Translate

3/21/2012

பூமியை தாக்கப்போகும் சூறாவளி சூரியப்புயல்


உலகம் அழியுமா அழியாதா, மாயன் நாட்காட்டி 2012 டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதால் மாயன் என்ற வம்சத்தினர் இதைப்பற்றி முன்பே அறிந்திருந்தனர், நாஸ்டிரடாமுஸ் என்பவர் எழுதிவைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் உலகில் நடக்க போகும் அசம்பாவிதங்கள் உண்மை, போன்ற சர்ச்சைகள் சமீப காலமாக பரவலாக பேசப்படுவது ஒருபக்கம் இருக்க அமெரிக்காவின் நாசா தகவல் மையம் பொதுமக்களுக்கு நேரடி அதிகாரப்பூர்வ முன்னெச்சரிக்கை ஒன்றையும் அறிவிக்கவில்லை. என்றாலும் 2012-2013 சூரிய புயலைப்பற்றிய அறிவிப்பு ஏற்க்கனவே 2006ஆம் ஆண்டு அறிவித்திருந்தாலும் தற்போது அவ்வாறு ஏற்ப்படும் தாக்குதலினால் ஏற்ப்படவிருக்கும் மிகவும் முக்கிய பாதிப்புகளை நாசா அறிவித்திருப்பது இதன் முக்கியத்துவத்தை நமக்கு தெரிவிப்பதாகவே உள்ளது.

அதிவேக சூரிய புயலைப்பற்றி அமெரிக்காவின் பி.பி.சி, சி.என்.என்., போன்ற முக்கிய பல தகவல் ஊடகங்களில் நாசாவின் இந்த எச்சரிக்கையைப்பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு சிறிதளவில் எடுத்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றது. கர்டினா புயலையடுத்து அமெரிக்காவில் ஏற்பட்ட மொத்த பொருளாதார இழப்பை காட்டிலும் இருபது மடங்கு அதிகமான பொருளாதார இழப்புகள் ஏற்ப்படும் என்று நாசா எச்சரித்திருப்பதாக அதன் வலைதளங்களின் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதி வேக சூரிய புயலானது அமெரிக்காவை மட்டும் தாக்கப்போவதில்லை உலகின் அத்தனை நாடுகளையும் தாக்கப்போகிறது இதனால் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்றும் வானில் உள்ள சாட்டிலைட்டுகள் தகர்க்கப்படும் அபாயம் ஏற்ப்படும் என்றும் இதனால் கணிணி, கைபேசி, தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி போன்ற மின்னணு இயந்திரங்கள் பழுதடையும் என்று கூறப்படுகிறது.

சூரியப்புயலால் பூமியின் மீது பயங்கரமான பாதிப்புகள் ஏற்ப்படுவதால் குடிநீர், உணவு, மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றை தயாரிக்க வழியின்றி கொடிய பஞ்சம் ஏற்ப்படும் என்றும் அவ்வாறான நிலையை சமாளிப்பதற்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு நூறு அல்லது ஐம்பது ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பூமியின் ஜனத்தொகை அடியோடு அழிகின்ற நிலையை தவிர்க்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கருதப்படுகிறது. இந்த அதிபயங்கர தாக்குதலைப்பற்றிய எச்சரிக்கையை உலகின் எந்த அரசாங்களும் அதிகார்வபூர்வமான முன்னெச்சரிக்கையாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்போவதில்லை. அதற்க்கு மிகவும் முக்கிய காரணம் மக்களை வீணான பீதிக்கு உள்ளாக்க கூடாது என்பதே நோக்கம், ஆனால் நடக்கப்போவதை உலகின் எல்லா நாடுகளின் தலைவர்களும் அறிந்திருப்பது நிச்சயம்.அதிவேக சூரிய புயலால் ஏற்படபோகின்ற பிரச்சினைகளிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வது எளிதா, அதாவது மின்சாரம், குடிநீர், உணவுபொருட்கள், தொலைபேசி, பணம் கையிருப்பு, போன்றவற்றை ஒரு வருடத்திற்கு சேமித்து வைத்துக்கொள்வது என்பது இயலுமா, சமைப்பதற்கு சமையல் வாயு இல்லாததால் உணவு பொருட்களை எவ்வாறு சேமித்து வைப்பது, சூரிய புயலால் ஏற்ப்படும் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றிக்கொள்வதற்க்கு என்ன செய்யவேண்டும், இன்னும் பல முக்கிய தகவல்களை நாம் அறிந்திருப்பது அவசியம். இந்த சூரியப்புயல் எந்நேரம் வேண்டுமானாலும் பூமியை தாக்கும் அபாயம் அதிகரித்து வருவதாக நாசா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதைப்பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு நாசாவின் வலைதளத்தை பாருங்கள் அத்துடன் உங்கள் நண்பர்கள் மற்றும் ஏனைய மனிதர்களுக்கும் இதனை தவறாமல் கூறுங்கள்.

அழியப்போகிறோம் என்பதைக் கூட அறியாமலேயே அழிந்துவிடுவதே சிறந்தது என நினைப்பவரா நீங்கள் அப்படியானால் கவலையை விடுங்கள்.

