Translate

3/23/2013

ஆதாயம் தேடும் சமதர்மம்

இந்திய மக்கள் எப்போதுமே கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து பழகிப்போனவர்கள்,பழக்க வழக்கம் என்பதில் ஊறிப்போனவர்கள். வெள்ளைக்காரன் மூலம் படிப்பறிவு நுழைந்த பின்னர், படித்து முடித்தால் பணிக்கு செல்ல முடியும் என்ற பொருளாதார மேம்பாட்டை மட்டுமே கருத்தில் இறுக பிடித்து கொண்டு அன்றைய 'படித்தவர்கள்' பெரும்பாலும் உயர் சாதிக்கார வர்க்கமாக இருந்த காரணத்தால் உயர்பதவிகளை வெள்ளைக்காரனுக்கு அடுத்ததாக 'உயர்' ரகம் கைப்பற்றிக் கொண்டது. இந்தியர்கள் என்றாலே தோலின் நிறம் கருப்புதான். மாநிறம் என்றும் ஒன்றுண்டு. வெள்ளைக்காரனைப் போன்ற தோலின் நிறம் இந்தியர்களுக்கு கிடைத்தது வெள்ளைக்கார மேலதிகாரிகளின் "தயவு" என்பதை அக்காலத்தில் வாழ்ந்த பெரியோர் சொல்லி கேட்டதுண்டு. "கடவுளின் நகரம்" என்று கூறப்படும் நாட்டில் கூட அங்கு முதன் முதலில் வந்திறங்கிய வெள்ளைக்காரர்கள் யூதர்கள் போர்சுகீசியர்கள் என்று வெளிநாட்டவர்கள் மதத்தை இறக்குமதி செய்தது போன்றே நிறத்தையும் அழகையும் கொடுத்துவிட்டு சென்றார்கள்.

"ஏட்டு சுரைக்காய்" படிப்பு என்பது இந்திய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்ப்படுத்தி விட்டதாக கூற இயலாமல், படிப்பதொன்றும் செய்வது வேறே ஒன்றிற்காகவும் என்று "படித்த"வர்கள் பெருகி வருவது வழக்காகி போனது, முன்னேற்றம் என்பது படித்தவர் அதிகமாகி கொண்டே இருப்பதா?. பொருளாதார முன்னேற்றம் என்பது எதனால் சீரழிகிறது? கருப்புப்பணம், லஞ்சம், அளவிற்கு அதிகமாக சொத்து குவிப்பது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்காதா?, சுயநலம் என்பது எதனால் ஏற்ப்படுகிறது?, சுயநலவாதிகள் யார்?, நாட்டின் நலன் மிகவும் முக்கியம் என்று கருதுவதில் எதற்க்காக அரசியல் கட்சிகள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்?. நாளடைவில் எண்ணிக்கைக்கு அடங்காத அரசியல் கட்சிகள் உருவாகி கொண்டிருப்பது எதை பிரதிபலிக்கிறது. சுதந்திரத்தையா? படித்தவர்கள் செய்யும் மோசடிகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன? மோசடிகளில் பலியானோர் எதற்காக பலியாக வேண்டும்?

