Translate

2/16/2012

கடமைகள் உரிமைகள்

குழந்தைகள் இல்லாத வீடு கலகலப்பில்லாமல் இருக்கும் என்பர், குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தை பிறப்பின்றி இருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை ஒருபுறமிருக்க காண்போரெல்லாம் துக்கம் விசாரிப்பது போன்ற தோரணையில் விசாரிப்பதும் பார்ப்பதும் கொடுமை. குழந்தைகளை பெற்ற பின்னர் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அரும்பாடுபட்டு வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு திருமணம் நடந்த பிறகு பிள்ளைகளால் பெற்றவர்கள் படுகின்ற அவச்த்தைகளும் மன உளைச்சல்களையும் விரல்விட்டு எண்ணிவிட இயலாது, பெற்றவர்கள் பிள்ளைகளால் சுகம் காணவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை என்றாலும் துன்பமாவது இல்லாமல் இருந்தாலே போதும் என்கின்ற நிலை உருவாகி, இவர்கள் பிறந்த போதும் வளருகின்ற போதும் தாம் அடைந்த இன்ப துன்பத்தையெல்லாம் மிஞ்சி விடுகின்ற அளவிற்கு 'இவர்களை எதற்க்காக பெற்றெடுத்தோம்' என்று வேதனைக் கண்நீரை வரவழைக்கும் பிள்ளைச்செல்வங்கள், 'போதும் போதும் இந்த வாழ்க்கை' என்று மரணத்தை துணைக்கழைக்கும் பெற்றோர்களை காணுகின்ற போது 'என்ன உலகமிது' என்று வெறுக்க வைக்கிறது.

'திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது மேல்' என்று தோன்றும் அளவிற்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள், அதற்க்கு பின்னர் குழந்தைகளினால் பிரச்சினைகள், ஒரு குழந்தையை பெற்றவர்க்கு தங்கள் முதுமையில் அக்குழந்தை தன்னை விட்டுவிட்டு சென்றுவிடக் கூடாது என்ற தவிப்பு. ஒன்றிற்கு மேல் பிள்ளைகள் இருப்பவர்களுக்கு பெற்றோரை பங்கு போடும் நிலை, அந்த காலத்தில் பெற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கவனித்துக்கொள்வதென்பது கடமையாக இருந்தது, பெற்றோரின் பேச்சுக்கு கீழ்ப்படியவேண்டும் என்றோ அல்லது, வயதான பெற்றோரை பராமரிப்பது கடமை என்று கூறினாலோ இக்காலத்து பிள்ளைகள் கூறும் புதுமொழி 'உங்களால் பெற்றெடுக்கப்பட்டதால் உங்களுக்கு சொந்தமானவர்கள் கிடையாது, எங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் நோக்கங்கள் என்பது உண்டு அதன்படி நாங்கள் செய்வோம், பெற்றோரே ஆனாலும் அவர்கள் கூறுகின்ற எல்லாவற்றையும் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை' என்று உரிமையைப் பற்றி பேசுகிறார்கள்.

'உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டால், கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன' என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது. உரிமைகளுக்காக போராட்டங்கள் செய்பவர்களும் பெற்றோர்களிடம் வாதிடும் பிள்ளைச்செல்வங்களும் தங்களது கடமையை முழுவதும் மறந்துவிட்டு போராடுவது அவர்களின் மடமையை காண்பிக்கிறது. இப்படிப்பட்ட வளர்ச்சியை உள்ளடக்கி எந்த சமுதாயமும் முதலில் முன்னேற்ற பாதையை பற்றிய கனவை தீயிலிட்டு பொசுக்கிவிட வேண்டும். வீட்டில் பட்டினியாக கிடக்கும் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் வயிறு நிறைய மூன்று வேளை உணவு கொடுக்க இயலாதவர்கள் உண்ணா விரத போராட்டம், கருப்புக்கொடி பிடித்து போராட்டம் என்று சமூகத்தை காப்பாற்ற கவலையடைவது உரிமைக்கு குரல் கொடுத்தலாகுமா.

பெற்றோரை நேர்வழி நடத்த இயலாத பிள்ளைகளால் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முன்வர இயலுமா, அவ்வாறு முன் வந்தால் அதன் பெயர் உரிமை போராட்டமா, வேடிக்கையான மானிதர்கள், கடமைகளை மறந்தவர் உரிமையைப் பற்றி பெருமை பாராட்டும் தகுதியை இழந்துவிடுகின்றனர். 'ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது' என்பது இதற்க்கு நன்றாகவே பொருந்தும். பெற்றோரை மதித்து நடக்கத் தெரியாதவர்கள் எப்படி ஒரு நல்ல மகனாக இருக்க முடியாதோ, பெற்ற பிள்ளைகளையும் மனைவி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களும் தங்களது கடமைகளை தட்டி கழிப்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் உரிமை பற்றி நினைப்பதற்க்கோ பேசுவதற்கோ தகுதி அற்றவர்கள்.

..