3/12/2012

ஊழலற்ற இந்தியாலஞ்ச ஊழலை ஒட்டு மொத்தமாக ஒழிக்க சிறந்த சில வழிகள் உண்டு, ஆனால் ஒரு பழமொழி உண்டு 'ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது' என்று, அதைப்போல ஏற்க்கனவே லஞ்சம் கொடுத்து காரியங்கள் சாதித்துப் பழகிப்போனவர்களுக்கும் லஞ்சம் வாங்கிக்கொண்டு காரியங்களை முடித்து கொடுத்து பழகிப்போனவர்களுக்கும் இந்த 'டிப்ஸ்' உதவாது. மனசாட்சி என்றால் என்ன என்று கேட்கும் மனிதர்களுக்கும் இந்த 'டிப்ஸ்' ஒத்துவராது. 'அப்படியென்ன கத்தரிக்கா டிப்ஸ்' என்று நீங்கள் அலுத்துகொள்வது எனக்கு புரிகிறது, இந்தியாவில் ஊசி காதுல ஒட்டகம் நுழையற மாதிரிதான் இந்த டிப்ஸ் கடை பிடிப்பவர்களுக்கு கடினம்.

முதலில் திருமணமாகாதவர்களுக்கு இந்த டிப்ஸ், உங்கள் வருங்கால கணவனோ மனைவியோ லஞ்சம் வாங்குபவராக இருக்க கூடாது என்று மிகவும் உறுதியுடன் இருப்பவரா நீங்கள் அப்படியென்றால் இந்த யோசனை உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பது நிச்சயம். தனக்கு வரப்போகும் கணவனோ மனைவியோ அழகும் நிறமும் உள்ளவரா என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட கிடைக்கின்ற சம்பளத்தில் மாத வருமானத்திற்கு தக்கவாறு பட்ஜெட் [வரவு செலவு] திட்டமிட்டு செலவு செய்ய முடிகின்ற, வருமானத்தை தவிர வேறு குறுக்குவழியில் கிடைக்கின்ற பணத்திற்காக ஆசைப்படாத மணமகனோ மணமகளோ தெரிவு செய்யுங்கள். ஜாதகம் பார்ப்பதற்கு முன்னர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபடுபவரா என்பதை தெரிந்துகொள்ள முயலுங்கள், ரத்த பரிசோதனைக்கு வலியுறுத்தி தகுந்த பரிசோதனை மையத்தில் ரத்த பரிசோதனை செய்துகொண்ட பின்னர் தீரா வியாதி ஏதாவது உண்டா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,

இரண்டாவதாக, அடுத்தவர்கள் வைத்திருக்கும் விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்கள் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களுக்காக ஆசைப்படுகின்ற மனதை [self hypnotism] கட்டுக்குள் கொண்டுவருவதற்கு 'நமது வருமானத்திற்கு உட்பட்டவைகளுக்காக மட்டும் ஆசைப்படு, அதிகமாக ஆசைப்படுவதால் 'உள்ளதும் போச்சுட நொள்ள கண்ணா' என்ற நிலைக்கு வந்துவிடும்' என்று மனதிடம் பேசுங்கள். தொடர்ந்து நீங்கள் அவ்வாறு பேசி உங்களது மனதின் ஆசைகளுக்கு வேலியமைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

மூன்றாவதாக வருமானத்திற்கேர்ப்ப ஒரே குழந்தை போதுமென வரம்பு வைத்துக் கொண்டு அக்குழந்தையை உங்கள் வருமானத்திற்க்கேர்ப்ப அரசு பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ படிக்க வையுங்கள், சுத்தம் சுகாதாரம் போன்றவற்றை கற்றுக்கொடுங்கள், மிருகங்கள், இருட்டு, பேய் பூதம் போன்றவற்றை கண்டு மிரள வேண்டிய அவசியம் இல்லை என்பதை விளக்குங்கள், மாறாக மிருகங்கள் பறவைகள் இருட்டு போன்றவற்றை பழகும் விதம் பற்றி சொல்லிக் கொடுங்கள், [ஒருசமயம் இதைப்பற்றியெல்லாம் உங்களுக்கே தெரியவில்லையென்றால், பதில் இக்கட்டுரையிலேயே உள்ளது] குழந்தையை பள்ளிக்கு கூட்டிச் செல்லும்போது சாலை விதிகளை தினமும் கடை பிடிக்க கற்று கொடுங்கள். ஆசிரியர்களிடமும் உடன்படிக்கும் சக மாணவர்களிடமும் எவ்வாறு பழகவேண்டும் என்பதை அவ்வப்போது எடுத்து சொல்லுங்கள். உடன் படிக்கும் குழந்தை உங்கள் குழந்தையை அடித்து விட்டால் அதற்காக கோபப்பட்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் சண்டையிடுவதை விட சம்பந்தப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து அன்புடன் பேசி உங்கள் குழந்தையுடன் சமரசம் செய்து வையுங்கள். பள்ளிகூடத்தில் உபாத்தியாயர் கற்றுத்தரும் பாடங்களை கவனிக்கவேண்டும் என்பதை சொல்லிக் கொடுங்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமான பொறுப்பான வேலை, மேலை நாடுகளில் பெண்களும் ஆண்களும் திருமணத்திற்கு முன்பு அதற்க்கான மையத்திற்க்குச் சென்று [marriage counselling] திருமணத்திற்கு முன்பாக அதைப்பற்றிய முழுவிவரத்தை அறிவதுடன் திருமணத்திற்கு பின்பு எவ்வாறு நடந்துகொள்வது என்பதையும் அறிந்து கொள்வதால் அடிப்படையான சிக்கல்களை எளிதில் சமாளிக்க அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அத்துடன் நின்று விடாமல் கருவுருகின்ற காலத்தில் பெண்கள் எவ்வாறு சாப்பிடவேண்டும் எந்தவிதமான உடற்பயிர்ச்சிகளை மேற்கொள்வது அவசியம் போன்ற பல வகையான விவரங்களை அறிந்துகொள்வதற்க்கான புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்துகொள்கின்றனர், அதே போன்று குழந்தை பிறந்த பின்பும் குழந்தையை அதன் வயதிற்கு ஏற்றவாறு எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதனையும் புத்தகங்கள் மூலம் படித்து அறிந்து அதன்படி குழந்தைகளை வளர்க்கின்றனர். தேவைபட்டால் அதற்க்கான பயிற்சி உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்றுகொள்கின்றனர்.