குடிப்பழக்கம் உடலை கெடுக்கும் புகைப்பழக்கம் உயிரை பறிக்கும் என்று எச்சரிக்கை செய்து கொண்டு மறுபக்கத்தில் அப்பொருள்களை விற்ப்பதால் கிடைக்கின்ற லாபத்தை கொண்டு எதை மேம்படுத்த திட்டம் வகுக்கப்படுகிறது? மயானங்களை மேம்படுத்துவதற்கா?ஆதாயம் என்பதை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுத்தப்படுகின்ற எந்த காரியமும் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்தி விடாது. ஆதாயம் எதிர்பார்த்து முதலீடு செய்வதற்குப் பெயர் முதலாளித்துவம். சுதந்திர, ஜனநாயக நாட்டில் அரசாங்கம் என்பது மக்களுக்காக செயல்படுவது, அதில் மக்களிடமிருந்து ஆதாயத்தை எதிர்பார்த்து முதலீடு செய்வதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வேறு மேம்பாட்டு திட்டத்திற்கு முதலீடு செய்வது நியாயமானது ஆனால் தனி மனித சிந்தனையை மறுத்து போக வைக்கும் குடியும் புகையும், நாட்டில் முன்னேற்றத்தை வளர்ப்பது எப்படி. உடல் உழைப்பிற்கேற்ற உணவும் சுற்றுப்புற சூழலும் இன்றி மனித உடல் கேடு வருத்தும் வாழ்க்கை முறை எப்படி முன்னேற்றத்தை கொடுக்க இயலும். பெற்றோர் பார்த்து தேர்ந்தெடுத்து கொடுத்த ஐந்து நபர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ள பழகிப்போன சமுதாய வழக்கங்களைபோல நாட்டு தலைவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த கிடைக்கின்ற ஓட்டெடுப்பில் தனது மதம் தனது ஜாதி என்று தேர்வு செய்தால் சிறந்த நிர்வாகிகளை நாடு பெற இயலுமா.

எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால் வருமானத்தை பெருமளவு பெற முடியும், எந்த பெண் அதிகப்படியான சொத்துக்கு சொந்தக்காரி அல்லது அதிகப்படியான வருமானம் உள்ள துறையில் பணிபுரிகிறார் என்பதை வைத்து  திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் சமுதாய கட்டமைப்பில், ஆதாயம் நிறைந்த வாழ்க்கையை இலக்காக வைத்து நகர்கின்ற சமுதாயத்தில் "சுதந்திரம்" என்பது எப்படியெல்லாம் கைகொடுக்கிறது அல்லது கையாளப்படுகிறது என்பதை லஞ்சம், அரசியல் துஷ்பிரயோகம், பதவி மோகம், புதிய அரசியல் கட்சிகளின் வரவு, கருப்புபணம், கொலை கொள்ளை, என்று இதன் வட்டம் மிகவும் பெரிதாகி கொண்டு செல்கிறது. சமதர்மம் என்பதெல்லாம் பேச்சில் மட்டுமேயன்றி செயலிழந்து ஒடுக்கப்பட்டு பல நூறு ஆண்டுகள் சென்றுவிட்டது. வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டால் சுதந்திர இந்தியாவில் சமதர்மம் நிலைத்துவிடும் என்று கனவுகண்டவர்கள் இன்று இல்லை. அவர்கள் இருந்திருந்தால் சுதந்திரம் கிடைப்பதற்கு ஒருநாளும் நினைத்திருக்க மாட்டார்.

விமோச்சனம் என்பது இனி இங்கில்லை வேறு எங்காவது உண்டா என தேடிப்பார்த்து புகலிடமாக்கி கொண்டால் ஒருசமயம் எதிர்கால தலைமுறைகளாவது சமதர்மத்தினை அனுபவிக்க கூடும்.


