Translate

2/20/2013

நிரந்தர கேள்வி மட்டும்

நாங்கள் குடும்பத்துடன் வளைகுடா நாடு ஒன்றில் சில ஆண்டுகள் வசித்து வந்தோம், என் கணவரின் உடன் பணி புரிந்து வந்த சிங்களவர் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்படவில்லை, புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படவில்லை, அப்படிப்பட்ட காலத்தில் அங்கிருந்த சிங்களர்களுக்கு தமிழர்களாகிய எங்களை சற்றும் பிடிக்காமல் பல முறை பல வஞ்சகமான சதித்திட்டங்களை தீட்டி பணியிலிருந்து துரத்த முயன்று தோல்வியடைந்தனர். அப்போது எங்களுக்கு அவர்களின் வன்மத்திர்க்கும் வஞ்சக செயல்களுக்கும் காரணம் தெரிந்திருக்கவில்லை. இலங்கையில் எப்போதும் சண்டை நடக்கிறது என்பதும் அதனால் பலர் உயிர், மற்றும் உடமைகளை இழந்து அகதிகளாக இந்தியா திரும்புகின்றனர் என்பதை செய்திதாள்களில் படித்திருக்கிறேன். அதன் தீவிரம் என்ன என்பது தெரிந்துகொள்ள தற்போதைய இணையதள வசதிகள் ஊடகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் அப்போது இல்லை. அக்காலத்தில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளைப்பற்றிய செய்திகள் சிலவற்றை எங்கள் பெற்றோர் பேசுவதை நான் கவனித்து கேட்டதுண்டு. அதைப்போன்று இலங்கை அகதிகளும் அங்கு வசிக்க இயலாமல் திரும்பியவர்கள் என்ற அளவில் செய்தியை அறிந்து கொள்ள முடிந்திருந்தது.

சிங்களர்களின் மிருக குணத்தை பற்றி வளைகுடாவில் பணி செய்து கொண்டிருந்த சமயம் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலங்கை தமிழர்களால் மட்டுமே சிங்களவர்களை எதிர்கொள்ள முடிந்த சில சம்பவங்களையும் நான் பார்த்ததுண்டு. ஏனெனில் இலங்கையில் சிங்களவர்களுடன் ஒருமித்து வாழ்ந்த காரணத்தால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பது முன்கூட்டியே இலங்கை தமிழர்கள் அறிந்திருந்தது தான் காரணம் என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது. நாங்கள் தமிழகத்திலிருந்து வளைகுடாவிற்கு சென்றவர்கள்தான் என்றாலும் எங்களுக்கு எதிராக பயங்கர சதி திட்டம் உருவாக்கி அதை மிகவும் சரியான நேரத்தில் நம் மீது பிரயோகிப்பதை நாங்கள் கண் கூடாக கண்டு அனுபவித்திருக்கின்றோம். வளைகுடா நாடுகளில் சட்டம் மிகவும் கடுமையானது என்பதால் நாம் மிகவும் கவனத்துடன் வாழ்க்கை நடத்தவேண்டியுள்ளது, அதையே சிங்களவர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதற்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையை கத்தி மீது வெறும் காலில் நடப்பதை போன்று நடத்த வேண்டி இருந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

அப்படிப்பட்ட கொடுமைக்காரர்கள் சிங்களவ மிருகங்கள் என்பதை மறுபடியும் நினைவு கூற வைத்தது பாலச்சந்திரன் என்கின்ற சிறுவனின் கொடூர மரண செய்தி. புலிகளின் இயக்கத்தை தடை செய்ததின் காரணமாகவும் தமிழகத்தில் அதிகபட்ச மக்களுக்கு இலங்கைப்போர் சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் அறியப்படாமல் இருப்பதால் அதை குறித்த தீவிர போராட்டங்களும் எதிர்ப்புகளும் மிகவும் தாமதமாக உள்ளதுடன் சிங்களவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய தீர்ப்பு கிடைக்காமல் இந்தியாவிற்கு ராஜபக்சே வருவதற்கு வாய்ப்புகளும் கொடுக்கப்படுகிறது. ராஜீவ் காந்தியின் கொலையை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுகின்ற சிங்கள அரசு அதையே பெரும் சாக்குபோக்காக வைத்து இந்திய அரசுடன் நட்பு பாராட்டுவது போன்ற கண்துடைப்பு செய்து கொண்டிருக்கிறது ஆனால் உலக மனித நேய நீதிக்கு முன்னால் இன்னும் சரியான தீர்ப்பு கொடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லை என்கின்ற காரணம் மட்டுமே முன் வைக்கப்படுமானால் நீதி என்பதை எப்படி நிறுத்தி வைக்க முடியும் என்பது கேள்வியாக உள்ளது.

இலங்கை தேசம் சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற கொள்கையை உடைய சிங்கள அரசு அதன் குடியுரிமை பெற்ற தமிழர்களுக்கு சம உரிமை கொடாமல் சர்வாதிகாரம் செய்து வருவதை உலக நாடுகள் இன்னும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது ஏன். இலங்கையில் போர் நடந்த போதும், நடுநிலை வகிக்கும் அமெரிக்கா அதை பற்றி ஐ நாவில் முன்வைத்து நடவடிக்கை எடுக்க தவறியது ஏன். இன்றுவரை இலங்கை தமிழர்கள் இடம்பெயர்ந்து பலநாடுகளில் தஞ்சம் அடைந்து விட்டதால் சிங்கள வெறியர்களுக்கு சொந்தமாகி கொண்டிருக்கும் இலங்கை பிரச்சினை பதிலில்லாத நிரந்தர கேள்வி மட்டும்தானா.