இந்தியாவை பொறுத்த அளவில் புத்தகங்கள் படிப்பதென்பது பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டுமே தேவையானது என்பதும் அதைத்தவிர கதை மற்றும் வாராந்திர மாதாந்திர புத்தகங்களை வாங்கி படிப்பவர்கள் பொழுதுபோக்கிற்க்கு படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் புத்தகம் படித்து பலவற்றை அறிந்துகொள்வதற்க்காக குறிப்பிட்ட புத்தகங்களை தேடி வாங்கி படிப்பதென்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் தெரித்திருக்க வாய்ப்பு இல்லை, அதனால் பலவற்றைப்பற்றிய உபயோகமான தகவல்களை அறிந்துகொள்வதற்க்காகவே புத்தகங்களை படிக்கின்ற வழக்கத்தை ஏற்ப்படுத்திகொள்வது சிறந்தது. நாட்டிற்கு சிறந்த குடிமகனை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை, அவ்வாறு வளர்க்கப்பட்ட பின்னர் அக்குழந்தை தனது பெற்றோருக்கும் நாட்டிற்கும் மிகுந்த சிறப்பை தேடித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நான்காவதாக குழந்தைகளை வளர்க்கும்போது பணத்தைப்பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்த தவறக்கூடாது, குழந்தையின் கையில் காசு கொடுக்கின்ற போது அந்த காசு எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை பெற்றோர் நிச்சயம் அறிந்திருப்பது பெரும் பிரச்சினைகளில் சிக்காமல் தவிர்க்க முடியும். குழந்தை பள்ளியிலிருந்து வந்த பின்பு குழந்தையின் பொருட்களைத்தவிர வேறு குழந்தையின் பொருட்களை வீட்டிற்கு எடுத்து வந்தால் அப்பொருளை அக்குழந்தையிடம் கொடுத்து அதை திரும்ப உரியவரிடம் கொடுத்துவிட கற்றுக்கொடுப்பது மிகவும் சிறந்தது. தவறாக எடுத்துவந்தால் அவ்வாறு எடுத்துவருவதை தவிர்க்க கற்றுக்கொடுப்பது நல்லது.