3/20/2013

கல்லடி படும் மரம்

பள்ளிக்கூடம் போகும் வழியில் ஒரு வீட்டில் மாமரம் மதிலை ஒட்டியவாறு வளர்ந்திருந்தது. காய்க்கும் காலம் தொடங்கிவிட்டால் பூவும் பிஞ்சுமாக மரம் நிறைந்திருக்கும் காலையில் அப்பக்கம் போகுற போக்கில் சில பொடிசுகள் கற்களை எடுத்து அடித்துவிட்டு போகும் விழுந்தால் எடுக்கலாம் என்று விட்டெரியும் கற்களில் சிலசமயம் ஒரு சில பிஞ்சுகள் மரத்திலிருந்து விழும் பூவுடன் நிற்கும் மரத்தின் மீது கல்லெறியும் சிறுவர்களுக்கு அவற்றில் நாளைய மாங்காய்களை கொண்ட பூக்களும் சேர்ந்தே கீழே விழுந்து வீணாவது பற்றிய கவலை தெரியாது. மரங்களுக்கென்ன வாயா இருக்கிறது இருந்தால் கல்லெறியும் பொடிசுகளை மீண்டும் அதே கல்லை திருப்பி அடித்திருக்குமே. மண்டை உடைந்து ரத்த வெள்ளம் ஏற்ப்படாது என்றாலும் தவறு செய்கின்ற போது  ஆசிரியர் வேறொரு மாணவனை விட்டு ஓங்கி ஒரு குட்டு வைக்க சொல்வது போல இருந்திருக்கும். அடிக்கின்ற அடிகளை மவுனமாக வாங்கி கொண்டு இந்த மூடர்களுக்கு காய்களையும் நிழலையும் பழங்களையும் கொடுப்பது மரங்கள் அல்லவா. இயற்கையே இவ்வாறு சுயநலம் பாராமல் தனது பணிகளை தவறாது செய்து நமக்கு எதிரே வாழும் உதாரணமாக இருப்பதை கூட சிந்தித்தரியாத மாக்கள் நிறைந்த உலகம் இது.

நிஜ வாழ்விலும் மனிதர்கள் பல்வேறு முகங்களை கொண்டவர்களாக இருந்து கொண்டு சொல் என்னும் கற்க்களால் அடுத்தவரின் மனதை சிந்தையை கிழித்து திருப்தி அடைகின்றனர். தி.மு.க. இப்போது அந்நிலையில்தான் இருக்கிறது. "முன்னே போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்" என்ற கதையில் இன்றைய தமிழீழ பிரச்சினையில் சிக்கிக்கொண்டு தி. மு.காவும் காங்கிரசும் பலரின் நகைச்சுவைக்கு இலக்காகி உள்ளது. காங்கிரசுடன் கூட்டணியிலிருந்து தி. மு. க  விலகவில்லை என்றால் "இவனெல்லாம் தமிழினத்தலைவர் " என்று சொல்லி ஊரை ஏமாற்றுகின்றான்" என்று எப்போதும் போல வசை பாட மிகவும் வசதியாக இருந்திருக்கும் காங்கிரசிலிருந்து விலகிய பின்னும் நையாண்டி தர்பார் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. நையாண்டி செய்பவர்கள் அதை தவிர வேறு செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அதே இடத்தில் "அம்மா" அவர்கள் இருந்திருந்தால் கதையே வேறாக இருக்கும். 

நையாண்டி தர்பார் அம்மாவிடம் நடக்காது என்பதை அறிந்த கூட்டம் ஒன்று ஒட்டுமொத்த குத்தகை எடுத்து கொண்டு 'ஊருக்கு எளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்று தி.மு.காவை கலைஞரை அதன் உறுப்பினர்களை நையாண்டி செய்து திருப்தி அடைகின்றனர். ஈழத்தமிழர்களின் நலனை மட்டுமே வலியுறுத்தி அவர்களது எதிர்காலம் சீரடைய வழி அமைத்து கொடுக்க அரும்பாடுபடுபவர்கள் எத்தனை பேர் என்று "எண்ணி"த்தான் பார்க்க வேண்டும். பசுந்தோல் போர்த்திய ஓநாய்களை அடையாளம் கண்டுகொள்வது சிரமம் ஒன்றும் இல்லை. நையாண்டி செய்பவர்களின் அரசியல் என்பது கால்கள் இல்லாதவன் மிதிவண்டி ஓட்ட ஆசைப்படுவது போலத்தான், பிறரை கேலி செய்வது கூட அவர்களின் வன்மத்தை வெளிக்கொணரும் ஒரு வழியாகத்தான் (அரசியலில்) பயன்படுத்தப்படுகிறது. "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு" என்பது போல ஆகாதவர் எதை செய்தாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடிப்பதை மட்டுமே சில கட்சிகள் ஓயாமல் செய்து வருகிறது. நொந்து கிடக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வு மீண்டும் சீரடையும் என்றால் இந்த சிரிப்பை நையாண்டியை ஏனைய புரட்டு வஞ்சகம் மிக்க நடவடிக்கைகளை, மற்றும் குறை கூறுவதைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை.

