Translate

2/13/2012

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்
காதல் என்பதை பொதுவுடைமை, பயித்தியகாரத்தனம், தெய்வீகமானது சுவாசக்காற்று, உயிர் என்று பலவாறாக சொல்வதுண்டு, அனுபவமும் உருவாகிய விதமும் இதற்க்கு அடிப்படை காரணங்கள் என்று கூறபட்டாலும் இந்த உணர்வின் இயல்புகள் மிகவும் விசித்திரமானவை. இதை ஒருவித வியாதி என்று கூட சொல்லலாம், ஒருவரின் அன்றாட செயல்களிலிருந்து முடங்கச் செய்வது, தான் காதலிப்பவரை தனது கட்டளைகளுக்கு கீழ்படுத்த நினைக்கின்ற சுயநலவாதியாக்கும் இதன் உச்சகட்டம் கொடுமையானது. 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சை' போன்று காதல் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடுகிறது. காதல் கொண்ட காரணத்திற்க்காக தனது சுய சிந்தையை சுய கட்டுபாடுகளை விட்டு விடுவது அல்லது கொடுத்துவிடுவது அசம்பாவிதங்களை கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. காதலில் தோல்வி ஏமாற்றம் இரண்டுமே இரட்டை குழந்தைகள். அந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பது அறியாது வாழ்க்கை முழுவதையும் பாழாக்கி கொள்ளும் மனநிலையை தவிர்ப்பதற்கு தயாராக இருத்தல் அவசியம்.

எனது நண்பர் ஒருவர் என்னிடம் இவ்வாறு சொன்னார், ' காதலில் எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு அதிலிருந்து விடுபட வேண்டிய நிலை வரும்போது அதை விட நூறு மடங்கு அதிகமாக விலகுவதற்கு தேவையான வேகமும் வழிகளும் விவேகமும் அறிந்து செயல் பட வேண்டும் அல்லது காதல் நோய் நம்மை சிதைத்துவிடும்'. நான் கேட்பேன் 'அது எப்படி சாத்தியம்'. அவர் சொன்னார், 'எனது காதலியை நான் காதலித்த அளவிற்கு வேறு யாரும் காதலித்து இருக்க முடியாது [எல்லா காதலர்களும் சொல்லுகின்ற 'டையலாக்'] பனிரெண்டு வருடமாக காதலித்தோம், திருமணத்திற்கும் தயாராகவே இருந்தோம் எனது விருப்பம் என்னவோ அவையனைத்தும் அவளிடம் இருந்தது, அவளது ஆசைகளும் விருப்பங்களும் என்னவோ அவையனைத்தும் என்னிடமிருப்பதாக அவள் மகிழ்ச்சியுருவாள். பனிரெண்டு வருடத்திற்கு பிறகு நாங்கள் நிரந்தரமாக ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சந்தர்ப்பம் உருவானது, நானோ அவளோ ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அந்த சந்தர்ப்பம் எனது வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது, அவளை மறக்க இயலாமல் தவித்தேன், வேலைக்கு போக முடியவில்லை பயித்தியம் பிடித்தவனைப்போல நினைத்த இடங்களில் விழுந்துகிடந்தேன், பல மாதங்கள் இந்த போராட்டம் தொடர்ந்தது, ஓர் இருண்ட முடிவில்லா குகைப்பாதையில் நான் மட்டும் தனியே இருப்பது போல உணர்த்தேன், ஒருநாள் எனக்குள் திடீரென்று ஒரு எதிர்மறையான எண்ணம் தோன்றியது, அந்த எண்ணம் அவளது அழிக்க முடியாத நினைவுகளிலிருந்து என்னை விலக்க போராடியது, நீண்ட கால போராட்டத்தின் முடிவில் அந்த எதிர்மறையான எண்ணம் வென்று விட்டது அதன் பின்னர் அவளை நினைக்கின்றபோது என்னை தாக்கி வந்த அந்த கொடூரமான சோகம் காணாமல் போனது, அவளும் நானும் ஒன்றாக வாழ்ந்த அந்த நினைவுகள் மட்டும் எப்போதும் என் மனதையும் கண்களையும் விட்டு விட்டு நீங்குவதே இல்லை' என்றார்.'அது என்ன எதிர்மறையான எண்ணம் உங்களை கொடூரத்திலிருந்து காப்பாற்றியது' என்றேன், அதற்க்கு அவர் 'துவக்கத்தில் அந்த எதிர்மறையான எண்ணத்தால் உடனே என்னை தூக்கி நிறுத்த முடியாவிட்டாலும் சிறிது சிறிதாக என்னை முற்றிலுமாக விடுவித்தது என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், அவள் எனக்கு செய்த சில துரோகங்களை அந்த எதிர்மறை எண்ணம் என் மனதிடம் மீண்டும் மீண்டும் காட்ச்சிகளைப்போல எடுத்து காண்பித்துக் கொண்டே இருந்தது, அவளது துரோகச் செயல்களை நான் மன்னித்துவிட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி இப்படிபட்டவளையா மறக்க இயலாமல் தவிக்கின்றாய் என்று கேட்டுக்கொண்டே இருந்தது, இதன் மூலம் நான் கற்ற பாடம் காதலித்தவரை எளிதில் மறக்கவேண்டுமென்றால் அவருடன் பழகிய நாட்களில் நடந்த கசப்பான மற்றும் அவர் நம்மிடம் சொன்ன பொய்கள் நாம் வெறுக்கின்ற விதங்களில் அவர் நம்மிடம் நடந்துகொண்ட சமயங்களை மீண்டும் மீண்டும் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி பார்ப்போமானால் நாளடைவில் அவர் மீதிருந்த காதலின் வேகம் குறைந்து நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் விலகிவிட முடியும்' என்றார்.

காதலிக்கின்ற போது நாம் நம்மை சுற்றி இருக்கின்ற உறவுகளின் உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு அல்லது மறந்துவிட்டு காதலில் முழுமையாக மூழ்கிவிடுவதால் உறவுகளை காயப்படுத்துவதுடன் நின்றுவிடாமல் நம்மையும் அறியாமல் காதலின் அடிமைகளாக்கப்பட்டு பின்னர் வேண்டாதபோது அதிலிருந்து வெளியேற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையின் முழுமையை அறிந்துகொள்ளாத முடமாகிவிடுகிறோம். மனதை எவ்வாறு காப்பாற்றிக்கொள்ள பழகிக்கொள்வது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

..