சிக்கனம் என்பதற்கும் கஞ்சத்தனம் என்பதற்குமான வித்தியாசத்தை நாம் அறிந்திருப்பது அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது சிக்கனம், அடிப்படை தேவைகளுக்காக செலவிடாமல் இருப்பது கஞ்சத்தனம். நாட்டின் பொது நீதிகளை நாம் அறிந்துகொண்டு அதை குழந்தைகளுக்கும் அதன் வயதிற்கேற்ப சொல்லிக்கொடுத்து வளர்ப்பது மிகவும் அவசியம். அவ்வாறு பொது விதிகளை மீறுவதால் ஏற்ப்படுகின்ற விளைவுகளை அவர்களுக்கு சொல்லிகொடுக்கவேண்டும். என் தந்தை அவரது தாயாரைப்பற்றி சொல்லுகின்றபோது சொல்லுவார், அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி வெளியே போகும்போது 'போயிட்டுவரேன்ம்மா' என்று அவரது தாயிடம் சொல்லும்போது அவர் பதிலுக்கு 'பார்த்துபோப்பா' என்று கூறாமல் 'இங்கே வந்துட்டு போ' என்பாராம், 'என்னம்மா நேரமாகுது போகணும்மா' என்பாராம் என் அப்பா. உன்னோட நண்பர்களை பார்க்கத்தானே போயிட்டு இருக்க இங்க வந்துட்டு போப்பா' என்பாராம். சரியென்று அவரது தாயருகில் சென்றால் ' உன்னோட நண்பர்கள் ட்ரெயின் டிக்கெட் வாங்கியிருப்பாங்கன்னு நெனச்சு ட்ரெயினுல ஏறிடாத, அப்புறம் TTR வந்து டிக்கெட் கேட்க்கும்போது திரு திருன்னு முழிச்சு நின்னுக்கிட்டு இருந்தீன்னா, அபராதம் போடறதோட விடாம கோர்ட்டுக்கு வரச்சொல்லுவாங்க, அது நாலு பேருக்கு தெரிஞ்சா, கெட்டபேரு, இன்னாரோட பிள்ள இப்படி பண்ணானாம்ன்னு எல்லோருக்கும் கேவலமா நினைப்பாங்க, இத எப்பவும் மனசுல வச்சுக்க, இப்ப நான் சொன்ன புத்திமதிக்கு ஆயிரம் ரூவா சமம்ன்னு' சொல்லியனுப்புவாராம். அவ்வாறு ஒவ்வொரு முறையும் அவரது பெற்றோர்கள் அவர்களுக்கு சொல்லிகொடுத்த புத்திமதிகள் எவ்வாறு உதவி வருகின்றது என்பதையும் விவரமாக சொல்லுவார். இன்றைய இளம் தலைமுறையினர் அவ்வாறு புத்திமதி சொல்வதை காது கொடுத்து கேட்க தயாராக இருப்பதில்லை, அவர்களது பாஷையில் புத்திமதிகள் என்றால் 'மொக்கைகள்', 'ஆணிபுடுங்கறது', 'கடலை போடறது'. இதனால்தான் நாட்டில் ஒழுக்ககேடான செயல்கள் அதிகரித்து வருகிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

அன்றைக்கு அவரது தாய் தகப்பன் சொல்லிக்கொடுத்த அது போன்ற புத்திமதிகளை கேட்டு அதன்படி நடந்து கொண்டதால்தான் இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு கேசுன்னு அலையவேண்டி இருந்ததில்ல என்று என்னிடம் சொல்லுவார், அதையே நான் எனது பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்கத் தவறுவதில்லை. இவ்வாறு ஒவ்வொரு செயலையும் கவனித்து கற்றுக்கொண்டு விதிமுறைகளின்படி நடக்க வேண்டிய இடங்களில் விதி முறைகளின்படி நடந்து கடை பிடிக்க வேண்டிய விதிகளை கடைபிடிப்பதற்கு குழந்தை முதலே கற்று கொடுப்பது அவசியம், இல்லையென்றால் பிள்ளை வளர்ந்த பின்னர் குற்றச் செயல்களை செய்கின்ற போது பெற்றோருக்கு மன உளைச்சல், சமூகத்திற்கு கேடு. அவ்வாறு தனது கடமைகளை ஒழுங்காக சொல்லிக்கொடுக்க தவறுகின்ற பெற்றோர்களை பிள்ளைகள் மதிப்பதில்லை, மாறாக 'எனக்கு கற்றுகொடுத்து வளர்த்திருந்தால் நான் இத்தனை மோசமான நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டேன்' என்று வேதனையடையும் சூழலுக்கு உள்ளாக நேரிடும்.

மனைவியின் அதிக பட்ச ஆசைகளை நிறைவேற்ற வாங்குகின்ற பரிதானம், உடன்பிறந்தவர்களை கரையேற்ற வாங்குகின்ற பரிதானம், சொகுசு, மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக சேமிக்கின்ற பணம் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வாங்குகின்ற வருவாய்க்கு மிஞ்சிய பணம் ஒருபோதும் நிம்மதியை தருவதில்லை. தனி மனித ஒழுக்கம் மட்டுமே ஊழலை முற்றிலுமாக ஒழிக்க இயலும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.
.

3/09/2012

குதிரைகொம்பு


பெற்றோருடன் சேர்ந்து வாழுகின்ற காலம் பெண்களுக்கு பொற்காலம் என்று சொல்லலாம், பெற்றவர்களிடம் கிடைக்கின்ற அரவணைப்பு அன்பு வாழ்க்கையைப்பற்றிய அடிப்படை கல்வி இன்னும் சொல்லில் அடக்க இயலாத எத்தனையோ விதமான உணர்வுகளை கொடுத்து நம்மை திக்கு முக்காட வைக்கும் குருக்குலம் என்றால் அது மிகையாகாது. என்னதான் அன்பும் அரவணைப்பும் பெற்றவர்களிடம் பெண்களுக்கு கிடைத்தாலும் குறிப்பிட்ட வயதில் பெண்ணுக்கு தகுந்த ஆண் துணையை தெரிவு செய்து முறைப்படி திருமணம் செய்து வைத்து அதன் மூலம் பெற்றோர் காணுகின்ற உவகைக்கு அளவே இல்லை. பெண்ணுக்கு இரு வீடுகள் என்றாலும் புகுந்த வீட்டின் உறவுகள் எப்போதும் எல்லோர்க்கும் இலகுவாக அமைவதில்லை. ஆயினும் புகுந்த வீட்டில் கிடைத்த கணவனது உறவும் அன்பும் அரவணைப்பும் அவற்றை ஈடு செய்வதாக அமையும் போது புகுந்த வீட்டில் இருக்கின்ற ஏனைய உறவுகளின் ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லை.

