின்னர் அதை பின்பற்றுவதும் மட்டுமே சிறந்தது. மழை பெய்த பின் நிலத்தில் திடீரென்று பல காளான்கள் முளைத்தாலும் எல்லா காளான்களும் உணவாக உட்கொள்வதற்கு சிறந்தது அல்ல. எத்தனையோ தாவரங்கள் உலகில் இருந்தாலும் எல்லா தாவரமும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உணவாவதில்லை. அதை தேடி அறியாமல் உட்கொண்டு மாண்டவர்கள் கதைகளும் உண்டு. அதுபோன்றதுதான் கடவுள் நம்பிக்கையும் மதமும்.5/28/2013

பசுமரத்தாணி


என் தகப்பனாருக்கு நிறைய பால்ய நண்பர்கள் உண்டு, ஐந்து ஆறு வயதில் இருந்து நண்பராக இருந்தவர்களுள் கண்ணன் அங்கிள் எனக்கு மிகவும் பிடித்தவர். என் அப்பாவை அவர் எப்போதும் வாடா போடா என்று உரிமையுடன் பேசுவதை நான் எனது சிறு வயது முதல் பார்த்து ரசித்து வந்திருக்கிறேன். என் அப்பாவின் வாழ்க்கையில் ஒன்றரக் கலந்தவர் கண்ணன் அங்கிள். எனக்கு கருத்து தெரிய ஆரம்பித்த போது  என் அப்பாவிடம் அவர்கள் நடப்பு துவங்கியதை பற்றி மிகவும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டேன். வறுமையின் கொடுமையில் வாழ்ந்த ஒரு விறகு வெட்டியின் ஒரே மகன் கண்ணன், சோறு என்பதை பார்ப்பதே அரிது, கிராமத்தில் விளையும் கேழ்வரகு  கிடைத்தால் அதை கொண்டு கூழ் செய்து சாப்பிடுவதும்  பல சமயம் பட்டினியுடன் இருந்தவர் கண்ணன், தான் பட்டினியாக இருப்பதை ஒருபோதும் வெளியே காண்பித்து கொள்வது கிடையாது, கால்பந்து மைதானத்தில் அப்போதைய முக்கிய கால்பந்தாடக்காரர்கள் விளையாடுவதை [பயிற்சி] பார்க்க நண்பர்கள் அனைவரும் செல்வதுண்டு. அங்கே விளையாடும் புகழ் பெற்ற வீரர்கள் பயிற்சியில் இறங்கும் முன்னர் கழட்டி கொடுக்கின்ற கைகடியாரம் மற்றும் ஷர்ட் போன்ற உடைகளை பாதுகாப்பாக வேடிக்கை பார்க்க சென்றிருக்கும் என் அப்பா அல்லது எனது பெரியப்பாவிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள். ஆனால் கண்ணன் அங்கிள் பந்து விளையாடுகின்ற மைதானத்தை விட்டு வெளியேறி விட்டால் ஓடிச்சென்று அதை எடுத்து வருவதை விரும்பி செய்வார்.

பிறகு நாளடைவில் கால்பந்தாட்டம் கற்றுக்கொண்டு இவர்கள் ஜூனியர் டீம் அமைத்து விளையாடும்போது கண்ணன் அதிகம் சோர்வடைந்து உட்கார்ந்து விடுவார், பல நாட்கள் விளையாடுவதை தவிர்த்து தவறி வெளியே வீசப்படும் பந்தை எடுத்து கொடுக்கும் உதவியை மட்டும் செய்து விட்டு சோர்வடைந்து உட்கார்ந்து கொள்வார். அவரது இந்த சோர்விற்கு அர்த்தம் விளங்காமல் என் அப்பா கண்ணனிடம் உண்மையை சொல்லுமாறு வர்ப்புருத்தினார்.  உண்மையை கண்ணன் அங்கிள் சொல்லவில்லை, ஆனால் அவரது குடிசைக்கு சென்று விளையாட கூப்பிடும்போது அவரது தாயார் கூறிய பதில் அவரது உண்மை நிலையை உணர்த்தியது. அன்று முதல் வீட்டில் கண்ணனும் ஒரு உறுப்பினராக ஆக்கப்பட்டார். பல சமயங்களில் வீட்டில் சாப்பிட வெட்கம் கொண்டு அதையும் தவிர்த்து வந்தார், ஆனால் அவரது வீட்டிற்கு தேவையான சாப்பாட்டை எடுத்து சென்று அவரது அம்மாவிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்களாம் என் அப்பாவும் எனது பெரியப்பாவும்.

