Translate

3/15/2013

ஒரு காதல் கதை - 1


சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் சென்னைக்கே உரிய வெயில் எப்போதும் போல வரவேற்றது, டாக்சியின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது சென்னை பெரும் மாற்றங்களை அடைந்து இருப்பது சற்றே ஆச்சரியத்துடன் அவளது கவனத்தை ஈர்த்தது. டாக்சி ஓட்டுனரிடம் அதைப்பற்றி பேச்சு கொடுத்தபோது சென்னைக்கே உரிய தமிழில் அதை அவருக்கு தெரிந்த அளவில் விளக்கினார். அருகே இருந்த குடியிருப்பில் டாக்சி சென்று கொண்டிருந்தபோது தொடர்வண்டி நிலையத்தை கடந்து செல்வதற்கு கட்டப்பட்டிருந்த சுரங்கபாதை சற்று ஆச்சரியத்தை கொடுத்தது, அங்கே முன்பு காணப்பட்ட வீதியும் கடைகளும் காணப்படவில்லை, டாக்சியிலிருந்தவாறே தொடர்வண்டி நிலையத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்தது நிறைவேறவில்லை. பழைய நினைவுகள் நெஞ்சில் கனத்தது. அவனுக்கு இப்போது வயது அறுபதை நெருங்கி கொண்டிருக்கும் என்னைபோலவே அவனும் இந்த தொடர்வண்டி நிலையத்தை கடக்கும் போதெல்லாம் என்னை சந்திக்க காத்திருந்ததை நினைத்து கொள்வானா. அவன் எப்படி இருப்பான், என்னை முற்றிலும் மறந்துவிட்டிருப்பானா. அடுக்கு மாடி கட்டிடங்கள் தனி வீடுகளை தகர்த்துவிட்டு உயரமாக நின்று கொண்டிருந்தது. பழைய தனி வீடுகள் ஆங்காங்கே ஒன்றிரண்டு மட்டும் எஞ்சியிருந்தது. அடுத்த முறை சென்னைக்கு வரும் போது அவைகளும் இடிக்கப்பட்டு அடுக்குமாடி கட்டிடமாக உருவெடுத்திருக்கும், எல்லாம் மாறி விடுகிறது மனதில் இருந்த நினைவுகளும் காட்சிகளும் தகர்க்க இயலாதவையாக என்றும் பசுமையாக எண்ணங்களில் புகுந்து கொண்டுவிடுகிறது. டாக்சி ஓட்டுனரின் குரல் அவள் சிந்தனையை அத்துடன் நிறுத்தியது.

எழுபதுகளின் இறுதி. அவனும் அவளும் சந்தித்து கொள்வது தொடர்வண்டி நிலையம். தொடர்வண்டியில் பயணம் செய்து வந்து அவன் அவளுக்காக அங்கேயே காத்து இருப்பான், அவன் நிற்கும் இடத்திலிருந்து பார்த்தால் சிறிது தூரத்தில் அந்த வீதி தொடர்வண்டி நிலையத்துடன் இணையும் வளவில் அவள் வருவதை பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற நிகழ்வுகள் இருவருக்குமே சுவாரஸ்யம் மிகுந்ததாகவே இருக்கும். நிச்சயம் அவள் வந்து விடுவாள் என்று அவன் காத்திருப்பான், அவளும் தவறாமல் வந்து விடுவாள், அடிக்கடி நிகழும் நிகழ்வாக இருப்பதில்லை. அவனுடன் சேர்ந்திருக்கின்ற ஒவ்வொரு நொடியும்  ஏன் அத்தனை இன்பமாக இருக்கிறது என்பதை அறியாமலேயே சில காலம் மட்டுமே தொடர்ந்த அந்த உறவும் நிகழ்வும் தொடர்ந்தது ஒருவருடத்திற்கும் குறைவு. முதன் முறையாக சந்தித்ததிலிருந்து எந்த உறவும் இல்லாமல் எப்போதாவது ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த தருணங்கள் ஒருவருடத்திற்கும் சற்றே குறைவுதான். பின்னர் ஏறக்குறைய ஒருவருட இடைவெளி, [அவன் அவளை கடிதம் கொண்டு துரத்தியது (தபாலில்].  அவனை சந்தித்தது நட்பாக,  அவனது நட்பில் அவனைப்பற்றிய நன்மதிப்பை அவள் மனதில் விதைத்தது. அவன் அவளை அடைய முற்படுவதாகவே இல்லை, ஸ்பரிசங்களின் தேவையற்ற உறவு,  நாளடைவில் அவனது பழக்கம் இன்றி வாழ இயலுமா என்பது கேள்வியானது அவளுக்கு. அவள் அதை காதல் என்று அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருவருடத்தில் சில நாட்கள் மட்டுமே சந்திப்பு, எப்போது அவன் வரச்சொன்னாலும் அவள் அவனை சந்திக்க தவறுவது கிடையாது. அவளுக்கு அவன் தோள் மீது சாய்ந்து கொள்ளும் போது கிடைத்த சுகம் சிறுவயதில் தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு உறங்கியதை நினைவுபடுத்தியது.  இவனுடன் காலம் முழுதும் இப்படியே வாழ்ந்துவிடலாம் வாழ்க்கையின் சுமையே தெரியாதபடி என்னை சுமந்து கொள்வான் என்று தோன்றியது. அவனுக்கு என்னைப்பற்றி எப்படி தெரியும், ஒருசமயம் அவனும் என்னை போன்ற விருப்பு வெறுப்புகள் கொண்டவனாக இருப்பானோ, எனக்கு எதைபற்றி பேசுவதற்கு விருப்பமோ அவற்றை அவனும் என்னிடம் நான் சொல்லாமலேயே பேசுகிறானே, நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம் அவன் எனக்காகவே பிறந்தவன், இல்லையென்றால் நாங்கள் ஏன் சந்தித்திருக்கவேண்டும்.   இதைத்தான் காதல் என்று சொல்கின்றார்களா என்று அவள் நினைப்பது அதிகரித்தது. இதுவரை ஏற்பட்டிராத புதிய உணர்வு அப்பாவைத்தவிர வேறு ஆணைப்பற்றி அறியாதிருந்த காரணத்தினால் ஏற்பட்ட அனுபவமாகக்கூட இருக்கலாம். ஆண் நண்பர்கள் என்பதெல்லாம் எழுபதுகளில் அரிதான ஒன்றாக இருந்த காலம்.

ஒருசமயம் ஆண் நண்பர்களுடன் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்திருந்தால் அது ஒன்றும் புதிய அனுபவமாக இருந்திருக்காமல் சாதாரணமாக இருந்திருக்க கூடுமோ. மனதிற்கு பிடித்தவனோடு வாழவேண்டும் என்று நினைக்கின்ற நினைப்பு மட்டும் பெண்களுக்கு எந்த காலத்திலும் மாறாததோ. காதலித்தவனை கணவனாக அடைவது என்பது "அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா" என்று அழைக்க ஆசைப்படுவதை போன்றது. அப்படித்தான் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட பிரிவும். அவர்கள் சந்திப்பு இமைக்கும் நேரத்தில் துண்டிக்கப்பட்டது. அவன் தொடர்வண்டி நிலையத்தில் அதே இடத்தில் காத்து நின்றுவிட்டு திரும்புவது சில காலம் தொடர்ந்தது. நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக வருடங்கள் பல ஓடி மறைந்தது.