வாழ்க்கைத்துணையை என்னதான் மனிதர்கள் தேர்ந்தெடுத்தாலும் அது அமைகின்ற விதம் நிச்சயமாக கடவுளின் தேர்வுதான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு ஆணின் வரவு என்பது நிச்சயமாக புது மாற்றங்களை ஏற்ப்படுத்த தவறுவதில்லை, துணைவன் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமான ஒருவராக கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அமைவது இறைவனின் அருள். பெற்றோரிடம் ஒரு பெண்ணுக்கு கிடைத்த வாழ்க்கையிலிருந்து முற்றும் வேறான வாழ்க்கையை கணவனிடம் பெறுவது பெண்ணுக்கு கிடைத்த பேறு என்று கூட சொல்லலாம். இயற்கையின் விதிப்படி அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது இயற்கையின் சிறப்புக்களில் ஒன்று. கணவனை இழந்த மனைவிக்கு ஏற்ப்படுகின்ற சிக்கல்களை காணுகின்ற போது ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் துணை எந்த அளவிற்கு தேவை என்பதை கண்கூடாக காண முடிகிறது.

அவ்வாறு அத்துணைவனோ துணைவியோ அமையாவிட்டால் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஆழ்ந்த கடலில் கையிலிருந்த துடுப்பை தவறவிட்டது போன்ற நிலை. எங்கும் இருள் சூழ்ந்து எந்த திசை நோக்கி பயணிப்பது, யார் காப்பாற்ற போகிறார்கள் என்ற திகில், உயிருக்கு உத்திரவாதமின்றி நடுக்கடலில் தத்தளிக்கின்ற ஒருவரின் நிலைதான் ஒரு கணவனை அல்லது மனைவியை இழந்தவரின் நிலையாக இருக்க முடியும். என்னதான் பெண்கள் பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக்கொண்டாலும் ஆண் துணை என்பது இன்றியமையாதது என்பதை தனித்து வாழுகின்ற வாழ்க்கையில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதை உறுதிப்படுத்திவிடும்.

துணைவனோ துணைவியோ பெரும் பிரச்சினைக்கு காரணமானால் அத்துணையை விட்டு நிரந்தரமாக பிரிந்து விடுதல் என்பது நவீன காலத்தில் பரவலாக காணப்படுகின்ற வழியாக உள்ளது. கருத்து வேற்றுமை என்பதை எங்கும் எதிலும் தவிர்க்க இயலாது என்பதை எல்லோருமே அறிந்திருந்தாலும், கருத்து சுதந்திரம் என்பதை இருவரில் ஒருவர் மட்டும் கையிலெடுத்துக்கொள்ளும் உரிமையை உடையவர் என்கின்ற பழங்கதை மாறி கருத்து சுதந்திரம் ஆண் பெண் இருவருக்கும் சமம் என்கின்ற நிலை உருவாகி வருவதன் காரணம் இன்றைக்கு பல திருமணங்கள் அர்த்தமற்று போய்விடுகிறது. இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணம் செய்து கொள்வதென்பதில் தவறு இருக்கிறதோ இல்லையோ அதிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்ப்படத்தான் செய்யும் அதிலும் இருவரும் அல்லது யாரேனும் ஒருவர் விட்டுகொடுத்து போக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதும் உறுதி. கணவன் மனைவியின் உறவில் பெரிதும் பாதிப்பை ஏற்ப்படுத்துவது குடிப்பழக்கம் என்பதை பலரும் சொல்ல கேள்விப்படுகின்ற தீமையாக எங்கும் பெருகி வருகிறது. தற்காலத்தில் வாழுகின்ற மனைவிகள் கணவனது செயல்களும் வருமானமும் வரம்பு மீராதவரையில் கணவன் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை பொருட்படுத்துவதில்லை. குடிக்காத ஆண்களே இல்லை என்பதால் இந்த கருத்தொற்றுமை வலுகட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளும்போது சமுதாயத்தில் மது அருந்துவதை 'ஏற்றுக்கொள்ளப்பட்ட தீய பழக்கமாக' அங்கீகரித்திருப்பது வேடிக்கைதான்.

