Translate

3/09/2012

குதிரைகொம்பு


பெற்றோருடன் சேர்ந்து வாழுகின்ற காலம் பெண்களுக்கு பொற்காலம் என்று சொல்லலாம், பெற்றவர்களிடம் கிடைக்கின்ற அரவணைப்பு அன்பு வாழ்க்கையைப்பற்றிய அடிப்படை கல்வி இன்னும் சொல்லில் அடக்க இயலாத எத்தனையோ விதமான உணர்வுகளை கொடுத்து நம்மை திக்கு முக்காட வைக்கும் குருக்குலம் என்றால் அது மிகையாகாது. என்னதான் அன்பும் அரவணைப்பும் பெற்றவர்களிடம் பெண்களுக்கு கிடைத்தாலும் குறிப்பிட்ட வயதில் பெண்ணுக்கு தகுந்த ஆண் துணையை தெரிவு செய்து முறைப்படி திருமணம் செய்து வைத்து அதன் மூலம் பெற்றோர் காணுகின்ற உவகைக்கு அளவே இல்லை. பெண்ணுக்கு இரு வீடுகள் என்றாலும் புகுந்த வீட்டின் உறவுகள் எப்போதும் எல்லோர்க்கும் இலகுவாக அமைவதில்லை. ஆயினும் புகுந்த வீட்டில் கிடைத்த கணவனது உறவும் அன்பும் அரவணைப்பும் அவற்றை ஈடு செய்வதாக அமையும் போது புகுந்த வீட்டில் இருக்கின்ற ஏனைய உறவுகளின் ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லை.

வாழ்க்கைத்துணையை என்னதான் மனிதர்கள் தேர்ந்தெடுத்தாலும் அது அமைகின்ற விதம் நிச்சயமாக கடவுளின் தேர்வுதான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு ஆணின் வரவு என்பது நிச்சயமாக புது மாற்றங்களை ஏற்ப்படுத்த தவறுவதில்லை, துணைவன் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமான ஒருவராக கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அமைவது இறைவனின் அருள். பெற்றோரிடம் ஒரு பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கையிலிருந்து முற்றும் வேறான வாழ்க்கையை கணவனிடம் பெறுவது பெண்ணுக்கு கிடைத்த பேறு என்று கூட சொல்லலாம். இயற்கையின் விதிப்படி அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது இயற்கையின் சிறப்புக்களில் ஒன்று. கணவனை இழந்த மனைவிக்கு ஏற்ப்படுகின்ற சிக்கல்களை காணுகின்ற போது ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் துணை எந்த அளவிற்கு தேவை என்பதை கண்கூடாக காண முடிகிறது.

அவ்வாறு அத்துணைவனோ துணைவியோ அமையாவிட்டால் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஆழ்ந்த கடலில் கையிலிருந்த துடுப்பை தவறவிட்டது போன்ற நிலை. எங்கும் இருள் சூழ்ந்து எந்த திசை நோக்கி பயணிப்பது, யார் காப்பாற்ற போகிறார்கள் என்ற திகில், உயிருக்கு உத்திரவாதமின்றி நடுக்கடலில் தத்தளிக்கின்ற ஒருவரின் நிலைதான் ஒரு கணவனை அல்லது மனைவியை இழந்தவரின் நிலையாக இருக்க முடியும். என்னதான் பெண்கள் பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக்கொண்டாலும் ஆண் துணை என்பது இன்றியமையாதது என்பதை தனித்து வாழுகின்ற வாழ்க்கையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதை உறுதிப்படுத்திவிடும்.

துணைவனோ துணைவியோ பெரும் பிரச்சினைக்கு காரணமானால் அத்துணையை விட்டு நிரந்தரமாக பிரிந்து விடுதல் என்பது நவீன காலத்தில் பரவலாக காணப்படுகின்ற வழியாக உள்ளது. கருத்து வேற்றுமை என்பதை எங்கும் எதிலும் தவிர்க்க இயலாது என்பதை எல்லோருமே அறிந்திருந்தாலும், கருத்து சுதந்திரம் என்பதை இருவரில் ஒருவர் மட்டும் கையிலெடுத்துக்கொள்ளும் உரிமையை உடையவர் என்கின்ற பழங்கதை மாறி கருத்து சுதந்திரம் ஆண் பெண் இருவருக்கும் சமம் என்கின்ற நிலை உருவாகி வருவதன் காரணம் இன்றைக்கு பல திருமணங்கள் அர்த்தமற்று போய்விடுகிறது. இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் செய்து கொள்வதென்பதில் தவறு இருக்கிறதோ இல்லையோ அதிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்ப்படத்தான் செய்யும் அதிலும் இருவரும் அல்லது யாரேனும் ஒருவர் விட்டுகொடுத்து போக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் உறுதி. கணவன் மனைவியின் உறவில் பெரிதும் பாதிப்பை ஏற்ப்படுத்துவது குடிப்பழக்கம் என்பதை பலரும் சொல்ல கேள்விப்படுகின்ற தீமையாக எங்கும் பெருகி வருகிறது. தற்காலத்தில் வாழுகின்ற மனைவிகள் கணவனது செயல்களும் வருமானமும் வரம்பு மீராதவரையில் கணவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை பொருட்படுத்துவதில்லை. குடிக்காத ஆண்களே இல்லை என்பதால் இந்த கருத்தொற்றுமை வலுகட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளும்போது சமுதாயத்தில் மது அருந்துவதை 'ஏற்றுக்கொள்ளப்பட்ட தீய பழக்கமாக' அங்கீகரித்திருப்பது வேடிக்கைதான்.

