Translate

3/20/2013

கல்லடி படும் மரம்

பள்ளிக்கூடம் போகும் வழியில் ஒரு வீட்டில் மாமரம் மதிலை ஒட்டியவாறு வளர்ந்திருந்தது. காய்க்கும் காலம் தொடங்கிவிட்டால் பூவும் பிஞ்சுமாக மரம் நிறைந்திருக்கும் காலையில் அப்பக்கம் போகுற போக்கில் சில பொடிசுகள் கற்களை எடுத்து அடித்துவிட்டு போகும் விழுந்தால் எடுக்கலாம் என்று விட்டெரியும் கற்களில் சிலசமயம் ஒரு சில பிஞ்சுகள் மரத்திலிருந்து விழும் பூவுடன் நிற்கும் மரத்தின் மீது கல்லெறியும் சிறுவர்களுக்கு அவற்றில் நாளைய மாங்காய்களை கொண்ட பூக்களும் சேர்ந்தே கீழே விழுந்து வீணாவது பற்றிய கவலை தெரியாது. மரங்களுக்கென்ன வாயா இருக்கிறது இருந்தால் கல்லெறியும் பொடிசுகளை மீண்டும் அதே கல்லை திருப்பி அடித்திருக்குமே. மண்டை உடைந்து ரத்த வெள்ளம் ஏற்ப்படாது என்றாலும் தவறு செய்கின்ற போது  ஆசிரியர் வேறொரு மாணவனை விட்டு ஓங்கி ஒரு குட்டு வைக்க சொல்வது போல இருந்திருக்கும். அடிக்கின்ற அடிகளை மவுனமாக வாங்கி கொண்டு இந்த மூடர்களுக்கு காய்களையும் நிழலையும் பழங்களையும் கொடுப்பது மரங்கள் அல்லவா. இயற்கையே இவ்வாறு சுயநலம் பாராமல் தனது பணிகளை தவறாது செய்து நமக்கு எதிரே வாழும் உதாரணமாக இருப்பதை கூட சிந்தித்தரியாத மாக்கள் நிறைந்த உலகம் இது.

நிஜ வாழ்விலும் மனிதர்கள் பல்வேறு முகங்களை கொண்டவர்களாக இருந்து கொண்டு சொல் என்னும் கற்க்களால் அடுத்தவரின் மனதை சிந்தையை கிழித்து திருப்தி அடைகின்றனர். தி.மு.க. இப்போது அந்நிலையில்தான் இருக்கிறது. "முன்னே போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்" என்ற கதையில் இன்றைய தமிழீழ பிரச்சினையில் சிக்கிக்கொண்டு தி. மு.காவும் காங்கிரசும் பலரின் நகைச்சுவைக்கு இலக்காகி உள்ளது. காங்கிரசுடன் கூட்டணியிலிருந்து தி. மு. க  விலகவில்லை என்றால் "இவனெல்லாம் தமிழினத்தலைவர் " என்று சொல்லி ஊரை ஏமாற்றுகின்றான்" என்று எப்போதும் போல வசை பாட மிகவும் வசதியாக இருந்திருக்கும் காங்கிரசிலிருந்து விலகிய பின்னும் நையாண்டி தர்பார் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. நையாண்டி செய்பவர்கள் அதை தவிர வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அதே இடத்தில் "அம்மா" அவர்கள் இருந்திருந்தால் கதையே வேறாக இருக்கும். 

நையாண்டி தர்பார் அம்மாவிடம் நடக்காது என்பதை அறிந்த கூட்டம் ஒன்று ஒட்டுமொத்த குத்தகை எடுத்து கொண்டு 'ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்று தி.மு.காவை கலைஞரை அதன் உறுப்பினர்களை நையாண்டி செய்து திருப்தி அடைகின்றனர். ஈழத்தமிழர்களின் நலனை மட்டுமே வலியுறுத்தி அவர்களது எதிர்காலம் சீரடைய வழி அமைத்து கொடுக்க அரும்பாடுபடுபவர்கள் எத்தனை பேர் என்று "எண்ணி"த்தான் பார்க்க வேண்டும். பசுந்தோல் போர்த்திய ஓநாய்களை அடையாளம் கண்டுகொள்வது சிரமம் ஒன்றும் இல்லை. நையாண்டி செய்பவர்களின் அரசியல் என்பது கால்கள் இல்லாதவன் மிதிவண்டி ஓட்ட ஆசைப்படுவது போலத்தான், பிறரை கேலி செய்வது கூட அவர்களின் வன்மத்தை வெளிக்கொணரும் ஒரு வழியாகத்தான் (அரசியலில்) பயன்படுத்தப்படுகிறது. "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு" என்பது போல ஆகாதவர் எதை செய்தாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடிப்பதை மட்டுமே சில கட்சிகள் ஓயாமல் செய்து வருகிறது. நொந்து கிடக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வு மீண்டும் சீரடையும் என்றால் இந்த சிரிப்பை நையாண்டியை ஏனைய புரட்டு வஞ்சகம் மிக்க நடவடிக்கைகளை, மற்றும் குறை கூறுவதைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை.

கல்லடி படும் மரம் அதற்க்கு பழி தீர்க்க தெரியாது. நிழலையும் காய் கனிகளையும் கொடுத்துக் தவறாது தன் பணி செய்து கொண்டிருக்கும்.