கல்லடி படும் மரம் அதற்க்கு பழி தீர்க்க தெரியாது. நிழலையும் காய் கனிகளையும் கொடுத்துக் தவறாது தன் பணி செய்து கொண்டிருக்கும்.3/18/2013

ஒரு காதல் கதை - 2

அவனுடைய அப்பா பட்டாளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அவனுடன் பிறந்தவர்கள் 6 பேர். ஒவ்வொருமுறையும் இடமாற்றம் செய்யும்போதெல்லாம் அத்தனை பேரின் படிப்பும் பாதிக்கப்படுவதால் ஒருவழியாக சென்னையில் குடும்பத்தை விட்டு விட்டு அப்பா மட்டும் பணி இடமாற்றத்தை ஏற்று ஒவ்வொரு ஊராக சென்று பணி செய்துவந்தார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து கொண்டு அம்மாவின் கட்டுபாட்டை பின்பற்றுவது கிடையாது, பள்ளிக்கு போவது முற்றிலுமாய் நிறுத்தப்பட்டு ஊர் சண்டைகளில் முதலிடம் வகித்து ரவுடிகளாக உருவாகி கொண்டிருந்தனர். ஒருமுறை விடுமுறையில் வந்த அப்பா இவர்களின் போக்கை கவனித்துவிட்டு தென்னகத்தில் ஒரு கிராமத்தில் இருந்த விடுதியில் கொண்டு சேர்த்து படிக்க வைத்தார். அங்கேயும் இவர்களது ரவுடித்தனம் மேலோங்கியது, பொறுப்பாசிரியரின் கண்டிப்பிற்கு கட்டுப்படாத மூத்தவனை விடுதியிலிருந்து வெளியேற்றி விட்டனர். சென்னை திரும்பிய அண்ணன் மீண்டும் பழைய வாழ்க்கையை தொடர்ந்தான். இரண்டாமவன் பள்ளியிருதியாண்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு வீடு திரும்பினான். அதுவரையில் விடுதியில் கட்டுபாட்டில் இருந்தவன் மீண்டும் அண்ணனுடன் சேர்ந்து கொண்டு ரவுடித்தனத்தை புதுபித்து கொண்டான்.

அண்ணனுக்கு ஒரு பெண்ணுடன் காதல் தம்பிக்கும் அதே போன்று ஏதாவது ஒரு பெண்ணுடன் காதல் தேடினான். இரண்டு மூன்று தெருக்களை தாண்டி வசித்துவந்த சிறு பெண் ஒருத்தியை கண்டு பிடித்தான். அவளோ பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி. காதல் என்பது என்னவென்று அறியாத சிறுமி. அவள் பள்ளிக்குச் செல்லும்போது வழியில் நின்று கொண்டு தினமும் பார்த்து வந்தான். ஒருநாள் கடிதம் எழுதி அவள் கையில் கொடுத்தான், அவள் அதை படித்துவிட்டு கிழித்து எரிந்தாள். அவனை திரும்பி பார்க்காமல் தினமும் பள்ளிக்கு சென்று வந்தாள். அவன் அவளை விடவில்லை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து  அவளை தனக்கு பதில் கடிதம் எழுத வற்புறுத்தினான். அவளுக்கு பதில் என்னவென்று எழுத தெரியாமல் ஒவ்வொரு பதிலிலும் அவளுக்கு அவன் மீது விருப்பம் இல்லை என்று தெரிவித்தும் அவன் விடுவதாக இல்லை. ஆனால் அவளோ அவனை ஏறெடுத்தும் பாராமல் தானுண்டு தன படிப்புண்டு என்றிருந்தாள். வேறு வழியின்றி அவளை பின் தொடருவதை விட்டுவிட்டான். அதற்க்கு மாறாக அவனுக்கு தெரிந்த அனைவரிடமும் அந்த பெண்ணை தான் காதலிப்பதாக புரளி கூறி தூற்றிக் கொண்டு இருந்தான். சிலர் அவளிடம் அதை பற்றி விசாரித்த போதுதான் அவன் திருக்கு எண்ணத்தை அவள் தெரிந்து கொண்டாள்.

