Translate

1/18/2013

இந்திய பிரச்சினை

வணக்கம் 

பல மாதங்களுக்குப்பின்னர் இன்றைக்கு இங்கே வர தோன்றியதற்கு காரணம் ஏதும் இல்லை, எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்படுவதே இல்லாமல் போனதன் காரணம் அறிந்து கொள்வதற்கு கடல் அளவு விஷயங்கள் காத்திருக்க எதையாவது எழுதி அதற்க்கு கருத்துக்களை எதிர்பார்த்து வரவேற்ப்பு கிடைத்தால் நிம்மதி அடைவதோடு நிற்காமல் என்றாவது, வாழ்நாளில் ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது அச்சிட்டு வெளியிட வேண்டும் என்கின்ற ஆவல் எழ அந்த புத்தகம் சிலருடைய கையிலாவது சென்று சேர்ந்திட வேண்டும் என்கின்ற கனவோடு மிகவும் வருந்தி எழுதி ஒன்றோ இரண்டோ அதிகம் போனால் பத்து புத்தகங்களை நாமே நமது நண்பர்களுக்கு இலவசமாக வழங்கி (ஒரு புத்தகம் கூட விற்காமல்) அவர்கள் அவற்றை படித்துவிட்டு சொல்லப்போகும் கருத்துகளுக்கு காத்து கிடக்கும் தவிப்பும் எதிர்பார்ப்பும் எழுதுகோல் பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்ப்படுவது இயல்புதான்.

அந்த நப்பாசையெல்லாம் நமக்கு வேண்டாம், "பழம் புளிக்கிறது" என்று நரியைப்போல் ஒதுங்கிவிடுவதும் இயல்புதான். இவற்றிற்கு மேலே ஒருபடி சென்று, சில நயவஞ்சக கூட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமாக யார் எழுதுவார் என்று காத்திருந்து அதை அப்படியே தான் எழுதியதை போல "திருடி"ச்செல்லும் "மானம் கெட்ட" அயோக்கியர்களின் சூறையாடலை சமாளிக்க இயலாமல் ஒதுங்கி சென்றுவிடுவதும் இங்கே இயல்புதான். இவற்றை எல்லாம் மொத்தமாக ஒதுக்கி விட்டு அல்லது மறந்துவிட்டு எதையாவது எழுதி கொண்டே இருப்பதும் இயல்புதான்.

எழுதுவதற்கு நாட்டில் என்ன செய்தியா இல்லை, ஒவ்வொரு நாளும் செய்திகள் ஊடகங்களையும் செய்தி தாள்களை நிரப்பி விடுகிறதே. நல்ல செய்தியை லாட்டரி சீட்டு எண்ணை தேடி கண்டுபிடிப்பதை போல கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய தினத்தில் செய்திகளில் முதலிடத்தை பிடித்துக்கொள்வது பெரும்பாலும் "கெட்ட" செய்திகளாக இருப்பதில் இருந்தே எதை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. எது எப்படி போனால் நமக்கு என்ன என்று நாட்டில் பலர் உண்டு, 'யார் எக்கேடு கேட்டால் உனக்கென்ன, நாம உழைச்சாத்தான் கஞ்சி' என்று இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

ஒரு கூட்டம் சேர்த்துக்கொண்டு 'ஒழிக' என்று கோஷங்களை எழுப்பி அதிக பட்ச்சமாக தேசிய கோடி அல்லது கட்சி கோடி அல்லது சம்பந்தப்பட்டவரின் உருவம் என்று சொல்லி பொம்மை செய்து அதை செருப்பால் அடித்து தீவைத்து நாசப்படுத்தும்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக ஒருநாள் திருமணமண்டபத்தில் வைத்துவிட்டு வெளியேற்றுவது வரை தங்களது எதிர்ப்பை காண்பித்து அதை சில ஊடகங்கள் தங்கள் செய்திகளில் காண்பித்து அவர்களுக்கும் 'வேலை' கொடுத்து இவ்வாறாக இந்தியாவில் பிரச்சினைகளும் அதை எதிர்ப்பவர்களும் சாதாரண செய்திகளாகி, எந்த பிரச்சினைகளும் எவ்வித தீர்வையும் காணாமலேயே கோப்புகளுக்குள் பூச்சிகளுக்கு உணவாகும், காலம் கடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் முடிவற்றதாய் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும், கிடப்பில் கிடக்கும் எத்தனையோ பிரச்சினைகளுடன் புதியதும் பழமையாகி விடும் இவைதான் இந்திய பிரச்சினை.

என்னை இவற்றில் எவற்றுடனும் இணைத்துக் கொள்ள விருப்பம் இன்றி எழுதுவதை மட்டும் 'காதலிப்பதால்' மீண்டும் எழுத வந்துவிட்டேன்.