Translate

2/20/2012

"தொல்லை"காட்சி

ஊடகங்கள் பெரும்பாலும் பொழுது போக்கு அம்சங்களை அதிகம் கொண்டவையாக இருந்தது, தற்போது எந்த மாநிலமானாலும் தொடர்கதைகள் இல்லாத தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளே இல்லை, இடையிடையே நடப்பு செய்திகளையும் செருகி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது, இவற்றை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர் என்பதை மூலதனமாக வைத்து ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் ஒரு விளம்பரம் ஒளிபரப்பபடுகிறது. தற்போது விளம்பரம் செய்பவருக்கு ஒருவிதத்தில் லாபம் என்றால் அதை ஒலிபரப்பு அல்லது ஒளிபரப்பு செய்வதிலும் பத்திரிகைகள் மற்றும் செய்திதாள்களில் அச்சிடப்படுவதற்க்கும் மிகவும் கணிசமான தொகைகள் அதாவது கோடிகணக்கில் லாபம் பெறுகின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப்ப பொறியாளர்களை விட ஏகப்பட்ட லாபம், ஒரு விளம்பரத்தை தயாரிப்பதற்க்கே லட்சங்கள் கோடிகள் செலவு செய்யப்படுகிறது, ஆனால் எந்த லாபமும் அடையாமலேயே அதை காணுகின்ற மக்கள் முட்டாள்களாக்கப்படுவதை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம், நாம் அந்த விளம்பரத்தை காண்பதற்கு அவர்கள் நமக்கு என்ன கொடுக்கின்றனர் என்பதைப்பற்றி என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா,


சிலர் கூறுவது போல விளம்பரப்படுத்தப்படுகின்ற புதிய பொருட்களை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு வேறு என்ன வழி இருக்கிறது என்பார்கள், மிகவும் சரியான கேள்விதான், ஆனாலும் விளம்பரப்படுத்தப்படுகின்ற பொருட்களில் அவர்கள் கூறுவது போன்ற நன்மைகள் ஒரு சதவிகிதமாவது பொதுமக்களுக்கு அந்த பொருட்களினால் கிடைக்கிறது என்றால் நிச்சயம் மக்களுக்கு அந்த விளம்பரம் நன்மையை செய்வதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் உதாரணத்திற்கு சருமத்தை ஒரு வாரத்திலோ ஒரு மாதத்திலோ அவர்கள் விளம்பரத்தின்படி வெண்மைநிறமாக மாற்றிவிடுவதாக காண்பிப்பது போன்று ஒரு வருடம் அந்த பொருளை உபயோகித்தாலும் கூட வெண்மை நிறமாக மாற்றப்படுவதில்லை என்பது நிதர்சனமாக இருக்கின்ற நிலையில் உண்மையை அறியாத பாமர மக்கள் குறிப்பிட்ட பொருளை வாங்கி தொடந்து உபயோகிக்கின்றதில் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள். அவ்வாறு சுரண்டப்படும் ஒரு காரியத்தை தொடர்ந்து ஒளிபரப்புவதோ அச்சிட்டு விற்பனை செய்வதோ தவறு கிடையாதா. தவறு என்றால் அவ்வாறான விளம்பரங்கள் தொடர்வதை பொதுநலம் கருதி தடை செய்யாதது ஏன். உண்மையில் பார்க்கப்போனால் விளம்பரங்களில் காட்டுகின்ற பொருட்களை வாங்கி உபயோகிப்பதனால் சருமம் மற்றும் தலைமுடி போன்றவை மிகவும் மோசமான பாதிப்புகளை அடைவது நிச்சயம். போதாக்குறைக்கு பாலிவுட் கோலிவுட் நடிகர் நடிகைகள் வேறு நடித்து காட்டுகின்றனர். அவர்களும் வியாபாரிகளைப்போன்றவர்கள் தானே, பணம் கிடைத்தால் போதும்.[இந்த மாதிரி யாராவது சாக்கலேட் சாப்பிடுவாங்களா, பார்த்தாலே சாப்பிடவேண்டும் என்கின்ற ஆசையே போயிடும்].