அவளும் பள்ளியிறுதியை வெற்றிகரமாக முடித்தாள், கல்லூரிக்கு போக ஆரம்பித்தாள். அவனும் கல்லூரியில் சேர்ந்து போக ஆரம்பித்தான். அவனுடன் படித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு அவன் மீது காதல் ஏற்பட்டது, அந்த பெண்ணுடன் இணைந்து தான் விரும்பிய பெண்ணின் எதிரில் அவள் காணும்படியாக சுற்றி வருவதை வழக்கமாக்கினான். ஆனால் அந்த பெண்ணிற்கு 'விட்டது தொல்லை' என்று நினைத்தாள். சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருநாள் ஒரு செய்தி அப்பகுதியில் வாழ்ந்த அனைவருக்கும் வந்து சேர்ந்தது. தன்னுடன் படித்த பெண்ணுடன் பழகி வந்ததால் அப்பெண்னின் குடும்பத்தினர் அவனை திருமணம் செய்துகொள்ள சொன்னபோது இவன் மறுத்து தனது தோழியாக எண்ணி பழகி வருவதாக  கூறி தவிர்த்து விட்டான், அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்க்கு தெரியப்படுத்தி அவனுக்கும் அப்பெண்ணிர்க்கும் திருமணம் செய்து வைத்தனர், வற்புறுத்தி தன்னை திருமணம் செய்ததால் அப்பெண்ணுடன் வாழ பிடிக்காமல் தினமும் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அப்பெண்ணை திட்டி தீர்ப்பான். ஒருவருடம் கடந்த நிலையில் அவனுக்கு ஒரு பெண் குழந்தையை பெற்றாள் அந்த பெண், குழந்தை பிறந்துவிட்டால் தன்னை அவன் நேசிக்க கூடும் என்று நினைத்தாள்.

அவனது குடிபழக்கம் தினமும் அதிகரித்து வந்தது, குடிப்பதை நிறுத்த சொல்லி அப்பெண் தினமும் சொல்லி வந்தாள், ஆனால் அவனோ அவள் தன்னை தோழி என்று சொல்லி பழகிவிட்டு வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டதற்க்காக பழி வாங்குவதாக சொல்லி தினமும் குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்தப்பெண் அவனிடம் 'இன்றுடன் குடி பழக்கத்தை விடாவிட்டால் மண்ணெண்ணெயை தன் மீது கொட்டிக்கொண்டு தீயிட்டு கொள்ளபோவதாக' கூறினாள். ஆனால் அவனோ தோழியென நினைத்து பழகியதற்கு திருமணம் செய்து தனது வாழ்க்கையை சீரழித்துவிட்டதற்காக தான் பழி தீர்ப்பதாக கூறிக்கொண்டு எப்போதும்போல அன்றும் குடித்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தான், அவன் தான் சொல்வதை கேட்கபோவது இல்லை என்பதை உறுதியாக அறிந்துவிட்ட அப்பெண் அவள் கூறியது போன்று மண்ணெண்ணெயை தன உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீயிட்டு கொண்டாள், அதை பார்த்த அவன் ஓடிவந்து அவளது உடலில் எரிகின்ற தீயை அணைப்பதற்க்குள் அவள் உடல் முழுவதும் எரிந்துவிட்டது, தீயை அணைக்க அவளை அவன் பிடித்ததால் அவனது இரண்டு கைகளும் மார்பில் சில இடங்களும் தீக்காயத்தால் அதிக அளவில் பாதிப்படைந்தது.