கண்ணன் அங்கிள் பற்றி சொல்வதென்றால் அவர் ஒரு அன்பு கடல், பிறரிடம் அன்பு செலுத்துவதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. திருமண வாழ்க்கை துவங்கிய போது நிலைமை மாறவில்லை, மாறாக என் தாயாரும் நட்ப்பை புரிந்து கொண்டவர்களாகவே இருந்தனர் கண்ணன் ஆன்டியை பற்றி அதிகம் தெரியவில்லை, என் பெற்றோரின் வாழ்வில் பல இடுக்கண்கள் ஏற்பட்ட தருணங்களில் கண்ணன் அங்கிள் மட்டுமே உதவிகரம் நீட்டினார். என் தாயார் கண்ணன் அங்கிளை "மனிதருள் மாணிக்கம்" என்றே கூறுவார். இன்று நினைத்தாலும் கண்ணன் அங்கிள் மீது ஏற்பட்ட அந்த பாசம் எனக்கு இன்றளவும் குறையவே இல்லை. எனது பெற்றோர் என்னிடம் அவர்களது நட்பையும் மீறி பல சந்தர்ப்பங்களில் அவரது அன்பும் அரவணைப்பும் ஏனைய உறவுகளைவிட அதிகமாகவும் அவசியமானதாகவும்  இருந்தது பற்றி சொன்னதுதான் அதற்க்கு காரணம். அவர்கள் சொன்னது போலவே கண்ணன் அங்கிளும் அன்பின் அவதாரமாகவே இருந்தார் என்பதை என் கண்கூடாகவே கண்டிருந்தேன்.

கண்ணன் அங்கிளுக்கு இரண்டு ஆண்கள் ஒரு பெண் இருந்தனர், அவர்கள் அனைவரும் என்னைவிட குறைந்தது பத்து வயது அதிகம் உடையவர்களாக இருந்ததால் அவர்களை நான் 'அண்ணன் அக்கா' என்றே அழைப்பேன். நான் பிறப்பதற்கு முன்பே அவர்கள் பிறந்திருந்ததால் நடந்த சம்பவங்களை கேட்டு எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது, கண்ணன் அங்கிள் வீட்டிற்கு எனது பெற்றோர் அடிக்கடி சென்று தங்குவது  பிடிக்காமல் என் அப்பாவிடம் [கண்ணன் அங்கிள் வீட்டில் இல்லாத சமயத்தில்] அண்ணனும் அக்காவும் வீண் வார்த்தைகளை சொல்லி வீட்டிற்கு வராமல் தடை செய்வதுமாக இருந்தனர். அண்ணனுக்கும் அக்காவிற்கும் தங்கள் தகப்பன் எங்களது [பெற்றோரின்] உபசரிப்பிற்க்கு செலவு செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது. அதனால் என் பெற்றோரை வெறுத்து ஒதுக்கி வந்தனர். நான் என் தகப்பனாரிடம் கேட்டு தெரிந்து கொண்டதைப்போல எனது தகப்பனாருடன் கண்ணன் அங்கிளின் நட்ப்பைபற்றிய விவரங்களை அவர்கள் தங்கள் தகப்பனிடம் கேட்டு அறிந்து கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கியதுடன் அவர்கள் சுபாவம் கண்ணன் அங்கிளுக்கு நேர்மாறாக இருந்ததும் இன்னொரு காரணம்.

