Translate

2/14/2013

அசிங்கம் .....அசிங்கம் !!


இளம் பெண்களைப்பற்றிய தொடர் துயரச் சம்பவங்கள் ஒரு புறம், நீரின்றி காய்ந்து நிற்கும் நெற்பயிர்கள் மற்றொரு புறம், இவைகளுக்கிடையே பல கொலை கொள்ளைகள் தினந்தோறும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்கள், அத்தியாவசிய பால் மற்றும் பொருள்களின் விலையேற்றம், மின்சாரம் பற்றாக்குறையால் சிறுதொழில் உட்பட தொழில்கள் பாதிப்பு என்று தினமும் வாழ்க்கை துயரமும் வேதனையும் நெஞ்சை வேதனைக்குள்ளாக்கி கொண்டிருக்கும் இச்சமயத்தில் காதல் என்பது கொண்டாடப்பட வேண்டியதா வேண்டாததா என்று பட்டிமன்றம் நடத்தினால் கூட கொண்டாடப்பட வேண்டியது என்றுதான் முடிவுரை வழங்கப்படும். ஏனென்றால் காதல் ஜாதி மத அந்தஸ்த்து பேதங்களை ஒழிக்க வழி வகுக்கும் என்கின்ற நோக்கத்தில். ஆனால் இன்றைய காதல் என்பது சிலருக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைப்போல இருக்கிறது, சிலருக்கு அழகு அந்தஸ்த்து அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது, இன்னும் சிலருக்கு சூழ்நிலையால் உண்டாக்கப்படுகிறது. "முதல் காதலா அப்படி என்றால் என்ன" என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களும் நிறைய பேர் உண்டு. "எதன் அடிப்படையிலும் வருவது காதலில்லை" என்று காதலுக்கு இலக்கணம் கூறும் இலக்கியவாதிகளும் உண்டு. அப்படியானால் 'என்னத்ததான் காதல்ன்னு சொல்லப்போற, புதுசா எதையோ கண்டுபுடிச்ச மாதிரி'ன்னு நீங்கள் முனகுவதும் எனக்கு கேட்கிறது.

காதல் என்கின்ற உணர்வைப்பற்றி பேசுகின்ற சமயத்தில் இன்றைய நடப்பில் இரு இளைஞர்களிடையே ஏற்படுகின்ற காதலைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மேலைநாடுகளில் இன்றைய சூழலில் காதல் என்பது திருமணம் என்கின்ற குடும்ப வாழ்க்கையின் அடிப்படையாக பெரும்பாலும் இருப்பதில்லை, காதலித்து திருமணம் செய்துகொண்டு குழந்தைகளோடு 5 ஆண்டு ஒருமித்து வாழ்ந்தாலே அதிகபட்சமாக கருதப்படுகிறது, அதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் ஏற்ப்படுகின்ற வெவ்வேறு 'உறவுகளும்' தவிர்க்க இயலாததாக உள்ளது. இன்னும் கொஞ்சம் மேலே சென்று இரண்டு ஆண்களுக்கிடையே காதல் இரண்டு பெண்களுக்கிடையே காதல் என்று காலப்போக்கில் எதேனும் விலங்கு ஒன்றுடன் பெண்ணோ ஆணோ காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தாலும் அதை பார்த்து அதிசயிக்க வேண்டியது இருக்காது.

