Translate

1/31/2013

யார்தான் நடிக்கவில்லை


"முட்டை இடுகிற கோழிக்குதான் வலி தெரியும்" என்று சொல்வார்கள், கமல்ஹாசன் தனக்கிருக்கின்ற சொத்துக்கள் எல்லாவற்றையும் "விஸ்வரூபம்" திரைப்படம் எடுப்பதற்கு தேவைப்பட்ட பணத்திற்காக எழுதி கொடுத்து விட்டதாக நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார், அவரது திரைப்படம் வெளியாகி இருந்தால் அதில் கிடைக்கும் பணத்தை கடன் வாங்கியவர்களுக்கு திரும்ப கொடுத்திருக்க முடியும், தடைக்கு மேல் தடை என்று திரைப்படம் வெளியாகும் நாள் கேள்வி குறியானதால் எழுதி கொடுத்த சொத்துக்களை பணம் கொடுத்தவர் எடுத்துக்கொள்ளும் நிலைமை அவருக்கு ஏற்பட்டது என்பதுதானே அதற்க்கு அர்த்தம்?, அதுதானே சரியான பதில், திரைப்படம் தமிழகத்தில் மட்டும்  திரையிடுவதற்கு தடை விதித்துவிட்டு அவரது நஷ்டத்திற்கு பொறுப்பு தாங்கள் அல்ல என்று சொன்னால், அதற்க்கு அர்த்தம் வேண்டுமென்றே அவர் அந்த கஷ்டம் அல்லது ந(ஷ்)ட்டம் அடைய வேண்டும் என்று நினைத்து இருப்பின்; அவர் தனது சிக்கல்களை  பகிரங்கமாக தெரிவித்து இருப்பது எவ்விதத்திலும் தவறாகாது [அல்லவா], கமலஹாசனின் பக்கம் நியாயம் இருக்கிறதா என்று மட்டும் யோசிக்கவே இவ்வாறு நான் எழுதுகிறேன் என்று அர்த்தமில்லை, எனக்கு யார் மீதும் தீவிர பற்றோ தீவிர வெறுப்போ எப்போதுமே கிடையாது, நடுநிலையாளர்களின் பக்கம் தான் என்னுடையது.

http://rathnapeters.blogspot.in/2010/02/blog-post_5054.html


இஸ்லாமியர்களின் உணர்வை நான் மதிக்கிறேன், ஏற்கனவே மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது அயோத்தி என்ற நகரத்தையே கண்டுபிடிக்க இயலவில்லை என்று தெரிந்த பின்னர் இடித்துவிட்ட இஸ்லாமியர்களின் பழமையான மசூதியை திரும்ப கொடுக்க முடியுமா என்பதே எனது கேள்வியாக இருந்தது. மதம் சாதி என்ற பெயரில் மனித நேயம் கேடுற ஒருநாளும் மக்கள் இடம் தரக்கூடாது என்ற எனது கருத்தை என்னால் அடிக்கடி சமயத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள இயலாது..அவரவர் கருத்தை பதிவு செய்வது என்பது குடியரசு நாடுகளில் மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்ற நோக்கில் இங்கே பதிவு செய்கிறேன்.

அரபு மொழியில் பின்புலத்தில் குரானின் வாசகங்கள் இருப்பதுதான் அப்படத்தை தடை செய்யக்காரணம் என்றால், அத்திரைப்படம்  வெளியாகும் நாள் வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்க்கு முன்பதாகவே கமல்ஹாசனின் கருத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இத்தனை இடர்கள் ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாமே, அல்லது அக்காட்சிகளை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கலாமே, அவ்வாறான கோரிக்கையை கமல்ஹாசன் ஏற்றுகொள்ளாத பட்சத்தில் அப்படம் திரையிட தடை கோரபட்டிருந்தால் அது சரியான முறை, அதை விடுத்து வெளியாகும் நாள்வரை காத்திருந்து தடை செய்வது என்பது உள்நோக்கம் கொண்டிருப்பதை உணர்த்தவில்லையா.

எந்த மதத்தையும் ஆதரிப்பதும் நிராகரிப்பதும் ஒரு உண்மையான கலைஞன் செய்யக்கூடாத காரியம் அவ்வாறு செய்தால் மக்கள் அவரை கலைஞன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஒரு கலைஞனின் சொந்த கருத்தை திரையில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்தினால் மக்கள் ஆதரவு இல்லாமல் போகும்,  'எம்மதமும் சம்மதம்' என்று கூறும் இந்தியாவில் அத்தகைய மதம் சார்ந்த, சாதி சார்ந்த கொள்கை எடுபடாது என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா  என்ன. உண்மையான புறக்கணிப்பை உணர்ந்த பின்னர் எந்த மாநிலத்தில் ஒருமைப்பாடு உள்ளதோ, எங்கே ஒருவரின் கருத்துரிமைக்கு எதிர்ப்பு இல்லையோ அங்கே தான் செல்ல நினைப்பதாக அவர் கூறியதை கூட சில விஷமிகள் "மிகவும் நன்றாக நடிக்கிறார்" என்று கூறினார்கள். அதற்கும் இன்னும் கொஞ்சம் மேலே சென்று "நன்றாக விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது" என்றும் கூறினார்கள். என்ன மனிதர்கள்!!.

நடிகன் அல்லது நடிகை என்றால் அவர் எப்போதுமே நடிப்பார் என்பது போல் பேசப்பட்டது ஒருபுறம், நடிக நடிகையரைத் தவிர வேறு யாருமே நடிப்பது இல்லையா, அவர்களைவிட அதிகமாக அன்றாட வாழ்க்கையில் தினமும் நடிப்பவர்கள் தான் அதிகம், அதனால்தான் கொலை கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, என்றெல்லாம் நடந்தேறி வருகிறது. அவ்வாறு குற்றங்களை செய்யும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டுபிடிக்க இயலாமல் தானே குற்றவாளிகள் எங்கும் மலிந்து கிடக்கின்றனர்?

தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் பார்க்கின்ற ஒவ்வொருவரும் அரபு மொழியை நன்கு படித்து அதன் அர்த்தம் அறிந்து கொள்பவர்களா என்ன, அத்திரைப்படத்தில் சில நிமிடங்களில் வந்து போகின்ற காட்சியை பார்க்காமல் அதன் பின்புலத்தில் அரபுமொழியில் இருக்கின்ற வாசகங்களை படித்துவிட்டு குரானையும் இஸ்லாமியர்களையும் இழிவாக பேசுவார்களா அல்லது நினைத்து விடுவார்களா, புரியவில்லை. விவாதம் என்கின்ற நோக்கில் பார்த்தால் கூட இதில் எங்கேயும் நியாயம் தெரியவில்லை. வீணான எதிர்ப்பு, இதில் காயம் அடைந்தவர் கமல்ஹாசன் மட்டுமே என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.