தலைமுடியை
சுத்தம் செய்வதற்கான ஷாம்பூக்கள் பற்றி சொல்வதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அத்தனை பொய்யானவற்றை கூறும் விளம்பரங்கள் உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தில் நகர இயலாத நிலையில் நின்றுவிட்ட லாரியை ஒரு பெண் தனது கூந்தலை கட்டி இழுக்கின்ற அளவிற்கு உறுதியை கொடுப்பதாக காண்பிப்பது, அதைவிட கேவலமான விளம்பரம் பெண்களுக்கான பாட்[pad] பற்றி என்னவெல்லாம் காண்பிக்கின்றனர், விட்டால் பெண்ணை வைத்து நேரிலேயே விளக்கமளிப்பார்கள். இரண்டு செய்திதாள்கள் கொடுக்கின்ற விளம்பரம், இருவருக்கும் போட்டி என்பதால் மக்களை முட்டாள்கள் ஆக்க வேண்டாமே, சமீபத்தில் ஒரு பத்திரிகை தனது போட்டியை காண்பிப்பதற்கு எடுத்து உபயோகித்திருக்கின்ற விதம் நமது தமிழ் சினிமாக்களில் எப்படி ஆங்கிலப்படத்தை திருடி தாங்களே சொந்தமாக கற்பனை செய்து எடுத்ததை போல பெருமைப்பட்டு கொள்வார்களோ அதை போன்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டு அமெரிக்காவில் மிகவும் ரசித்த, பரபரப்பாக பேசப்பட்ட உண்மைச்சம்பவத்தை பதிவு செய்திருந்த வீடியோ காட்சியினைப்போல தமிழில் விளம்பரப்படம் எடுத்து ஒளிபரப்பும் செய்து வருகின்றனர் அந்த ஒரிஜினல் ஆங்கிலப்பட வீடியோவை காண கீழே சொடுக்குங்கள்.ஒரு நிகழ்ச்சியை, தொடர்கதையை, செய்தியை, திரைப்படத்தை என்று எவற்றை தொலைக்கட்ச்சியில் பார்க்க நினைத்தாலும் ஐந்து நிமிடம்தான் தொடர்ந்து பார்க்க முடியும் மிஞ்சிப் போனால் பத்து நிமிடம், அடுத்த பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு 'தொல்லை' ஆரம்பித்துவிடும், நம்ம இந்திய மக்களுக்கு ரொம்பவே சகிப்புத்தன்மை அதனாலத்தானே இந்தியாவில் மூணுமணிநேரம் திரைப்படம் எடுக்கவேண்டியிருக்கிறது, ஆங்கில திரைப்படங்களை மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்க யாரும் பொறுமை கிடையாது, மிஞ்சி போனால் ஒன்றரை மணி நேரம், சில வரலாற்று சிறப்பு வாய்ந்த கதைகள் மட்டுமே இரண்டரை மணிநேரம் காண்பிக்கபடுகிறது. நமது சகிப்புத்தன்மையை விளம்பரம் என்ற பெயரில் ஊடகங்களின் வாயிலாக பணமாக்கிகொண்டிருக்கும் பலரும் கோடிகளை சேர்த்து வைக்க இடமில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் தற்போது இந்தியாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பவர்களை தேடி பிடிக்கின்ற பணி தீவிரமாக நடைமுறையில் உள்ளது. பத்திரிகைகள் செய்திதாள்கள் என்று ஒரு இடத்தையும் இவர்கள் விடுவதில்லை, இப்போதெல்லாம் பகட்டான விளம்பரங்களை பத்திரிகைகள் பெரிதாக எல்லோர் கண்களிலும் தவறாமல் பார்க்கும்படியாக பிரசுரிக்கப்படுகிறது.

..