சில நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் பெற்றோரிடம் கொண்டுள்ள உறவின் நிலை என்னவென்று நாம் அறிந்திருந்தாலும் அறிந்திராவிட்டாலும் வீடு தேடி வருகின்றவர்களை ஏளனமாக நினைப்பது மற்றும் தகாத வார்த்தைகளை கூறி வருத்தப்படுத்தி திருப்பி அனுப்புவது மிகவும் கொடுமையான பாமரச் செயல். "அடிக்கடி வீட்டிற்கு வந்து உபத்ரவம் செய்யாதே" என்று சொல்வது நாகரீகமற்ற செயல். மதுபானம் குடிப்பதற்கு பணம் கேட்டு நமது வீட்டை தேடி வந்து தொல்லை கொடுத்தால் தவிர்க்க வேண்டியதுதான். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பவர் சோம்பேறியாக இருந்து கொண்டு அடிக்கடி உதவி கேட்டு வீடு தேடி வந்தால் முடிந்தால் உதவலாம், அல்லது நமக்கே பற்றாக்குறை இருப்பின் அதை பக்குவமாக எடுத்துக் கூறினால் அவர் மனம் புண்படுவதை நாம் தவிர்க்கலாம். பொதுவாக இளம் தலைமுறையினருக்கு சிறுவயது முதலே தங்கள் குடும்ப நண்பர்கள் உறவினர்களைப்பற்றிய விவரங்களை சொல்லி கொடுத்து வளர்ப்பது இது போன்ற "தலைமுறை இடைவெளி"யை தவிர்க்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

வீடு தேடி வருகின்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களை சிலர் தங்கள் குழந்தைகளின் கவனத்தை கவரும் வண்ணமாக முணு முணுப்பது வசைபாடுவது போன்ற செய்கைகளை பார்த்து வளருகின்ற குழந்தைகளின் மனதில் அதே போன்ற செய்கைகள் வேரூன்ற காரணமாகி விடுகிறது.  உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் மீது நமக்கிருக்கின்ற பகமை உணர்வுகளை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவது பகையுணர்வை உண்டாக்கும் வழிகள். பொதுவாக பெண்கள் தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சிநேகமாக இருப்பதை போன்று கணவனின் உறவினர்களிடம் நண்பர்களிடம் சிநேகமாக இருப்பது கிடையாது. அதையே பார்த்து வளர்க்கப்படுகின்ற குழந்தைகளும் அதே வழியை பின்பற்றுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மனிதநேயம் என்பதை வளர்க்கின்ற அல்லது துவக்குகின்ற முதல் ஆசான் பெற்றோர்தான், குழந்தைகளின் சிறுவயதில் எதையெல்லாம் பார்த்து கேட்டு வளருகின்றார்களோ அதையே அவர்களும் பின்பற்றுவது இயற்க்கைதானே. குடும்பத்திற்குள்ளே கற்று கொடுக்கப்படுகின்ற பாடம் தான் குழந்தைகளின் முதல் கல்வி என்பதை பெரியவர்கள் முதலில் உணர்ந்து செயல்படுதல் அவசியம்.


5/21/2013

விளையாட்டு வினையானால் ....ஒரு பழமொழி உண்டு " விளையாட்டு வினையாகும்", பல சந்தர்ப்பங்களில் பல பேர் விளையாட்டாக துவங்கிய பல விஷயங்கள் வினையாக (பெரும் பிரச்சினையாக) மாறியது உண்டு. "இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை, விளையாட்டாகத்தான் செய்தேன்" என்று சொல்லி வருத்தப்படுபவர்கள் நாளடைவில் அதுவே பழக்கமாகி, பழக்கத்தை விடுவதற்கு இயலாமல் திருட்டுத்தனமாக சில பல காரியங்களை செய்து அவற்றில் சிலவற்றில் மாட்டிக்கொண்டது, தப்பித்தால் போதும் என்றாகி, எதோ ஒரு வழியில் தப்பித்து, மீண்டும் பழக்கதோஷத்தில் சிக்கிக் கொண்டு ..........

இப்படி பலரது வாழ்க்கை திண்டாட்டத்தில் சிக்கி விடுகிறது. விளையாட்டாக துவங்கும் பலவித பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்ப்படும் என்பதை துவக்கத்திலேயே அறிந்து அதை விட்டு விலகாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதுவே வினையாகி நமது வாழ்க்கை சீரழியும்.