கடைசி வார்த்தைகளாக அப்பெண் கூறியது "உன்னை விரும்பாத ஒரு பெண்ணிற்காக  "உன்னை விட்டால் எனக்கு வேறு பெண்களே கிடைக்காது என்று நினைத்து விட்டாயா" என்று காண்பிப்பதற்காக என்னை பயன்படுத்தி என் வாழ்க்கையை அழித்து விட்டாயே".
3/15/2013

ஒரு காதல் கதை - 1


சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் சென்னைக்கே உரிய வெயில் எப்போதும் போல வரவேற்றது, டாக்சியின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது சென்னை பெரும் மாற்றங்களை அடைந்து இருப்பது சற்றே ஆச்சரியத்துடன் அவளது கவனத்தை ஈர்த்தது. டாக்சி ஓட்டுனரிடம் அதைப்பற்றி பேச்சு கொடுத்தபோது சென்னைக்கே உரிய தமிழில் அதை அவருக்கு தெரிந்த அளவில் விளக்கினார். அருகே இருந்த குடியிருப்பில் டாக்சி சென்று கொண்டிருந்தபோது தொடர்வண்டி நிலையத்தை கடந்து செல்வதற்கு கட்டப்பட்டிருந்த சுரங்கபாதை சற்று ஆச்சரியத்தை கொடுத்தது, அங்கே முன்பு காணப்பட்ட வீதியும் கடைகளும் காணப்படவில்லை, டாக்சியிலிருந்தவாறே தொடர்வண்டி நிலையத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்தது நிறைவேறவில்லை. பழைய நினைவுகள் நெஞ்சில் கனத்தது. அவனுக்கு இப்போது வயது அறுபதை நெருங்கி கொண்டிருக்கும் என்னைபோலவே அவனும் இந்த தொடர்வண்டி நிலையத்தை கடக்கும் போதெல்லாம் என்னை சந்திக்க காத்திருந்ததை நினைத்து கொள்வானா. அவன் எப்படி இருப்பான், என்னை முற்றிலும் மறந்துவிட்டிருப்பானா. அடுக்கு மாடி கட்டிடங்கள் தனி வீடுகளை தகர்த்துவிட்டு உயரமாக நின்று கொண்டிருந்தது. பழைய தனி வீடுகள் ஆங்காங்கே ஒன்றிரண்டு மட்டும் எஞ்சியிருந்தது. அடுத்த முறை சென்னைக்கு வரும் போது அவைகளும் இடிக்கப்பட்டு அடுக்குமாடி கட்டிடமாக உருவெடுத்திருக்கும், எல்லாம் மாறி விடுகிறது மனதில் இருந்த நினைவுகளும் காட்சிகளும் தகர்க்க இயலாதவையாக என்றும் பசுமையாக எண்ணங்களில் புகுந்து கொண்டுவிடுகிறது. டாக்சி ஓட்டுனரின் குரல் அவள் சிந்தனையை அத்துடன் நிறுத்தியது.