குடிப்பழக்கம் என்பது மேலைநாடுகளில் அதிகபட்ச குளிரை எதிர்கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டு இன்றும் வழக்கத்தில் உள்ளது, அதே போன்று கோட் சூட் அணிந்து கொண்டு கால்களில் ஷூ அணிந்து கொள்வதும் கழுத்தில் டை கட்டிக்கொள்வதும் ஐரோப்பா அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளின் சீதோஷ்ண நிலையில் கடும் குளிரை சமாளிப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கபட்ட உடைகள், அவற்றை சீதோஷ்ணம் அதிகரித்து சுட்டு பொசுக்குகின்ற வேனிற் காலம் அதிகமாக காணப்படுகின்ற இந்தியா, மத்திய கிழக்குநாடுகளில் அணிந்து கொள்வதும் பிராந்தி விஸ்கி போன்ற மதுவகைகளை குடிப்பதும் எந்த அடிப்படையில் என்பதை விளங்கிக் கொள்ள இயலவில்லை. இவை நாளுக்கு நாள் அதிகரித்து சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே மாறி வருவதை சிலர் 'நாகரீகம்' என்று சொல்லிக்கொள்வதும் கூடுதல் வேடிக்கை. எந்த ஒரு செயலையும் செய்யும்போது அதன் அடிப்படைக் காரணத்தை அறியாமல் செய்வதென்பதுதான் 'நாகரீகம்' என்றால் அது நாகரீகம் வளர்ந்துவிட்டதை காண்பிக்கவில்லை மாறாக இன்னும் அறியாமையில் இருப்பதையே உணர்த்துகிறது.

பொருளாதாரத்தையும் கல்வியையும் உயர்த்திக்கொள்வதால் மட்டுமே பெண்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்ப்பட்டுவிடும் என்கின்ற நம்பிக்கை 50% மட்டுமே சரியானதாக இருக்க முடியும். பொருளாதாரம் கல்வி என்பவைகள் ஒரு பெண் தன் சுய சம்பாத்தியத்தில் தனித்து வாழ இயலும் என்கின்ற நிலைக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. என்றாலும் ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கையில் ஏற்ப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க இயலாது, மாறாக உளவியல் ரீதியான உபவத்திரங்களை உண்டாக்கும் என்பதை பலரது வாழ்க்கை உணர்த்துகிறது. சமூகத்தில் இன்னும் பல மாற்றங்கள் உண்டான பின்பு பெண்கள் தனித்து வாழுகின்ற வாழ்க்கை இலகுவாகிவிடலாம். சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்ப்படுவதென்பது குதிரைக்கு கொம்பு முளைக்க காத்திருப்பதை போலத்தான்[இந்தியாவில்].வெளிநாடுகளில் உள்ள பெண்களுக்கு தனித்து வாழ போதுமான சமுதாய மேம்பாடுகள் உண்டு, அதனால் வெளிநாட்டு குதிரைகளுக்கு கொம்பு முளைத்து விட்டதா என்று கேட்ப்போமானால் அங்கே சமுதாயம் என்பது குதிரையை போல் இல்லை, அவை யானையாகி பல நூறு ஆண்டுகள் நிரம்பி விட்டது என்பதே பதிலாக இருக்கும். குதிரைக்கு கொம்பு முளைத்தாலும் அந்த கொம்பு யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை. ஆனால் யானையின் தந்தம் மட்டுமின்றி அதன் ஏனைய எல்லா பாகங்களும் விலை மதிப்பற்றது என்பதற்காகவே மேலை நாடுகளில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் என்பதை யானைக்கு ஒப்பிடுகிறேன். 'என்றைக்கு இந்தியாவில் நடு இரவிலும் ஒரு பெண் தங்க ஆபரணங்களை அணிந்து தனியாக பயமின்றி நடந்து செல்ல முடியுமோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக' காந்தி கூறினாரே, அதை போன்ற இந்தியாவை கனவில் மட்டுமே காண முடியும் கற்பனையில் மட்டுமே கண்டுகளிக்க முடியும் என்கின்ற நிலையில் ஒரு பெண்ணால் தனித்து வாழ்வதென்பது இந்தியாவில் குதிரை கொம்புதான்.

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடித்த குற்றவாளியை சுட்டு கொன்றால் அதற்க்கு நீதி கேட்டு ஓலமிடும் 'மனித நேயம்' நகைக்காக வீட்டில் தனியே இருக்கும் பெண்களை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களை 'மனித நேயம்' என்ற காரணம் காட்டி வாழ விடத் தயாராக இருக்கின்ற இன்றைய நிலையில் ஒரு பெண் எப்படி தனியாக ஆண் துணையின்றி வாழும் சூழலை அமைத்துக் கொடுக்கப்போகிறது. நகைக்காக பணத்திற்காக கொலை செய்யப்பட்ட கற்ப்பிழந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்த மனித நேய வாதிகள் குரல் கொடுக்காமல் குரல் வளைகளை யார் கட்டி வைத்திருக்கின்றார்கள்? மனித நேயம் எங்கே காணாமல் போனது, மனித நேயம் என்பது வங்கி கொள்ளைக்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்க்காக மட்டும் வழக்கு தொடர்வதை பார்க்கும்போது இது மனித நேயம் தானா என்கின்ற சந்தேகம் ஏற்ப்படுகிறது.

..