தவறு செய்பவர்களுக்கு சூழ்நிலை, நண்பர்கள், பணம் மற்றும் பொருளாசை என்று பல காரணங்கள் இருந்தாலும் தான் செல்லும் பாதை தவறானது என்பதை அறிந்தும் தொடர்ந்து செய்து அதற்கான பலன் அல்லது முடிவு வந்து சேருவதை தவிர்க்க இயலாது போகிறது. சூதாட்டம் என்பதை உருவாக்க காரணம் விளையாட்டின் மீது ஏற்ப்படும் மோகமா அல்லது எதையும் பணமாக மாற்றும் கிரிமினல் புத்தியா என்பதை யாவரும் அறிந்திருந்தும், சட்டப்படி குற்றம் என்பது தெரிந்து, அதில் சிக்கி வெளியேறும் வழி தெரியாமல் அல்லது உணராமல் அதிலேயே அழிந்து விடுபவர்கள் ஏராளம். எந்த பழக்கம் மனிதனை நிதாதனத்துடனும் கவுரவத்துடனும் நடத்தி செல்லுகிறதோ அதை மனிதன் விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ விழைவதில்லை. மனிதனின் மனம் ஒரு குரங்கு என்று சொல்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்று நான் நினைக்கிறேன்.

சிறந்த அல்லது நல்ல பழக்கத்தை விளையாட்டாக கூட செய்வதற்கு மனிதர்கள் மனம் நாட்டம் கொள்வது இல்லை. "நன்மையானது" என்பதை அடையும் வழி மிகவும் குறுகியதாகவும் இடர் நிறைந்ததாகவும் உள்ளதும்  தீமை அல்லது சூது என்பது எங்கும் எதிலும் நிறைந்து எளிதாக அடைந்துவிடகூடிய வசீகரம் வாய்ந்ததாக உள்ளது என்பதால் அதை அடைவதில் ஆர்வம் காட்டும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், நன்மையை தேர்வு செய்ய யோசிக்கும் இன்றைய உலகில் தீமை அல்லது வினை என்பது எங்கும் எதிலும் நிறைந்து கிடப்பதில் ஆச்சர்யம் இல்லை. எதற்காக நீதி, நன்மை வேண்டும், அதை வைத்துக் கொண்டு "நாக்கு வழிப்பதா", அல்லது "வயிற்றில் ஈரதுணியை போட்டு கொண்டு படுத்து கிடப்பதா" என்று நக்கல் நையாண்டி செய்பவர்கள் எண்ணிக்கை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து செல்வதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

ஊடகங்கள் பெருகியதால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சிக்கல் இவற்றை இன்னும் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது, "வேண்டாம்" என்று கண்ணையும் காதையும் மூடிக்கொண்டாலும் வீட்டின் உள்ளே தொலைகாட்சிபெட்டியில் செய்திகள் மூலமாக நம்மை தேடி வந்துவிடுகிறது. "மானம் போன பின் வாழ்ந்து என்ன பயன்" என்று எண்ணிய காலம் மாறி "காசேதான் கடவுள்"  மூச்செல்லாம் பணமாக மாறிவிடக் கூடாதா என்று ஏங்கும் பெருமூச்சு எல்லாம் ஒன்று சேர்ந்து வானில் கூடுகின்ற கொஞ்சம் மழை மேகத்தை கூட துரத்தி சென்று வேறு நாடுகளில் பேய் மழை, சூராவளியாக உருமாறி அவ்வூரில் உள்ள வினை அல்லது சூதுக்கு ஊரை துவம்சம் செய்துவிடுகிறது. [மாமியாரிடம் கோபித்துக்கொண்டு கணவனை வெளுத்து வாங்கும் மனைவிகளைப்போல].

