Translate

3/12/2012

ஊழலற்ற இந்தியாலஞ்ச ஊழலை ஒட்டு மொத்தமாக ஒழிக்க சிறந்த சில வழிகள் உண்டு, ஆனால் ஒரு பழமொழி உண்டு 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' என்று, அதைப்போல ஏற்க்கனவே லஞ்சம் கொடுத்து காரியங்கள் சாதித்துப் பழகிப்போனவர்களுக்கும் லஞ்சம் வாங்கிக்கொண்டு காரியங்களை முடித்து கொடுத்து பழகிப்போனவர்களுக்கும் இந்த 'டிப்ஸ்' உதவாது. மனசாட்சி என்றால் என்ன என்று கேட்கும் மனிதர்களுக்கும் இந்த 'டிப்ஸ்' ஒத்துவராது. 'அப்படியென்ன கத்தரிக்கா டிப்ஸ்' என்று நீங்கள் அலுத்துகொள்வது எனக்கு புரிகிறது, இந்தியாவில் ஊசி காதுல ஒட்டகம் நுழையற மாதிரிதான் இந்த டிப்ஸ் கடை பிடிப்பவர்களுக்கு கடினம்.

முதலில் திருமணமாகாதவர்களுக்கு இந்த டிப்ஸ், உங்கள் வருங்கால கணவனோ மனைவியோ லஞ்சம் வாங்குபவராக இருக்க கூடாது என்று மிகவும் உறுதியுடன் இருப்பவரா நீங்கள் அப்படியென்றால் இந்த யோசனை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பது நிச்சயம். தனக்கு வரப்போகும் கணவனோ மனைவியோ அழகும் நிறமும் உள்ளவரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கிடைக்கின்ற சம்பளத்தில் மாத வருமானத்திற்கு தக்கவாறு பட்ஜெட் [வரவு செலவு] திட்டமிட்டு செலவு செய்ய முடிகின்ற, வருமானத்தை தவிர வேறு குறுக்குவழியில் கிடைக்கின்ற பணத்திற்காக ஆசைப்படாத மணமகனோ மணமகளோ தெரிவு செய்யுங்கள். ஜாதகம் பார்ப்பதற்கு முன்னர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபடுபவரா என்பதை தெரிந்துகொள்ள முயலுங்கள், ரத்த பரிசோதனைக்கு வலியுறுத்தி தகுந்த பரிசோதனை மையத்தில் ரத்த பரிசோதனை செய்துகொண்ட பின்னர் தீரா வியாதி ஏதாவது உண்டா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,

இரண்டாவதாக, அடுத்தவர்கள் வைத்திருக்கும் விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்கள் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களுக்காக ஆசைப்படுகின்ற மனதை [self hypnotism] கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 'நமது வருமானத்திற்கு உட்பட்டவைகளுக்காக மட்டும் ஆசைப்படு, அதிகமாக ஆசைப்படுவதால் 'உள்ளதும் போச்சுட நொள்ள கண்ணா' என்ற நிலைக்கு வந்துவிடும்' என்று மனதிடம் பேசுங்கள். தொடர்ந்து நீங்கள் அவ்வாறு பேசி உங்களது மனதின் ஆசைகளுக்கு வேலியமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

