Translate

3/03/2012

நான் முதலமைச்சரானால் [பிரதமரானால்]


நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையில் அவற்றில் பெரும்பாலும் 'நான் முதலமைச்சரானால்' என்கின்ற தலைப்பு தவறாமல் கொடுக்கப்படும். முதலமைச்சரானால் என்பதைப்பற்றி எழுதுவதற்கான எந்த அனுபவங்களும் இல்லாதிருக்கின்ற காலகட்டத்தில் எழுதச் சொன்னால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலிருக்கின்ற பெரியவர்களிடம் அல்லது அடுத்த வீட்டு அக்காவிடம் எழுதச்சொல்லி 'காப்பி' அடிக்கும் வயது. அவர்கள் எழுதியிருப்பதின் அர்த்தம் கூட விளங்கிக் கொள்ளும் வயது இல்லாதபோது ஏதோ எழுதியாக வேண்டுமே என்ற நோக்கில் எழுதிக்கொண்டு பள்ளியில் தமிழாசிரியரிடம் சேர்ப்பித்து விடுவது, அதைப்பற்றி இப்போது நினைத்துப்பார்த்தால் சற்று கோமாளித்தனமாகவே தோன்றுகிறது.

அவ்வாறான தலைப்புக்களை ஆசிரியர்கள் கொடுப்பதற்கான காரணம் ஒருசமயம் சிலபசாக [syllabus] இருக்கலாம்
அவ்வாறான கட்டுரைகளை மாணவர்களிடம் எழுதச்சொல்வதற்க்கான அடிப்படை காரணம் மாணவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக ஆனால் அவற்றின் அர்த்தம் விளங்காமலேயே எழுதுவதன் விளைவு ஜனநாயக நாட்டில் வாழுகின்ற குடிமகனாக இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டிய அடிப்படையான விவரங்களை படிக்கின்ற காலத்தில் தெரிந்துகொள்ளாமல் ஓட்டுரிமையின் மூலம்தேர்ந்தெடுக்கின்ற நபரை எவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற அறியாமை 'படித்தவர்கள்' என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பலரும் படித்திருந்தும் அறியாதிருப்பதன் காரணம்.

இப்போதுள்ள மாணவர்களிடம் அதே தலைப்பை கொடுத்து கட்டுரை எழுதச்சொன்னால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் பல வினோதமான கற்பனைகள் தோன்றுகின்றன. முதலில் தோன்றுவது நான் முதலமைச்சரானால் அல்லது பிரதமரானால் முதலில் பள்ளிகூடங்களைஎல்லாம் இடித்து தரை மட்டமாக்கி பள்ளிகூடங்கள் இருந்த இடத்திற்கு கீழே அகழ்வாராய்ச்சிகள் செய்பவர்களைக்கொண்டு மிகப்பெரிய பள்ளம் தோண்டி ஏற்க்கனவே அந்த இடத்தில் என்ன இருந்ததோ அதே மாதிரியான கட்டிடங்களை கட்டச்சொல்லுவேன். அடுத்தது கூடங்குளத்தின் அணு உலைகளில் மின்சாரம் தயாரிப்பதற்கு பதிலாக சுற்றியுள்ள கிராமங்களில் வாழுகின்ற ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி வருடம் 365 நாட்களும் கூடங்குளத்திற்கு கும்பாபிஷேகம் செய்து அங்கு கூடுகின்ற கூட்டத்திற்கு தினமும் அன்னதானம் செய்வேன். மின்சாரமே தேவையில்லை எல்லோருமே பகலில் மட்டுமே நடமாட வேண்டும் இரவில் அவரவர் வீடுகளுக்குள்ளேயே இருந்துவிட வேண்டும் என்று கட்டளையிடுவேன். மூன்றாவதாக வங்கி கொள்ளை போன்ற கொள்ளைகள் இனி ஏற்ப்படாமல் தடுப்பதற்கு வங்கிகளைஎல்லாம் இழுத்து மூடச்சொல்லிவிட்டு அவரவர் பணத்தை அவரவர் வீடுகளிலேயே மண்ணை தோண்டி புதைத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சொல்வேன். நான்காவது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பை, வாகனங்களின் அதிகரிப்பை மற்றும் போக்குவரத்து நெரிசல்களை தடுப்பதற்கு வீதிகளில் இனிமேல் ட்ராபிக் போலீஸ் துன்பப்படாமல் இருக்க ஒவ்வொரு ஊரிலிருக்கின்ற நகர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு பேருந்து வண்டிகளை மட்டும் இயக்கவும் அவ்வாகனத்தில் குறிப்பிட்ட நகர் அல்லது புரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயணிக்கவேண்டும் என கட்டளை இடுவேன். இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாக வீட்டிற்கு ஒரு குழந்தைக்கு அதிகமாக பெற்றுக்கொள்பவர்கள் பெரிய கிணற்றிலிருந்து ராட்சச வாளிகளில் நீர் இறைத்து நாள் முழுக்க குழாய்களில் [ குடிநீர்] பாய்ச்சும் பணிக்கு அனுப்ப கட்டளையிடுவேன் மற்றுமுள்ள திட்டங்களை அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெறும்போது தெரிவித்து அதற்க்கடுத்தமுறை வெற்றி பெறும்போது நிறைவேற்றிவிடுவேன்.

உண்மையில் சொல்லப்போனால் தற்போதிருக்கின்ற சூழலில் எந்த நாடாக இருந்தாலும் பிரதமந்திரியோ முதலமைச்சரோ மிகவும் கடினமான நேரம், சரியான முடிவுகள் எடுத்து அதை செயல்படுத்துவதென்பது சிரமமான காரியம் ஆட்சியில் இருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் இறைவன் திறமைகளை வாரி வழங்கினாலே ஒழிய ஆட்சி செய்வதென்பது லேசான காரியமல்ல.