வரதட்சிணை கொடுமை, சாதிக்கொடுமை, கற்பழிப்பு, லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம், தீவிரவாதம் இன்னும் பல ஒன்று சேர்ந்து செய்திகளை உருவாக்கி அதில் இன்னொன்று தற்போது சூதாட்டம். பூமி தாங்குமா தெரியல.
5/14/2013

பதில் இல்லாத பல கேள்விகள்

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஜன நெரிசல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதில் மும்பை நகரில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமாக மக்களை அடக்கி வைத்திருக்கிறது, நகரின் முக்கிய இடங்களில் கழிவறைகள் பழமையானதாக இருப்பினும் ஓரளவிற்கு சுகாதாரத்துடன் நிர்வகிக்கப்படுகிறது. சென்னையில் பொது கழிப்பிடங்கள் மிகவும் குறைவு என்றாலும் அவை உபயோகிக்கும் நிலையில் இல்லாமல் கிடப்பதை காண முடியும். உபயோகிப்பவர்களின் அலட்சிய போக்கு சுகாதாரமற்ற நிலையை அதிகரிக்கிறது. சுகாதாரம் என்பதை கட்டாயமாக்கினாலே ஒழிய இந்தியாவில் சுகாதாரம் என்பது கேள்விக்குரியதாக மாறி வருகிறது. ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்தி கொண்டு,  காரணங்களை சொல்லிக்கொண்டு இருப்பதால் சுகாதாரம் கிடைத்து விடப்போவதில்லை. பல இடங்களில் கால்வாய்கள் குப்பை கூளங்களால் அடைத்துக் கொண்டு கழிவு நீர் தேங்கி கொசுக்களுக்கு மறு வாழ்வு வழங்கி வருவதை காண முடிகிறது. குப்பைகளை குறிப்பிட்ட இடத்தில் சேகரிக்கின்ற புதிய சேவை அறிமுகபடுத்தப்பட்டிருந்தாலும் இன்னும் பலர் குப்பைகளை கண்ட பொது இடங்களில் தூக்கி எரிந்துசெல்லும் பழக்கத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அரசினர் கல்லூரிகள் அரசினர் பள்ளிகூடங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. சுகாதாரமற்ற சூழல் நகரின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் நிலைமை மாற்றி அமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடங்களை ஒட்டிய பகுதிகள் சுகாதாரமற்ற கால்வாய் அமைப்புகள் கொண்டதாக உள்ளது. நகரத்தின் பல இடங்களில் இன்னும் குடிசைகள் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற நிலை தொடர்கிறது. குடிசைகளில் வாழ்கின்ற மக்கள் அருகில் இருக்கின்ற வீதிகளையும் மைதானங்களையும் கழிப்பிடமாக உபயோகித்து, சுற்றுபுறத்தை துர்நாற்றம் மிகுந்த இடங்களாக மாற்றி வருகின்றனர்.

நடைபாதைகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கடைகள், மற்றும் நடைபாதைகள் சிலரின் குடியிருப்புகளாகவும் உபயோகப்படுத்தபடுவதன் காரணமாக நடைபாதைகளில் நடந்து செல்வதற்கு இயலாமல் நகரின் பல வீதிகள் நெரிசல் நிறைந்து உள்ளது. வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பாதசாரிகளுக்கு நடப்பதற்கான பாதைகள் நகரின் முக்கிய சாலைகளில் பராமரிப்பற்று உபயோகிக்கும் நிலையில் இல்லாமல் உள்ளது. சிறிதளவு மழை பெய்தால் கூட மழை நீர் தேங்கி சாலைகள் குழிகளாக வாகனம் ஓட்டுபவர்களை திணற வைக்கிறது. இவற்றால் அவ்வீதிகளில் பயணம் செய்பவர்களுக்கு பலவித உடல் கேடுகளும் விபத்துக்களும் ஏற்ப்படுகிறது. ஒவ்வொரு பராமரிப்பிர்காக ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் கையாளப்படாமல் பலரின் கைகளில் சிக்கி நின்று விடுவதே இதற்க்கு காரணம். நூறாண்டுகள் கடந்தாலும் பிரச்சினைகள் சரி செய்யப்படுமா என்பது பதில் இல்லாத பல கேள்விகளுள் ஒன்றாகி கிடக்கிறது.5/13/2013