3/08/2012

பிசினாரி


காடுகளில் அலைந்து திரிந்து விறகுகளை வெட்டி சேர்த்து வந்தான் ஒரு விறகு வெட்டி. அவ்வ்டர்ந்த காட்டுப்பகுதிக்குள் நுழைய வழியறியாமல் கையில் துப்பாக்கியுடன் சுற்றி வந்த இரு வெள்ளைக்காரர்கள் அவனிடம் தங்களுக்கு அக்காட்டுபகுதியினுள் நுழைவதற்கு வழி காண்பிக்க கேட்டனர், அவனோ இனி காட்டுக்குள் சென்றால் திரும்ப இயலாது இருட்டி விடும் நாளைக்காலையில் அங்கு செல்லும் வழியை காண்பிப்பதாக கூறினான். அவ்வாறே அடுத்த நாள் காலையில் கையில் எப்போதும் போல விறகு வெட்டுவதற்கு கத்தியுடன் காட்டினுள் சென்றான், அவனுடன் இரு வெள்ளைக்காரர்களும் சேர்ந்து காட்டினுள் சென்றனர், அங்கு அவர்கள் பார்த்த ஒவ்வொரு செடியையும் மரத்தையும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு செடி மற்றும் மரங்களைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர், அவ்வழியே மாலையில் வீடு திரும்பிய விறகு வெட்டியுடன் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறினர்.

மீண்டும் சில நாட்களுக்குப்பிறகு அவர்கள் விறகு வெட்டியின் வீட்டருகே சேர்த்து வைக்கப்பட்டிருந்த பச்சை விறகுகளில் சிலவற்றை தங்களது ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டனர், மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பிசின்களை ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்த விறகு வெட்டியிடம் பிசின் மரங்களை தங்களுக்கு காண்பிக்குமாறு கேட்டனர், விறகு வெட்டி பிசின்களை பட்டினத்திலிருந்து வருகின்ற விறகு வியாபாரிக்கு விற்று வந்தான், அதனால் அம்மரத்தினை வெள்ளைக்காரர்களுக்கு காண்பிக்க விருப்பமின்றி அம்மரங்கள் எங்கு இருக்கிறது என்பது தெரியாது என்று பொய் சொன்னான். ஆனால் வெள்ளிக்காரர்களோ விறகு வெட்டியிடம் தங்களுக்கு பிசினி தேவையில்லை, அதைப்பற்றிய ஆராய்ச்சிகள் செய்வதற்காகவே அம்மரங்களை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.

சில வாரங்களுக்குப் பின்னர் வெள்ளைக்காரர்கள் விறகு வெட்டியின் வீட்டிற்கு மீண்டும் சென்றனர், பிசின் எடுக்கப்படும் மரங்களை தங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று அவனிடம் கேட்டனர். அவன் வீட்டருகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பிசின் இன்னும் அதிகரித்திருந்தததோடு அவற்றிலிருந்து ஒருவித நாற்றம் அவ்விடமுழுவதும் வீசிக்கொண்டிருந்தது. அப்போதும் அந்த விறகு வெட்டி வெள்ளைக்காரர்களுக்கு அம்மரங்களை காண்பிக்க விருப்பமில்லை என்பதால் பதில் கூறாமலேயே இருந்து விட்டான். அடுத்த முறையும் விறகு வெட்டியின் வீட்டிற்கு வந்த வெள்ளைக்காரர்கள் வீட்டினுள்ளிருந்த விறகு வெட்டிக்கு பெயர் ஏதும் இல்லாதிருந்ததால், 'பிசின்+நாரி' என்று பெயர் வைத்து கூப்பிட்டனர். அந்த கிராம மக்கள் அவனிடம் பிசிநாரி என்று வெள்ளைக்காரர்கள் எதற்க்காக பெயர் வைத்தார்கள் என்று கேட்டபோது அந்த விறகு வெட்டி, பிசின் மரங்களை யாரிடமும் தான் காண்பிக்காத காரணத்தால் தன்னை 'பிசிநாரி' என்று கூப்பிடுவதாக கூறினான்.

அதுமுதற்கொண்டு யாரொருவர் அடுத்தவருக்கு கொடுக்காத குணமுடையோரை 'பிசிநாரி' என்று கூறும் வழக்கம் ஏற்ப்பட்டது.

3/03/2012

நான் முதலமைச்சரானால் [பிரதமரானால்]


நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது தமிழ் வகுப்பில் கட்டுரைகள் எழுதச்சொல்லி தலைப்புகள் கொடுப்பார்கள் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையில் அவற்றில் பெரும்பாலும் 'நான் முதலமைச்சரானால்' என்கின்ற தலைப்பு தவறாமல் கொடுக்கப்படும். முதலமைச்சரானால் என்பதைப்பற்றி எழுதுவதற்கான எந்த அனுபவங்களும் இல்லாதிருக்கின்ற காலகட்டத்தில் எழுதச் சொன்னால் பெரும்பாலான மாணவர்கள் வீட்டிலிருக்கின்ற பெரியவர்களிடம் அல்லது அடுத்த வீட்டு அக்காவிடம் எழுதச்சொல்லி 'காப்பி' அடிக்கும் வயது. அவர்கள் எழுதியிருப்பதின் அர்த்தம் கூட விளங்கிக் கொள்ளும் வயது இல்லாதபோது ஏதோ எழுதியாக வேண்டுமே என்ற நோக்கில் எழுதிக்கொண்டு பள்ளியில் தமிழாசிரியரிடம் சேர்ப்பித்து விடுவது, அதைப்பற்றி இப்போது நினைத்துப்பார்த்தால் சற்று கோமாளித்தனமாகவே தோன்றுகிறது.