ஆனால் இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் காதல் என்பது திருமணத்தில் முடியவேண்டும் அதற்க்கு பின்னர் அவ்விருவரும் குழந்தைகளுடன் குடும்பமாக ஒருமித்து வாழ்க்கை நடத்த வேண்டும். திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவருடன் உறவு இருந்ததாக அறிந்தால் பெண் அல்லது ஆணின் திருமணம் நிறுத்தப்படுகிறது அல்லது அப்படிப்பட்ட பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது போன்ற முறைகளையே நமது சமூகம் கடைப்பிடித்து வருகிறது. "மானம்" "அவமானம்" என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக அமைப்பு. திருமணத்திற்கு அடிப்படையாக ஜாதி மதம் மொழி ஜாதகம் அந்தஸ்த்து என்று வரிசையாக எத்தனையோ தகுதிகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்று அதிகபட்ச மக்கள் உறுதியுடன் இருக்கின்ற சமுதாயத்தில் காதல் என்பது அங்கீகாரமற்ற 'அசிங்கமான' சொல்லாக இருந்த காலம்மாறி காதலைப்பற்றி பேசுவதும் சில காதல் திருமணங்கள் ஆங்காங்கே நடை பெறுவதை சீர்திருத்தம் என்று சொல்வதா சீரழிவு என்று சொல்லுவதா என்பது தெரியவில்லை. ஏனென்றால் காதலித்த இருவரை கொலை கொள்ளை குற்றவாளிகளை விட மிக மோசமாக தாக்கப்பட்டு கொன்ற, கொல்லுகின்ற பெற்றோர்களை கொண்ட  சமுதாயத்தை உள்ளடக்கிய நாடாக இருக்கின்ற இந்திய 'திரு'நாட்டில் காதலர் தினத்தை கொண்டாட அவசியமில்லைதான். காதலிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஆணும் பெண்ணும் சுய ஒழுக்கத்தை, கட்டுப்பாடுகளை மீறுகின்ற செயல்களில் ஈடுபடுவதை எப்படி காதலர் தின கொண்டாட்டம் என்று சொல்ல முடியும்.

பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியாமல் ரகசிய சந்திப்பு என்கின்ற பெயரில் பூங்கா, கடற்கரை, தேநீர்விடுதி என்று தனிமையை தேடிச்செல்லும் 'காதலை' கொண்டாடச் சொல்ல முடியுமா. காதல் என்றாலே பிரச்சினை ஏற்படுத்துகின்ற ஒன்றாகிப் போன நமது சமுதாயத்தில் எதற்காக கொண்டாட்டங்கள். இன்றைய சூழலில் ஆண்களும் பெண்களும் இணைந்து பழகும், பேசும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதே இதற்க்கு காரணம் என்றால்  தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை, அங்கீகாரத்தை, முன்னேற்றத்தை காதலுக்காக தவறாக உபயோகிக்க முற்படுவதுதான் 'காதலர் தின' கொண்டாட்டம் என்றால் அதை ஒருபோதும் ஏற்றுகொள்ள இயலாது. காதல் என்பது தனிநபரின் முன்னேற்றத்தை சிதைக்கும் என்றால், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையூறாக மாற்றுகின்ற ஒன்றாகி அதனால் ஏற்ப்படுகின்ற உயிர் சேதங்கள் நமக்கு சொல்லுகின்ற செய்திகள் என்ன, காதலை ஏற்றுக்கொள்வது  சரியான முடிவா அல்லது அதை எதிர்த்து நின்று போர்க்களம் உருவாக்க முயல்வதா.

காதலில் தொடங்கி திருமணம் குடும்பம் குழந்தைகளோடு பெற்றோர் என்ற வட்டத்தை சிதைக்காமல், இழக்காமல் தொடரும் என்றால் காதலர் தினம் கொண்டாடப்படுவதில் எதிர்ப்பு இருக்காது என்றே நான் கருதுகிறேன். அதை போன்ற காலம் ஒன்று நமது இந்திய தேசத்தை வந்தடையும் என்றால் காதலர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். கடற்கரை, பூங்கா, தேநீர் விடுதிகளில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து தங்களை சுற்றி யாருமே இல்லாமல் தாங்கள் இருவர் மட்டுமே இருப்பது போல நினைத்து கொண்டு செயல்படுவதை 'சுதந்திரம்' என்று சொல்லி 'வேண்டுமென்றால் அவர்கள் கண்களை மூடி கொள்ளட்டும் அல்லது எங்களை பார்கின்ற தவறான கண்ணோட்டத்தை தவிர்த்து கொள்ளட்டும்" என்று பொறுப்பற்று பேசும் காதலர்களை நிச்சயம் எதிர்க்க வேண்டும். காதல் என்ற பெயரில் உடல் சுகம் காண்பதும், வாழ்க்கையை பற்றிய பயமின்றி "இலவசத்திலேயே" வாழ்வதை காதல் என்று சொல்லிகொள்பவர்களை நிச்சயம் எதிர்க்கவேண்டும். காதல் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விருந்துக்கு ஜோடியாக சென்று கும்மாளம் அடிப்பதை எதிர்க்கவேண்டும். இன்னும் எத்தனையோ சொல்ல முடியாத அவலங்களை காதல் என்று சொல்லி கொள்ளும் பேர்வழிகளை ஒழித்து கட்டவேண்டும்.