எழுபதுகளின் இறுதி. அவனும் அவளும் சந்தித்து கொள்வது தொடர்வண்டி நிலையம். தொடர்வண்டியில் பயணம் செய்து வந்து அவன் அவளுக்காக அங்கேயே காத்து இருப்பான், அவன் நிற்கும் இடத்திலிருந்து பார்த்தால் சிறிது தூரத்தில் அந்த வீதி தொடர்வண்டி நிலையத்துடன் இணையும் வளவில் அவள் வருவதை பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற நிகழ்வுகள் இருவருக்குமே சுவாரஸ்யம் மிகுந்ததாகவே இருக்கும். நிச்சயம் அவள் வந்து விடுவாள் என்று அவன் காத்திருப்பான், அவளும் தவறாமல் வந்து விடுவாள், அடிக்கடி நிகழும் நிகழ்வாக இருப்பதில்லை. அவனுடன் சேர்ந்திருக்கின்ற ஒவ்வொரு நொடியும்  ஏன் அத்தனை இன்பமாக இருக்கிறது என்பதை அறியாமலேயே சில காலம் மட்டுமே தொடர்ந்த அந்த உறவும் நிகழ்வும் தொடர்ந்தது ஒருவருடத்திற்கும் குறைவு. முதன் முறையாக சந்தித்ததிலிருந்து எந்த உறவும் இல்லாமல் எப்போதாவது ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த தருணங்கள் ஒருவருடத்திற்கும் சற்றே குறைவுதான். பின்னர் ஏறக்குறைய ஒருவருட இடைவெளி, [அவன் அவளை கடிதம் கொண்டு துரத்தியது (தபாலில்].  அவனை சந்தித்தது நட்பாக,  அவனது நட்பில் அவனைப்பற்றிய நன்மதிப்பை அவள் மனதில் விதைத்தது. அவன் அவளை அடைய முற்படுவதாகவே இல்லை, ஸ்பரிசங்களின் தேவையற்ற உறவு,  நாளடைவில் அவனது பழக்கம் இன்றி வாழ இயலுமா என்பது கேள்வியானது அவளுக்கு. அவள் அதை காதல் என்று அறிந்து கொள்ள முடிந்தது.

ஒருவருடத்தில் சில நாட்கள் மட்டுமே சந்திப்பு, எப்போது அவன் வரச்சொன்னாலும் அவள் அவனை சந்திக்க தவறுவது கிடையாது. அவளுக்கு அவன் தோள் மீது சாய்ந்து கொள்ளும் போது கிடைத்த சுகம் சிறுவயதில் தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு உறங்கியதை நினைவுபடுத்தியது.  இவனுடன் காலம் முழுதும் இப்படியே வாழ்ந்துவிடலாம் வாழ்க்கையின் சுமையே தெரியாதபடி என்னை சுமந்து கொள்வான் என்று தோன்றியது. அவனுக்கு என்னைப்பற்றி எப்படி தெரியும், ஒருசமயம் அவனும் என்னை போன்ற விருப்பு வெறுப்புகள் கொண்டவனாக இருப்பானோ, எனக்கு எதைபற்றி பேசுவதற்கு விருப்பமோ அவற்றை அவனும் என்னிடம் நான் சொல்லாமலேயே பேசுகிறானே, நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம் அவன் எனக்காகவே பிறந்தவன், இல்லையென்றால் நாங்கள் ஏன் சந்தித்திருக்கவேண்டும்.   இதைத்தான் காதல் என்று சொல்கின்றார்களா என்று அவள் நினைப்பது அதிகரித்தது. இதுவரை ஏற்பட்டிராத புதிய உணர்வு அப்பாவைத்தவிர வேறு ஆணைப்பற்றி அறியாதிருந்த காரணத்தினால் ஏற்பட்ட அனுபவமாகக்கூட இருக்கலாம். ஆண் நண்பர்கள் என்பதெல்லாம் எழுபதுகளில் அரிதான ஒன்றாக இருந்த காலம்.

ஒருசமயம் ஆண் நண்பர்களுடன் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்திருந்தால் அது ஒன்றும் புதிய அனுபவமாக இருந்திருக்காமல் சாதாரணமாக இருந்திருக்க கூடுமோ. மனதிற்கு பிடித்தவனோடு வாழவேண்டும் என்று நினைக்கின்ற நினைப்பு மட்டும் பெண்களுக்கு எந்த காலத்திலும் மாறாததோ. காதலித்தவனை கணவனாக அடைவது என்பது "அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா" என்று அழைக்க ஆசைப்படுவதை போன்றது. அப்படித்தான் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட பிரிவும். அவர்கள் சந்திப்பு இமைக்கும் நேரத்தில் துண்டிக்கப்பட்டது. அவன் தொடர்வண்டி நிலையத்தில் அதே இடத்தில் காத்து நின்றுவிட்டு திரும்புவது சில காலம் தொடர்ந்தது. நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக வருடங்கள் பல ஓடி மறைந்தது.