"EYE OPENER" நிகழ்ச்சிகள்

பதிவு எழுத துவங்கிய காலத்தில் எழுதுவதற்கு பழைய விஷயங்கள் நிறைந்து கிடந்ததால் எதை எழுதுவது என்பதைப் பற்றி யோசிப்பதற்கு நேரம் அதிகம் விரயமாகும், இப்போது நடப்பு விஷயங்கள் ஏராளம் எழுத இருகின்ற சமயத்திலும் அதே பிரச்சினைதான் எதை எழுதுவது என்பது பற்றிய குழப்பம், புத்தகங்களை படிப்பதில் இருக்கின்ற ஆர்வம் செய்திகளை அறிந்து கொள்வதில் தாகம் அதிகம் இருப்பதால் எழுதுவதற்கு, குறிப்பாக பதிவு  எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. பதிவெழுதி பல நாட்கள் சென்று விட்ட நிலையில் இதை பதிவு செய்தே ஆக வேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்ப்படுத்தியது நேற்றைய "நீயா நானா" விஜெய் தொலைக்காட்சி நிகழ்ச்சி. பெரும்பாலான நீயா நானா நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் உடையதாக சமுதாய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதாக இருந்தது என்பதில் மாற்று கருத்து இருக்க இயலாது என்றாலும் நேற்றைய நீயா நானா இன்றைய சூழலில் அரசியலை பற்றிய புரிதலை இளைஞர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதை பற்றியும் இளைஞர்கள் இன்றைய அரசியலுக்கு எந்த அளவிற்கு மிகவும் அவசியமானவர்கள் என்பதை எடுத்து காண்பிக்கின்ற மிகவும் அருமையான நிகழ்ச்சி என்பதை என்னைப் போன்ற பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

அரசியலை புறக்கணிப்பதால் ஏற்ப்படுகின்ற அவலங்களை இன்றைய இளைஞர்கள் அவசரமாக அறிந்து கொள்ள வேண்டும் காலம் தாழ்த்தி செயல் பட்டால் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் தனிமனித வாழ்க்கையில் எவ்வித பாதிப்புகளை உண்டாக்கும் என்று அறிந்திரா விட்டால், தனி மனிதனாக  எத்தனை சம்பாத்திதாலும் அதற்குரிய பலனை அடைய விடாமல் பொருளாதாரம், சுகாதாரம் தேச பரிபாலனம் போன்ற மிகவும் முக்கியமான இலாகாக்கள் பலவீனம் அடைந்து பின்னர் அழிவை மேற்கொள்ளும் அபாயம் இருப்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை இளைஞர்களுக்கு எடுத்து காட்டுவதாக அமைந்தது. அரசியல் என்பதை "சாக்கடை" என்று ஒதுக்கி சென்றால், அதன் பின் விளைவுகளை ஒட்டு மொத்த நாடு அனுபவிக்கின்ற அவல நிலை உண்டாகும் என்பதை எடுத்து காட்டியது சிறப்பானது. இன்றைய இளைஞர்களுக்கு மேடை பேச்சுகளை கேட்பதற்கு ஆர்வம் கிடையாது, அரசியல் பற்றி அறிந்து கொள்ள நேரம் கிடைப்பதில்லை, மிஞ்சிப்போனால் விட்ட குறை தொட்ட குறையாக ஊடக வாயிலாக அரைகுறையான அரசியல் விவரங்களை அறிந்து கொண்டு கட்சிகள் மீதும் அரசியல் தலைவர்கள் மீதும் வசைபாடிக்கொண்டு, இன்னும் கொஞ்சம் மேலே சென்று முக புத்தகத்தில் "தத்து பித்தென்று" வசைபாடிவிட்டு அத்துடன் முடிந்தது அரசியல் என்று வாழ்க்கையை தொடரும் இளைஞர்கள், 

நாமும் நமது நாடும் சுகம் பெற அரசியலை பற்றி எங்கிருந்து அறிந்து கொள்வது எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணராமல் "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று இளைஞர்கள் செயல்படுவது இந்திய தேசத்தை உலக வரைபடத்தில் காணாமல் போக செய்துவிடும் என்பதை உணரவேண்டும். இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்திய தேசத்தின் பலம் இளைஞர்கள் என்பதால் இது போன்ற "EYE OPENER" நிகழ்ச்சிகள் மூலம் ஒரு சிலராவது இதன் முக்கியத்துவத்தை உணர்ந்தால் இந்திய அரசியலில் பெரும் சாதனைகள் நிகழும் என்பதில் சந்தேகம் இல்லை