Translate

3/23/2013

ஆதாயம் தேடும் சமதர்மம்

இந்திய மக்கள் எப்போதுமே கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து பழகிப்போனவர்கள்,பழக்க வழக்கம் என்பதில் ஊறிப்போனவர்கள். வெள்ளைக்காரன் மூலம் படிப்பறிவு நுழைந்த பின்னர், படித்து முடித்தால் பணிக்கு செல்ல முடியும் என்ற பொருளாதார மேம்பாட்டை மட்டுமே கருத்தில் இறுக பிடித்து கொண்டு அன்றைய 'படித்தவர்கள்' பெரும்பாலும் உயர் சாதிக்கார வர்க்கமாக இருந்த காரணத்தால் உயர்பதவிகளை வெள்ளைக்காரனுக்கு அடுத்ததாக 'உயர்' ரகம் கைப்பற்றிக் கொண்டது. இந்தியர்கள் என்றாலே தோலின் நிறம் கருப்புதான். மாநிறம் என்றும் ஒன்றுண்டு. வெள்ளைக்காரனைப் போன்ற தோலின் நிறம் இந்தியர்களுக்கு கிடைத்தது வெள்ளைக்கார மேலதிகாரிகளின் "தயவு" என்பதை அக்காலத்தில் வாழ்ந்த பெரியோர் சொல்லி கேட்டதுண்டு. "கடவுளின் நகரம்" என்று கூறப்படும் நாட்டில் கூட அங்கு முதன் முதலில் வந்திறங்கிய வெள்ளைக்காரர்கள் யூதர்கள் போர்சுகீசியர்கள் என்று வெளிநாட்டவர்கள் மதத்தை இறக்குமதி செய்தது போன்றே நிறத்தையும் அழகையும் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

"ஏட்டு சுரைக்காய்" படிப்பு என்பது இந்திய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்ப்படுத்தி விட்டதாக கூற இயலாமல், படிப்பதொன்றும் செய்வது வேறே ஒன்றிற்காகவும் என்று "படித்த"வர்கள் பெருகி வருவது வழக்காகி போனது, முன்னேற்றம் என்பது படித்தவர் அதிகமாகி கொண்டே இருப்பதா?. பொருளாதார முன்னேற்றம் என்பது எதனால் சீரழிகிறது? கருப்புப்பணம், லஞ்சம், அளவிற்கு அதிகமாக சொத்து குவிப்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்காதா?, சுயநலம் என்பது எதனால் ஏற்ப்படுகிறது?, சுயநலவாதிகள் யார்?, நாட்டின் நலன் மிகவும் முக்கியம் என்று கருதுவதில் எதற்க்காக அரசியல் கட்சிகள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்?. நாளடைவில் எண்ணிக்கைக்கு அடங்காத அரசியல் கட்சிகள் உருவாகி கொண்டிருப்பது எதை பிரதிபலிக்கிறது. சுதந்திரத்தையா? படித்தவர்கள் செய்யும் மோசடிகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன? மோசடிகளில் பலியானோர் எதற்காக பலியாக வேண்டும்?

குடிப்பழக்கம் உடலை கெடுக்கும் புகைப்பழக்கம் உயிரை பறிக்கும் என்று எச்சரிக்கை செய்து கொண்டு மறுபக்கத்தில் அப்பொருள்களை விற்ப்பதால் கிடைக்கின்ற லாபத்தை கொண்டு எதை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படுகிறது? மயானங்களை மேம்படுத்துவதற்கா?ஆதாயம் என்பதை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுத்தப்படுகின்ற எந்த காரியமும் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தி விடாது. ஆதாயம் எதிர்பார்த்து முதலீடு செய்வதற்குப் பெயர் முதலாளித்துவம். சுதந்திர, ஜனநாயக நாட்டில் அரசாங்கம் என்பது மக்களுக்காக செயல்படுவது, அதில் மக்களிடமிருந்து ஆதாயத்தை எதிர்பார்த்து முதலீடு செய்வதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வேறு மேம்பாட்டு திட்டத்திற்கு முதலீடு செய்வது நியாயமானது ஆனால் தனி மனித சிந்தனையை மறுத்து போக வைக்கும் குடியும் புகையும், நாட்டில் முன்னேற்றத்தை வளர்ப்பது எப்படி. உடல் உழைப்பிற்கேற்ற உணவும் சுற்றுப்புற சூழலும் இன்றி மனித உடல் கேடு வருத்தும் வாழ்க்கை முறை எப்படி முன்னேற்றத்தை கொடுக்க இயலும். பெற்றோர் பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்த ஐந்து நபர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள பழகிப்போன சமுதாய வழக்கங்களைபோல நாட்டு தலைவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த கிடைக்கின்ற ஓட்டெடுப்பில் தனது மதம் தனது ஜாதி என்று தேர்வு செய்தால் சிறந்த நிர்வாகிகளை நாடு பெற இயலுமா.

எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் வருமானத்தை பெருமளவு பெற முடியும், எந்த பெண் அதிகப்படியான சொத்துக்கு சொந்தக்காரி அல்லது அதிகப்படியான வருமானம் உள்ள துறையில் பணிபுரிகிறார் என்பதை வைத்து  திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் சமுதாய கட்டமைப்பில், ஆதாயம் நிறைந்த வாழ்க்கையை இலக்காக வைத்து நகர்கின்ற சமுதாயத்தில் "சுதந்திரம்" என்பது எப்படியெல்லாம் கைகொடுக்கிறது அல்லது கையாளப்படுகிறது என்பதை லஞ்சம், அரசியல் துஷ்பிரயோகம், பதவி மோகம், புதிய அரசியல் கட்சிகளின் வரவு, கருப்புபணம், கொலை கொள்ளை, என்று இதன் வட்டம் மிகவும் பெரிதாகி கொண்டு செல்கிறது. சமதர்மம் என்பதெல்லாம் பேச்சில் மட்டுமேயன்றி செயலிழந்து ஒடுக்கப்பட்டு பல நூறு ஆண்டுகள் சென்றுவிட்டது. வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டால் சுதந்திர இந்தியாவில் சமதர்மம் நிலைத்துவிடும் என்று கனவுகண்டவர்கள் இன்று இல்லை. அவர்கள் இருந்திருந்தால் சுதந்திரம் கிடைப்பதற்கு ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார்.

விமோச்சனம் என்பது இனி இங்கில்லை வேறு எங்காவது உண்டா என தேடிப்பார்த்து புகலிடமாக்கி கொண்டால் ஒருசமயம் எதிர்கால தலைமுறைகளாவது சமதர்மத்தினை அனுபவிக்க கூடும்.