மூன்றாவதாக வருமானத்திற்கேர்ப்ப ஒரே குழந்தை போதுமென வரம்பு வைத்துக் கொண்டு அக்குழந்தையை உங்கள் வருமானத்திற்க்கேர்ப்ப அரசு பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ படிக்க வையுங்கள், சுத்தம் சுகாதாரம் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள், மிருகங்கள், இருட்டு, பேய் பூதம் போன்றவற்றை கண்டு மிரள வேண்டிய அவசியம் இல்லை என்பதை விளக்குங்கள், மாறாக மிருகங்கள் பறவைகள் இருட்டு போன்றவற்றை பழகும் விதம் பற்றி சொல்லிக் கொடுங்கள், [ஒருசமயம் இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கே தெரியவில்லையென்றால், பதில் இக்கட்டுரையிலேயே உள்ளது] குழந்தையை பள்ளிக்கு கூட்டிச் செல்லும்போது சாலை விதிகளை தினமும் கடை பிடிக்க கற்று கொடுங்கள். ஆசிரியர்களிடமும் உடன்படிக்கும் சக மாணவர்களிடமும் எவ்வாறு பழகவேண்டும் என்பதை அவ்வப்போது எடுத்து சொல்லுங்கள். உடன் படிக்கும் குழந்தை உங்கள் குழந்தையை அடித்து விட்டால் அதற்காக கோபப்பட்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் சண்டையிடுவதை விட சம்பந்தப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து அன்புடன் பேசி உங்கள் குழந்தையுடன் சமரசம் செய்து வையுங்கள். பள்ளிகூடத்தில் உபாத்தியாயர் கற்றுத்தரும் பாடங்களை கவனிக்கவேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமான பொறுப்பான வேலை, மேலை நாடுகளில் பெண்களும் ஆண்களும் திருமணத்திற்கு முன்பு அதற்க்கான மையத்திற்க்குச் சென்று [marriage counselling] திருமணத்திற்கு முன்பாக அதைப்பற்றிய முழுவிவரத்தை அறிவதுடன் திருமணத்திற்கு பின்பு எவ்வாறு நடந்துகொள்வது என்பதையும் அறிந்து கொள்வதால் அடிப்படையான சிக்கல்களை எளிதில் சமாளிக்க அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அத்துடன் நின்று விடாமல் கருவுருகின்ற காலத்தில் பெண்கள் எவ்வாறு சாப்பிடவேண்டும் எந்தவிதமான உடற்பயிர்ச்சிகளை மேற்கொள்வது அவசியம் போன்ற பல வகையான விவரங்களை அறிந்துகொள்வதற்க்கான புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்துகொள்கின்றனர், அதே போன்று குழந்தை பிறந்த பின்பும் குழந்தையை அதன் வயதிற்கு ஏற்றவாறு எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதனையும் புத்தகங்கள் மூலம் படித்து அறிந்து அதன்படி குழந்தைகளை வளர்க்கின்றனர். தேவைபட்டால் அதற்க்கான பயிற்சி உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்றுகொள்கின்றனர்.

இந்தியாவை பொறுத்த அளவில் புத்தகங்கள் படிப்பதென்பது பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டுமே தேவையானது என்பதும் அதைத்தவிர கதை மற்றும் வாராந்திர மாதாந்திர புத்தகங்களை வாங்கி படிப்பவர்கள் பொழுதுபோக்கிற்க்கு படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் புத்தகம் படித்து பலவற்றை அறிந்துகொள்வதற்க்காக குறிப்பிட்ட புத்தகங்களை தேடி வாங்கி படிப்பதென்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் தெரித்திருக்க வாய்ப்பு இல்லை, அதனால் பலவற்றைப்பற்றிய உபயோகமான தகவல்களை அறிந்துகொள்வதற்க்காகவே புத்தகங்களை படிக்கின்ற வழக்கத்தை ஏற்ப்படுத்திகொள்வது சிறந்தது. நாட்டிற்கு சிறந்த குடிமகனை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை, அவ்வாறு வளர்க்கப்பட்ட பின்னர் அக்குழந்தை தனது பெற்றோருக்கும் நாட்டிற்கும் மிகுந்த சிறப்பை தேடித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நான்காவதாக குழந்தைகளை வளர்க்கும்போது பணத்தைப்பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்த தவறக்கூடாது, குழந்தையின் கையில் காசு கொடுக்கின்ற போது அந்த காசு எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை பெற்றோர் நிச்சயம் அறிந்திருப்பது பெரும் பிரச்சினைகளில் சிக்காமல் தவிர்க்க முடியும். குழந்தை பள்ளியிலிருந்து வந்த பின்பு குழந்தையின் பொருட்களைத்தவிர வேறு குழந்தையின் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வந்தால் அப்பொருளை அக்குழந்தையிடம் கொடுத்து அதை திரும்ப உரியவரிடம் கொடுத்துவிட கற்றுக்கொடுப்பது மிகவும் சிறந்தது. தவறாக எடுத்துவந்தால் அவ்வாறு எடுத்துவருவதை தவிர்க்க கற்றுக்கொடுப்பது நல்லது.