குடிப்பழக்கம் என்பது மேலைநாடுகளில் அதிகபட்ச குளிரை எதிர்கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டு இன்றும் வழக்கத்தில் உள்ளது, அதே போன்று கோட் சூட் அணிந்து கொண்டு கால்களில் ஷூ அணிந்து கொள்வதும் கழுத்தில் டை கட்டிக்கொள்வதும் ஐரோப்பா அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளின் சீதோஷ்ண நிலையில் கடும் குளிரை சமாளிப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கபட்ட உடைகள், அவற்றை சீதோஷ்ணம் அதிகரித்து சுட்டு பொசுக்குகின்ற வேனிற் காலம் அதிகமாக காணப்படுகின்ற இந்தியா, மத்திய கிழக்குநாடுகளில் அணிந்து கொள்வதும் பிராந்தி விஸ்கி போன்ற மதுவகைகளை குடிப்பதும் எந்த அடிப்படையில் என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. இவை நாளுக்கு நாள் அதிகரித்து சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே மாறி வருவதை சிலர் 'நாகரீகம்' என்று சொல்லிக்கொள்வதும் கூடுதல் வேடிக்கை. எந்த ஒரு செயலையும் செய்யும்போது அதன் அடிப்படைக் காரணத்தை அறியாமல் செய்வதென்பதுதான் 'நாகரீகம்' என்றால் அது நாகரீகம் வளர்ந்துவிட்டதை காண்பிக்கவில்லை மாறாக இன்னும் அறியாமையில் இருப்பதையே உணர்த்துகிறது.

பொருளாதாரத்தையும் கல்வியையும் உயர்த்திக்கொள்வதால் மட்டுமே பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்ப்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கை 50% மட்டுமே சரியானதாக இருக்க முடியும். பொருளாதாரம் கல்வி என்பவைகள் ஒரு பெண் தன் சுய சம்பாத்தியத்தில் தனித்து வாழ இயலும் என்கின்ற நிலைக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. என்றாலும் ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கையில் ஏற்ப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க இயலாது, மாறாக உளவியல் ரீதியான உபவத்திரங்களை உண்டாக்கும் என்பதை பலரது வாழ்க்கை உணர்த்துகிறது. சமூகத்தில் இன்னும் பல மாற்றங்கள் உண்டான பின்பு பெண்கள் தனித்து வாழுகின்ற வாழ்க்கை இலகுவாகிவிடலாம். சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்ப்படுவதென்பது குதிரைக்கு கொம்பு முளைக்க காத்திருப்பதை போலத்தான்[இந்தியாவில்].வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு தனித்து வாழ போதுமான சமுதாய மேம்பாடுகள் உண்டு, அதனால் வெளிநாட்டு குதிரைகளுக்கு கொம்பு முளைத்து விட்டதா என்று கேட்ப்போமானால் அங்கே சமுதாயம் என்பது குதிரையை போல் இல்லை, அவை யானையாகி பல நூறு ஆண்டுகள் நிரம்பி விட்டது என்பதே பதிலாக இருக்கும். குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் அந்த கொம்பு யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை. ஆனால் யானையின் தந்தம் மட்டுமின்றி அதன் ஏனைய எல்லா பாகங்களும் விலை மதிப்பற்றது என்பதற்காகவே மேலை நாடுகளில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் என்பதை யானைக்கு ஒப்பிடுகிறேன். 'என்றைக்கு இந்தியாவில் நடு இரவிலும் ஒரு பெண் தங்க ஆபரணங்களை அணிந்து தனியாக பயமின்றி நடந்து செல்ல முடியுமோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக' காந்தி கூறினாரே, அதை போன்ற இந்தியாவை கனவில் மட்டுமே காண முடியும் கற்பனையில் மட்டுமே கண்டுகளிக்க முடியும் என்கின்ற நிலையில் ஒரு பெண்ணால் தனித்து வாழ்வதென்பது இந்தியாவில் குதிரை கொம்புதான்.

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடித்த குற்றவாளியை சுட்டு கொன்றால் அதற்க்கு நீதி கேட்டு ஓலமிடும் 'மனித நேயம்' நகைக்காக வீட்டில் தனியே இருக்கும் பெண்களை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களை 'மனித நேயம்' என்ற காரணம் காட்டி வாழ விடத் தயாராக இருக்கின்ற இன்றைய நிலையில் ஒரு பெண் எப்படி தனியாக ஆண் துணையின்றி வாழும் சூழலை அமைத்துக் கொடுக்கப்போகிறது. நகைக்காக பணத்திற்காக கொலை செய்யப்பட்ட கற்ப்பிழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த மனித நேய வாதிகள் குரல் கொடுக்காமல் குரல் வளைகளை யார் கட்டி வைத்திருக்கின்றார்கள்? மனித நேயம் எங்கே காணாமல் போனது, மனித நேயம் என்பது வங்கி கொள்ளைக்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்க்காக மட்டும் வழக்கு தொடர்வதை பார்க்கும்போது இது மனித நேயம் தானா என்கின்ற சந்தேகம் ஏற்ப்படுகிறது.

..