அவ்வாறான தலைப்புக்களை ஆசிரியர்கள் கொடுப்பதற்கான காரணம் ஒருசமயம் சிலபசாக [syllabus] இருக்கலாம்
அவ்வாறான கட்டுரைகளை மாணவர்களிடம் எழுதச்சொல்வதற்க்கான அடிப்படை காரணம் மாணவர்கள் அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக ஆனால் அவற்றின் அர்த்தம் விளங்காமலேயே எழுதுவதன் விளைவு ஜனநாயக நாட்டில் வாழுகின்ற குடிமகனாக இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டிய அடிப்படையான விவரங்களை படிக்கின்ற காலத்தில் தெரிந்துகொள்ளாமல் ஓட்டுரிமையின் மூலம்தேர்ந்தெடுக்கின்ற நபரை எவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற அறியாமை 'படித்தவர்கள்' என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பலரும் படித்திருந்தும் அறியாதிருப்பதன் காரணம்.

இப்போதுள்ள மாணவர்களிடம் அதே தலைப்பை கொடுத்து கட்டுரை எழுதச்சொன்னால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் பல வினோதமான கற்பனைகள் தோன்றுகின்றன. முதலில் தோன்றுவது நான் முதலமைச்சரானால் அல்லது பிரதமரானால் முதலில் பள்ளிகூடங்களைஎல்லாம் இடித்து தரை மட்டமாக்கி பள்ளிகூடங்கள் இருந்த இடத்திற்கு கீழே அகழ்வாராய்ச்சிகள் செய்பவர்களைக்கொண்டு மிகப்பெரிய பள்ளம் தோண்டி ஏற்க்கனவே அந்த இடத்தில் என்ன இருந்ததோ அதே மாதிரியான கட்டிடங்களை கட்டச்சொல்லுவேன். அடுத்தது கூடங்குளத்தின் அணு உலைகளில் மின்சாரம் தயாரிப்பதற்கு பதிலாக சுற்றியுள்ள கிராமங்களில் வாழுகின்ற ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி வருடம் 365 நாட்களும் கூடங்குளத்திற்கு கும்பாபிஷேகம் செய்து அங்கு கூடுகின்ற கூட்டத்திற்கு தினமும் அன்னதானம் செய்வேன். மின்சாரமே தேவையில்லை எல்லோருமே பகலில் மட்டுமே நடமாட வேண்டும் இரவில் அவரவர் வீடுகளுக்குள்ளேயே இருந்துவிட வேண்டும் என்று கட்டளையிடுவேன். மூன்றாவதாக வங்கி கொள்ளை போன்ற கொள்ளைகள் இனி ஏற்ப்படாமல் தடுப்பதற்கு வங்கிகளைஎல்லாம் இழுத்து மூடச்சொல்லிவிட்டு அவரவர் பணத்தை அவரவர் வீடுகளிலேயே மண்ணை தோண்டி புதைத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளச் சொல்வேன். நான்காவது பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பை, வாகனங்களின் அதிகரிப்பை மற்றும் போக்குவரத்து நெரிசல்களை தடுப்பதற்கு வீதிகளில் இனிமேல் ட்ராபிக் போலீஸ் துன்பப்படாமல் இருக்க ஒவ்வொரு ஊரிலிருக்கின்ற நகர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு பேருந்து வண்டிகளை மட்டும் இயக்கவும் அவ்வாகனத்தில் குறிப்பிட்ட நகர் அல்லது புரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயணிக்கவேண்டும் என கட்டளை இடுவேன். இவை எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமாக வீட்டிற்கு ஒரு குழந்தைக்கு அதிகமாக பெற்றுக்கொள்பவர்கள் பெரிய கிணற்றிலிருந்து ராட்சச வாளிகளில் நீர் இறைத்து நாள் முழுக்க குழாய்களில் [ குடிநீர்] பாய்ச்சும் பணிக்கு அனுப்ப கட்டளையிடுவேன் மற்றுமுள்ள திட்டங்களை அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெறும்போது தெரிவித்து அதற்க்கடுத்தமுறை வெற்றி பெறும்போது நிறைவேற்றிவிடுவேன்.

உண்மையில் சொல்லப்போனால் தற்போதிருக்கின்ற சூழலில் எந்த நாடாக இருந்தாலும் பிரதமந்திரியோ முதலமைச்சரோ மிகவும் கடினமான நேரம், சரியான முடிவுகள் எடுத்து அதை செயல்படுத்துவதென்பது சிரமமான காரியம் ஆட்சியில் இருப்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் இறைவன் திறமைகளை வாரி வழங்கினாலே ஒழிய ஆட்சி செய்வதென்பது லேசான காரியமல்ல.