சிக்கனம் என்பதற்கும் கஞ்சத்தனம் என்பதற்குமான வித்தியாசத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது சிக்கனம், அடிப்படை தேவைகளுக்காக செலவிடாமல் இருப்பது கஞ்சத்தனம். நாட்டின் பொது நீதிகளை நாம் அறிந்துகொண்டு அதை குழந்தைகளுக்கும் அதன் வயதிற்கேற்ப சொல்லிக்கொடுத்து வளர்ப்பது மிகவும் அவசியம். அவ்வாறு பொது விதிகளை மீறுவதால் ஏற்ப்படுகின்ற விளைவுகளை அவர்களுக்கு சொல்லிகொடுக்கவேண்டும். என் தந்தை அவரது தாயாரைப்பற்றி சொல்லுகின்றபோது சொல்லுவார், அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி வெளியே போகும்போது 'போயிட்டுவரேன்ம்மா' என்று அவரது தாயிடம் சொல்லும்போது அவர் பதிலுக்கு 'பார்த்துபோப்பா' என்று கூறாமல் 'இங்கே வந்துட்டு போ' என்பாராம், 'என்னம்மா நேரமாகுது போகணும்மா' என்பாராம் என் அப்பா. உன்னோட நண்பர்களை பார்க்கத்தானே போயிட்டு இருக்க இங்க வந்துட்டு போப்பா' என்பாராம். சரியென்று அவரது தாயருகில் சென்றால் ' உன்னோட நண்பர்கள் ட்ரெயின் டிக்கெட் வாங்கியிருப்பாங்கன்னு நெனச்சு ட்ரெயினுல ஏறிடாத, அப்புறம் TTR வந்து டிக்கெட் கேட்க்கும்போது திரு திருன்னு முழிச்சு நின்னுக்கிட்டு இருந்தீன்னா, அபராதம் போடறதோட விடாம கோர்ட்டுக்கு வரச்சொல்லுவாங்க, அது நாலு பேருக்கு தெரிஞ்சா, கெட்டபேரு, இன்னாரோட பிள்ள இப்படி பண்ணானாம்ன்னு எல்லோருக்கும் கேவலமா நினைப்பாங்க, இத எப்பவும் மனசுல வச்சுக்க, இப்ப நான் சொன்ன புத்திமதிக்கு ஆயிரம் ரூவா சமம்ன்னு' சொல்லியனுப்புவாராம். அவ்வாறு ஒவ்வொரு முறையும் அவரது பெற்றோர்கள் அவர்களுக்கு சொல்லிகொடுத்த புத்திமதிகள் எவ்வாறு உதவி வருகின்றது என்பதையும் விவரமாக சொல்லுவார். இன்றைய இளம் தலைமுறையினர் அவ்வாறு புத்திமதி சொல்வதை காது கொடுத்து கேட்க தயாராக இருப்பதில்லை, அவர்களது பாஷையில் புத்திமதிகள் என்றால் 'மொக்கைகள்', 'ஆணிபுடுங்கறது', 'கடலை போடறது'. இதனால்தான் நாட்டில் ஒழுக்ககேடான செயல்கள் அதிகரித்து வருகிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றைக்கு அவரது தாய் தகப்பன் சொல்லிக்கொடுத்த அது போன்ற புத்திமதிகளை கேட்டு அதன்படி நடந்து கொண்டதால்தான் இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு கேசுன்னு அலையவேண்டி இருந்ததில்ல என்று என்னிடம் சொல்லுவார், அதையே நான் எனது பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்கத் தவறுவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு செயலையும் கவனித்து கற்றுக்கொண்டு விதிமுறைகளின்படி நடக்க வேண்டிய இடங்களில் விதி முறைகளின்படி நடந்து கடை பிடிக்க வேண்டிய விதிகளை கடைபிடிப்பதற்கு குழந்தை முதலே கற்று கொடுப்பது அவசியம், இல்லையென்றால் பிள்ளை வளர்ந்த பின்னர் குற்றச் செயல்களை செய்கின்ற போது பெற்றோருக்கு மன உளைச்சல், சமூகத்திற்கு கேடு. அவ்வாறு தனது கடமைகளை ஒழுங்காக சொல்லிக்கொடுக்க தவறுகின்ற பெற்றோர்களை பிள்ளைகள் மதிப்பதில்லை, மாறாக 'எனக்கு கற்றுகொடுத்து வளர்த்திருந்தால் நான் இத்தனை மோசமான நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டேன்' என்று வேதனையடையும் சூழலுக்கு உள்ளாக நேரிடும்.

மனைவியின் அதிக பட்ச ஆசைகளை நிறைவேற்ற வாங்குகின்ற பரிதானம், உடன்பிறந்தவர்களை கரையேற்ற வாங்குகின்ற பரிதானம், சொகுசு, மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக சேமிக்கின்ற பணம் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வாங்குகின்ற வருவாய்க்கு மிஞ்சிய பணம் ஒருபோதும் நிம்மதியை தருவதில்லை. தனி மனித ஒழுக்கம் மட்டுமே ஊழலை முற்றிலுமாக ஒழிக்க இயலும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.
.