Translate

1/25/2013

விஸ்வரூபம்



எவ்விதத்திலும் வன்முறையை ஆதரிக்க கூடாது என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் ஒருமித்த கருத்து. வன்முறையை தூண்டும் வகையில் எவ்வித செய்கைகள் ஆதாரபூர்வமாக இருந்தால் அது யுனிவர்சலாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது, அவ்வாறு மாற்று கருத்து இருப்பின் அவர் தீவிரவாதியாக இருக்கவேண்டும். மிருகத்தை வதைப்பது போல திரைப்பட காட்சி இருக்க கூடாது அவ்வாறு இருந்தால் அதை நீக்க வேண்டும் என்பது மிருகவதை சட்டம் வரையறை உண்டு. கொலையாளி என்று நிருபிக்கப்பட் ட நபரை தூக்கிலிடுவதை தடுக்க கோருவதற்கு மனிதஉரிமை சட்டம் உள்ளது. தீவிரவாத செய்கைகளை ஆதரிப்பவர்களும் குற்றவாளிகள் தான், குற்றம் செய்பவர் எவராக இருப்பினும் அவரை சட்டத்தின் முன் பிடித்து கொடுக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையுமாகும்.

சமுதாய விரோத செயல்களில் ஈடுபடுபவர் தனது உடன் பிறந்த சகோதரனாக அல்லது மகனாக இருந்தாலும் அவருக்கு சட்டத்திலிருந்து பாதுகாப்பு கொடுப்பதும் புகலிடம் கொடுப்பதும் தீவிரவாதிக்கு துணை போனதற்கான குற்ற பிரிவுகள் சட்டத்தில் உண்டு. ஆனால் எத்தனை பேர் அவ்வாறு தங்களை தூய்மையாக வைத்து கொண்டுள்ளனர் என்பது அவரவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். பெற்றோருக்கு தெரியாமல் சமூக விரோத கும்பல்களுடன் உறவு வைத்துக் கொண்டு அவற்றால் கிடைக்கும் வருமானத்தை செலவிட்டு எத்தனை திருமணம் நடக்கிறதோ, எத்தனை சொந்த வீடுகள் வாங்கப்படுகிறதோ, எத்தனை பேர் படிப்பதற்கு கொடுக்கப்படுகிறதோ, தங்களது சொந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்ற இன்னும் எத்தனையோ காரியங்களை செய்து வருகின்ற இளைஞர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த எத்தனை பேர் முன் வருகிறார்கள். காரணம் சுயநலம்.

சுயநலவாதிகளால் சுருங்கி போன சமுதாயம், வறுமை முற்றிப்போனால் 'களவும் கொலையும் தவறல்ல' என்ற வேதாந்தம் பேசிக்கொண்டு மனம் போன நோக்கில் இன்றைய சமுதாயம் 'தீவிரவாதிகளை' முகமூடிக்குள் மறைத்து கொண்டுதான் செயல்படுகிறது, வங்கியில் கொள்ளை, ஏ டி எம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி, நகை பணத்துக்காக கழுத்தறுத்து கொலை, பலவித மோசடி கும்பல்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது, குண்டு வெடிப்பு, என்று தினம் நாளேடுகளை நிரப்பிக்கொண்டிருக்கும் செய்திகள் நமக்கு எதை சொல்கிறது. அவ்வாறு கொள்ளை கொலை குற்றம் செய்த கும்பல் காவல்துறையால் பிடிபட்ட பின்னர் அவரது பெயர் நிழற்ப்படம் போன்றவை செய்திகளில் வெளியாகும்போது கொள்ளையர்களின் சாதி மதங்களை சேர்ந்தவர்கள் குழுவாக திரண்டு கொண்டு எங்களது சாதிக்காரனை அல்லது எங்களது மதத்தை சேர்ந்தவனை அவமானப்படுத்துகிரீர்கள், அவ்வாறு செய்திகளில் வெளியிடுவதை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அதை சட்டம் ஏற்றுக்கொள்ளுமா? இதற்க்கு பெயர்தான்  "சுயநலவாதம்". வேற்று மத (அ ) சாதிக்காரனை இழிவுபடுத்தினால் அதை கண்டு குதூகலிப்பது தனது மத (அ ) சாதிக்காரனைப்பற்றிய இழிவு செய்தியை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிடுவது. இது என்ன வாதம்?

மதவாதம் சாதிவாதம் தீவிரவாதம் இன்னும் என்ன மீதமிருக்கிறது, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு விரோதிகளாக எத்தனை காலம் நீடிப்பார்கள், எங்கே போகிறது இந்த சமுதாயம். முன்னேற்றம் அல்லது நாகரீகம் என்று நா கிழிய பேசுகின்ற இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள். நாகரீகம் என்று இவர்கள் கூறுவது கிராப்பு தலையுடன் பான்ட்டும் அல்லது ஜீன்ஸ் சொக்காயும் வித விதமான டீ ஷர்ட்டுடன் கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு விலை உயர்ந்த சொகுசு காரில் [இரட்டை அல்லது நான்கு சக்கர வண்டிகளில்] வலம் வருவதா? அல்லது பளிங்கு பதித்த பங்களாவில்   அலங்கார விளக்குகளின் நடுவே மதுவுடனும் மங்கைகளுடன் சுகபோகம் அனுபவித்து கொண்டு உலாவும் வாழ்க்கையா? அல்லது முன்னேற்றம் என்று சொல்வதெல்லாம் ஆங்கிலத்தில் படித்து பட்டம் வாங்குவதா?

இவர்கள் குறிப்பிடும் முன்னேற்றத்தின் அளவுகோல் செய்வதொன்று சொல்வது வேறு, படிப்பது ஒன்று இடிப்பது வேறு, எல்லோரும் மிக அழகாகவே "தினமும் நடித்து" தாங்கள் மிகவும் முன்னேறியவர்கள் என்பதை பல வகைகளிலும் வெளிகாண்பித்து கொண்டிருக்கின்றார்கள். 

செய்திகளில் வருகின்றவற்றை கருவாக வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள் ஏராளம். இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அத்தனையும் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்த பின்னரே திரைக்கு வருகிறது. தற்போது விஸ்வரூபம், இத்தனை தடையை கண்டிருப்பது விசித்திரமாக உள்ளது. அதிலும் கமல்ஹாசன் திரையுலகிற்கு புதியவர் இல்லை, அவருக்கு வன்முறையை கிளப்புவதில் ஆர்வம் இருக்க முடியுமா என்பதை பற்றி சாதாரண மனிதனுக்கே தெரிந்த விஷயம் தான், இதில் "வி(ஷம்)மம்" செய்பவர்கள்  அவரை கேவலப்படுத்த செய்யப்படுகிறதா அல்லது வேறு உள்நோக்கம் கொண்டதா என்று சிந்திக்க வைக்கிறது.